;
Athirady Tamil News

கண்களைத் திறந்து கனவு காண் ; நூலாற்றும் பவதாரணி ராஜசிங்கம்!! (கட்டுரை)

0

கண்களை மூடி நாம் காணும் கனவுகள் கலைந்துவிடும். அவற்றின் ஆயுள் அற்பமானது. நிரந்தரமில்லாத ஒன்றின்
முகவரி அது. ஆனால் நாம் விழித்தபடி கானும் கனவுகள் விதைகள். எம் எண்ணத்தில் முளைவிட்டு செயலில் வடிவம்
பெறுபவை. “ உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு. இளைஞர்களே கனவு காணுங்கள்
என்றார் அப்துல்கலாம் எனும் அறிஞன்;. பல இளைஞர்களிற்கு வேதமாய் அமைந்த அந்த வார்த்தைகளே
பவதாரணி ராஜசிங்கத்தின் சிந்தனையும் ஆகும்.

“எறிவன யாவும் தெறிக்கக் கண்டேன்!
ஏற்றிய தீபம் ஜொலிக்கக் கண்டேன்.
கற்றவை யாவும் கசடறக் கண்டேன்
கண்களைத் திறந்தே கனவு கண்டேன்!
பவதாரணி ராஜசிங்கம்

பவதாரணி ஆளுமைமிக்க பெண். தன் எழுத்தின் மூலம் மட்டுமல்ல செயலாற்றுதலிலும் தன்னை நிரூபித்துக்
கொண்டிருக்கும் இவர் அரசியலிலும் தன் முத்திரைகளை பதித்தே தீருவார். கண்களைத் திறந்து கனவு காணுங்கள் எனும்
பவதாரணி ராஜசிங்கத்தின் நூலினூடாக வாழ்வியல் ஆய்வுப்பயணமே இக் கட்டுரை. உலகம் தாய்வழி சமூகப்
பண்பாட்டில் உதித்தது. ஆனால் அதி நர்கரீக வளர்ச்சி பெண்ணை பின்தள்ளிவிட்டது. அவள் மாபெரும் சக்தி.
அக்கினிக் குஞ்சொன்று போதுமானது மூங்கில் காடுகளை முற்றிலும் வாரிக்கொள்ள. அக்கினிக்கு
நிகரானவள் பெண். அவள் தனித்துநிற்கும் போதே அவளது சக்தி அபரிமிதமானது. அவர்கள் ஒன்றபட்டால்
எழும் வீச்சின் வேகம் வரலாறு காணமுடியாத மாற்றங்களை வித்திட்டுச் செல்லும்.

தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் தன்னைச் சுற்றியிருக்கம் பெண்கள் குழாமையும் தன்னோடு சேர்த்து
அணைத்து உயர்த்தும் பெண் ஆளுமை பவதாரணி. அதனைப் பறைசாற்றும் வகையில் அவரது நூலில் பல
பிரதேசத்திலிருந்தம் பல குரல்கள் வரிவடிவாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கவிஞர்கள் வெறுமனே வார்த்தைகளை சோடிப்பவர்களல்ல. அவர்களின் எழுத்துக்கள் வாழ்வை மாற்றுபவை. கற்பனைகள்
மட்டுமல்ல இயல்பையும் அழிந்து விடாமல் பத்திரப்படுத்தி உணர்வுகளை எழுத்தின் வழி கடத்துபவர்கள். அவர்களுக்கு
வாழ்வியல் வலிகளும் தெரியும் அதனை உடைக்கும் வழிகளும் தெரியும் என்பதனை பவதராணியின் எழுத்துக்கள்
இயம்புகின்றன.

ஒரு அரசியல்வாதி தன் வெற்றிக்கு என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை வரலாற்றின்வழி நாம்
கண்டிருக்கிறோம். ஒரு சமூகத்தின் வெற்றி என்பது அதன் கல்வி மற்றும் அறிவியல் ரீதியாக
கட்டமைக்கப்படுவது. அந்த சமூகம் தன்னை சிந்தனை அடிப்படையில் சிறந்ததாய் நிலைகொள்ளச் செய்யும்போது இது
இயல்பாய் தனக்கான தேவைகளை பெற்றுவிடும். நூல்கள் பிரபஞ்சத்தின் வழிகாட்டிகள். இந்த அடிப்படையில் இவரது
நூலாக்கச் சிந்தனை வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி அவரை வரலாற்றுக்கு அடையாளப்படுத்திவிட்டது.

