;
Athirady Tamil News

‘அரசாங்கம் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்’ (கட்டுரை)

0

கிழக்கில், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில், அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமன்றி, அரசாங்கமும் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருக்கின்றதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில், இலக்கம் 2இல் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவரும், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்ளாள் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மத ரீதியிலும் அரசியல் கட்சிகள் ரீதியிலும், இனவாதக் கருத்துகளைக் கக்குகின்ற நிலையிலிருந்து விடுபட்டு, யதார்த்தத்தைப் பேசுகின்ற அரசியல் கட்சிகளூடாகவும் தலைவர்களாகவும் இருந்து, உண்மையாகவே கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை வளர்க்க முன்வரவேண்டும் என்றும் அனைவரதும் ஒத்துழைப்புடன், நாடு பூராகவும் இன ஒற்றுமை பலப்படுத்தப்படல் வேண்டும் என்றும், அவர் கூறினார்.

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய ​நேர்காணலின் முழு விவரம் வருமாறு,

கேள்வி – இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கான பிரதான காரணங்கள் ஏதும் உண்டா?

முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக, இன ஐக்கியப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில், மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றியீட்டியது தொடக்கம் இரண்டரை வருடகாலங்கள் விவசாய, கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சராகவும், மேலும் இரண்டரை வருடங்களாக முதலமைச்சராகவும் இருந்து, பல சவால்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண மக்களுக்குத் திருப்திகரமாக சேவையாற்றியதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்த மிகக்குறுகிய காலப்பகுதியில், அதற்குமுன் இவ்வதிகாரத்தைக் கொண்டு யாரும் செய்திராத அளவுக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தேன்.

இதில், பாடசாகைள், வைத்தியசாலைகள், விவசாய, மீன்பிடி, கால்நடை, சுற்றுலாத்துறை பாதைகள், சிறு கைத்தொழில் உட்பட பல்வேறு வாழ்வாதார உதவிகளின் அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டே போகமுடியும்.

மேலும், குறிப்பாகப் பாடசாலைகள், வைத்தியசாலைகள், உள்ளூராட்சிமன்றங்கள் போன்ற அரச நிறுவனங்களிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும், ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தேன்.

மேலும், நிரந்தரமற்றுக் காணப்பட்ட பலநூறு அரச ஊழியர்களை, அவர்களது பதவியில் நிரந்தரமாக்கினேன். அது மாத்திரமல்லாது, எமது இளைஞர், யுவதிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள், கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் என்பன வெளி மாகாணங்களுக்கு வழங்கப்பட்டபோது, மத்திய அரசாங்கத்தி அமைச்சர்களோடும் அதிகாரிகளோடும் போராடி, அந்நியமனங்கள் முழுவதையும் கிழக்கு மாகாணத்துக்கே கொண்டுவந்துச் சேர்த்தேன்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில், இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவோர் அரசியல்வாதியாலும் மாகாணத்துக்குள் கொண்டுவர முடியாமல் போனது துரதிர்ஷ்டமேயாகும்.‪

கேள்வி – மக்கள் எதனை எதிர்பார்க்கின்றனர்?

இந்நாட்டிலே, பெரும்பான்மை மக்கள் எனவும் சிறுபான்மை மக்களெனவும் இரண்டு விதமாகப் பேசப்படுகின்றது. பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையானவர்கள், இந்நாடு அபிவிருத்தியடைய வேண்டும், நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும், சமாதானம் வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றார்கள். அதுபோல், சிறுபான்மை மக்களும் மேற்குறிப்பிட்ட அத்தனை விடயங்களையும் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்த நாட்டில் பேசப்படும் அரசியல் தீர்வு அல்லது சிறுபான்மைச் சமூகத்துக்கான தீர்வானது, அபிவிருத்திகள் பற்றிக் குறிப்பிட்டாலும், சொல்லப்பட்ட விடயங்கள் எல்லாம் பெரும்பான்மைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாதென சாட்டுக் கழிக்கப்பட்ட விடயங்களாகவே கடந்த காலத்தில் இருந்தன.

இந்நிலையில், சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழ்வதற்கும் சமமாகத் தங்களுடைய மத உரிமைகளைப்பேணி, சம அந்தஸ்துடைய பிரஜைகளாக வாழ்வதற்கும் எதிர்பார்க்கின்றார்கள்.

அப்போதுதான், இந்த நாட்டிலே நிரந்தரமான சமாதானமும் சுந்திரமும், அபிவிருத்தியும், நிலையான கோட்பாடுகளையும், செயற்பாடுகளையும் கொண்ட நாடாக இந்த நாடு முன்னேறும். வெளிநாடுகளிலுள்ள அத்தனை இலங்கையர்களும், மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வருகின்ற செயற்பாட்டிலும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் வழியேற்படும்.

