;
Athirady Tamil News

சித்திரவதையாகும் பகிடிவதை!! (கட்டுரை)

0

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதைைய புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய மாணவர்கள் மத்தியில் பகிடிவதை இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளிவந்தன. பல்கலைக்கழக நடவடிக்கைகள் இணைய வழியாக இடம்பெறும் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையும் இணையவழியாக இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் மாத்திரமல்ல

கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழக பெறியியற்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடையும், பல்கலைக்கழக தடையும் விதிக்கப்பட்டு உடனடியாக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இதே பீடத்தில் பேராதனையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு பகிடிவதை வழங்கியதாக பேராதனை பொலிஸார் 15 மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். எனவே பகிடிவதை பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக சமூகம் இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது. பகிடிவதையினை ஆதரிப்போர் ஒருபகுதியினர் எதிர்ப்போர் இன்னொரு பகுதியினர் என இவ் இரண்டு குழுக்களுக்கும் இடையில் சண்டைகளும் நிகழ்கின்றன.

ஏன் ஆதரிக்கிறார்கள்? ஏன் எதிர்க்கிறார்கள்? இவ்வளவு நடந்தும் பகிடிவதை நிறுத்தப்படாமைக்கு மற்றொரு காரணம் அல்லது முக்கிய காரணம் தோட்டங்களில் தொழில் சங்கங்கள் சந்தாவுக்கு ஆள்பிடிப்பது போல் தமது கட்சிக்கு, குழுவுக்கு அரசுக்கு எதிராக, செயற்படுவதற்காக ஆள்பிடிப்பதே காரணமாகவுள்ளது. மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்வரை இது மாறப்போவதில்லை. இதன் காரணமாக பகிடிவதை ஆதரிப்போர் எதிர்ப்போர் என இரு குழுக்களாக பிரிந்து சண்டை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு குழுக்களும் சண்டையைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு சிற்றுண்டிச்சாலைகளை பயன்படுத்துகின்றனர். பகிடிவதையை ஆதரிக்கும் குழுவினரின் எண்ணிக்ைக அதிகம் என்பதால் மாணவர் பொது அறையினை தம்வசம் வைத்துள்ளனர். எனவே, பகிடிவதைக்கு எதிரானவர்கள் வேறு இடங்களில் ஒன்று கூடுவதை காணமுடிகிறது. இக்குழுக்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரும் மறைமுகமாக இயங்குகின்றனர்.

பகிடிவதை எப்படி வந்தது, இதை நிறுத்த முடியாதா? சட்ட திட்டங்கள் போதாதா? என்ற கேள்விகள் எவருக்கும் எழுவது வழமை.

இந்த மாணவர்கள் சில வேளைகளில் அரசியல் குழுக்களின் கைப்பொம்மைகளாக ஆவதற்கான சாத்தியங்கள் உள்ளன. மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் அதிகமானோர் முதல் வருட மாணவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். அனேகமாக அதிக மாணவர்கள் அவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்கள் எதற்காக இடம்பெறுகின்றது என்பதை அறியாமலேயே பங்கு கொள்கிறார்கள். சிரேஷ்ட மாணவர்களின் தூண்டுதலின் காரணமாகவே இம்மாணவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். கனிஷ்ட மாணவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சில அரசியல் குழுக்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இது இவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமாகவும் காணப்படுகிறது. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை எப்போதுமே இடதுசாரி அணிகளினதும் தீவிர போக்குடைய அரசியல் குழுக்களினதும் பாசறையாகவே காணப்படுகின்றது. இளம் வயதில் துடிப்புள்ள மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்திக்கொள்வதும், ஈர்த்துக்கொள்வதும் இக்கட்சிகளினதும், குழுக்களினதும் நோக்கமாகும்.

மேற்கத்தேய கலாசாரத்தை நாம் அனைவரும் விமர்சித்தாலும் அதிலும் நாம் கற்றுக் கொள்வதற்கான விடயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். மேற்கத்தேய மாணவ, மாணவியர் தத்தமது காரியங்களைத் தனியாகவே செய்து கொள்வதற்கு சிறு காலத்திலிருந்தே பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால் இளைஞர் பருவத்தில் அவர்களுக்கு தமது செயற்பாடுகள் தொடர்பில் நல்லதொரு தெளிவு ஏற்படும். எனினும் எமது கலாசாரத்தினுள் பிள்ளைகள் எல்லா சந்தர்ப்பத்திலும் தமது பெற்றோரின் பாதுகாப்பில் இருப்பதால் அதற்கு பின்னர் ஏற்படும் இடைவெளியால் பல்கலைக்கழகங்களின் பகிடிவதைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

