;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா? (கட்டுரை)

0

தமிழ்த் தேசிய அரசியலின் கடந்த 65 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் இருந்து, இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்து வந்த பாதைகளை நோக்கும்போது, அவற்றின் எதிர்வினைகள் பற்றி நன்றாகப் புரியும்.

இலங்கைத் தமிழ்க் காங்கிரிஸில் ஆரம்பித்த சமஅந்தஸ்துப் பிரச்சினை, 50க்கு 50. அன்றைய ஆட்சியாளர்கள், 50க்கு 48 தான் தருவதாகச் சொல்ல, 50க்கு 50 தந்தால்தான் தீர்ப்பை ஏற்பேன்; இல்லையேல் அதைப் பெறும் முறையில் பெறுவோம் எனச் சவால் விட்டு, கிடைத்ததையும் இழந்தனர்.

அதன்பின், இலங்கைத் தமிழரசுக்கட்சி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, சமஷ்டி முறையிலான தீர்வை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் களத்தில் இறங்கியது. இந்தப் போக்கும் சாத்தியப்படாது போகவே, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டனர்.

அதன்பின், ஆயுதப் போராட்டம் வலுவடைந்திருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில், அதற்கான அங்கிகாரத்துக்கான தேர்தலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் இடையே ஏற்பட்ட மாற்றுச் சூழல்கள், அயலுறவுக் கொள்கைகள் காரணமாக, 1987இன் பின்னர், மாகாண அமைப்பு முறை, வடக்கு- கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி பற்றிய கருத்தாடல்களும், அதற்கான தேர்தல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, ஈழக் கோரிக்கையைக் கைவிட்ட ஈபிடீபி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள், இதனை முன்னெடுத்தன. இதனை, அன்று புலிகளும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்த்தன.

அதன்பின், 2,000க்குப் பின் நடைபெற்ற தேர்தலிலும், புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌணிக்கப்பட்ட அறிவிப்பு வரை, ஒரு நாடு; இரு தேசம் கோட்பாடு, சமஷ்டியை அடியொற்றிய பேசுபொருளாக இருந்தது. மேலும், 2008க்கு பின், வடகிழக்கு மாகாணமானது, வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்ட தேர்தல்களின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் போதெல்லாம், அதில் பங்குகொண்ட கட்சிகளைத் துரோகிகள் என்றே குறிப்பிட்டனர். தாம் அதில் பங்கேற்ற போது, இந்த துரோகம் என்ற வார்த்தை காணாமற்போக, மாறாக இருப்பதையாவது பெற்றுக்கொள்வோம்; எமது இருப்பைக் காப்பாற்றுவோம் என்ற வாக்குறுதிகளும் கோரிக்கைகளும், பிரசாரங்களில் முன்நகர்த்தப்பட்டன.

இத்தகையதொரு சூழலில், காலத்துக்கு காலம் தமிழர்த் தரப்பு, ஆட்சி அதிகாரத்துக்காக முன்வைத்த தீர்வுத் திட்டங்களை நோக்கின், 50க்கு ஐம்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது. இது காணாமல் போய்விட, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதுவும் காணாமல் போய்விட, தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவும் போய்விட, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் உருவான வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணக் கோரிக்கையும் இடைக்காலத்தில் தீர்வாக முன்வைக்கப்பட்டது.

இடையில், புலிகளின் பலம் ஓங்கிய காலத்தின்போது இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கையும் புலிகள் நலிவடைந்த போது, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணக் கோரிக்கை, இரு தேசம்; ஒரு நாடு, சமஷ்டி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற பேச்சுகளெல்லாம், தேர்தல் பிரச்சாரங்களாக முன்வைக்கப்பட்டன. ஆயினும், எவையுமே நடைபெறவில்லை.

இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் கட்சிகள் விலகியும் புதிய கூட்டுகளையும் புதிய கட்சிகளையும் உருவாக்கி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்கள் அனைவரும், தமிழருக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவுமட கூறுகின்றனர்.