கேள்வி – இனவாதம் கடந்த அரசியலை நீங்கள் செயற்படுத்திக் காட்டியதாக, எப்பொழுதும் பிரஸ்தாபித்து வருகின்றீர்கள் அதுபற்றிக் கூறுங்கள்…

நான் அரசியலுக்கு வரமுன்னர், ஒரு தொழிலதிபராக இருக்கின்ற நிலையிலும் எனது அரசியல் அதிகார காலத்தின்போதும், அதன் பின்னர் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக இருந்தபோதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன, மத, பிரதேச, மொழி வேறுபாடுகளை ஒருபோதும் காட்டியதில்லை. அப்படிப்பட்ட பாகுபாடுகள் என் சிந்தனையிலும் செயலிலும் ஒருபோதும் வந்ததில்லை.

அதேவேளை, இவ்வபிவிருத்தி நிர்மாணப் பணிகளுக்காகக் கொமிஷன் பணம் பெற்றதாகவோ அல்லது நியமனங்களை விற்றதாகவோ யாரும் என்னை விரல்நீட்ட முடியாது என்பதை உளத்தூய்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நான் என்னிடமுள்ள செல்வங்களை, இன, மத பேதம் கடந்துப் பகிர்ந்தளிப்பதற்கு வழி தேடுபவனே தவிர, பொதுச் சொத்துகளிலிருந்து சுரண்டி எடுப்பதற்கு முயற்சிப்பவனல்ல.

கேள்வி – நீங்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நீங்கள் திட்டமிட்டிருந்தும் உங்களால் செய்யமுடியாமற்போன செயற்றிட்டங்கள் ஏதும் உள்ளனவா?

வேலையில்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க வேண்டிய விடயத்தைக் கூறலாம். ஏறக்குறைய 2 இலட்சம் இளைஞர், யுவதிகள், தொழிலின்றி இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்கவேண்டும். கிழக்கிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றவர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளது. அதற்காகவே, இங்கு தொழிற்சாலைகளை அமைத்து, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கவேண்டியுள்ளது.

இது ஒரு பாரிய சவால். இவ்லாவிட்டால், கிழக்கு மாகாணம், வேறு ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். 5,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழிலற்று இருக்கின்றார்கள். அரச தொழில்வாய்ப்பை அனைவருக்கும் வழங்கமுடியாது. “எல்லோருக்கும் அரச தொழிலைப் பெற்றுத் தருகின்றோம்; எனக்கு வாக்களியுங்கள்” என்று, சில ஒட்டுண்ணி வேட்பாளர்கள் இனவாதம் பேசி இளைஞர், யுவதிகளை ஏமாற்றி வருகிறார்கள்.

அதனைப் புறந்தள்ளிவிட்டு, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் பெரிதும் தாக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரச தொழிற்சாலைகள் ஏதும் இங்கு கிடையாது. எனவே, அரச தொழிற்சாலைகளையும் தனியார்த் தொழிற்சாலைகளையும், கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அதுபோல், தொழில்நுட்பத் துறையிலும், கிழக்கு மாகாணத்தை முன்னேற்றவேண்டிய தேவை இருக்கின்றது.

கிழக்கில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, வருடத்துக்கு 3 தொழிற்சாலைகள் வீதம் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதிலே, தமிழ் மக்களுக்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு, படுவாங்கரைப் பகுதியை முன்னுரிமைப்படுத்தியிருந்தோம்.

அதுபோல், ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும் ஒரு சிங்களப் பிரதேசத்திலும் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

அவை ஒவ்வொன்றிலும், குறைந்தது 500 பேர் தொழில் செய்வதற்கு ஏதுவாக அமையப் பெற்றிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, எமது ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், படுவாங்கரைப் பகுதியில் நிச்சயமாகத் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். ஏனெனில், அங்கு அதிகளவு தமிழ் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்று இருக்கின்றார்கள்.

கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியின்போது, இறுதிக் காலகட்டத்தில் என்னால் திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமலும் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சில அபிவிருத்திப் பணிகள் முடிக்கப்படாமலும் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தவர்களால் இத்திட்டங்கள் தொடரப்பட்டு முடிக்கப்படாமல் போனது, துரதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன்.

கேள்வி – மக்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

நடைபெறப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல், எமக்கான அரசியல் அதிகாரத்தை மீண்டும் வழங்க இருக்கின்றது. இவ்வதிகாரத்தைத் துரநோக்கு, சிறந்த திட்டமிடல், செயற்றிறன், நேர்மை, தெளிந்த அரசியல் சிந்தனைகளைக் கொண்ட ஆளுமையானவர்களுக்கு வழங்கினால், இந்த மாவட்டம் இன, மத பேதமின்றி அபிவிருத்தி காணும்.

