;
Athirady Tamil News

சிறுபான்மையினரின் மத சுதந்திரத்திற்கு இறுதி ஆணி அடிக்கப்படுமா? (கட்டுரை)

0

இலங்கையின் 09 வது பாரளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு 20-08-2020 ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில் பௌத்த மதத்திற்கு மன்னுரிமை வழங்கப்படும் என்றும் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தனது முதலாவது கொள்கை உரையில் சனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பௌத்த மதத்திற்கு எந்தவிதமான அபாயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை, இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் பௌத்த மதமானது, ஆட்சிக் கட்டிலேறிய ஒவ்வொரு அரசுகளாலும் போற்றி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அத்துடன் ஒரு சிங்கள பௌத்தனே இலங்கையின் சனாதிபதியாக வர முடியும் என்ற சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேற்கூறிய சனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அறிவிப்பானது சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி ஆட்சியை தொடர்ந்து தக்க வைப்பதோடு கோட்டபாயவின் அறிவிப்பானது, சிறுபான்மை மதங்களான கிறிஸ்தவம்,இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அது போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மை மதங்களை கொண்ட மக்கள் கூட்டத்தை வெறுப்புடன் நோக்குவதுடன் அவர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றமைக்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

இலங்கையில் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் மீது இனவன்முறை, மத வன்முறைகள் நடைபெற்று வந்ததன் அடிப்படை காரணமாக பௌத்தத்திற்கு மன்னுரிமை வழங்கப்பட்டமையும் சிங்கள பௌத்தம் மாத்திரமே என்ற பேரினவாத கோசமும், சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகள் சிங்கள தலைமைகளால் மறுக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருந்துள்ளது.
இன்று அரசுக்கட்டிலேறியுள்ள புதிய அரசானது முற்று முழுதான மதவாத அரசாக பார்க்க முடியும். பௌத்தத்திற்கு முதலிடம் என்ற கோசத்துடன் முற்றும் சிங்கள மக்களால் பாராளுமன்றத்தில் மூன்றிற்கு இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள சிங்கள அரசானது சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாடுகளில் எவ்வாறான தாக்கங்களை உருவாக்கப்போகின்றது என்பதனை பிரதமர் ராஜபக்சவின் பௌத்த சாசன அமைச்சின் உருவாக்கமும், சிறுபான்மை மதங்களுக்கு அமைச்சு மறுக்கப்பட்டுள்ளமையும் தமிழர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிர்கால பாதிப்புக்களை எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக 2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மொட்டுச் சின்னத்திலான ‘பொதுஜன பெரமுன’ நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பௌத்த கலாசார அமைச்சு மாத்திரம் நிறுவப்பட்டுள்ளதானது இதர சிறுபான்மை மதங்களின் சுதந்திரத்தை இது கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கலாசார அமைச்சுக்கள் நீக்கப்பட்டுள்ளதானது சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் புத்த சாசன அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் அனைத்து மதங்களுக்கமான சுதந்திரம் வழங்கப்படும் என்ற கருத்து சிறுபான்மையினரால் சந்தேக கண்கொண்டு பார்க்கப்படுகின்றது.

சிங்கள மக்களால் ஏற்படுத்தப்பட்ட பெரும்பான்மை அரசானது சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருபோதும் செயற்படாது என்பதையும் சிங்கள மக்களின் நலனில் எதிர்காலத்தில் அக்கறை கொண்டிருக்கும் என்பதனை ஆட்சியை கைப்பற்றியவுடனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது கோட்டாபே தலைமையிலான அரசு.

2020 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபே ராஜபக்ச கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் மரபுரிமைகள் குறித்து ஆராய்வதற்கு விசேட செயலணி ஒன்றை நியமித்திருந்தார். சனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

சிறுபான்மை மக்களின் சந்தேகத்தையும், அச்சத்தையும் உறுதிப்படுத்து முகமாக தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேனந்த தேரர் கோட்டை இராசதானி காலத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என கூறி சிங்கள மக்களிடையே மதவாத இனவாத உணர்ச்சியை தூண்டிவிட்டதுடன், சிறுபான்மை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை தோற்றுவித்திருந்தார்.

பேளத்த மரபுரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியானது வடக்கிலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் பற்றி பிழையான வரலாற்று திரபுகளை கூறியிருப்பதானது சிறுபான்மை மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தம் நோக்கமாக கொண்டுள்ளதுடன், சிறுபான்மையினரின் மத வழிபாட்டு உரிமைகளுக்கு இறுதி ஆணி அடிக்கப்படவுள்ளதற்கான அறிகுறியாகவே குறித்த அறிவிப்பு எதிர்வு கூறியுள்ளது.
வுரலாற்று புகழ் மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் இந்து கோயிலானது, கோகண்ன விகாரை அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், கோகண்ன விகாரை அனுராதபுர காலத்தில் கட்டப்பட்டதுடன் போர்த்துகேயர் காலத்து படையெடுப்பின் காரணமாக அழிக்கப்பட்டது என்றும் அதன் பின்னர் திருக்கோணேச்சரம் அதன்மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாவும் புதிய கட்டுக்கதை எல்லாவல மேனந்த தேரால் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்து மதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படும் நிலையில் இந்துக் கோயில்களை ஆக்கிரமிக்கும் நோக்கடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதா? ஏன்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முஸ்லிம் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் மீது மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் இலங்கையில் அப்பாவி மக்களிடையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் எதிர்காலத்தில் சிங்கள பௌத்த மதஸ்தலங்களும் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் குறிவைக்கப்படலாம் என்ற பயத்தை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் இந்துத் தீவிரவாத அமைப்பானது இலங்கையில் சிவசேனா என்ற பெயருடன் காலூன்றியுள்ளதுடன் வடக்கில் கிறிஸ்தவர்கள் மீதான எதிர்ப்பை கையிலெடுத்துள்ளதானது, வடக்கில் தமிழர்களை இரண்டாக பிளவுபடுத்தி மோதவிட்டு மேலும் அவர்களை சிறுபான்மையிராக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
கோட்டாபே தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிற்கு இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியதுடன் கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் கலாசார அமைச்சுக்களை இல்லாமல் செய்துள்ளதானது, அப்பாவி கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்க கூடியதாகவுள்ளது.

இலங்கையில் இள்றவரையிலும், மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் இல்லாத போதும் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் சிந்தித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தின் மூலம் மக்களை மாற்றி வருவதாக எதிர்மறை கருத்துக்கள் எழுச்சி பெற்றுள்ள நிலையில் எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரன கடுமையான சட்டங்கள் உருவாகின்றமைக்கு வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மீது இந்துக்கள் முஸ்லிம்கள் வெறுப்பாக இருப்பதை கடந்தகால சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. முஸ்லிம் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ மக்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஈஸ்டர் படுகொலை சம்பவம் சிறுபான்மையினரிடம்,மத முரண்பாடுகளை கூர்மையடையச் செய்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கிடையில் காலத்திற்கு காலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பல அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கான அடிப்படை காரணங்கள் கண்டறியப்பட்டு மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இன்றளவில் மட்டும் உறுதி செய்யப்படவில்லை
இனிவரும் காலங்களில் சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இல்லவிடின், சிறுபான்மை மக்களின் மத சுதந்திரத்திற்கு பேரினவாதிகளால் இறுதி ஆணி அடிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் நிலைமையே சிறுபான்மையினருக்கு ஏற்படும்.

-செந்தீ குணா-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*