தீர்வின்றித் தொடரும் பிரச்சினையாக இருக்கிறது பகிடிவதை. பாடசாலை படிப்பை பலவித இன்னல்களுக்கும், சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும், போட்டிகளுக்கும் மத்தியில் வெற்றிகரமாக முடித்து விட்டு எதிர்கால கனவுகளைச் சுமந்து பட்டம் பெறுவதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகம் வருகின்றனர். ஏராளமான எதிர்பார்ப்புகளோடு தாய், தந்தை, உற்றார், உறவினர்களை பிரிந்து ஊரை விட்டு, நண்பர்களை பிரிந்து, புதியவர்களாய் பல்கலைக்கழகம் வருகின்றவர்களை மேலும் வாட்டி வதைத்து எடுப்பதே பகிடிவதை. இன்று ராகிங் பேய் பல்கலைக்கழகங்களில் சித்திரவதையாக மாறி பலரை உடல் உளப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குவதோடு பெறுமதிமிக்க பல உயிர்களையும் குடித்துள்ளது. அதியுயர் கல்வி நிறுவனமாக மதிக்கப்படும் பல்கலைக்கழக அமைப்புகளில் இன்று அதிதீவிரமா ஒரு தொற்று வியாதியைப் போன்று பரவி வருவது பகிடிவதை என்று சொல்லப்படும் சித்திரவதையாகும்.

பகிடிவதை தொடர்பாக பதிவாகியுள்ள கொடூரமான சம்பவங்களுள் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ரத்கசீலி என்ற மாணவி இராமநாதன் மண்டபத்தின் மேல் மாடியிலிருந்து குதித்து உயிர் துறந்தார். அவரைத் தொடர்ந்து செல்வநாயகம், வரப்பிரகாஷ், துஷார, கெலும் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது. சாகர இல்டா ஒபேசேகர விடுதியில் தங்கியிருந்த வேளை சிரேஷ்ட மாணவர்கள் நீர் ஓர் எழத்தாளனா? எனக் கேட்டு பேனா முனையைக் காட்டி ”இதைப் பிடித்து தானே நீ பகிடிவதையை எதிர்த்து எழுதினாய்” எனக் கூறி அப்பேனா முனையை அவரது இனப்பெருக்க உறுப்பினுள் அழுத்தியுள்ளனர். தற்போது தனது விட்டில் ஒர் அறையில் முடங்கிக் கிடக்கும் சாகர யன்னல் கதவகளைத் திறக்க மறுக்கின்றான். திறக்கும் போது என்னைக் ெகால்ல வருகிறார்கள் என உரக்கக் கத்துகின்றார்.

ராகிங் பிறந்தது எவ்வாறு என்பதை ஆராய்வோம். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர புதிதாகச் சேர்ந்தவர்களைத் தொந்தரவு செய்கின்ற சில்மிஷமான ”ராகிங்” என்ற ஆங்கிலப்பதம் பகிடிவதை செய்தலையே குறித்து நிற்கிறது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையினை சமூக அறிவியலோடு நோக்கும்போது எமக்குப் புரிவது என்னவென்றால் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் இளைஞர், யுவதிகளின் இளமை மற்றும் அதனுடன் தொடர்புள்ள அனைத்தும் தவறான முறையில் கையாளப்படுகின்றது என்பதாகும்.

பகிடிவதை அல்லது இலகு வார்த்தையில் கூறுவதானால் ‘ராகிங்’ (ராக்) என்பதை இன்று முழுப் பல்கலைக்கழக கட்டமைப்பிலும் காணக் கூடியதாக உள்ளதோடு, சித்திரவதை மற்றும் கொடுமைகள் காரணமாக இதற்கு எதிராக சட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதே போன்று சட்ட ரீதியாகவும் பகிடிவதை தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றாலும் அந்த சட்டங்களையும் மீறிக் கொண்டு சிலர் பகிடிவதையில் ஈடுபடுவது ஏன் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது.

பல்கலைக்கழகங்களிலும் சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களோடு பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து பயில, பழக வேண்டியுள்ளது அதற்காகப் பயன்படுவதே ராகிங். முதற் பழக்கம் பகிடியாக அமைந்துவிட்டால் அது பயிற்சிக் காலம் முழுவதும் மறக்காது பசுமையாயிருக்கும்.

எனவே இந்தப் பகிடி மாணவர்களை இணைத்து வைக்கும் சொற்ப வேதனைதரும் நிகழ்வாக முன்பு இருந்து வந்தது. உலகம் முழுதும் இந் நடைமுறையை நாம் காணலாம்.

