;
Athirady Tamil News

ஆண்டுகள் இருநுாறைக் கண்ட அற்புத ஆலயம்!! (கட்டுரை)

0

இன்று காவலுார் என்றாகி விட்ட ஊர்காவற்றுறை வடபகுதியின் ஒரு காவலாளியேதான் ……

சந்தேகமேயில்லை..

இலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது

ஊர்காவற்றுறை.கிறீஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்று பகருகிறது.
ஆங்கிலத்தில் கயிற்ஸ் (Kayts) என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின்படி இது போர்த்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போர்த்துக்கேய மொழியில் “கேயிஸ்” என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் கயிற்ஸ்(Kayts) என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. ஏற்புடைய விளக்கந்தான்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே ஊர்காவற்றுறைத் துறைமுகம் மிகவும் புகழ்பெற்றிருந்தது எனலாம். பிரித்தானியர் பர்மா (தற்போதைய மியான்மார்) போன்ற ஆசிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதி வர்த்தகத்தில் பிரதான பங்கெடுத்துக் கொண்ட பட்டுக்கோட்டைச் செட்டிமார் ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை முதலிய துறைமுகங்களை இறக்குமதி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தினர். அக்காலப் பகுதியில் காவலூர், மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது.

கப்பல்கள்,படகுகள்,டிங்கிகள்,தோணிகள் என்று துறைமுகம் மரக்கலங்களால் நிறைந்திருக்கும். பனைமர அளவுக்கு உயரமான பாய்மரங்கள் வானைமுட்டி உயர்ந்து நிற்க,பாரிய கப்பல்கள் எந்நேரமும் நங்கூரமிட்டுச் சரக்குகளை இறக்கும் காட்சியை அறுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் கண்டவர்கள் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். படகுகளில் பணியாற்றிய மாலுமிகளில் ஒரு சிலர் இன்னும் பண்டைய நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கிறார்கள்.

காவலுார் கடலோடிகளால் ஒரு காலத்தில் நிறைந்திருந்தது என்றால் அது மிகையான கூற்றல்ல!
இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்காவற்றுறையின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரையை ஒட்டி, கம்பீரமாய் நிமிர்ந்து நிற்பதுதான் புனித அந்தோனியார் தேவாலயம்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்கள் கோவில்களைக் கட்டியெழுப்புவதையோ, வழிபடுவதையோ ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. போத்துக்கேயர் கட்டிய ஆலயங்களை அழிப்பதிலேயே ஒல்லாந்தர்கள் குறியாக இருந்துள்ளார்கள். எனவே ஒரு காலத்தில் களவில் விக்கிரகத்தை வைத்து வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.! ஒரு தடவை ஒரு மரம் தறிக்கப்பட்டபோது, இந்த மரக்கிளைகளிடையே கண்டெடுக்கப்பட்ட,, அந்தோனியாரின் திருச்சுருபத்தை ஏற்கனவே கட்டப்பட்டிருந்த புனித தோமையார் ஆலயத்தில் வைத்து வழிபட ஆரம்பித்துள்ளார்கள் பக்தர்கள். இதுவே காலப்போக்கில் அந்தோனியார் தேவாலயமாயிற்று…
இந்தத் தகவல் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய (1932) ‘ஊர்காவற்றுறை புனித அந்தோனியார்’ ஆலய வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் இத் திருச்சுருபம் வைக்கப்பட்டு, பின்பு இதுவே புனித அந்தோனியார் தேவாலயமாக மாறியிருக்கின்றது. எனவே ஊர்காவற்றுறை மக்களுக்கு, மதச் சுதந்திரம் என்பது, ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த பின்னரே சாத்தியமாகி இருக்கின்றது.

1921இல் யாழ் பிஷப் ஆண்டகை ஜூல்ஸ் புரோல்ட் என்பவர், இந்த ஆலயத்தின் 100வது ஆண்டு நிறைவை பூசைப்பலியுடன் நிறைவேற்றியிருக்கிறார்.. சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய நுாலில், தேவாலயத்தில் “1820” என்று பொறிக்கப்பட்ட ஒரு கல்லைக் கண்டெடுத்ததாகவும், இத் தேவாலய நிர்மாணப் பணி 1820இல் முடிவடைந்ததா அல்லது ஆரம்பித்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 1820 என்று பொறிக்கப்பட்ட ஒரு கட்டடக் கல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1970இல் தனது 150 வருட நிறைவை, இந்த ஆலயம் மகிழ்வோடு கொண்டாடியது.

175வருடக் கொண்டாட்டம், நாட்டில் யுத்த மேகங்கள் சூழந்தமை காரணமாக இடம்பெறவில்லை.

