;
Athirady Tamil News

புதிய எச்சரிக்கை – கோடைக் காலத்தில் வரப்போகும் அபாயம்! ! (கட்டுரை)

0

பருவநிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் கோடைக்காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, வெட்ட வெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது அல்லது தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலங்களில் கோடைக்காலங்கள் என்பது மனிதர்கள் பணியாற்றுவதற்கு ஊறுவிளைவிக்கும் அளவுக்கு அதிக வெப்பநிலை கொண்டதாக மாறக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் தன்னைத்தானே குளிர்விக்க முடியாமல், வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து அதனால் உடலுறுப்புகள் செயலிழப்பதற்கு வெப்ப அழுத்தத்தின் விளைவே ஆகும்.

உடலிலுள்ள தேவைக்கு அதிகமான வெப்பம் வெளியேறுவதற்கான முக்கிய வழி தோலிலுள்ள வியர்வை ஆவியாவதுதான். ஆனால், வெளிப்புற காற்று ஈரப்பதத்துடன் இருந்தால் இந்த செயல்முறை முற்றிலும் பாதிக்கப்படும்.

உதாரணமாக, தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று சிகிச்சையில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடையானது வைரசிடமிருந்து பாதுகாப்பதற்காக அளவிட முடியாத அடுக்குகளை கொண்டுள்ளது. இதனால், அவற்றை அணிபவர்களின் வியர்வை ஆவியாவது என்பது இயலாத காரியமாகி பல்வேறு பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது.

வெப்பநிலை அழுத்தத்தின் அறிகுறிகள் குறித்து பிபிசியிடம் பேசிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் குறித்து ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ரெபேக்கா லூகாஸ், “மயக்கம் மற்றும் தன்னிலையிழத்தல் முதல் தசைப்பிடிப்புகள் மற்றும் குடல் – சிறுநீரகங்களின் செயலிழப்பு வரை இதன் பாதிப்புகள் நீள்கின்றன. உடலின் பல்வேறு பகுதிகளும் சூடாகும்போது அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்” என்று கூறுகிறார்.

வெட் பல்ப் குளோப் டெம்பரேச்சர் (WBGT) என அழைக்கப்படும் ஒரு அமைப்பு வெப்பத்தை மட்டுமல்லாது, ஈரப்பதம் மற்றும் பிற காரணிகளையும் அளவிடுகிறது.

1950களில் தனது படையினருக்கான உடற்பயிற்சி வழிகாட்டுதல்களில் இதன் பயன்பாட்டை அமெரிக்க இராணுவம் அறிமுகப்படுத்தியது.

உதாரணமாக, அந்த WBGT வெப்பநிலை 29 செல்சியசை அடையும்போது, அந்த அளவுக்கு வெப்பநிலை பழக்கமில்லாதவர்கள் உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா பணிக்காக பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துள்ள எண்ணற்றவர்களின் வெப்பநிலை இயல்பாகவே 29 செல்சியசாக உள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.

WBGT அமைப்பு 32Cஐ பதிவு செய்யும் போது கடுமையான பயிற்சி நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. ஏனெனில் அது “தீவிரமான” விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், இதைவிட அதிக வெப்பநிலை சமீபத்தில் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் பதிவானதாக கூறுகிறார் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் வித்யா வேணுகோபால்.

மேலும், இந்த WBGT அமைப்பை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது தமிழகத்திலுள்ள உப்பளங்களில் பணியாற்றுபவர்களின் வெப்பநிலை 33C மற்றும் அதிகபட்சமாக உருக்காலையில் பணியாற்றுபவர்களின் அளவு 41.5C-ஐ தாண்டுவதாக அவர் கூறுகிறார்.

“இந்த சூழ்நிலை நாள்முழுவதும் தொடரும் பட்சத்தில், அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படுவதுடன், இருதய மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள், வெப்ப சோர்வு உள்ளிட்டவை ஏற்படுகிறது” என்று பேராசிரியர் வித்யா கூறுகிறார்.

உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் போது, தீவிரமான ஈரப்பதம் நிலவக்கூடும் என்பதால் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அபாயகரமான கலவையை அதிகளவிலான மக்கள் நீண்ட நாட்களுக்கு அனுபவிப்பார்கள்.

