;
Athirady Tamil News

‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ !! (கட்டுரை)

0

மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட, இறைமை மன்னனிலேயே தங்கியிருந்தது. மன்னனின் முடிந்த முடிவை மறுதலிக்கும் அதிகாரம், எங்கேனும் இருக்கவில்லை. இதனால் மன்னன் வல்லாட்சியாளனாக மாறும் போதும் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போதும் அதைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கவில்லை.
ஆகவே, புரட்சியொன்றே அந்த எதேச்சாதிகாரத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே வழியாக இருந்தது. மக்கள் புரட்சி செய்து, ஆட்சியிலிருந்த மன்னனை வீழ்த்தினார்கள். அடுத்து, ஆட்சிப்படியேறுபவர்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாதிருக்க, சில மட்டுப்பாடுகள் உருவெடுத்தன. அவை மக்களின் உரிமைகளாகவும் அதிகாரப் பிரிவுகளாகவும் உருப்பெற்றன.
மேற்குலகில் முடியாட்சி வீழ்ந்து, ஜனநாயகச் சிந்தனை உருப்பெறத் தொடங்கியதில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு மிக முக்கியமானது.

‘இறைமை என்பது, மன்னனில் இல்லை; மக்களிடமே உண்டு’ என்ற சிந்தனையும் குடியாட்சி, சட்டவாட்சி, அதிகாரம் என்பன ஓரிடத்தில் குவிக்கப்படக் கூடாது என்ற சிந்தனைகளும் வலுப்பெறத் தொடங்கின. நிற்க!

‘ஏகபோகம்’ என்பது, எப்போதுமே ஆபத்தானதொரு சிந்தனை. ஏகபோக அதிகாரம்,ஓரிடத்தில் குவியும் போது, அது மட்டுப்பாடில்லாத பெரும்பலத்தை தனிநபரிடமோ, செல்வாக்கு மிகு குழுவிடமோ வழங்கிவிடுகிறது. மற்றைய அனைவரும், அந்தத் தனிநபரினதோ குழுவினதோ கருணையில் தங்கியிருக்க வேண்டியவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்கள், அந்தத் தனிநபரினதோ, குழுவினதோ எதேச்சாதிகார நடவடிக்கைகளை விரும்பியோ விரும்பாமலோ, அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அரசியலில் மட்டுமல்ல, வணிகத்திலும் கூட, ‘ஏகபோகம்’ என்பது ஆபத்தானது. அதனால்தான், திறந்த சந்தையை ஊக்குவிக்கும் பல்வேறு வளர்ந்த நாடுகளும், ‘ஏகபோகம்’ ஏற்படுவதற்கு எதிரான சட்டப் பாதுகாப்பை, வலுவாக அமல்படுத்துகின்றன. வணிகத்தில், போட்டியை இல்லாது செய்யும் முயற்சிகளைக் கூட, கடுமையான சட்டங்களின் மூலம் தடுக்கின்றன.

ஏனென்றால், ஏகபோகம் ஆபத்தானது. அது அரசியலானாலும் சரி, அதிகாரமானாலும் சரி, வணிகமானாலும் சரி, அதிகாரமும் பலமும் செல்வாக்கும் ஓரிடத்தில் குவிவது, எவருக்குமே ஆரோக்கியமானதல்ல.

அரசியலைப் பொறுத்தவரையில், ‘அதிகாரம் கெடுக்கும், அறுதியான அதிகாரம் அறுதியாகக் கெடுக்கும்’ என்பார், அக்டன் பிரபு. இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஏகபோகம், அறுதியான அதிகாரத்தை ஒரு தரப்பிடம் குவிக்கிறது. இதன் விளைவு வல்லாட்சி. இதனால்தான், ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்புகளாக, மொன்டஸ்க்யுவின் ‘அதிகாரப் பிரிவுக் கோட்பாடு’ம் அதன்பாலான அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலிருந்து உதித்த, ‘தடைகளும் சமன்களும்’ என்ற சித்தாந்தமும் கருதப்படுகின்றன.

