;
Athirady Tamil News

ஐ.தே.கவை பிளவுபடுத்தியது ஸ்ரீ ல.சு.கவே !! (கட்டுரை)

0

ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதானது, தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அது இறுதியில், சிறுபான்மை அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஊகிக்கலாம்.

பொதுவாகக் கொள்கை ரீதியில் பார்த்தால், ஐக்கிய தேசிய கட்சிக்கும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. இம்மூன்று கட்சிகளுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் என்றால், அடிப்படையிலேயே கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன.

இம்மூன்று கட்சிகளும் பொதுவாக முதலாளித்துவ பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. அதனாலேயே, மேற்கத்திய பலம் வாய்ந்த நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, நடந்து கொள்கின்றன. இம் மூன்று கட்சிகளிடமும், நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப எந்தவிதமான திட்டங்களும் இல்லை.

தாம் பதவியில் இருக்கும் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் ஆங்காங்கே சில திட்டங்களை அமல் செய்தாலும் வறுமையை ஒழிக்கவோ, வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்கவோ, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அவர்களிடம் எந்தவொரு திட்டமோ, குறைந்த பட்சம் நோக்கமோ இல்லை.

இனப்பிரச்சினை விடயத்திலும் இக்கட்சிகளிடையே அடிப்படை வேறுபாடுகள் இல்லை. ஐ.தே.கவிலும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருப்பதை விடக் கூடுதலாக, பொதுஜன பெரமுனவில் இனவாதிகள் இருப்பது உண்மை. பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் மற்றைய இரு கட்சிகளின் தலைவர்களை விட, இனவாதிகள் என்பதும் உண்மை. ஆனால், இம் மூன்று கட்சிகளும் இனப் பிரச்சினையைத் தீர்க்க, தீர்க்கமானதும் பாரதுரமானதுமான நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்தத் திட்டத்திலும் 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலில் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை விடப் பெரிதாக எதுவும் இருக்கவில்லை.

ஐ.தே.கவும் ஐ.ம.சயும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களைப் பற்றி மேடைகளில் கூச்சலிட்ட போதிலும், அவர்கள் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சிறு சிறு ஊழல்களைத் தவிர, பாரிய ஊழல்களில் ஈடுபட்டதாக அவர்களே கூறிய, எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசாங்கமும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக, பெரிதாக எதையும் செய்யப் போவதில்லை என்றே தெரிகிறது.

இவ்வாறு, இக்கட்சிகளின் பொதுத்தன்மையைப் பற்றி அடுக்கிக் கொண்டு போகலாம். சிலவேளை, பொதுஜன பெரமுனவின் ஆட்சிக் காலத்தில், சிறுபான்மையினரைப் புண்படுத்தும் சம்பவங்கள் கூடுதலாக இடம்பெறலாம். அது ஒன்று மட்டுமே, மூன்று கட்சிகளிடமும் காணக்கூடிய ஒரு முக்கிய மாறுபாடாகும்.

எனவே, யார் நாட்டை ஆண்டால் என்ன என்று நினைக்கும் மனநிலையே, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படுகின்றது. ஆனால், அம்மக்கள் இனவாதக் கண்ணோட்டத்தில் பெரும்பாலும் பொதுஜன பெரமுனவையே ஆதரிக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான், ஐ.தே.கவின் பிளவை ஆராய வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே, இந்தப் பிளவுக்கு, எந்தவித கொள்கை முரண்பாடும் காரணமாகவில்லை. அவ்வாறான கொள்கை முரண்பாடுகள் பிளவுக்கு முன் அந்தக் கட்சியில் இருக்கவும் இல்லை. தற்போது பிளவுபட்ட இரு சாராரின் தேர்தல் மேடைகளிலும் அவ்வாறான கொள்கை முரண்பாடுகளைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை.

இது வெறுமனே பதவிச் சண்டையாகும். அத்தோடு அந்தப் பதவிச் சண்டையை ஆரம்பித்தவர்கள் உண்மையிலேயே ஐ.தே.கவினர் அல்ல. ஐ.தே.கவுக்கு எதிராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே, அச்சண்டைக்கான விதையை விதைத்தது. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐ.தே.க தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தே அந்த விதையாகும்.

