;
Athirady Tamil News

‘தலைமுறை இடைவெளி’யைத் தாண்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும்?! (கட்டுரை)

0

இரு தினங்களுக்கு முன்னர், எதேச்சையாகச் சில மாணவர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றவர்கள். அவர்களிடம் பேசியபோது அவர்களிடம் ஒருவித பக்குவம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்களிடம் பேசிப்பார்க்க மனம் உந்தியது. சில நிமிடங்கள் பேசினேன். மகிழ்ச்சி மிகுந்த தருணம் அது என்று சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எனக்கிருக்கின்ற தலைமுறை இடைவெளியை இற்றைப்படுத்த இப்படியான சந்திப்புகள் அவ்வப்போது எனக்கு உதவுகின்றன.

ஏறத்தாழ அறுபது வருட அனுபவத்தோடு நான் இருக்கிறேன்.. என்னைச் சூற்றிப் படிப்படியாக ஏற்பட்ட பல மாற்றங்களைக் கண்ணாராக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. அதனை ஒரு பெரிய பாக்கியம் என்றும் சொல்லலாம். அந்த மாற்றங்கள் எனக்களித்திருக்கும் அனுபவம் என்னைப் பலவாறு சிந்திக்கச் செய்திருக்கிறது. அவர்களுக்கு அப்படியல்ல. ஒரு “மாஜிக்” போன்று , ஒரு சிறிய காலப்பகுதில் பல மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. சிந்திக்க வாய்ப்பில்லாது நடந்து போயிருக்கின்ற அந்த மாற்றங்களால் அவர்கள் பெற்றுள்ள அனுபவமும் ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கலாம் என்பதே எனது கணிப்பீடு.ஏனெனில் அடிப்படையில் அவர்கள் அறிந்திருக்க வேண்டிய வாழ்க்கை பற்றி சில அனுபவங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்டபோது அவர்களில் பலர் மௌனமாக இருந்தனர். சிலர் “தெரியாது” எனப் பதிலளித்தனர். எனவே அவர்கள் பல வழிகளில் தம்மை இற்றைப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கணிப்பீடு.

சமூகத்தில் இற்றைப்படுத்துபவர்கள் தொடர்பாக…. அவர்கள் சமூகத்தில் தாம் கண்டவற்றையும், தமக்குக் கிடைத்த அனுபவங்களோடு தாம் சந்தித்தவர்களின் அனுபவங்களையும் , அவர்கள் கதைகளையும் கேட்டு வைத்துக் கொண்டு, அவர்கள் தம்மை இற்றைப்படுத்திக் கொள்கிறார்களா? இல்லாவிடில் வாசிப்பு மற்றும் தேடலின் மூலம் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ளுகிறார்களா? இல்லை என்னென்ன வழிகளில் அதனைச் செய்கிறார்கள் என்பதை அவதானித்து அவர்களைச் செவ்வனே வழி நடத்துவது அவசியம். ஏனெனில் அவர்கள் தம்மை அறிவுபூர்வமாக இற்றைப்படுத்த அவர்கள் பாடசாலைக் கல்வி அவர்களுக்கு ஒரு போதும் உதவுவதில்லை என்றதையும் நான் அவதானித்துக் கொண்டேன்.