பிரிட்டனின் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் பெட்ஸ் கணினி மாதிரிகளை கொண்டு இதுகுறித்து ஆய்வு செய்துள்ளார். அதாவது, இது பசுமை இல்ல வாயு உமிழ்வின் அளவு குறைக்கப்படுகிறதா இல்லையா என்பதை பொறுத்து, WBGT 32C-க்கு மேல் உள்ள நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று அதில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தீவிர வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றின் சவாலான கலவையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து அவர் விளக்குகிறார்.

“மனிதர்களான நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான வெப்பநிலையில் வாழ்வதற்கு பழகிக்கொண்டுள்ளோம். எனவே உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தால், விரைவில் உலகின் வெப்பமான பகுதிகளில் மிகவும் வெப்பமான நிலையை மட்டுமே நாம் காண நேரிடும் என்பது தெளிவாகிறது.”

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, வெப்ப அழுத்தமானது 2100-ஆம் ஆண்டு வாக்கில் உலகெங்கிலும் 1.2 பில்லியன் மக்களை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. இது இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு அதிகமாகும். சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

“இது ராக்கெட் அறிவியல் அல்ல” என்று கூறுகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஜிம்மி லீ. மக்கள் தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், வழக்கமான இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அவரது மருத்துவமனை ஊழியர்களை குளிர்விக்க உதவும் வகையில் “ஸ்லஷி” எனப்படும் அரை உறைந்த பானங்களை வழங்குகிறது. ஆனால் வெப்ப அழுத்தத்தைத் தவிர்ப்பது குறித்து சொல்வது எளிது ஆனால் நடைமுறையில் கடினம் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

அவருக்கும் அவரது சக மருத்துவர்களுக்கும், ஓய்வெடுப்பது என்பது பாதுகாப்பு கவச உடையை மாற்றி பின்னர் புதிய கருவிகளை அணிந்துகொள்ள வேண்டிய கடினமான பணியாக உள்ளது. ஆனால் இதில் ஒரு நடைமுறை சிக்கலும் உள்ளது. “சிலர் திரவத்தை அருந்துவதற்கு விரும்பமாட்டார்கள் என்பதால் அவர்கள் கழிப்பறைக்கு செல்வதைத் தவிர்க்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் சக ஊழியர்களும் நோயாளிகளும் சோர்ந்துபோகக்கூடாது என்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற தொழில்முறை விருப்பம் மருத்துவ பணியாளர்களிடையே காணப்படுகிறது.

அதிக உந்துதல் உள்ளவர்கள் உண்மையில் நெஞ்செரிவு ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உடலியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் ஜேசன் லீ கூறுகிறார்.

அவர் வழிநடத்திவரும் அதிகப்படியான வெப்பத்தின் ஆபத்துகள் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற குளோபல் ஹீட் ஹெல்த் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க் என்ற குழு, கோவிட்-19 ஐ சமாளிக்க மருத்துவர்களுக்கு உதவும் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இது உலக சுகாதார அமைப்பு (WHO), உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் அமெரிக்க வானிலை மற்றும் காலநிலை நிறுவனமான நோவா ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் லீ கூறுகையில், ஓய்வு மற்றும் திரவங்களை பருகுதல், வெளிப்புற தொழிலாளர்கள் ஓய்வெடுக்க நிழல் அமைப்பது போன்றவை வெப்ப அழுத்தத்தை தடுப்பதற்கான முக்கிய உத்திகளாகும். “உங்களை காற்றோட்டமாக வைத்திருப்பதன் மூலம், உங்களின் வெப்ப சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கரிப்பதோடு மேலும் பல நன்மைகளும் உள்ளன.”

கோவிட்-19 நோயாளிகளை கையாளும் மருத்துவ பணியாளர்கள், பாதுகாப்பு கவச உடைகளுக்குள்ளே வியர்வை சிந்திக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வுக்கு கிட்டத்தட்ட ஒரு முழு ஆடை அணிந்தபடி ஒத்திகை பார்ப்பது போன்றது என அவர்களின் சவாலை குறித்து மருத்துவர் லீ கூறுகிறார்.

“இந்த காலநிலை மாற்றம் ஒரு பெரிய அரக்கனாக இருக்கப் போகிறது, மேலும் வரவிருக்கும் பிரச்சனைகளுக்கு நாடுகள் தயாராவதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை. இல்லையென்றால், அதற்கான விலையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.