;
Athirady Tamil News

மக்கள் பணிக்காக ஓயாமல் உழைத்த அமரர் செல்லசாமி!! (கட்டுரை)

0

நாடறிந்த, ஊரறிந்த தொழிற்சங்கவாதியான செல்லசாமி ஐயாவை பற்றி அணிந்துரையோ அறிமுகமோ செய்ய வேண்டியதில்லை. மலையக தொழிற்சங்க வரலாற்றில் கே. ஜி. எஸ். நாயர் என்ற தொழிற்சங்கத் தலைவருக்கு பிறகு சாமான்ய மனிதர்களுக்கு மத்தியில் இருந்து தோன்றிய ஒரு பெருந்தலைவரென அமரர் செல்லசாமி ஐயாவை பற்றி சொல்லலாம்.

அமரர் செல்லசாமி ஒரு அஷ்டாவதானி என்றே கூறலாம். அவர் இறுதியாக, பிரதி தபாலமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரிடம் துணைச்செயலாளராக நான் பணி புரிந்தேன். அச்சமயத்தில் அவரிடம் உதவி வேண்டி சாமானியர்கள், வர்த்தகப் பிரிவினர், அரச சேவையிலுள்ளோர், காவல் சேவையிலுள்ளோர் மற்றும் பல்வேறு தரப்பினர் வருவதுண்டு. இவற்றில் நிலப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, உத்தியோக மாற்றங்கள், உயர்வுகள், பாகுபாடு ஆகிய பலதரப்பட்ட விடயங்களும் உள்ளடங்கியவையாக இருக்கும்.

அவற்றுக்கு எழுத்து வடிவத்தை அவரின் ஆலோசனைக்கிணங்க நான் அமைத்துக் கொடுப்பேன். அவர் சம்பந்தப்பட்ட அரச, தனியார் துறையினருடன் தொலைபேசியில் சலிக்காமல், ஓயாமல் தொடர்பு கொள்வதுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் குறித்த நேரத்தில், நாளில் பதிலையும் சொல்லி விடுவார். பல்வேறு விடயங்களையும் தனது மனதில் ஏககாலத்தில் பதித்து வைத்துக் கொண்டு செயலாற்றும் ஆற்றல் அவருக்கிருந்தது.

தோட்டங்களுக்கு தபாற் சேவையை விஸ்தரிப்பதற்காக ஐநூறு, தபால் விநியோகம் செய்யும் பணியாளர்களை தோட்டப்புற இளைஞர்களின் மத்தியிலிருந்தே தெரிவு செய்யும் பணியானது அமரர் செல்லசாமி தபால் பிரதியமைச்சராக இருந்த காலத்திலேயே நடைபெற்றது. இது இவரின் செயலுக்கும் சேவைக்கும் ஒரு மணிமகுடமெனக் கூறலாம்.

பணியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியதுடன் எல்லாம் தானாகவே நடந்து விடுவதில்லை.

வரவு செலவுத் திட்டத்தில் பண ஒதுக்கீடு செய்வதற்கென திறைசேரியில் பல குழுக்களுண்டு. அவற்றில் இலங்கை அரச சேவையிலுள்ள பல உயர்மட்ட அதிகாரிகள் பதவி வகிப்பர். ஏதாவதொரு சட்டப்பிரச்சினையையோ, நிர்வாக சிக்கலையோ சுட்டிக்காட்டி அமைச்சரவையின் தீர்மானத்தை திசை திருப்பவோ, மழுங்கடிக்கவோ இவர்களுக்கு ஆற்றலுள்ளது.

இந்த குழுக்களினதும், அதிகாரிகளினதும் சம்மதத்தைப் பெறுவதென்பது கடினமான காரியம். அமரர் செல்லசாமி கடும் முயற்சியின் பின்னர் இதில் வெற்றி கண்டார். அன்னார் சமீபத்தில் காலமான செய்தி அவரது அபிமானிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*