;
Athirady Tamil News

விருட்சமாக வளர்ந்த வாகை மரங்களால் தோட்டத் தொழிலாளருக்கு பேராபத்து!! (கட்டுரை)

0

எந்நேரமும் சரிந்து விழும் மரங்கள், எங்குமே குளவிக் கூடுகள், தேயிலை செடிகள் வளர்வதிலும் பாதிப்பு

கண்டி, ஹந்தான குறூப் தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகளில் வாகை இனத்துக்குரிய மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த மரங்கள் நடப்பட்டவை அல்ல, தானாக முளைத்தவை ஆகும்.

இருபது வருடங்களுக்கு மேல் வயதுடைய இந்த மரங்கள் வளர்ந்து இப்போது பெரும் விருட்சங்களாக உள்ளன. அண்மையில் வீசிய கடும் காற்றின் போது ஒரு மணித்தியாலத்திக்குள் நூற்றுக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சரிந்து வீழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இம்மரங்கள் தொழிலாளர்களது குடியிருப்புகளின் கூரைகளிலும் வீழ்ந்து சேத்தை ஏற்ப்படுத்தின.

இதன் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவுவதில்லை. கற்பாறைகளிலும் கற்குவியல்களிலும் வங்கிகளிலும் இம்மரங்கள் வளர்ந்துள்ளன. மண்ணில் உறுதியான பிடிமானம் இன்மையால் இவை சிறிய காற்றிலும் சரிந்து வீழ்கின்றன.

தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுக் கொன்டு இருக்கும்போதும் மரங்களின் கிளைகள் முறிந்து விழுகின்றன. மரங்கள் வேரோடும் சாய்கின்றன. இதன் காரணமாக மிக அச்சத்துடனேயே தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாகையின மரங்கள் அதிகம் பூக்கும் ஒரு இனமாகும். இதனால் தேனீக்கள், குளவிகள் இவற்றில் கூடுகட்டி வாழ்கின்றன. நூற்றுக்கணக்கான குளவிக் கூடுகள் இந்த மரங்களில் காணப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள் அடிக்கடி குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கண்டி_கலஹா குறுந்தூர பிரதான பாதையில் இந்தத் தோட்டம் அமைந்துள்ளது. இப்பாதையோர தேயிலை மலைகளிலும் பெரிய மரங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. மரங்கள் வேருடன் சரிந்து வீழ்ந்தும், பெரும் மரக்கிளைகள் உடைந்து வீழ்ந்தும் அடிக்கடி பாதையில் போக்குவரத்து தடைப்படுகின்றது.

தொழிலாளர்களது குடியிருப்புகளுக்கு அருகில் அதிகமாக இந்த மரங்கள் உள்ளன. வெஸ்ட் டிவிசன், மூன்றாம் கட்டை டொப்டிவிசன் ஆகிய தோட்டப் பிரிவுகளிலேயே அதிகமான மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களை தறித்து அகற்றி தமக்கு பாதுகாப்பை பெற்றுத் தரும்படி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதும், இதுதொடர்பாக தோட்ட நிர்வாகமோ அனர்த்த முகாமைத்துவ திணைக்களமோ இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஜனவசம நிர்வாகத்தின் கீழ் இந்தத் தோட்டம் உள்ளது. வாகை மரங்கள் அதிகம் காணப்படுவதால் தேயிலைச் செடிகள் பல்வேறு விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகி தேயிலை விளைச்சல் குறைவடைந்துள்ளது. அதிக நிழல் என்பதால் தேயிலைச் செடிகள் வளர்வதில்லை.

வாகை இலைகள் தேயிலைச் செடி மீது வீழ்வதாலும், மரக் கிளைகள் உடைந்து வீழ்வதாலும தேயிலைச் செடிகள் பாதிப்படைந்து வருகின்றன .

மரத்தின் வேர் மண்ணின் மேற் பகுதியில் செல்வதால் தேயிலைச் செடிகளுக்கான பசளை, நீர் என்பவற்றை இவை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன. இதனால் தேயிலைச் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இந்த மரங்களில் இருந்து எதுவித பயனும் பெறப்படுவதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்து தொழிலாளர்களை பாதுகாப்பதுடன் தேயிலைச் செடிகளையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 12 =

*