;
Athirady Tamil News

‘சிறுபான்மைக் கட்சிகளுக்குள் வங்குரோத்து அரசியல் வேண்டாம்’ !! (கட்டுரை)

0

நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தாக்கிப் பேசினால் அல்லது இவர்களை இழுவுபடுத்திப் பேசினால் இந்தப் பகுதி மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள் என்ற வங்குரோத்துநிலை அரசியலை, சிறுபான்மைக் கட்சிகள் விட்டுவிட வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘மரம்’ சின்னத்தில், இலக்கம் 01இல் மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்கால சமூகம், ஒட்டுமொத்தமாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான நல்ல கருத்துகளை, மக்கள் மத்தியில் முன்வைத்து, தேர்தல் பிரசாரத்தைச் செய்கின்ற போது, மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழு விவரம்: வருமாறு,

கேள்வி – கிழக்கு மாகாணத்தில் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் என, நீங்கள் எவற்றை இனங்கண்டுள்ளீர்கள்?

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சமமாக வாழ்கின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என மூன்று மாவட்டங்களுமே எல்லா வளங்களும் பெற்ற பகுதிகளாக உள்ளன. இந்த வளங்களை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தி, மூவின மக்களும் பயன் பெறக்கூடிய வகையில் மாற்ற வேண்டும். ஆனால், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய அடிப்படையில் இவற்றைச் செயற்படுத்த அரசாங்கங்கள் தவறியுள்ளன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய ஒரு விடயத்தை, வெற்றி பெற்றால், முழு நாட்டுக்கும் முன்னுதாரணமான மாகாணமாக கிழக்கைக் காட்டலாம்.

வயல் நிலங்கள், வாவிகள், கடல் வளம் எனப் பௌதீக ரீதியாக, பொன் விளையும் பூமியாகக் கிழக்கு மாகாணம் திகழ்கின்ற போதும், அந்த வளங்கள் அதிஉச்ச அளவில் இதுவரையிலும் மக்களில் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படாத நிலைதான் தற்போதும் உள்ளது. இங்கு வாழும் மூவின மக்களுக்கும் நிலையானதோர் அபிவிருத்தியை முதலில் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இணைந்ததாக, நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டும்.

கேள்வி – வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் உங்களால் ஏதும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

கிழக்கு மாகாணத்தில், இறுதியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காலத்தில், கிட்டத்தட்ட 2,000 வேலைவாய்ப்புகள் இருந்தும் அவை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், சிறிது காலமே பதவி வகித்த முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தார்.

நான், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் பல விடயங்களை, நல்லாட்சி அரசாங்கத்திடம் முன்வைத்தேன். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் பல இடங்களை அடையாளம் கண்டு, வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டுமெனக் கோரியிருந்தேன்.

முதலீட்டு சபை மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை இட்டு, அதன்மூலம் தொழில்வாய்ப்புகளை வழங்கி, ஏற்றுமதிகளையும் செய்ய வலியுறுத்தியிருந்தேன்.

கேள்வி – உள்ளூரில் இருக்கும் சீமெந்து, சீனி, கடதாசி தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை உள்ளீர்த்துக்கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுமா?

இந்தக் காலத்தில், கடதாசி ஆலையை மீளத் திறந்தால், அதில் நவீன இயந்திரங்களைக் கொண்டு, தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, நபர்களுக்குத் தொழில்வாய்ப்பை வழங்க முடியாது. எனவே, அதைவிடுத்து, துணி, புடவை உள்ளிட்ட கைத்தொழில்களுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டைகளை (Fabric factory) உருவாக்குகின்ற போது, பலருக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்க முடியும்.

பட்டிருப்புத் தொகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் 400 – 500 இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்தத் தொழிற்சாலை இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருளை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே கொண்டு வரவேண்டும்.

எனினும், இந்த மூலப்பொருளை மட்டக்களப்பிலேயே உருவாக்கக் கூடிய ஒரு தொழிற்பேட்டைக்குரிய இடத்தை அடையாளம் கண்டுள்ளேன். இதில் கிட்டத்தட்ட 200 ஏக்கர் இடத்தில், சுமார் 30,000 – 40,000 நபர்கள் வேலைவாய்பைப் பெறலாம். எனவே, இதை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வுப் பிரச்சினை பரந்தளவில் உள்ளது. இதற்குத் தீர்வு காண்பதற்கு, நீங்கள் முன்வைக்கும் யோசனை என்ன?