அந்தவகையில், கடந்த மாகாணசபை ஆட்சியில், எனது பணிகளைச் சாட்சியமாக வைத்து, மக்களது ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.

இக்காலப்பகுதிக்கான எமது நாடாளுமன்றத் தெரிவுகள், எமது உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதேநேரம், இன, மத, மொழி பேதமற்ற நல்லிணக்கத்துடன் கூடிய சாதுரியமான செயற்பாடுகளையும் கொண்ட ஆளுமைகளாக அமையவேண்டும்.

ஆளுமைமிக்க நேர்மையான ஆட்சியையே, கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியில் நாம் வழங்கியிருந்தோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்துக்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையோ முதலமைச்சருக்குரிய அதிகாரத்தில் ஒரு துளியையோ, வெளிச் சக்திகளுக்காக விட்டுக்கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி – சமகால அரசியல் நகர்வுகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

சிறுபான்மைச் சமூகங்கள், சட்ட ரீதியாகவே ஒடுக்கப்படும் அவலநிலை, எமது நிலபுலப் பிரதேசங்கள் பறிக்கப்படும் நிலை, அபிவிருத்திப் பணிகளில் எமது மாவட்டங்கள் புறக்கணிக்கப்படும் நிலை என்பன ஏற்படுத்தப்படலாம்.

இதற்கான பேரினவாதச் சக்திகளின் நகர்வுகள், ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்பதை அண்மையில் கிழக்கு மாகாணத்துக்காக அமைக்கப்பட்ட பேரினவாதிகளை மாத்திரம் கொண்ட வரலாற்றுத் தொல்பொருள் மரபுரிமைச் செயலணி போன்ற அமைப்புகள் எமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றன.

கேள்வி – மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளற்றிருக்கும் இளைஞர், யுவதிகளை மய்யப்படுத்தி தொழிற்பேட்டைகள் அமைப்பது பற்றி நீங்கள் எல்லா நிகழ்வுகளிலும் பேசி வந்திருக்கின்றீர்கள்?

கிழக்கு மாகாண சபையில் நாம் இருந்த காலத்தில், இவ்விடயம் தொடர்பில் பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. நான் மாகாண அமைச்சராக இருந்த காலத்தில், ஒவ்வொரு வருடமும் 3 ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்கின்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தோம், முதற்கட்டமாக, மட்டக்களப்பில் ஐயங்கேணியிலும் திருகோணமலையில் சீனன்வெளியிலும், அம்பாறையில் சம்மாந்துறை பகுதியிலும், ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஐயங்கேணியில் மாத்திரம் அது இயங்கிக்கொண்டு வருகின்றது. ஏனைய இரண்டு இடங்களிலும், அவை இயங்காமலுள்ளன.

அதுபோன்று, தனியார்த் தொழிற்சாலைகளையும் கொண்டுவர வேண்டும் என, பல முன்னெடுப்புகளைச் செய்திருந்தோம். சர்வதேசத்திலுள்ள முதலீட்டாளர்களை, கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்வதற்குரிய முயற்சிகளைச் செய்தோம். அதுபோல், பல திட்ட வரைபுகளை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கும் முன்வைத்திருந்தோம்.

குறிப்பாக, மட்டக்களகப்பு-புல்லுமலைப் பகுதியில், 200 ஏக்கரில் முதலீட்டு வலயம் முன்மொழியப்பட்டிருந்தது. அதுபோல், தகவல் தொழில்நுட்ப வலயம் அமைப்பதற்கும் நாவலடியில் மிகப் பிரமாண்டமான வர்த்தக மய்யம் ஒன்றை அமைப்பதற்கும், சுற்றுலாத்துறைப் பாடசாலை அமைப்பதற்கும் தீர்மானித்திருந்தோம்.

கிழக்கு மாகாணம் 26 சதவீதம் கடற்பரப்பைக் கொண்டுள்ளது. அதனால், இம்மாகாணம் இங்கிருந்து மீன் ஏற்றுமதி செய்கின்ற வலயமாக மாற்றப்பட வேண்டும் என்ற திட்டத்தையும் நாங்கள் வரைந்திருந்தோம்.