பல்கலைக்கழக மாணவர்களும், அதன் நிர்வாக அமைப்புகளும் பகிடிவதை போன்ற கொடு நிகழ்வுகளால் அவற்றின் தரமும், உயர்நிலை அந்தஸ்தும் இழக்கப்படுவதைப் புரிந்துகொண்டு பகிடிவதையினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பது ஒரு பாரம்பரியமாகவும் அதிலிருந்து எல்லா மாணவர்களையும் விடுவித்துக் கொள்வது ஒரு கடினமான பணியாகவும் இன்று மாறியுள்ளது. நாங்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டோம். ஆகவே எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ, அதையே தற்போது நாங்கள் செய்கிறோம் என்று மாணவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர். இன்னும் மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமுதாயப்பற்று மிக்கவர்களாகவும் பகிடிவதை என்ற உயிர்வதையில் ஈடுபடாத நற்பிரசைகளாகவும் உருவாக்க வேண்டியவர்கள் விரிவுரையாளர்களும் நிர்வாகிகளுமே. ஆனால் வேலியே பயிரை மேய்கின்ற நிலை இன்னும் பல்கலைக்கழகங்களைவிட்டு முற்று முழுதாக நீங்கவில்லை.

உளவியல் ரீதியான பகிடிவதை காரணமாக சமூக வழக்கிலுள்ள சமய சம்பிரதாய விழுமியங்களை மோசமான மொழியமைப்புகளைப் பயன்படுத்தி வசனிக்குமாறு பணித்தல். இதில் குறிப்பாக தேசியகீதம், திருக்குறள், கணித விஞ்ஞான விதிகள், சமய ரீதியான வசனங்கள் என்பன அடங்கும். புதிய மாணவர்களை தங்களது பெற்றோர்களை இழிவுபடுத்திக் கூறுமாறு பணித்தல், இதில் பெற்றோரின் உடல் கட்டமைப்பு தொடர்பான விடயங்களும் அடங்கும். தங்களைப் பற்றி தரக்குறைவினை ஏற்படுத்தும், அல்லது அவமானப்படுத்தும் வகையிலான ஏதேனும் கருத்துக்களைக் கூறுமாறு திணித்தல் போன்றவை அடங்கும். உண்மைப் பெயரைக் கூறாது மிகக் கீழ்த்தரமான பட்டப்பெயர்களை கூறுதல்.

பாலியல் ரீதியான பகிடிவதையில் சிரேஷ்ட மாணவர்கள் முன்னிலையில் மறைவானதோர் இடத்தில் ஆடையின்றி நிற்பதற்குப் பணித்தல், அல்லது கட்டாயப்படுத்தல், சில மாணவர்களை பலவந்தமாக விந்து வெளிபடுத்துமாறு அல்லது அது போன்ற பாவனை செய்யுமாறு பணித்தல், அல்லது கட்டளையிடுதல், புறம்பாலுறுப்புக்களினுள் ஏதேனும் எரிவூட்டும் பொருட்களை இடுதல் உதாரணமாக பற்பசையை இடுதல், மற்றவர்களுடன் பாலியலுறவு கொள்வது போன்று செய்துகாட்டுமாறும் கட்டளையிடுதல், பாலுறுப்புகளை தொடுமாறு தூண்டுதல், நடித்துக் காட்டுதல், சில வகையான ஆபாச வசனங்களையோ, அல்லது கூற்றுகளையோ வாசித்து தமது கருத்துரையை வழங்குமாறு கட்டாயப்படுத்தல், மிருகங்களுடன் உறவு கொள்வது போன்று பாவனை செய்து காட்டவைத்தல், உதாரணமாக நாய்களுடன் உடலுறவு கொள்வது போல் பாவனை செய்தல் பலாத்காரத்தில் தங்களது இச்சையை கனிஷ்ட மாணவர்கள் மூலம் தீர்த்தல். போன்றன இதில் அடங்குவன. மனங்களில் மாற்றம் வரும் வரை பகிடிவதையினை ஒழிக்கமுடியாது. அது போல மாணவர்களின் கல்வியை அழித்தும் உடல் ரீதியாக துன்புரித்தியும் தமது நோக்கத்தை தொடர்ந்தம் நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்கள் அரசியலில் இருக்கும்வரை இதனை நிறுத்தவும் முடியாது. எனவே மாற்றத்தை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தொடங்குவோம்.

ஆர். மகேஸ்வரன் …•

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 10 =

*