;
Athirady Tamil News

தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…!! (கட்டுரை)

0

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பொலிஸார் விதித்துள்ள தடை உத்தரவை அடுத்து, தேர்தல் களத்தில் முகம்மாறி, திசைமாறி நின்ற தலைலைமைகள் மீண்டும் ஒன்று கூடி, ஒரு முடிவை எடுத்திருப்பது, புதிய தமிழ் கூட்டுக்கான நல்ல சமிக்ஞை என்று பலராலும் கூறப்படும் நிலையில் ……. தேவை “புதிய கூட்டு” என்ற பெயரிலான ஒட்டுப் போடுவதைப்போன்ற இணைப்பு அல்ல…. தற்போதைய கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு, ஒரு புதிய –ஒரேயொரு – தமிழ் அமைப்புஉருவாக வேண்டும் என்ற விடயம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது..

அது தொடர்பாகக் கடந்த பெப்ரவரி 2020 அன்று தினக்குரல் வார இதழில் , “பேசிப்பார்த்தோம்” என்ற தொடரில் 11வது சந்திப்பாக வெளிவந்த நேர்காணல் ஒன்றின் பதில் , இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பதால்,அது தொடர்பாகத் தமிழ் தலைமைகள் மீளவும் கவனம் செலுத்த வேண்டும் என்ற அக்கறையில், அவ் விடயம் இங்கு மீள் பிரசுரமாகிறது.

தமிழர் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் அல்லது முன்னெடுத்துச் செல்லும் சக்திகளாகத் தம்மைத் தேசிய ரீதியிலும், சர்வதேசப் பரப்பிலும் இனம் காட்டிய அரசியல் கட்சிகளும், அவற்றிற்குத் தலைமை தாங்கி அவர்களை இயக்கி வந்த தலைவர்களும், அவர்களைப் பின்பற்றிய ஏனைய அரசியல்வாதிகளும் நாடு சுதந்திரம் பெற்ற இந்த 72 ஆண்டு காலப்பகுதியில் எதனைச் சாதித்தார்கள்? என்ற கேள்விக்கு – இந்த ஆண்டு சுதந்திரதினம் தமிழர் தாயகப் பகுதியில் கரிநாளாக அனுஷ்டிக்கப் பட்டது என்ற செய்தியே தெளிவானதும், இறுக்கமானதுமான பதிலாக அமையும்.

இந்த ஏழு தசாப்தத்திற்கு ம் அதிகமான காலப் பகுதியில் , அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதொரு தேசத்தில் சுதந்திரம் மறுக்கப்பட்ட , கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்ட, தொடர்ந்தும் விடுதலைக்காகப் போராடும் இனமாகவே தமிழினம் இருந்து வந்துள்ளது.

இலங்கையின் அரசியல் களம் சிங்கள பௌத்த தளத்தில் ஆழ வேரூன்றி, பேரினவாத மேலாதிக்க சிந்தனையால் போஷிக்கப்பட்ட நிலையில் , சிங்கள மக்களுக்கான தேசமாக இலங்கையை நிர்மாணிக்கும் ஒரு தீவிர முனைப்புடன் ஒரு விதமான சர்வாதிகாரமான ஆட்சி முறையை “ஜனநாயக சோஷலிச ம்” என்ற பெயரில் எப்படிஎல்லாம் முன்னெடுத்தது என்பது விபரிக்கத் தேவையற்றதொரு வரலாறு.

இந்த நிலையில் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் தமிழர்கள் வாழ்வில் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும்நோக்கில் அல்லது போராடி வென்றெடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளை நம்பி முன்னெடுத்த அறவழிச் செயற்பாடுகளை எல்லாம் ( இவற்றைப் போராட்டம் என அடையாளப்படுத்த முடியாது) ஆயுதமுனையில் மூர்க்கத்தனமாகவும், கேவலமான முறையிலும் அடக்கப்பட்டதும் இந்த நாட்டின் 72 ஆண்டு கால சுதந்திர வரலாற்றை இரத்தத்தால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தலைமைகள் அறவழியிலான அரசியல் போராட்ட காலத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்றும் கூட மாரிகாலக் காளான்களாகவும், தவளைகளாக வும் மட்டுமே தம்மை இனங்காட்டிப் பதவி அரசியலுள் பல்லிளித்துக் கிடந்த பரிதாபகரமான வரலாற்றுப் பதிவாகும். அது பற்றிப் பேசுவதும், விமர்சிப்பதுவும் ஆா்த்தமற்றது. அவமானத்துக்குரியது.

தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழருக்கு ஒரு வலிமையும், ஆளுமையும், இலட்சிய நோக்கும் கொண்ட அரசியல் தலைமை கிடைக்காமல் போனது வரலாற்றுத் துயரமே. ஆனால் இந்த அரசியல் போராட்ட செய் நெறியை நிராகரித்து மேலெழுந்த இளம் தலைமுறை தமிழ் மக்களுக்கு ஒரு ஆளுமையும்,இலட்சிய இலக்கில் செயற்படும் உறுதியும், மனோபாவமும் மிக்க கம்பீரமான ஒரு தலைமையைச் சர்வதேசத்திற்கு அடையாளப்படுத்தியபோது அரசியல் உளறுப் பேர்வழிகளால் அர்த்தமற்றுப் போனதும் வரலாறு.

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளதக மாறியபோது, தற்போது மீண்டும் அரசியலில் தலைமைகள் தாமென ஊடாடித் திரிபவர்கள் தமது தலைமைத்துவத்தின் தோல்வியை ஒப்புக் கொண்டவர்களாய் அப்போது ஆயுதப் போராட்டத் தலைமையின் பின்னாள் அணி சேர்ந்ததும் வரலாறு. போர் மௌனிக்க எது காரணம்? யார் காரணம்? என ஆராயப்போனால் அந்தக் கேள்வியானது யாரை விரல் சுட்டிக் அடையாளப்படுத்தும் என்பதையும் மக்கள் நன்கு அறிவர்.

தலைமைகளின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையற்றவர்கள் எனத் தம்மை இனம் காட்டியவர்களே மீண்டும் வெள்ளை வேட்டிகளுடன் தலைமைகளாக உலாவரத் தொடங்கிக் கடந்த ஒரு தசாப்பத காலத்தில் கொள்கையற்ற கோவணதாரிகளாக அரசியல் பேசும் அவலநிலைக்கு வந்துள்ளார்கள்.

இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.மாற்று அரசியல் பற்றி, மாற்றுத் தலைமை பற்றி , மாற்றுக் கூட்டணி பற்றி…… எதிர்காலம் இருளாக இருக்கையில் கைவிளக்குக் கூடத் தம் கையில் இல்லை என்ற பயம் மக்களிடம் விதையூன்றத் தொடங்கிவிட்டது.

1970 களின் பிற்பகுதியில் உயிர்த்தெழுந்த உணர்வு போல் மீண்டும் ஒரு நம்பிக்கை யூட்டும் கம்பீரம் கொண்ட தலைமை உருவாகுமா? என்று ஒருவர் ஒருவரை ஏமாற்றத்துடன் நோக்குவது தெரிகிறது. மாற்றம் ஒன்றின் உடனடித் தேவை பரவலாக உணரப்பட்டுவருகின்ற நிலையில் , சித்தாந்த அரசியலுக்கு அப்பால் , புதிதாகச் சிந்திக்கும் திறன்மிக்கதொரு புதிய தலைமை தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது. காலத்தின் அவசியமும் அதுவே.

இது சுயமாக உருவாகத் தசாப்தங்கள் தேவைப்படலாம்.ஆனால் அது உடனடியாக உருவாக்கப்படல் வேண்டும்.

அது ஏற்கனவே உள்ள ஏமாற்றுத் தலைமைகளால் உருவாக்கப்பட முடியாது. உருவாக்க விடவும் கூடாது. அது அரசியல்வாதிகள் எனத் தம்மை அடையாளம் காட்டிய பேர்வழிகளின் புதிய கூட்டாக இருக்கவும் கூடாது.அதனை அனுமதிக்கவும் கூடாது. இது மக்களை ஏமாற்றி அரசியல் பண்ணாத மாற்றுச் சிந்தனைகொண்ட மக்களின் தலைமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதனை உருவாக்கித் தமிழ் மக்களை வழி நடத்தும் திறன் இப்போதுள்ள தலைமைகள் எவரிடமும் கிடையாது. தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து நெஞ்சுறுதியுடனும், நேர்மைத் திறனுடனும் சித்தித்துச் செயலாற்றும் அர்ப்பணிப்பு உறுதி கொண்ட – சுய அரசியல் அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு மக்களுக்குப் பணியாற்றும் பண்பு இவர்களில் எவரிடமாவது கிஞ்சித்தேனும் கிடையாது. அப்படியானால் காலத்தின் அவசியமான மாற்றுத்தலைமையை, மாற்று அணியை எப்படி உருவாக்குவது? யார் உருவாக்குவது? இந்தகைய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும். அத் தேவை என்பது கட்டாயமெனின், தேவையை நிறைவேற்றுவதற்கான தேடலும் அவசியமாகின்றது.