தெற்கில் அதிகளவு துறைமுகங்கள் உள்ளன. கிழக்கில் ஒலுவில், வாழைச்சேனை, திருகோணமலை ஆகிய 3 துறைமுகங்கள் மாத்திரம்தான் உள்ளன. இந்நிலையில், குறைந்தது 12 துறைமுகங்களாவது கிழக்கில் அமையப்பெற வேண்டும் என்ற திட்டத்தை, அப்போதைய பிரதம ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்மொழிந்திருந்தோம். இவைகளனைத்தும் அமையப்பெறுகின்ற போதுதான், கிழக்கிலுள்ள மக்கள் அதிகளவு வருமானங்களை ஈட்டிக்கொள்வார்கள்.

ஹபரணையிலிருந்து பாணமை, அம்பாறை வரைக்கும், அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படல் வேண்டும். சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்படல் வேண்டும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலையைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்?

ஒவ்வாரு கிராமங்களிலும், கிராம அபிவிருத்தி சிறு கைத்தொழில் பேட்டைகளை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நவீனத்துவமான விவசாயமுறை, இருக்கின்ற மூலப்பொருட்களுக்கு ஏற்ப சிறு தொழிற் பேட்டைகளை அமைப்பது, தொழில் நுட்பத்தையும் சந்தைப்படுத்தலையும் அறிமுகப்படுத்துவது குறித்து, அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும். ஒருவருக்கு அரச தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு, மாதாந்தம் 35000 ரூபாங்க்கும் மேல் செலவு செய்யவேண்டும். ஒ இலட்சம் பேருக்குத் தொழில் வழங்க வேண்டுமாக இருந்தால், கிட்டத்தட்ட 3 பில்லியன் மாதாந்தம் செலவாகும். இந்தத் தொகையை, மாதாந்தம் செலவு செய்வதைவிட, சிறு தொழில் பேட்டைகளை நிறுவினால், இன்னும் அதிகமானவர்களுக்கு தொழில் வழங்கலாம். மேலும் பலரை முன்னேற்றலாம். இவ்விடயம் தொடர்பில் புத்திஜீவிகள், அரசாங்கத்துட் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தில், பருவமழைக் காலத்தில் பெய்யும் கனமழை வீழ்ச்சியினால், குளங்கள் நிரம்பி மேலதிக நீர் வீணாக வாவியையும் கடலையும் சென்றடைந்து, பயிரழிவுகளுக்கும் மக்கள் இடம்பெயர்வுகளுக்கும் வித்திடுகின்றன. இதனைக் கையாள, மாற்றுவழிகள் ஏதும் உள்ளனவா?

இது மிகவும் முக்கியமான விடயம். நான் கிழக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில், அடிக்கடி நான் பேசிவந்த விடயமும் இதுதான். கிழக்கு மாகாணத்தில், 300க்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்புச் செய்யாமலும் ஒரு சில இடங்களிலே மூடப்பட்டுள்ளதனாலும், பல குளங்களும் கேணிகளும், நீரைச் சேமிக்க முடியாமல், 90 சதவீதமாக நீர் வீணாக்கப்படுகின்றது. இதனால், பல அழிவுகளும் ஏற்படுகின்றன. உடனடியாக இவ்வாறான குளங்கள் புனரமைப்புச் செய்யப்படல் வேண்டும். கடந்த காலங்களில், கிழக்கிலுள்ள குளங்களைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும், அந்நிதி மோசடி செய்யப்பட்ட வரலாறுகளும் உள்ளன.

சிங்கப்பூர் போன்ற நாடுகளிலே மழைநீர் சேகரிக்கப்படுகின்றது. அதுபோல், நமது பிரதேசங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே காணப்படும் இன ஒற்றுமையை மேம்படுத்த என்ன செய்யலாம்?

கிழக்கு மாகாணம், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம், இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டிய மாவட்டமாகும். கிழக்கில் மூவி மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இன ஒற்றுமையை அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமன்றி, அரசாங்கமும் நிலைநாட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. மதங்கள் என்ற ரீதியிலும் அரசியல் கட்சிகள் என்ற ரீதியிலும், இனவாதக் கருத்துகளைக் கக்குகின்ற நிலையிலிருந்து விடுபட்டு, யதார்த்தத்தைப் பேசுகின்ற அரசியல் கட்சிளூடாகவும் தலைவர்களாகவும் இருந்து, உண்மையாகவே கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை வளர்க்க முன்வரவேண்டும். அனைவரதும் ஒத்துழைப்புடன், இதுபோன்றுதான் நாடு பூராகவும் இன ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு ஐக்கியப்பட்ட நல்லாட்சியை, நான் எனது கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரக் காலத்தில், முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக நடைமுறையில் அரசாட்சி நடத்திக் காட்டியிருந்தேன். கிழக்கு மாகாண சபையில், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, சிங்கள மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோடும் இணைந்து, இன, மத மொழி பேதமில்லாது ஆட்சி செய்தேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*