மணல் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்க வேண்டும். தற்போது அரசாங்கத்துக்குள் இருந்து செயற்படுவோரின் ஆதரவுடன், மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் இருந்து, வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்லும் மாஃபியாக்கள் உள்ளனர். இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் அடிக்கடி நான் பேசியுள்ளேன். இதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படையிலேயேதான் தீர்வொன்று காணப்பட வேண்டும்.

அதாவது, அபிவிருத்திகளுக்குத் தேவையான மண், நதிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய மணலை, உள்ளூர் பாவனைக்கும் தேவையெனில் ஏனைய பகுதிகளுக்கும் வியாபார ரீதியில் செய்வதற்கு ஒழுங்கு முறைமையொன்று இருக்க வேண்டும். அதன்மூலம், அநேக மக்கள் தொழில் பெறுவற்கும் வியாபாரம் செய்வதற்கும் ஒரு முறைமை இருக்க வேண்டும். அதைவிடுத்து, குறிப்பிட்ட சிலர் மாத்திரம் மாஃபியா போன்று தொடர்ச்சியாக மணல் அகழ்வதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும்.

சுழற்சி முறையிலான அனுமதி, கச்சேரி ஊடாக உள்ள உத்தியோகத்தர்கள், அரசாங்க அதிபர் உட்பட மணல் அகழ்வு சம்பந்தப்பட்ட வல்லுநர்கள், நீர்ப்பாசன அதிகாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, மக்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவெடுத்து, மக்கள் பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களையும் பெற்று, உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் மிகவும் கவனமாக ஒரு முறைமைப்படுத்தி, மணல் அகழ்வை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பற்றாக்குறையால், கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

மேய்ச்சல் தரை பற்றாக்குறை தொடர்பில், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து, அவதானம் செலுத்தியுள்ளேன். அதாவது, மேய்ச்சல் தரை நிலங்களாக முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலங்கள், யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளில் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால், இடைக்காலத்தில் அவை சரியான முறையில் அமல்படுத்தப்படாமல் இருந்தன. தற்போதுள்ள காலத்தில், மேய்ச்சல் தரைகளை விஸ்தரிக்க வேண்டுமெனில், அவை சரியான முறையில் அடையாளம் கண்டு, வழங்கப்பட வேண்டும்.

மேய்ச்சல் தரையென்பது, கால்நடைகளுக்கானது. இதில் தமிழர்களது, முஸ்லிம்களது, சிங்களவர்களது என்று பாகுபாடு பார்க்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உரிய மேய்ச்சல் தரை இடங்களை, அடையாளம் காண வேண்டும். புதிதாக வரவிருக்கின்ற அரசாங்கம், அதனது கொள்கைப் பிரகனத்துக்கு ஏற்ப, மேய்ச்சல் தரைகளை விஸ்தரிக்க வேண்டும். அதில் எல்லோரையும் உள்வாங்க வேண்டும்.

நிலைபேறான அபிவிருத்தி எனும் போது, ஒரு சாரார் சார்ந்த கருத்துகளை மாத்திரம் கவனத்திற்கொள்ளாது, எல்லோரது கருத்துகளையும் உள்வாங்கி, அபிப்பிராயங்களைப் பெற்று, அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி – காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம் ஆகிய பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

காணி இல்லாதவர்களுக்குக் காணி வழங்கத்தான் வேண்டும். ஆனால், திட்டமிடப்பட்ட குடியேற்றங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசார அடிப்படையில் அங்கு வாழும் காணியற்ற, வீடற்ற மக்களைக் குடியேற்ற வேண்டுமே தவிர, வெளி மாவட்டத்தவருக்கு இடமளிக்கக்கூடாது. சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

கேள்வி – நுண்கடன் பிரச்சினையால் கிழக்கில் பல குடும்பங்கள் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. அவர்​களை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும், நுண்கடன் திட்டத்தினூடாக ஏமாற்றும் நபர்களைத் தடுத்து நிறுத்தவும் நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

நிதி நிறுவனங்கள், அவர்களது வியாபாரத்துக்காக, வறுமைப்பட்ட மக்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். நான் வலுவூட்டல்துறை அமைச்சராக இருந்த போது, ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு, சமுர்த்தி கொடுக்கப்பட்டது. அதில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 30,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கினோம்.