1977ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகளாக ஐ.தே.கவே நாட்டை ஆட்சி புரிந்து வந்தது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகிய இரண்டிலும் அக் கட்சி தோல்வியுற்றது. சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவை பிரதானமாகக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் அப்போதைய ஐ.தே.க தலைவர் காமினி திஸாநாயக்க, புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க தலைமையை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் வரையிலான ஏழு வருடங்களில், நாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் ஐ.தே.க தோல்வியுற்றது.

இது, அக்கட்சிக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டும் ஏற்பட்ட நிலைமையோ அல்ல. 1977ஆம் ஆண்டு முதல், 1994 ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளில் சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவுக்கும் இதுவே நடந்தது.

ஆனால், ரணிலின் தலைமையில் ஐ.தே.க தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் போது, அவரது தலைமையில் ஐ.தே.கவுக்கு தேர்தல்களில் வெற்றியடைய முடியாது என்று, ஸ்ரீ ல.சு.கவினர் கூறலாயினர்.

“ஒரு பொய்யை நூறு முறை கூறும்போது, அதைக் கூறுவோருக்கும் அது உண்மை போல் விளங்கும்” என, ஹிட்லரின் தகவல் அமைச்சராக இருந்த ஜோசப் கொபெல்ஸ் கூறியிருந்தார். (“If you repeat a lie often enough, people will believe it, and you will even come to believe it yourself”) இது, ‘கொபெல்ஸ் சித்தாந்தம்’ என்றழைக்கப்படுகிறது.

இந்தச் சித்தாந்தம் உண்மையானது என்பதைப் போல், ஐ.தே.க தலைவர்களே ரணிலின் தலைமையில், தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை நம்பத் தொடங்கினர். அதன்படி, 1991ஆம் ஆண்டு ஐ.தே.க பொதுச் செயலாளராக இருந்த காலஞ்சென்ற காமினி அத்துகொரளையின் தலைமையில், ரணிலுக்கு எதிரான முதலாவது உட்கட்சிக் கிளர்ச்சி வெடித்தது. ஆனால், அந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ரணிலின் தலைமையில் ஐ.தே.க வெற்றி பெற்றது.

மீண்டும் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் தோல்விகளை அடுத்து, கட்சியின் அப்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் தலைமையில், ரணிலுக்கு எதிராக மற்றொரு கிளர்ச்சி ஏற்பட்டது.

2014ஆம் ஆண்டு, மீண்டும் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. அதுதான் கடந்த வருடம் மீண்டும் வெடித்து, இந்த வருடம் கட்சியைப் பிளவுபடுத்தியது.

ரணிலிடமும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. 2001ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்று, இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பறிகொடுத்தார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது அரசாங்கத்தைக் கலைத்துவிட்டார். அதேபோல், 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்து, மூன்று ஆண்டுகளில் சந்தித்த முதலாவது தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலேயே, தமது வாக்குவங்கியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்து ஐ.தே.க படுதோல்வி அடைந்தது.

அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் சந்திரிகா, மைத்திரிபால சிறிசேன ஆகிய ஜனாதிபதிகளே இருந்தனர். அவ்விருவரும் கடும்போக்காளர்கள் அல்ல. ஆயினும் அவர்களுடன் இணக்க அரசியலில் ஈடுபட, ரணிலால் முடியாமல் போயிற்று.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் சஜித்தை ஏன் ஆதரிக்கின்றன?

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏன் தாவினார்கள், இதில் ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா?

இல்லவே இல்லை. ரணிலை விட, சஜித் பேரினவாத சக்திகளுக்கு நெருங்கியவர். இனப்பிரச்சினை என்ற விடயத்தில், சஜித்தை விட ரணில் பரந்த மனப்பான்மை உடையவர் என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

சஜித்தின் மேடைப் பேச்சுகளில் ஆழமே இல்லை. தாம் ஜனாதிபதியானால் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறிய போது, தாம் ஜனாதிபதியானால் நெல் விவசாயிகளுக்கு மட்டுமன்றி, சகல விவசாயிகளுக்கும் இலவசமாக உரம் வழங்குவதாக சஜித் கூறினார். தாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதாக, கோட்டாபய கூறிய போது, தாம் அவர்களுக்கு 1,500 ரூபாய் வழங்குவதாக சஜித் கூறினார்.