கடந்த 72 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் முன்வத்து, இலங்கை அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுகளை, சர்வதேசமும் இந்தியாவும் எமக்குப் பெற்றுத்தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனேயே, தேர்தலில் தாம் போட்டியிடுவதாகவும் இம்முறை, நிச்சயம் அது சாத்தியப்படும் என ஒவ்வொருவரும் அடித்துக் கூறிவருகின்றனர். இவை, ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லப்படும் தீர்வுகளும் கூத்துகளும்தான். ஆனால், இதை நம்பி இலவு காத்த கிளிபோல் தமிழ் மக்கள் இருப்பது வேதனை தரும் ஒரு விடயமாக இருக்கிறது.

தமிழ்த் தரப்பு அரசியலைப் பொறுத்தவரையில், கடந்த 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், சலுகையா, உரிமையா? என்ற ஒரு பிரசார இறுவட்டை வைத்துள்ளனர். அது, இன்று திரும்பத் திரும்ப போட்டு போட்டுக் கீறல் விழுந்துவிட்டது. அதை, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கேட்ட காதுகள் செவிடாகிவிட்டன என்று, பொதுஜனங்கள் பேசுவதை செவிமடுக்கக் கூடியதாக உள்ளது.

காரணம், எல்லா இனங்களும் அபிவிருத்தி, சலுகைகளைப் பெற்று முன்னேறிவரும் நிலையில், தமிழினம் மட்டும், உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும், இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து, சொத்து இழந்து, உறவு இழந்து, உடமைகள் இழந்து, புலம்பெயர்ந்து அகதிகளாகவும் அங்கவீனர்களாகவும் இயல்பு வாழ்வைப் பெறமுடியாமல் பரிதவிக்கும் நிலையே காணப்படுகிறது. மறுபுறம், சிறைவாசம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், யுத்தத்தின் கோரப்பிடியில் நடந்த இழப்புகள், போராடப் போனவர்களுடைய குடும்பச் சண்டையில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகள், இருந்த இருப்பையும் பொருளாதாரத்தையும், தொழில் வாய்ப்பையும், கல்வியையும் அளித்துவிட்ட அவலங்களும் காணப்படுகின்றன.

இத்தகைய சூழலில், தமிழினம் மீட்சி பெறுவதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் பற்றிப் பிடிக்காமல், எதற்கெடுத்தாலும் பேரினவாதம், தேசியவாதம், துரோக அரசியல், கபட நாடகம் போன்ற வார்த்தை ஜாலங்களால் தமிழ்த் தேசிய தரப்பினர் அறிக்கையிட்டு, கிடைக்கின்ற ஒன்று, இரண்டையும் இல்லாது செய்துவிடுகின்றன. அபிருத்தி வந்தால் முதல் உரிமை; அதன் பின்பே அபிவிருத்தி என்றார்கள். போர் முடிந்தபின், ஏவுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்றார்கள்.

பலவந்தமாக இராணுவம் ஆக்கிரமித்த காணிகள் விடப்படும்போது, அவர்களை ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள். அறிக்கைப் போர் நடத்துவார்கள். இதன் மூலம், ஆட்சியாளர்கள் செய்வதற்கு முன்வந்ததையும் தடுத்து விடுகிறார்கள்.

குறிப்பாக, மத்திய அரசின் பொருத்து வீட்டுத் திட்டம் வந்தது. அதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சூழலுக்குப் பொருத்தமில்லை என எதிர்த்தனர். அதனால், வந்த வீட்டுத் திட்டமும் நின்றுபோனது.

வன்னிப் போரில், உடலையும் உயிரையும் இழந்து எத்தனைக் குடும்பங்கள் பராமரிப்பின்றி மரங்களின் கீழ் இருப்பதை ஊடகங்கள் இன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர்களுக்குப் பொருத்து வீடாவது கிடைத்திருந்தால், அவர்கள் இப்படி மழையிலும் வெயிலிலும் அல்லல்பட வேண்டிய தேவையில்லை. தமிழ்த் தரப்பு எப்போதுமே எதைக் கொடுத்தாலும், எதையும் ஆராயாமல் சந்தேகக் கண்கொண்டு இனவாத நோக்கில் விமர்சித்து, கிடைத்ததையும் கிடைக்காமல் செய்யும் அரசியலைச் செய்து வருகின்றனர்.