கனக்கக் கதைத்துப் பயனில்லை.தர்க்கங்களும் குதர்க்கங்களும் எதனையும் சாதிக்காது. மாற்றுத் தலைமை, மாற்று அணி பற்றி யோசிப்பதைவிட்டு அனைவரும் ஒருமித்து, ஒரு மாற்று நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். இப்போதைய தேவை மாற்றுச் சிந்தனையே தவிர வேறில்லை. முரண்பாடுகள் உடன்பாடுகளை எட்டவிடாது. சித்தாந்தங்களுக்குள் சிக்கிச் சீரழிவதை புதிய சித்தாந்தங்களை, கோட்பாடுகளை , காலத்தின் தேவை கருதி உடனடியாக, இன்றைய அரசியல், அறிவியல், சமூகவியல் சார்ந்த யதார்த்த தளத்தில் இருந்து உருவாக்க வேண்டும்.

அது எல்லாக் கட்சி அரசியல்களையும் புறந்தள்ளிவிட்டு , பதவி அரசியலை உதாசீனம் செய்துவிட்டு, வர்க்க, மேலாதிக்க, வல்லாதிக்க அரசியலுக்குத் தாளம் போடாத மக்கள் நலன் கருதிய அரசியலை முன்னெடுக்கும் முனைப்புடன் , நாளையை நோக்கிய சிந்தனைகளின் அடிப்படையிலான ஒரு கொள்கைத் திட்டத்தை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தும் இலக்கினை இலட்சியமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றாக வேண்டுமெனில் இப்போதுள்ள தமிழ் தலைமைகள் தமது கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிடல் முதன்மையானது.

பல்லின , பல்மத, பல்துறை சார் பொது நோக்குச் சிந்தனையாளர்களை உள்வாங்கிய ஒரு புதிய கட்சி அரசியல் சாரா தமிழ் மக்களின் நலன் கருதும் அமைப்பு ஒன்று அதற்குரிய கொள்கை யாப்புடன் கூடிய செயற்பாட்டுத் திட்ட வரைபுடன் அமைப்பு உருவாக்க வேண்டும். இதுவே முதன்மையானது. இக் கொள்கைத் திட்ட யாப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் முன் அங்கீகாரத்துக்கு விடப்படல் வேண்டும். அந்த மக்கள் அங்கீகாரமே மாற்று அணிக்கான, மாற்றுத் தலைமைக்கான அல்லது புதிய மக்கள் தலைமையாக உருவாக்குவதற்கான மக்களின் ஆணையாக ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

இவை எல்லாம் சாத்தியமாகுமா? என்று எவரும் கேட்கலாம்.இது சாத்தியமாகா விட்டால் இனிமேல் எதுவுமே சாத்தியமாகாது என்பதே உண்மை.தேவை மாற்று அணியோ மாற்றுக் கூட்டமைப்போ அல்ல. அது பழைய மொந்தையில் புதிய கள்ளாக அல்லது புதிய மொந்தையில் தரும் பழைய கள்ளாகத்தான் இருக்கும். அது எந்தவித மாற்றத்தையும் தராது.ஏமாற்றத்தைத் தவிர.

தேவை ஒரு புதிய தலைமையின் (அது கூட்டுத் தலைமையாகவும் இருக்கலாம்) கீழான புதிய அணியே… அதனையே மக்கள் நம்புவார்கள் மட்டுமல்ல அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனென்றால் பழைய கட்சிகளும், இயக்கங்களும் (ஜன நாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளதாகக் குறிக் கொள்பவர்கள்) கூட்டுகளும் இத்தகைய அல்லது எவ்வளவு மக்கள் விரோத அரசியலில் ஈடுபட்டார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சறிந்த உண்மை.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற வள்ளுவர் வாக்கை நினைவு கூருதல் இத் தருணத்தில் சரியானதே..!

தேவை மாற்று அணியோ, தலைமையோ அல்ல . வேண்டுவது புதிய அணி , புதிய தலைமை… இது காலத்தின் தேவை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + thirteen =

*