பெண்களுக்காக பலரும் குரல் கொடுக்கலாம். ஆனால் ஒரு பெண் குரல் எழுவது வெற்றிக்கான வழி. இந்த நூல்
தன்னம்பிக்கையின் குரல். தோற்றுவிடுவேனோ அல்லது தோற்கடிக்கப்பட்டுவிடுவேனோ என தயங்கி நிற்கும்
பெண்களுக்கு உன்னால் முடியும் முன்னே வா என அழைப்பதுடன் நின்றுவிடாது கரம் பற்றி அழைத்துச் சென்று
கனவு இருக்கையில் அமரச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்துகின்றது. ஒரு பெண்மொழி முட்கள் இல்லாத
பாதையிலன்றி முள்ளிருந்தாலும் வானம் தூரமில்லை சேர்ந்தே தொடுவோம் வா எனஅழைத்து செல்கின்றது.

பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் இறந்தும் இருப்போம் எனும் வாழ்கையை வாழப் பணிக்கிறது
இந்நூல்.

“பிறந்துவிட்டோம் வாழந்துதான் ஆகவேண்டும் என ஒருவர் வாழ்ந்து வருவது ஆரோக்கிமற்ற வாழ்வாகும்.
சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்பது இவரது கருத்து. எண்ணத்திற்கு வலிமை அதிகம். மனதில் உறுதி வேண்டும்
என்பது அந்த உறுதி சிந்தனையில் இருந்தால் ஒருநாள் அது செயல்வடிவாகும். அவரிடமும் ஒரு பெரும் கனவு
உண்டு. தனது தேசத்தை பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் முன்னிலைப்படுத்தி சிறந்ததொரு தேசமாக
கட்டியெழுப்புவதே அந்தக் கனவு.

“சாதனை என்பது சத்தியம்
இவர் படைக்கப்போவதோ சரித்திரம்”

இந்த நூல் ஓர் சாதனைப் பெண் தன் பயணப்பாதையை விபரிப்பதும் தன் எண்ணச் சிறகில் சேமித்து வைத்திருந்த
இயல் மற்றும் கற்பனைக் கோலங்களை இன்னுமொருவருடன் பகிர்ந்துகௌ;வதும் ஆகும். இந்தப் பகிர்வு வெறுமனே
நின்றுவிடாது அது வெற்றிக்கு பயணப்பட மற்றவரை உந்தும். இறுதிச் சில பக்கங்கள் நான் சொன்னதற்கு
சாட்சியாகும். உலகில் பலமுதன்மைக் காரியங்களின் வெற்றியிலும் பெண் இருப்பாள் என்பது வரலாற்று
ஆதாரம்.பெண் தலைமைத்துவத்திற்கு உட்பட்ட பல நிறுவகங்கள் உலகப் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியிலும்
வீழ்ச்சியடையவில்;லை. நிகழ்ந்தவைகளைச் சுட்டி நிகழ்த்தவிருக்கும் பெண்களுக்கும் பெருமளவிலான ஊக்கத்தை
வழங்கியுள்ளார் பவதாரணி.

கலையை பெரிதும் மதிக்கும் இவர் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.நம் கலைஞர்கள் நமக்கான அடையாளங்கள் ,
அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பேரார்வத்தில் திரைப்படம் ஒன்றை எந்த ஒரு பலனையும்
எதிர்நோக்காது தயாரித்து அதில் வெற்றியும் கண்டவர். இந்த நம்பிக்கை எழுத்துக்கள் எதிர்கால
சந்ததியினருக்கு நம்பிக்கையைத் தந்தது.

கூர்ந்து பார் நீ காண நினைத்ததை கண்டடைவாய் என்பது சாத்தியமானதே. இந்த நாகரீக உலகில்தான் பெண் தனக்கான
இடத்தைப் பெற முட்டி மோதிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கான இடம் மறுக்கப்பட்டு மறைக்கப்படுகின்றது. ஆனால்
செங்கோலாச்சிய காலத்திலே தம் எழுதுகோலினால் உலகை ஆண்ட மன்னர்களையும் ஆண்டவர்கள், ஆட்டுவித்தவர்கள்
இந்தப் பெண்களே. அவர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பது இவரது கருத்து. காலம் மாறும் போது
காட்சிகளும் மாறும். ஒரு மாற்றமே ஓயாத முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*