;
Athirady Tamil News

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியில் ஓர் அரசு தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்களா சிறுபான்மை பிரதிநிதிகள்? (கட்டுரை)

0

அரசியல் அமைப்பில் 19 ஆவது சரத்தை நீக்குவோம் எனப் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷதனது 2020 பாராளுமன்ற முதலாவது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை குடியரசின் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20 ஆவது சரத்து அமுல்படுத்தவதற்கான தீர்மாத்திற்கு ஆதரவை பாராளுமன்றம் வழங்கியுள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டு இருந்ததா? என்பது உண்மையிலேயே ஒரு கேள்விக்குறியே, இலங்கையில் இன முரண்பாடுகள் தோற்றம் பெறக் காரணமாக இருந்தது சிறுபான்மை இனத்தவர்களுக்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு இல்லாமை இருந்ததே காரணமாகப் பார்க்கப்படுகின்றது. ஆட்சியாளர்கள் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையிலும், சிறு தேசிய இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனநாயகப் பண்புடன் தேசிய இனப்பிரச்சினை கையாளப்படுமா? ஏன்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட 19 ஆவது அரசியல் திருத்தச்சட்டமானது சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உன்னதமான திருத்தச்சட்டமல்ல, சுருக்கமாகக் கூறின் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை பிரதமருக்கு மாற்றியது அவ்வளவே! சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைவதற்கான திட்ட வரைபுகளோ, முன்னேற்பாடுகளோ சிறுபான்மை கட்சிகளிடம் இல்லாத நிலையில் பெரும்பான்மை பலத்தை பெற்று வெற்றி பெற்றிருக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்கும் அதிகாரத்தை சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இழந்திருப்பதாகவே காணப்படுகின்றன.

பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் சிறுபான்மையினராகிய தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய அத்துணை சாத்தியங்களையும் கடந்தகால யுத்தமும், தவறான அரசியல் முன்னெடுப்புக்களும் இல்லாமல் செய்துள்ளது என்பதுடன் வெறும் 9 ஆயிரம் துருப்புக்களை கொண்டிருந்த இலங்கை தேசம் இன்று 3 இலட்சம் படையினர் கொண்ட ஓர் இராணுவ அரசாக மாறவும் உதவியுள்ளது.

சிறுபான்மையினர் உரிமைகளுக்கு பதிலாக இன்று சலுகைகளை பற்றி பேசுகின்ற ஒரு நிர்க்கதியான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியம் பேசியவர்களாக இருக்கட்டும், முஸ்லிம் தேசியம் பேசியவர்களாக இருக்கட்டும் இன்று உங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சிறுபான்மை மக்களை எங்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சுயநலமாக அரசியல் செய்த சிறுபான்மை தேசிய கட்சிகள் சொல்லிக் கொண்டதெல்லாம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்பதாகவே இருந்தது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பெரும்பான்மை கட்சிகளுடனும் நேரடியாக இணைந்தும் மறைமுகமாக இணைந்தும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்ததன் பலன் சிறுபான்மை மக்கள் அரசியல் சூனியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் அரசியல் உணர்வுகளை ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மதிக்க வேண்டும். எழுபதாம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கூட்டரசாங்கம் இடதுசாரி கட்சிகளுடன் ஐக்கியப்பட்டு மக்கள் நலன்களை முன்னெடுக்கும் முற்போக்கு தேசிய அரசியலை முன்னெடுத்தது. அப்போது வல்லாதிக்க சக்திகளின் பிணைப்பை பாதுகாப்பதற்கான கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசிய தலைமைகள் ஒன்று பட்டு முற்போக்கு இலங்கை தேசியத்திற்கு நெருக்கடி கொடுக்கும் உத்தியாக தமிழ் தேசியம் என்ற பிரிவினை கோரிக்கையை முன்வைத்தது.

அதனை ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைப்பு அரசியல் நடத்திய சிறுபான்மை மக்களின் தேசியத் தலைவர்கள் ஏகாதிபத்திய நலன் பேணும் ஐக்கிய தேசிய கட்சியின் பிற்போக்குத்தனமான இணக்க அரசியல் ஒரு சமயத்தில் அடிவாங்கும் என்பதனை முன்பே ஊகித்திருக்கவில்லை.

தமிழ் தேசிய அரசியல் தலைமைகளால் தமிழ் தேசியம் என்ற போர்வையில் மூட்டப்பட்ட வேள்வித்தீயில் பல ஆயிரம் வடக்கு கிழக்கு இளைஞர்கள், யுவதிகள் ஆயுதமேந்தி சாம்பலாயினர்.

யுத்தமென்றால் யுத்தம் என முன்னெடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட மக்களே கோர யுத்த களங்களுக்கு முகம் கொடுத்து வரலாறாயினர்.

இலங்கையில் 16 ஆவது பாராளுமன்றம் கூடி உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துள்னர்.

ஐக்கிய தேசிய கட்சியானது ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் 1977 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று எவ்வாறு ஆட்சி அமைத்திருந்ததோ அதே போல் பொதுஜன பெரமுனவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் பாதுகாப்பையும், உரிமையையும் பெற்றுக்கொடுக்கும் பாரிய பொறுப்பு சிறுபான்மை மக்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.

ஐம்பது வருடங்களுக்கு பின்னர் சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று இணக்க அரசியல் பேசிய டக்ளசும் அவரது கட்சி உறுப்பினராகிய குலசிங்கம் திலீபனும் வன்னியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெறுவதற்கு மாற்று வழி ஒன்று அவசியம் என்பதனையும் இறந்துவிட்ட தமிழ் தேசிய அரசியல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்திருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

பாராளுமன்றம் சென்றுள்ள சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் ஒரு விடயத்தை கவனமாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசானது முழுக்க முழுக்க சிங்கள மக்களின் அதரவுடன் உருவாகியுள்ள அரசாகும். இந்த அரசானது சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் சிறுபான்மை மக்கள் குறித்து முன்வைக்கப்படும் கோரிக்கைகள் யதார்த்தமானதாகவும் சிங்கள மக்கள் எற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 20 தமிழரும் 20 முஸ்லிம்களும் பாராளுமன்றம் சென்றுள்ளனர். சிறுபான்மை பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் தமக்குள் பேசிக்கொள்வதையும், முரண்பட்டுக் கொள்வதையும் நிறுத்தி சிறுபான்மை மக்கள் சார்ந்து சிந்தித்து செயலாற்ற முன்வரவேண்டும். சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் முதலில் தமக்குள் ஒருங்கிணைந்து சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒருமைப்பாட்டுடன் செயற்பட முன்வர வேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்வதாகவும் அவர்கள் பெரும்பான்மையினரின் மேல் கொண்டுள்ள அச்ச உணர்வுகள் குறித்த நியாயங்களை எடுத்துரைப்பதாகவும் எமது பிரதிநிதிகளின் நகர்வுகள் இருக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்து செயற்படுவார்களேயானால் மூன்றில் இரண்டு பெற்றுள்ள இந்த அரசாங்கத்தை எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது வரும் என்று கூற முடியாது வராமலே போகலாம், பாதகமான சூழ்நிலையை எப்படி சாதகமானதாக மாற்றுவது என்பதே உண்மையில் அரசியல் சாணக்கியம்.

வடக்கு கிழக்கில் குறுந் தேசியவாதம் அடி வாங்கியுள்ளதுடன் எதிர்பாராத பல முடிவுகளை கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் வழங்கியுள்ளது.

நடைபெற்ற 2020 தேர்தலுக்கான வாக்களிப்பை இன்றைய இளைஞர்களும் வழங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 6 =

*