;
Athirady Tamil News

ஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்! (கட்டுரை)

0

“தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்” என்பார்கள்! வீட்டுக்கு உண்மையிலேயே கலிகாலம் இந்த
தேர்தலோடு தொடங்கிவிட்டது! 1994ல் சம்பந்தன் செயலாளராக இருந்தபோது திருமலையில் தங்கத்துரையிடம்
தோற்றநிலையில் தான் தேசியப் பட்டியலில் வர விரும்பியிருந்தும் நீலனின் பெயர் பட்டியலில் முன்கூட்டியே
அறிவிக்கப்பட்டதால் – பலர் அதற்கு கண்வைத்திருந்த நிலையில் சிவசிதம்பரத்தின் விடாப்பிடியால் அதை மீற
முடியவில்லை. 2001ல் தேசியப்பட்டியலில் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் பெயர் இடப்பட்டு தெரிவானார்.

அவர் மறைந்த பின் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி முத்துலிங்கத்துக்கு அந்தப் பதவியை ஒருமாத காலத்துக்கேனும்
கொடுத்திருக்கலாம். ஏனெனில் ஏற்கனவே 2000ல் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற
முத்துலிங்கத்திடம் திரு. சம்பந்தன் அவர்கள் – சிவசிதம்பரம் அவர்களுக்கு பின் ஒரு நேரத்தில் தேசியப்பட்டியலைத்
தருவோம் எனக் கூறியிருந்தார். இதனை திரு. ஆனந்தசங்கரி அவர்களும், மறைந்த ரவிராஜ் அவர்களும் நேரில்
சென்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை மீறி 5.6.2002ல் மறைந்த தலைவர் சிவசிதம்பரத்தின்
பூதவுடல் எரிந்து சாம்பலாவதற்கு முன்பே சம்பந்தன் அணி முகமாலையைக் கடந்து வன்னிக்குப் போய்
திருமலையில் தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்திற்கு அந்த இடத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதனால் ஏற்பட்ட
கருத்து முரண்பாடு பெரிதாகிப் பின் ஏகப் பிரதிநிதித்துவத்தில் பிளவு ஏற்பட்டு கூட்டணி உடைந்தது.
இன்று எறிந்த பந்து தலைமேல் விழுவது போல தேசியப்பட்டியல் பிரச்சனையில் சம்பந்தரும் துரைராசசிங்கமும்
செய்த அவசர முடிவு தமிழரசுக் கட்சியை ஆட்டுகிறது! தற்போது தேசியப்பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்ட
நிலையில் மாவை. சேனாதிராசா அவர்களோ, வேறு எவரும் எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் கூடிய பின்
அவரது ராஜினாமைப் பெற்று திரும்ப செயலாளர் தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்து அது வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்ட பின் வேறொருவருடைய பெயரை மீண்டும் அறிவித்து – அதுவும் வர்த்தமானியில் பிரசுரமாகி வந்த
பின்பே புதியவர் பாராளுமன்றம் புகலாம்.

ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கொழும்புக் கிளையின் தலைவர்
சட்டத்தரணி அவரும் ஏதேனும் இசக்கு பிசகான முடிவை எடுக்கலாம். இதே நேரம் சம்பந்தர் தமக்கு ஒத்தாசையாக
திருமலையில் இறக்கப்பட்ட குகதாசனின் பெயரும் சிலாகிக்கப்படுகிறது. ஏற்கனவே மாவை. சேனாதிராசா 1994ல்
தோல்வியுற்றபோது நீலனின் இடத்தை அம்பாறைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என வாதாடிய மாவையவர்கள் –
அம்பாறையில் தமிழ் மக்களின் நலன்கருதி தான் தேசியப்பட்டியலில் இம்முறை போகும் எண்ணத்தை
கைவிடவேண்டும்.

அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது 1989ல் தோல்வியடைந்த பலர் (சம்பந்தன், ஜோசப்
மற்றும் பலர் ) அந்த இடத்துக்கு கண்வைத்திருந்தனர். திருமதி. மங்கை. அமிரின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டது..
சங்கரி அவர்கள் குறிப்பிடுவதுபோல செயலாளர்நாயகம் பதவியையும், கூடவே பாராளுமன்ற பதவியையும்
தனக்குக் கோரி கிடைக்காவிட்டால் வெளிநாடு செல்ல முயன்றதும் அன்றைய கட்சியினருக்கு தெரிந்தவிடயம்.