இத் தேவாலயத்தின் முதல் உள்ளுர் குரவர் என்ற பெருமை குரவர் விக்டர் ராஜநாயகத்தை சென்றடைகின்றது. குரவர் வில்லியம் அவர்களின் வழிநடத்தலிலேயே இவர் ஒரு குரவராக ஆசீர்வதிக்கப்பட்டார்.

இன்று காவலுாரில் நிறைய ஆலயங்கள் காணப்படுகின்றன. வடக்கில் கத்தோலிக்கர்களின் கோட்டையாக காவலுார் திகழ்கின்றது என்றும் சொல்லிவிடலாம். இங்கு சேவையாற்றிய ஆறு மதகுருக்கள், தெய்வீகமான யாழ் பிஷப் அலுவலகத்தின் பணியகத்தில் வேவை செய்ய அழைக்கப்பட்டுள்ளமை, இந்தக் காவலுாரின் பெருமையை எடுத்தியம்புகின்றது.

இந்த ஆலயத்தைப் போல அதன் வலது பக்கத்தில் தெருவோரம் கட்டியெழுப்பப்பட்டுள்ள புனித அந்தோனியார் கல்லுாரியும் (இதனுடைய பழைய மாணவர்களில் ஒருவன் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்) பெருமை வாய்ந்த ஒன்றுதான்!
இந்தக் கல்லூரி புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகாமையில் அழகிய நீலக் குடாக்கடலுக்கு கிழக்குப்பக்கமாக, மார்ச் 1872 இல் உருவாக்கப்பட்டது. யாழ் குடாநாட்டுக்கு வெளியே முதன் முதலாக ஆங்கிலமும் கற்பிக்கும் கல்லூரியாக இது ஸ்தாபிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை மக்கள் இப்பாடசாலைக்கான காணியினை வழங்கினார்கள். இப்பாடசாலையின் முதலாவது தலைமையாசிரியராக திருவாளர் ஏ.சுவாம்பிள்ளை நியமிக்கப்பட்டார்.

அப்பொழுது ஆலய நிர்வாகத்தை பரிபாலித்த கத்தோலிக்க மிஷன் பாதிரிமார்கள், மதப் பற்றோடு, கல்வி அறிவும் அவசியம் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார்கள். இதன் எதிரொலியாக 1872இல் பிரெஞ் குரவர் Louis Boisseau என்பவரின் வழிநடத்துதலில் கட்டப்பட்டதுதான் புனித அந்தோனியார் கல்லுாரி.
ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு 1872.இதனது 150 வருட நிறைவு விழா 2022 இல் கொண்டாடப்படவுள்ளது.

பல பல மாற்றங்களைக் கண்டு, வெளிநாட்டிலுள்ள பல மாணவர்களது, நிதி உதவியையும் பெற்று, , இன்று ஊர் போற்றும் ஒரு சிறந்த கல்லுாரியாக, புனித அந்தோனியார் பெயர் தாங்கி, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது இக் கல்லுாரி!

இங்கே இன்னொரு குறிப்பையும் தந்தாக வேண்டும்.
தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மீக தலைவர்களாக விளங்கும் ஆயர்களில் பெரும்பாலானோர் குடாநாட்டின் தீவுப் பகுதியை சேர்ந்தவர்களே என்பதில் தீவக மக்கள் பெருமை கொள்ளமுடியும்.

இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயராக ஊர்காவற்றுறை கரம்பொனை சேர்ந்த ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாண மேற்றிராசன ஆயராக 18.7.1950 இல் தெரிவு செய்யப்பட்டார். 17.7.1972 வரை பணிபுரிந்தார்….
புனித அந்தோனியார் ஆலயம் இப்பொழுது 200 ஆண்டுகளை பூர்த்தி செய்து விட்ட பெருமையில் திளைத்து நிற்கின்றது. கொரோனா தொல்லை காரணமாக இந்த வருடக் கொண்டாட்டங்கள் பின்போடப்பட்டு விட்டன. யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு பேர்னாட் ஞானப்பிரகாசம் அவர்களால் எதிர்வரும் ஆகஸ்ட் 16 அன்று காலை 7.00 மணிக்கு ஆலயத்தில் திருப்பலிப்பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட இருக்கின்றது. புனரமைக்கப்பட்ட தேவாலயத்தை இத் தினமன்று இவர் திறந்து வைப்பார். இவருடன் ஓய்விலுள்ள ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் இணைந்து கொள்வார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலயப் பங்கு மக்களுடன் இணைந்து பங்குக்குரு மக் மயூரன் அவர்கள் நடாத்துகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*