;
Athirady Tamil News

மெல்பேர்னுக்கு வந்த சோதனை!! (கட்டுரை)

0

அவுஸ்திரேலியா கொரோனாத் தொற்றை ஆரம்பத்திலிருந்தே லாவகமாகக் கையாண்டது. அதனால் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதான நம்பிக்கை ஏற்பட்டது. மே மாதத்தில், தொற்றுத் தொடர்பிலான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுவதற்கான சமிக்ஞைகள் தென்பட்டன. யூலை மாதமளவில், இயல்புநிலை பெருமளவில் திரும்பிவிடுமென எதிர்பார்க்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அரசு வகுத்தது. மூன்றுபடிநிலைத் திட்டங்களை அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்தார். கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்துவதற்குத் திட்டமிடப்பட்டது. முதலில் மாநிலங்களிடையேயான போக்குவரவை ஆரம்பிப்பது, அதன்பின்னர் நியூசிலாந்துடனான போக்குவரவை ஆரம்பிப்பது எனப் படிநிலைகள் திட்டமிடப்பட்டன.

யூன் மாதத்தில் மெல்பேர்னில் சமூகப்பரவல் ஏற்பட்டபோது நம்பிக்கைகள் அசைக்கப்பட்டன அதுவரையில் படிப்படியாகத் திறக்கப்பட்ட மாநில எல்லைகள், மீண்டும் வேகமாக மூடப்பட்டன

சுமார் 100 ஆண்டுகளில் முதல் தடவையாக, நியூசவுத்வேல்சுக்கும் விக்டோரியாவுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டது. இவ்விரண்டுமே அதிக சனத்தொகையைக் கொண்ட மாநிலங்களாகும். பொருளாதாரம், தொழில்வாய்ப்பு, போக்குவரவு எனப் பல்வேறு படிநிலைகளிலே சிட்னியும் மெல்பேர்னும் முக்கியமான நகரங்களாகும். இத்தகைய இரண்டு மாநிலங்களிடையான எல்லை மூடப்பட்டமை கவனிப்பிற்குரியதாகியது.

மாநிலங்களிடையே எல்லைகள் மூடப்பட்டமையால், உள்நாட்டுப் போக்குவரவு முடங்கியது. ஒவ்வொருமாநிலமும், தம்முடைய பிரதேசத்தின் நிரந்தரவாசிகள் மட்டுமே, பிறமாநிலங்களிலிருந்து வருவதை அனுமதிக்கின்றன. அவ்வாறு அனுமதிக்கப்படுவோர், சொந்தச்செலவிலே இரண்டுவாரகாலக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்னில் சமூகப்பரவல் ஏற்பட்டபோது, லொக்டவுன் வழிமுறையையே அரசு முதலில் அறிமுகப்படுத்தியது. அத்தியாவசிய உணவு, மருத்துவம் போன்றவைகளுக்காக மட்டுமே வசிப்பிடத்துக்கு வெளியே செல்லலாம் எனச் சொல்லப்பட்டது. அதற்குக்கூட, வசிப்பிடத்திலிருந்து ஐந்துகிலோமீட்டர் சுற்று வட்டகையே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.

முகக்கவசம் (மாஸ்க்) கட்டாயமாக்கப்பட்டது. அஃது மாநிலந்தழுவிய நடைமுறையாக அறிவிக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் எடுப்பது மட்டும் அனுமதிக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் கற்றல் நடமுறைப்படுத்தப்பட்டது. திருமணவைபவங்கள் நிறுத்தப்பட்டன. இறுதிக்கிரியைகளில் 10பேருக்கு மட்டுமே அனுமதி என்னும் நடைமுறை அறிவிக்கப்பட்டது. லொக்டவுன் வழிமுறைப்படி ஒழுகாதவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

அத்தியாவசிய உணவு, மருந்து, பெற்றோல் தவிர்ந்த, சில்லறை வியாபாரங்கள் நிறுத்தப்பட்டன. வங்கி, தபாலகம், நியூஸ் ஏஜன்சி போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டன. நிபந்தனைகளுடன் கூடிய விலக்கு, சில தொழில்களுக்கு வழங்கப்பட்டன. இத்தகைய கட்டுப்பாடுகளால், இரண்டரை இலட்சம் வரையானவர்கள் வேலையிழந்தனர்.

தொழில் நிறுவனங்களை (வேலையிடங்களை) மூடச்சொல்வது வேதனையான தருணமென விக்டோரியாவின் பிரீமியர் (தலைமை அமைச்சர்) டானியல் ஆண்ட்ரூஸ் உணர்ச்சிவசப்பட்டார். வேலைக்குப் போகவேண்டாம் என, மக்களுக்குச் சொல்லுகின்ற ஒருசூழ்நிலை ஏற்படுமென கனவிலும் நினைக்கவில்லை என வருந்தினார். ஒரு கொள்ளைத் தொற்றை எதிர்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடு அவசியம் என்பதை, விக்டோரிய அரசு தொடர்ச்சியாக மக்களுக்கு நினைவூட்டுகின்றது.