30, 40 வருடங்களுக்குப் பிறகு, நான் இராஜாங்க அமைச்சராக இருந்த போதே, 30,000 குடும்பங்களுக்கு ஒரே தடவையில் சமுர்த்தி வழங்கப்பட்டது. வேறு யாரும் செய்யாததை, மட்டக்களப்பில் நான் அமல்படுத்தி இருக்கின்றேன். கொரோனா வைரஸ் காலத்தில் கூட, ரூ.5,000, ரூ.10,000 என்ற உதவித்தொகை, சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கே வழங்கப்பட்டன.

நாட்டில் மேலும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு, சமுர்த்தி வழங்கப்படும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் 25,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கலாம். அந்தக் குடும்பங்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதை நடைமுறைப்படுத்தும் போது, மக்கள் வெளியாரிடம் நுண் கடன்களைப் பெற்று ஏமாறாமல், அரசாங்கத்தின் சமுர்த்திக் கடன் உதவிகளைப் பெறுவர். இதன்மூலம், மக்கள் அவர்களது வாழ்வாதாரம், தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்தச் சமுர்த்தித் திட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகளை அதிகம் உள்ளீர்க்க வேண்டும். இதை மட்டக்களப்பு மாவட்டத்தில், சரியான முறையில் நாம் ஆரம்பித்துள்ளோம். அது தொடர வேண்டும்.

கேள்வி – உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர், யுவதிகளுக்கு நீங்கள் வழங்கும் வரப்பிரசாதங்கள் எவை?

பட்டதாரிகளுக்கு வேலைவாய்பைப் பெற்றுக்கொடுப்பதுடன், இதற்காகத் தனியார்துறையையும் நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அத்தோடு, இளைஞர்களை அவர்களது துறை சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். இதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி, இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளோம்.

கேள்வி – சிறுபான்மை இன வாக்குகளை உடைப்பதற்காகப் போலி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டி உள்ளீர்களா?

இதைச் சரியாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாக்குகள் சிதறடிக்கப்படாமல் வழங்கப்படும் போதுதான், அந்தந்தப் பகுதி மக்களுடைய பிரச்சினைகள் குறித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தீர்வுகளைப் பெற முடியும். அரசாங்கத்துக்கு 3 இல் 2 பெரும்பான்மை கிடைத்தால், ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை மாற்றி, அவர்களுக்கு ஏற்றால் போல நிலைமையை மாற்றலாம். இது தொடர்பில், நாங்கள் எங்களது பிரசார நடவடிக்கையின் போது மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். அதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

கேள்வி – சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான இனமுறுகல், பெரும்பான்மை இனத்தினருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு, நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

பெரும்பான்மைக் கட்சிகளைப் போன்று, சிறுபான்மைக் கட்சிகளைச் சார்ந்தோரும் தேர்தல் காலத்தின் போது, இனமுரண்பாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் முன்வைத்து, பிரசாங்களை முன்னெடுக்கின்றனர். காரணம், தேர்தலில் எப்படியேனும் வென்றுவிடவேண்டும் என நினைப்பதாகும். ஒரு சமுதாயத்தை இன்னொரு சமுதாயம் இழிவுபடுத்துகின்ற மாதிரி செய்யக்கூடாது. எதிர்கால சமூகம் மகிழ்ச்சியாக வாழ்வதையே, நாம் பார்க்க வேண்டும். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால்தான் எமது பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழலாம். எனவே, கௌரவமான முறையிலே, சமாதான சக வாழ்வை மக்களுக்கு வழங்க வேண்டும்.

கேள்வி – இந்த நேர்காணல் மூலமாகப் பொதுமக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி?

அரசியலுக்கு நான் ஒன்றும் புதியவன் அல்லன். கடந்த காலத்தில், எப்போதும் மக்களுடன் நல்லிணக்கத்துடன் நான் பயணித்துள்ளேன். என்னைத் தேடிவரும் மக்களுக்கு இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் என்றும் உதவி செய்பவனாக இருந்துள்ளேன். ஊழல் அற்ற முறையில், எந்நேரத்திலும் மக்கள் என்னை அணுகக்கூடிய வகையில் இருந்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடர்காலத்திலும் உதவிய, சமுர்த்தி, அபிவிருத்திகளை முன்னெடுத்துச் சேவையாற்றிய என்னை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். மக்கள், அவர்களது விரும்பு வாக்குகளை எனக்குத் தருகின்ற போது, தொடர்ந்தும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றத் தயாராக உள்ளேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*