இதற்கிடையில் திருமதி. ரவிராஜ் விருப்பு வாக்கு விவகாரத்தில் மதியம் கொழும்பிலிருந்த சுமந்திரன் யாழ்ப்பாணம்
வரும்வரை ஏறக்குறைய முடிவுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் வேண்டுமென்றே 2 தொகுதிகளின் வாக்கை
வெளியிடாது தாமதித்து மீள எண்ணப்பட்ட விடயங்கள், முன்னிலையிலிருந்து பின்னடிக்கப்பட்ட சம்பவம்,
சித்தார்த்தன் சம்பவ இடத்திற்கு வந்து தன்னிலையை உறுதிப்படுத்திய விடயம், முடிவுகளை அறிவிக்கும் பூரண
அதிகாரமுடையவர் யார்யாருக்கோவெல்லாம் தொலைபேசியில் பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?
இங்கு நீதியாக தேர்தல் நடத்தப்பட்டதா?

2004ல் தோல்வியடைந்த மாவை திரும்ப வெற்றி பெற்றமை, கடந்த வருடம் அருந்தவபாலனுக்கு ஏற்பட்ட இதே
பிரச்சினை என்பவற்றை அறிந்திருந்தும் இந்தமுறை தேர்தலைக் கண்காணித்தவர்களும் ஊடகங்களும் ஏன்
திருமதி. ரவிராஜின் ஆதரவாளர்களும் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கவில்லை! சுமந்திரனுடைய
அதிரடிப்படைப் பிரவேசம், ஆதரவாளர் ஒருவர் படுமோசமாகத் தாக்கப்பட்ட சம்பவம் இவை ஜனநாயகத்
தேர்தலுக்கான முறையான நடைமுறைகளா என்பதை அறிய விரும்புவதுடன், ஏற்கனவே 75 கள்ள வாக்கு
விடயத்தையும் நினைவுபடுத்தி இத்தகைய சம்பவங்கள் பெரிதாவதற்கு காரணம், ஆதரவாளர்கள் களைப்படைந்த
நிலையில் அவர்களது கவனத்தை குழப்புவது மற்றும் ஊடகத்தினரின் நடுநிலையற்ற தன்மை தேர்தல்
அதிகாரிகளின் கவலையீனம் என்பவை இப்பிரச்சினைகளுக்கு இத்துடன் இதனை நிறுத்துகின்றேன்.

அடுத்து ஐ.தே. கட்சி தான் கொண்டுவந்த சட்டங்களினால் இன்று படுதோல்வியடைந்து தேசியப்பட்டியலில் ஒரு
ஆசனத்தைக் கொண்டு பெரீ..ய …. ஆறுதல் அடைகிறது! 1994ல் ஜனாதிபதியைக் கைப்பற்றிய அணி தொடர்ந்தும்
ஏறக்குறைய 26வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது! 16வருட ஆட்சியை மட்டும் ஐ.தே. கட்சி ஆண்டது. இதை
“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்று கொள்ள முடியும்!

1947ல் தெரிவாகி – சுதந்திரமடைந்த பிறகு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறித்தது முதல் 1977 ல் 18
கூட்டணியினர் தெரிவானவுடன் – தமிழர் எதிர்க்கட்சியாக வருவதை விரும்பாத அதே ஐ.தே.கட்சி 140
பிரதிநிதிகளுடன் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

இன்று தினை விதைத்தவன் தினையறுப்பான் வினைவிதைத்தவன் வினையறுப்பான என்ற நிலையில் தமக்குள்
ஐக்கியமின்றி பிரிந்து இருக்கிறார்கள்!

கூத்து இன்னும் ஓரிரு தினங்களுக்கு சூடுபிடிக்கும்! பொறுத்திருந்து ஆட்டத்தைப் பார்க்கலாம்!
தங்க. முகுந்தன் – முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர். TULF

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*