விக்டோரியா அரசின் வழிநடத்தலைப் பெரும்பாலான மெல்பேர்ன்வாசிகள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி செயற்பட்டனர். ஆனால், ஒரு சிறுகூட்டம் பின்பற்றவில்லை. அதிலே சிலர், தம்முடைய சுதந்திரத்தை அரசு பறிப்பதாக, அதிகாரிகளுடன் தனகினார்கள். வேறுசிலர், பூனை கண்ணை மூடிக்கொண்டு இருண்டுவிட்டதாக நினைப்பதுபோன்று, தொற்றின் வீரியத்தை தெரிந்துகொள்ளாத நிலையிலே காணப்பட்டனர். நூறுபேரில், ஒருவர் போதுமே தொற்றைக் காவுவதற்கு என்பதை ஒருதரப்பு மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை. வேறுசிலருக்கு அது புரியவேயில்லை.

லொக்டவுன் விதிமுறைகட்கு அனைவரும் கட்டுப்படுவதான நம்பிக்கை அரசுக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், தொற்று அறிகுறி ஏற்பட்டவுடனே தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்களாலும், தொற்றுக்கான பரிசோதனை முடிவு வெளியாகின்ற வரையில் தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்களாலும் சமூகப்பரவல் அதிகரிப்பதான ஊகங்கள் வலுப்பெற்றன.

லொக்டவுன் விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. ஒருவாரத்தில், ஆயிரம் வரையானவர்களுக்கு தண்டம் விதிக்கின்ற நிலை ஏற்பட்டது.

அதனால், இறுக்கமான நடைமுறைகளை அறிவிப்பது மட்டுமே அரசுக்கு எஞ்சிய தெரிவாகியது. பேரிடர்நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மெல்பேர்னில் இரவுவேளை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு வழிமுறைப்படி ஒழுகாதவர்களுக்கு, தண்டம் விதிப்பது தொடர்பில் எச்சரிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டன. விக்டோரியா அரசின் பகீரதப் பிரயத்தனங்கள் பலன்தர ஆரம்பித்தன. மெல்பேர்ன் மாநகர், இரவுவேளைகளில் வெறிச்சோடிய படங்களை விக்டோரியாவின் தலைமை அமைச்சர் வெளியிட்டார். மெல்பேர்ன்வாசிகளுக்கு கனிவான நன்றியை டுவீட்டரில் சொன்னார்.

சொல்பேச்சுக் கேட்காதவர்கள் (லார்கினிசிம்), நினைத்ததை தயக்கமின்றிச் செய்பவர்கள் என்னும் பிம்பங்கள் அவுஸ்திரேலியருக்கு உண்டு. ஆனாலும், கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் பேணுகின்ற சமூகமாகும். பொதுநன்மைக்காக அர்ப்பணிப்புகளைச் செய்வதற்கு தயங்காதவர்களாகும்.

புதிய சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு அவுஸ்திரேலியர் தயங்குவதில்லை. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒருபானை சோற்றின் பதத்துக்கு, ஒருசில பருக்கை போதுமல்லவா.. வாகனங்களின் முன்னிருகையில் பட்டி (சீட் பெல்ட்) அணிவதை 1970ல் உலகிலேயே முதன்முதலாக விக்டோரியா மாநிலம் சட்டமாக்கியதைக் குறிப்பிடலாம். புகைத்தல் தொடர்பில், கடுமையான சட்டவிதிகளை அறிமுகப்படுத்திய பெருமை அவுஸ்திரேலியாவுக்கு உரியதாகும்.

ஆக, அரசின் சட்ட விதிமுறைகளின்படி ஒழுகுவதற்கு அவுஸ்திரேலியர்கள் பின்னிற்பதில்லை. கொரோனாத் தொற்றுவிடயத்தில் திடீரென அறிமுகப்படுதப்பட்ட கட்டுப்பாடுகள் சிறுதொகை மக்களைச் சஞ்சலப்படுத்தின. வேறு சிலருக்குப் புரியவில்லை. அதனால், லொக்டவுன் ஒழுங்குமுறையில் திணறினார்கள். தற்போது, அரசுடன் இணைந்து மெல்பேர்ன்வாசிகளும் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். அதுவே, மெல்பேர்னுக்கு வந்த சோதனையை எதிர்கொள்வதில், பாதி ஆற்றைக் கடந்துவிட்ட உணர்வை ஏற்படுத்துகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − two =

*