ஆனால் இதைச் செய்பவர்கள், மக்களுக்கு வரும் உரிமையை, சலுகையாகக் காட்டுகின்றனர். ஆனால், தமக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளை உரிமையாகப் பிரதானப்படுத்துகின்றனர். நாடாளுமன்ற வாகனச் சலுகை, கூட்டப்பணம், உணவு, மாதாந்தக் கொடுப்பனவான சம்பளம், ஓய்வூதியம், ஏனைய ஒதுக்கீடுகள் இவையெல்லாம், அரசியலால் வரும் வரப்பிரசாதங்கள். இவற்றை, சலுகை என்றும் உரிமை என்றும் பிரிக்காமல், தீர்வுத் திட்டம் வரும்; அதை நான்தான் பெற்றுத் தருவேன் என்று வெற்றுக் கோஷமிடுவதை நிறுத்திவிட்டு, நடைமுறைச் சாத்தியமானவற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சரி ஏனைய தமிழ்த் தரப்பும் சரி, தமிழ் மக்களுக்கு ஆற்ற முன்வர வேண்டும். ஏனெனில், இந்த கையாலாகாத தனத்தை, தமிழ் மக்கள் இனியும் ஜீரணிக்கத் தயாரில்லை.

இதனால்தான் இம்முறைத் தேர்தலில், பொதுஜனங்கள் ஆர்வமின்றி, வாக்களித்து எதைக் கண்டோம், வாக்களிக்க வேண்டிய தேவை என்ன இருக்கு, ஏன் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், சும்மா விட்டுப்போட்டு அலுவலைப் பார்க்கலாம் என்றெல்லாம் கருத்தாடல்கள் முன்வைப்பதற்குக் காரணமாய் உள்ளன எனலாம்.

அந்தவகையில், வடக்கு, கிழக்குத் தமிழ்த் தேசிய தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், பிரகடனங்கள், பிரசாரங்கள் என்பன, பிசுபிசுத்து, மக்களிடத்தில் எடுபடாமல் போயுள்ளன. ஏனெனில், இவை 72 ஆண்டுகளாகச் சொல்லப்படுகின்ற விடயங்களாகும். உண்மையிலேயே, மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். மனம் வெறுத்துப் போயுள்ளனர்.

தமிழ் தேசியத்துக்காகப் போராடாதவர்கள், தாங்கள் போராடியதாகப் புருடா விடுகின்றனர். புரட்சிப் பாடல்களுக்கும் விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கும், போராளிகள் படங்களுக்கு மாலை அணிவித்தும் படங்களை எடுத்து, நவீன தொழில்நுட்பங்களினூடாகக் கையாண்டு, புதுப்புது படைப்பு செய்துள்ளனர். இவர்களை, வரலாறு தெரியாதவர்கள் நம்பலாம்.

இன்றும் இந்தத் தாயக வேள்வியில் உரிமைக்காகப் பங்காற்றிய 32 இயக்கங்களிலும் போராடியவர்கள், அதன் ஆதரவாளர்கள், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதற்காக அர்ப்பணித்தவர்கள், இந்தப் பேய்த்தனமான கூத்தையும் நாடகத்தையும், நேரடியாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தயவுசெய்து, நீங்கள் போராடாவிட்டால் பரவாயில்லை; போராட்டத்துக்குப் போலியாக உரிமை கோராதீர்கள்.

ஏனெனில், அந்த இழப்புகளையும் வலிகளையும் சுமந்தவர்களுக்கே புரியும். ஆதலில், ஒரு போராளி இன்னொரு சக போராளியைத் துரோகி எனச் சொல்ல மாட்டான். போராடாத நீங்கள், அதை இலகுவாகச் சொல்லிவிடுவீர்கள். உங்களை மக்களுக்கு இலகுவாக அது அடையாளம் காட்டுகிறது.

எனவே, மக்களுக்கு நல்லதைச் செய்யுங்கள். புதிய சிந்தனைகள் பிறக்கட்டும். புதிய வியூகங்கள் மலரட்டும். புதிய பாதை அமைப்போம். எமது மக்களை அந்த வழியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வளப்படுத்துவோம். அது பற்றியதாக உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் அமையட்டும். சிறந்ததுக்கு மக்கள் புள்ளடி இடுவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + ten =

*