;
Athirady Tamil News

தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்படுமா? (கட்டுரை)

0

பொதுத் தேர்தலுக்கான வடக்கு மாகாணத்தின் களம் போட்டிமிக்க ஒரு களமாக மட்டுமல்லாது சவால் நிறைந்த களமாகவும் மாறியுள்ளது. தெரிவுகள் அதிகம் உள்ளமையினால் வாக்குகள் சிதறி தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு யாருடன் அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு மாகாணத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டத்திலும் 5 நிர்வாக மாவட்டங்கள் உண்டு. இதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களுமாக மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் தமது பிரதிநிதிகளாக 7 பேரை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யமுடியும்.

வன்னித் தேர்தல் மாவட்டத்திலே உள்ளடங்கும் மூன்று நிர்வாக மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 811 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்களும் உள்ள அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 78 ஆயிரத்து 360 வாக்காளர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 13 வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ள நிலையில் தமது பிரதிநிதிகளாக 6 பேரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யமுடியும்.

இந்த வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு மத்தியில் இதுவைரை காலமும் மக்கள் மத்தியில் ஆணை கேட்டு நின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தொடர்ந்தும் களத்தில் இருக்க இம்முறை தமிழ் மக்களின் ஆணை கேட்டு புதிதாக வடக்கு மாகாண சபையின் முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியும் களத்தில் குதித்துள்ளது. இதனை விட தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பெரமுன கட்சி என்பனவும் வடக்கு தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் என்றாவது தமது அபிலாசைகள் நிறைவேறாதா என்ற கனவுகளுடன் தமது பிரச்சினைகளை பெரும்பான்மை அரசுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்மைப்பினரை தேர்வு செய்து வந்தாலும். தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமது இலக்கினை அடையமுடியாமல் பயணிக்கும் சூழலே இருந்து வருகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவை தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வை நோக்கி மாற்று அணி ஒன்றின் ஊடாக பயணிக்கவேண்டும் என்ற கருத்து கடந்த சில வருடங்களாக இருந்து வந்த நிலையில் தான் வடக்கு மாகாண சபை தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்தது. வடக்கு மாகாண சபை அப்போதையை முதலமைச்சர் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

இவ்விடத்தில் இருந்து தமிழ் மக்களின் மாற்று அணி உதயமாகிவிட்டதாக கருத்து உருவாகத் தொடங்கியது. இந்த அலையின் வேகத்தினை அதிகரிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து வெளியில் வந்த அனந்தி சசிதரன் சி.வி விக்னேஸ்வரன் ஆரம்பித்த தமிழ் மக்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்தார். தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளிவந்த ஈ.பி. ஆர்.எல்.எவ். இணைந்தது. இவற்றால் தமிழ் மக்களுக்கான மாற்று அணி என்ற அலை சற்று மேல் எழுந்தது என்றுதான் அத்தருணத்தில் கூறப்பட்டது. இவற்றை கண்டு அச்சமடையவில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் வெளிப்படுத்தின.

இன்றும் தமிழ் தேசிக் கூட்டமைப்பினரின் தேர்தர் கால அறிக்கைகள் இதே கருத்தை தான் தொடர்ந்தும் தெரிவிக்கின்றன. அதாவது தேர்தல் களம் போட்டி மிக்கதாக அமையும் என ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் தற்போதைய நிலைமை அவ்வாறு இல்லை எனவும் மாற்றுத் தலைமை எனக்கூறிய அணி சரியானதாக இல்லை என்பதால் தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வை நோக்கி தொடர்ந்தும் தம்முடன் பயணிக்க தாயாராக உள்ளனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் 22.06.2020 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இவரின் கருத்துப் படி மாற்று அணி என்ற அலை ஆரம்பத்தில் பலமாக அடித்தது உணமை ஆனால் தற்போது அலையின் வீச்சு குறைந்துள்ளது என்ற கருத்தை விட்டுச்செல்கிறது.

இது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதில் தலைவராகவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்து கொண்டு மாற்று அணி பற்றி கதைப்பதென்பது அறமற்றது எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை தேர்தலின் பின்னர் ஒன்றிணைத்து பயணிக்க அழைப்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராசா 24.06.2020 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் இந்தக் கருத்து காலம் கடந்த ஞானம் என்பதை விட தேர்தல் கால கருத்துரை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டதென்பது இன்று நேற்று இடம்பெற்ற விடயம் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் பிரிந்து சென்று தனியாக இயங்க ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எடுக்காத முயற்சியினை தற்போது அதுவும் தேர்தலின் பின்னர் ஒன்றிணைவது என்பது காலம் கடந்த செயல் அன்றி வேறேதுவும் இல்லை.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் செல்லுபடியான 3 இலட்சத்து 309 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 இலட்சத்து 7 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்களிப்பின் 69 விகிதமாகும். இந்த நிலை தற்போது இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறுமா என்றால் நிச்சயம் இல்லை. இம்முறை வாக்குகள் சிதறடிக்கப்படும் என்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது சவால் நிறைந்தது என்பதிலும் எந்தவித ஐயமும் இல்லை.

கட்சிகள் சிதறியுள்ளன என்பது மக்கள் சிதறியுள்ளனரென்பதற்கு சமமாகிறது. தமிழ் மக்கள் ஒற்றுமையின்றி இவ்வாறு சிதறுண்டு இருப்பது அதுவும் தற்போது உள்ள சூழலில் சிதறுண்டு இருப்பது வெளியில் இருந்து உட்புகும் கட்சிகளின் வெற்றியினை தீர்மானித்துவிடும். இதுமட்டுமல்லாது தமிழ் இனத்தின் அபிலாசைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தையும் வெகுவாக பாதிக்கும்.

பள்ளிப் பருவத்தில் படித்த பசுவின் ஒற்றுமையை சிதறிடித்து தன் பசி தீர்த்துக்கொண்ட புலியின் கதையினை நினைவில் கொண்டு தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும் என்பது மட்டுமல்ல அந்த சிந்தனை ஒரு கோட்டில் இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம்.

தேர்தல் காலத்தில் கிடைக்கும் அற்ப சொற்ப சந்தோசங்களும் சலுகைகளும் நாக்கில் வைக்கும் இனிப்பு போன்றது. கரையும் வரையில் தான் அதன் சுவை தெரியும் அதுபோன்று தெர்தலில் வெல்லும் வரையில் தான் வழங்கும் வாக்குறுதிகளும் என்பதை நினைவில் வைத்து தமிழ் மக்கள் இந்த தேர்தலில் தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும். சமூக பிரிவினை, சாதிப்பிரிவினை, சமயப் பிரிவினை என்பவற்றை தூக்கி எறிந்துவிட்டு தமிழர் என்ற ஒற்றுமையே போதுமானது.

எஸ். சொரூபன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*