உண்மையிலேயே பாரிய யுத்தத்தைச் சந்தித்த ஒரு ஒரு சமூகத்துக்கு ஒரு முறையான சமூக மட்டத்தினாலான இற்றைப்படுத்தல் அவசியம் என்பதை நாம் மறந்துவிட்டோம். சோவியத் யூனியன் துண்டாடப்பட்டபோது, அதிலிருந்து வெளியேறியவர்கள் , மேற்கத்தைய மக்களைச் சந்தித்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் அங்கே அவர்களுக்கிடையே இற்றைப்படுத்தல் தொடர்பான இடைவெளி ஒன்றினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதைப்போல, இங்கும், யுத்தத்திற்குப் பின்னர் எமது சமூக மக்களும் , இரு வேறுபட்ட அனுபவத் தளங்களிலிருந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். விளைவு அதில் இருந்து பல குழப்பங்கள் தோன்றத் தொடங்கின. இன்று எம்மத்தியில் காணப்படும் பல சமூக, பண்பாட்டுச் சிதைவுகளுக்கு அதுவும் ஒரு காரணியாகும். அதனால் தான் அதிக பெண்கள் தமது வாழ்க்கையில் பல நாட்களை நீதிமன்றங்களிலே கழிப்பதும், சிறுவர்கள் பலருக்கு நன்னடத்தை வழிகாட்டல் அதிகம் தேவைப்படுவதும், இளைஞர்கள் எதுவித கட்டுப்பாடற்று ஒரு வித போதைமயக்கத்தில் திரிவதுமான நிலைமை காணப்படுகிறது. மானசீகமாகக் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவர்களாகவும், வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியாது தடுமாறுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்க வேண்டுமாயின் நாம் எம்மை உலக வளர்ச்சியோடு இற்றைப்படுத்துவது அவசியமாகிறது.

யுத்தம் மெளனிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னரான இடைவெளியில், மக்கள் தம்மைப் பாரிய இற்றைப்படுத்தலுக்கூடாகக் கொண்டு செல்லவேண்டிய தொரு நெருக்கடிக்குள் இருந்தனர். ஆனால், இற்றைப்படுத்தல் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்ட மக்கள் அகவறிவை இற்றைப்படுத்தாது , நவீன உலகத்தோடு ஒன்றித்துப் பயணிக்க வேண்டித் தமது பௌதீக வளங்களை இற்றைப்படுத்தத் தொடங்கினர். அவர்களை அறியாமலே அவர்கள் ஒரு மாயைக்குள் சிக்கிக் கொண்டதும் இதனாலேயே நடைபெற்றது எனலாம். . அரசும் அதனையே ஊக்குவிக்க விரும்பி அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தது. அதனைப் போலி என்று மக்கள் அறிந்திருக்கவில்லை. பௌதீக வளத்தைப் பெருக்க அதிக பணம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் தேவையை ”நுண்கடனாகவும், அடகு கடனாகவும்” தாங்கள் தருவதாகச் சொல்லிக் கொண்டு பல நிதி நிறுவனங்கள் தமது கிளைகளை வடக்கில் திறந்தன. கடன் பற்றிய அறிவும், வங்கி நடவடிக்கைகள் பற்றித் தம்மை இற்றைப்படுத்தாவர்களும் நிதி நிறுவனங்கள் விரித்த வலைகளில் விழுந்தனர். அதனால் பல தற்கொலைகள் அரங்கேறிவிட்டன. இப்போது பல குடும்பங்கள் நடுத்தெரிவில்…..

இன்று எல்லோர் கைகளிலும் தொலைபேசி இருக்கிறது. தொலைபேசியை உபயோகிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்கு அது சார்ந்த விடயங்களில் எம்மை இற்றைப்படுத்தியிருக்கிறோமா? என்றால் …? இல்லை. உலகம் வலு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவர் தன்னை உலக நடைமுறையோடு இற்றைப்படுத்துவது அவசியமாகிறது. இற்றைப் படுத்தல் இல்லை என்றால், உங்கள் முன் செல்பவரோடு இணைந்து சமமாகப் பயணிக்க முடியாது. அதே சமயம் உங்களுடன் இணைந்து வருபவர்களுக்கு நீங்கள் தடை ஏற்படுத்துபவராகக் கூட இருக்கலாம். ஒரு மனிதன் தன்னைக் கல்வி ரீதியாக மட்டும் இற்றைப்படுத்துவது போதாது. கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு அனுபவ ரீதியாகவும் தன்னை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். இற்றைப்படுத்துதல் மூலம் ஒருவர் தனக்குத் தலைமுறை இடைவெளி ஒன்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, சமூகத்தைச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டு செல்ல அது அவசியமாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + nineteen =

*