;
Athirady Tamil News

விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் – மு.திருநாவுக்கரசு!! (கட்டுரை)

0

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.

இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — சீனா — பாகிஸ்தான் சார்ந்த ஒருவகை அச்சு உறவு ஒரு பக்கமாகவும் இந்தியா அமெரிக்கா மேற்குலகம் சார்ந்த உறவுகள் இன்னொரு பக்கமாகவும் இருவகை அணி சார் உறவுகளுக்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்நிலையில் ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை சுற்றியே இத்தகைய உறவுகள் கொதி நிலையை அடையக் கூடிய பெரும் வாய்ப்பு காணப்படுகிறது.

இலங்கையில் சீனாவின் உறவு படிப்படியாக முதிர்ச்சி அடையும் வரை இந்தியாவை தந்திரோபாயமாக கையாளவேண்டிய அவசியம் இலங்கை ஆட்சியாளர்களுக்குண்டு. இலங்கை ஆட்சியாளர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளினால் இந்திய அரசு கோபமடைந்து இலங்கை மீது கடும் போக்கை மேற்கொள்ளாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சிங்கள ஆட்சியாளர்களை தற்போது சார்ந்திருக்கிறது.

இதன் பின்னணியில் இந்தியாவுக்கென அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு வெளிநாட்டு தூதரை இலங்கை அரசு நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. மிலிந்த மொரகொடவை இதற்கான சிறப்பு பணியாளராக தேர்ந்தெடுத்து இலங்கை அரசு அவரை புதுடில்லியில் அமைச்சரவை அந்தஸ்துடன் தூதரகத்தில் அமர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு அமைச்சர் தூதர் என்ற பெயரில் புதுடில்லியில் நிரந்தரமாக குடியமர்த்தபடுகிறார் . இத்தகைய இராஜதந்திர நகர்த்தல் இப்பிரச்சனைக்கு இருக்கக்கூடிய கொதிநிலையை இலகுவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

முழு உலக நாடுகளுக்குமான வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன காணப்படும் போது இந்தியாவுக்கான ஒரு தனிவிசேட வெளிவிவகார அமைச்சரா மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் இராஜதந்திர வரலாற்றில் ஒரு முக்கியத்துவம்வாய்ந்த அத்தியாயமாகும்.

இதேபோல ஈழத் தமிழர்களை ஒடுக்குகின்ற தேவைக்கான ஒரு தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. மாகாண சபைகளுக்கான ராஜாங்க அமைச்சர் என்ற பெயரில் அட்மிரல் சரத் வீரசேகர இதற்கென நியமிக்கப்பட்ட உள்ளார். இலங்கைக் கடற்படையில் பணியாற்றிய இவர் தமிழர்களுக்கு எதிரான கடும்போக்காளர். கடந்த இனப்படுகொலை யுத்தத்தில் பங்கெடுத்தவர்.

ஈழத்தமிழர் தொடர்பாக இந்திய இலங்கை உறவை கையாளுவதற்கான ஓர் அமைச்சராக மிலிந்த மொரகொட நியமிக்கப்படவிருக்கும் நிலையில் உள்நாட்டில் தமிழர்களை அழிப்பதற்காக இன்னொரு அமைச்சருமென ஈழத்தமிழருக்கு எதிராக உள்ளும் புறமுமென இரண்டு அமைச்சர்கள் நேரடியாக அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் தொடர்பான விவகாரங்களை இலங்கையில் கையாள்வதற்கென இந்தியா ஒரு தனி விசேட தூதரை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நிரந்தரமாக நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படியோ ஈழத்தமிழர்களை சுற்றி ஓர் எரிமலை வட்டம் உருவாகி இருப்பதைக் காணலாம்.

இந்நிலையில் இலங்கை வெளிவிவகார செயலாளர் கூறியுள்ள பின்வரும் கருத்து கவனத்திற்குரியது.

“இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக இலங்கை விளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக மனதில் வைத்திருக்கவேண்டும், ஜனாதிபதி இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்” என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சவுத்ஏசியன் மொனிட்டரிற்காக பி .கே. பாலசந்திரனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“ஒருநாட்டில் மாற்றம் பெறக்கூடிய பல விடயங்கள் உள்ளன.அது ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகளை மாற்றலாம் ஆனால் நாட்டின் அமைவிடத்தினை அதனால் மாற்ற முடியாது.

இலங்கையின் அமைவிடத்தின் முக்கியம் காரணமாக இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முக்கிய நாடுகளுக்கு இலங்கை மிகவும் கவரும் தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது.

ஆனால் இந்த கவரும் தன்மையுடன் பல சவால்களும் உருவாகின்றன. இலங்கை இந்த சாதகதன்மையையும் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

இதேவேளை நாங்கள் ஒருவருக்கு எதிராக இன்னொரு நாடு இலங்கை மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை இந்தியாவின் கடல்சார்வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றது. சிவ்சங்கர் மேனன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது போல பாக்குநீரிணையின் 40 கடல்மைலுக்குள் காணப்படும் விமானந்தாங்கி கப்பலாக இலங்கை காணப்படக்கூடாது.

இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக விளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக மனதில் வைத்திருக்கவேண்டும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார் .இந்தியாவின் மூலோபாயபாதுகாப்பு தேவைகள் அபிலாசைகள் குறித்து மிகவும் அவதானமாக இயிருக்கவேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளுக்கு எங்கள் கடற்பரப்பினை பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது.

பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் இந்தியாவுடன சிறந்த உறவை கொண்டுள்ள அதேவேளை பல நாடுகள் இலங்கையுடன் இராணுவ உறவை ஏற்படுத்திக்கொள்வதில் விருப்பமாக உள்ளதை நாங்கள் அவதானிக்கின்றோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி இவை அனைத்தும் வரவிருக்கும் ஆண்டு இலங்கை – இந்தியா – ஈழத்தமிழர் தொடர்பாக வெடிக்கவுள்ள எரிமலைப் பிழம்பை தெளிவாக கோடி காட்டி நிற்கின்றன.

அத்துடன் தமிழ் இன அழிப்பையும் வெளியுறவு விவகாரங்களையும் கையாள்வதற்கான மூளைசாலிகள், இராஜதந்திரிகள் , செயல்முறை பணித்துறை நிபுணர்கள் , இராணுவ வல்லுநர்கள் என பலதிறத்தவர்கள் அடங்கிய “” வியத்மக”” என்கின்ற ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அறிஞர் அணியை ஜனாதிபதி கோத்தபாய தன் கையில் வைத்துள்ளார். இத்தகைய ஒரு பாரிய கூட்டு மூளைப் பலத்துடன் எதிரி தமிழருக்கு எதிரான புத்திபூர்வ செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால் ஈழத்தமிழர் தரப்பில் தமிழ் தலைவர்கள் கும்பகர்ண நித்திரையில் இருந்துகொண்டு இனிய பெரும் கனவுகளைக் கண்டவாறு தமது புளுகுப் பெட்டிகளை மீடியவண்ணம் கற்பனைக் கதைகளை அவிழ்த்துவிட்டபடி தங்கள் மீசைகளை முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் மக்களை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சிங்கள எதிரி போதிய முன்னறிவுடனும் , முன்னெச்சரிக்கையுடனும் பாரிய திட்டமிடலுடன் , போதிய ஆளணி அரவணைப்புக்களுடனும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தலைவர்களோ பொறுப்பற்றவர்களாய் வானத்தை அண்ணாந்து வெள்ளி பார்த்தவண்ணம் தமிழ் மக்களின் கண்முன் மாயமான்கைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

“நெஞ்சில் துணிவுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி — கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி”

என்ற மகாகவி பாரதியாரின் பாடல் அடிகள்தான் இந்த தமிழ் தலைவர்களை பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 10 =

*