ஓரரசின் மூன்று அங்கங்களான சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகியன, ஒரே நபர் அல்லது, நபர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதே, ‘மொன்டஸ்க்யு’ சொல்லும் அதிகாரப் பிரிவின் சாராம்சம் ஆகும். அதுபோல, ‘தடைகளும் சமன்களும்’ என்ற சித்தாந்தத்தின் சாராம்சமானது, இந்தப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு துறையும், தமக்குள் வல்லாட்சியை உருவாக்கிவிட முடியாதவாறு, ஏனைய துறைகள் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

மிக எளிமையாகப் பார்த்தால், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதையும் ஏகபோகத்தையும் தடைசெய்வதே, நவீன ஜனநாயகத்தின் மிக முக்கிய அடிப்படைப் பண்பு எனலாம்.

அதிகாரம் ஓரிடத்தில் குவிந்த போதெல்லாம், ஒரு தரப்பு ஏகபோகத்தைப் பெற்றுக்கொண்ட போதெல்லாம், ஜனநாயகம் பெரும் சிதைவைக் கண்டது. இதற்கு வரலாறு சாட்சி.

இந்த ஏகபோகத்துக்கு எதிரான சிந்தனையை, தமிழ்ச் சமூகம் மிக எளிதாகவே உணர்ந்திருந்தது. அதனால்தான், ‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்ற பழமொழி, எம்மிடையே பிரபலமாக இருக்கிறது. ‘கீரை’ என்பது, மிக எளிதாக முளைக்கும், மிக மலிவானதொரு மரக்கறிவகை. ஆனால், அந்த மலிவான கீரையை விற்கும் கடைக்குக் கூட, போட்டி இருக்க வேண்டும் என்ற, பலமான புரிதலைக் கொண்டிருந்த சமூகமாக, தமிழ்ச் சமூகம் இருந்திருக்கிறது என்பதற்கு, இந்தப் பழமொழியே சான்று.

ஜனநாயகம் என்பது, ‘மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’ என்ற, ஆபிரஹாம் லிங்கன் உரைத்த ஜனநாயகத்தின் தாற்பரியம் என்பது உண்மையானால், ஜனநாயகம் என்பது, தலைவர்கள் பற்றியதாக அன்றி, கட்சிகள் பற்றியதாக அன்றி, மக்கள் பற்றியதாக அமைய வேண்டும்.

ஆனால், மக்கள் என்பவர்கள், ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகளைக் கொண்டமைந்த ஒருமித்த தன்மையுடையவர்கள் (homogenuos) அல்ல. மக்களிடம் அபிப்பிராயபேதமுண்டு; மாறுபட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு; வேறுபட்ட தெரிவுகள் உண்டு. ஆகவே, ஜனநாயகம் என்பது, இவற்றை அரவணைக்கத்தக்கதாக அமைய வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின், உண்மையான தாற்பரியத்துக்கு நியாயம் செய்வதாக அமையும்.

இந்த இடத்தில், சிலருக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. போட்டி என்பது, வினைதிறனானதா, அது ஒற்றுமையைச் சிதைக்காதா, ‘ஒற்றுமையே பலம்’ இல்லையா? போட்டி என்பது, வினைதிறனானதா என்ற கேள்விக்கு, எது வினைதிறன் என்பதை நோக்குவது முக்கியமாகிறது.

முதலாவது உலக யுத்தத்தில் வீழ்ச்சிகண்டு, பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஜேர்மனி, இன்னோர் உலகப் போரின் காரணகர்த்தாகவாக, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளையும் கைப்பற்றுமளவுக்கும் உலகையே ஆட்டிப்பார்க்கும் அளவுக்கும் நாஸி ஆட்சியில், வினைதிறனாக வளர்ச்சி அடைந்திருந்தது. நாம் அத்தகைய வினைதிறனைத்தான் வேண்டுகிறோமா?

இன்று ஜனநாயகத் தெரிவுகள் அற்ற, ஒரே கட்சி மட்டுமே, ஆட்சி செய்யக் கூடிய நாடுகளாக சீனா, வடகொரியா, கியூபா, லாவோஸ் போன்ற நாடுகள் இருக்கின்றன. இவற்றின் மனித உரிமைநிலை, எவ்வாறு இருக்கிறது, மனித அபிவிருத்திச் சுட்டி எவ்வாறு இருக்கிறது, மனித வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால் ‘வினைதிறன்’ என்பதன் அர்த்தமற்ற தன்மை புரிபடும்.