கொவிட்-19 பரவுகையின் அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்த போது, தாம் பிரதமரானால் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபாய் வீதம் வழங்குவதாக சஜித் கூறுகிறார். இது புத்திஜீகளின் அரசியலல்ல.

ரணிலின் உரைகளில், இதை விட ஆழமும் தந்திரமும் இருக்கிறது. ஆனால், அவர் நடைமுறையில் பூஜ்ஜியம். உயர்குடி மனப்பான்மையால், அவர் விரைவில் மற்றவர்களுடன் முரண்பட்டுக் கொள்கிறார். தாம் செய்தவற்றையாவது, சந்தைப்படுத்திக் கொள்ள அவருக்குத் தெரியாது.

போர் நிறுத்த உடன்படிக்கை மூலமும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமும் ரணில், புலிகளைப் பலவீனமடையச் செய்தார். தரைக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் போர் நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு, கடலில் புலிகளிடம் இருந்த 10 ஆயுதக் கப்பல்களையும் அழிக்கச் செய்தார். போரின் போது, புலிகளுக்குப் பெரும் பலமாக விளங்கிய கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்தார். புலிகளின் நம்பகத் தன்மையின் அளவை, சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்தினார். அதுவே, 2006ஆம் ஆண்டு, 25 ஐரோப்பிய நாடுகள் புலிகளைத் தடை செய்ய முக்கிய காரணமாகியது.

ஆனால், அரச படைகளின் போர் வெற்றியின் போது, அவற்றில் ஒன்றையாவது சந்தைப்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதை, அவர் தெரிந்திருக்கவில்லை; இன்னமும் அவருக்குத் தெரியாது.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் விடயத்தில், சஜித்தை விட ரணிலுக்குத் தெளிவு இருக்கிறது. அவர், பிக்குகளின் பிடியில் அகப்பட்டவரும் அல்ல. ஆயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலா, சஜித்தா என்ற பிரச்சினை எழுந்த போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர்ந்த மஹிந்த விரோதிகளான ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், சஜித்தையே ஆதரித்தனர். பொதுவாக, ஐ.தே.க ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் சஜித்தை விரும்பியதே அதற்குக் காரணமாகும். ரணில் போட்டியிடாத காரணத்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சஜித்தை ஆதரித்தது.

இனி வரும் காலத்திலும் ஐ.தே.கவோ ஐக்கிய மக்கள் சக்தியோ, சிறுபான்மை மக்களின் பிர்சினைகளின் போது, முன்னரைப் போலாவது பேரினவாத சக்திகளுக்குச் சாதகமாக நடக்காதிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு இல்லாமையாலேயே,ஐ.தே.க தோல்வியடைந்தது என்ற பரவலான கருத்தை, இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் தற்போது ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இக் கருத்தும் மேற்கூறப்பட்ட கொபெல்ஸின் சித்தாந்தத்தின் பிரகாரம், பரவியிருக்கும் கருத்தாகும். சிறுபான்மை மக்களுக்கு எதிராக, இனவாதத்தைக் கக்குவதைத் தவிர, பொதுஜன பெரமுனவும் சிங்கள பௌத்த மக்களுக்கு, ஐ.தே.கவை விடச் செய்தது ஒன்றும் இல்லை.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஐ.தே.க 35 இலட்சம் வாக்குகளையே பெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சஜித் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். அதிகரித்த 20 இலட்சம் வாக்குகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுமார் நான்கு இலட்சம் வாக்குகளும் ஸ்ரீ ல.சு.கவின் சுமார் ஐந்து இலட்சம் வாக்குகளும் இருந்திருக்கலாம்.

அதிகரித்த ஏனைய 10 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள், சிங்கள பௌத்தர்களின் வாக்குகளேயாகும். எனவே, ஐ.தே.க சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காமையால் தோல்வியடைந்தது என்பது முற்றிலும் உண்மையல்ல.

ஆனால், அந்தக் கருத்தை ரணிலும் சஜித்தும் உள்ளிட்ட அவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஏற்றுக் கொண்டுள்ளமையால் அவர்களும் இனிச் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் கவனமாக இருப்பார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*