பத்துப் பேர் விவாதித்து முடிவெடுப்பது என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்கும்; உடன்பாடு எட்டப்படாது. ஆனால், எடுக்கப்படும் முடிவு சார்ந்த, பலதரப்பு அபிப்பிராயங்களையும் கேட்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அது பெரும்பான்மைத் தரப்பின் நன்மைக்காக, சிறுபான்மைத் தரப்பின் நலன்கள் பலிக்கடாவாக்கப்படாது இருப்பதற்கான தடைகளை உருவாக்கிறது.

மாற்றுக் குரல்கள் ஒலிப்பதற்கான வாய்ப்புக்கூட இல்லாவிட்டால், இங்கு வினைதிறன் என்பது, அதிகாரமுள்ளவர்களின் தெரிவுகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் அமல்படுத்துவதாக மட்டுமே அமையும். அத்தகைய வல்லாதிக்க வினைதிறனைத்தான் விரும்புகிறோமா?

‘ஒற்றுமை’ என்பது, அரசியலைப் பொறுத்தவரையில் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வார்த்தையாகிவிட்டது. எது ஒற்றுமை?

நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, எம்மீதான அடக்குமுறைகளைச் சகித்துக் கொண்டிருப்பதா?

ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக, எமது உரிமைகளைத் தாரைவார்த்துவிட்டு, உடன்படாத விடயங்கள் தொடர்பில் மௌனம் காப்பதா?

இதுதான் ஒற்றுமையா? இந்த ஒற்றுமையால் நாம் அடையப்பெறப்போவது என்ன என்பதுதான் முக்கியமானது. ஒற்றுமை என்பது, உண்மையாகவே அதன் அடைவுகளை ஏற்றுக்கொண்டு ஒன்றுபடுவதால் மட்டுமே பலமாக அமையுமே அன்றி, ஓர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக, எமது அடிப்படைகளைத் தொலைத்துக்கொண்டு, ஒற்றுமை என்ற பதாகையை மட்டும் ஏந்திக்கொண்டு நிற்பதால் பயனில்லை.

ஒற்றுமைக்காகத் தனி மனித உரிமைகளையும் விருப்பங்களையும் சுதந்திரங்களையும் கொள்கைகளையும் தியாகம் செய்துவிடவேண்டும் என்பது, வல்லாதிக்க மனநிலையின் வௌிப்பாடு. ஒரு மனிதனைப் பார்த்து, “ஒற்றுமைக்காக உனது உரிமைகளையும் விருப்பங்களையும் சுதந்திரங்களையும் கொள்கைகளையும் நீ விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கேட்பது, எவ்வளவு பெரிய அபத்தம்?

ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது, வெறுமனே ஒற்றுமை என்ற சொல்லைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு திரிவதில், எந்த அர்த்தமும் இல்லை.

மாறாக, ஒற்றுமை என்பது, எவ்வாறு அமைய வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் ஒன்றுபடக் கூடிய விடயங்களில் ஒன்றுபட்டும், மாற்றுக்கருத்துள்ள போது, அதைக் கௌரவத்துடன் தெரிவித்து, எதிர்ப்பை வௌிக்காட்டக் கூடிய வகையிலும் அமைய வேண்டும். அதுதான் நிஜ ஒற்றுமை. தவிர, சரணாகதி நிலையை ஒற்றுமை என்று வரையறுப்பது தவறு.

ஒரு மக்கள் கூட்டம் என்பது, பலவகைப் பூக்களும் செடிகளும் கொடிகளும் மரங்களும் புற்களும் என, உயிர்ப்பல்வகைமை நிறைந்த அழகிய பூந்தோட்டத்தைப் போன்றது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமையைத் தேடலாமே தவிர, எல்லாவற்றையும் ஒரே நிறத்திலும் ஒரேவடிவத்திலும் வடிவமைத்துவிட முடியாது. அது, இயற்கையானதுமல்ல; யதார்த்தமானதுமல்ல.

மாற்றுக்கருத்து, உள்ளவரை தான் அது ஜனநாயகம். அது இல்லாவிட்டால், அது வல்லாதிக்கம். இது பாமரத் தமிழனுக்கும் தெரியும். அதனால்தான் அன்றே அவன் சொன்னான், “கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்” என்று.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 3 =

*