;
Athirady Tamil News

காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா? – கலாநிதி அமீரலி!! (கட்டுரை)

0

சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய விகாரையைச் சேர்ந்த அம்பிற்றிய சுமணரத்தன தேரர் என்ற ஒரு காவியுடை தரித்த நபர் தன்னை ஒரு பௌத்த துறவியெனப் பறைசாற்றிக் கொண்டு அரசாங்க தொல்லியற் திணக்கள அதிகாரிகள் மூவரை (இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்), அகழ்வாய்வுக்கென குறிவைக்கப்பட்ட ஒரு நிலத்தை அவர்கள் கனரக யந்திரத்தைக்கொண்டு தரைமட்டமாக்கினரென்று குற்றஞ்சாட்டி, அவர்களை அடித்துக் காயப்படுத்தி, ஒரு கொட்டகைக்குள் பூட்டிவைத்தமையும், காயம்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும், சம்பவமறிந்து தலத்துக்கு விரைந்த பாதுகாப்புத் துறையினர் செய்வதறியாது வெறும் பார்வையாளர்களாக நின்றமையும் நாடுபோகின்ற போக்கைப்பற்றிய கவலைக்கிடமான பல கேள்விகளை எழுப்புகின்றன.

காவியுடை தரித்த ஒருவன் காக்கிச் சட்டைக் காவலனாக இயங்குவதும் காக்கிச் சட்டை அணிந்த காவலன் காட்சிப்பொருளாக நிற்பதும் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு நவீன அத்தியாயமோ? இருந்தும், இச்சம்பவம் நாடு போகும் போக்கைப்பற்றிச் சில கவலைக்கிடமான கேள்விகளைத் தோற்றுவிக்கின்றன.

முதலாவதாக, இப்போலித் துறவியின் காடைத்தனத்தையும் தூஷண வார்த்தைகளையும் தெளிவாகப் பதிந்துள்ள ஒலி ஒளி நாடாக்களை சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. கடந்த தை மாதம் ஒரு கிறித்தவப் பாதிரிக்கு இக்காவியுடையான் கன்னத்தில் அறைந்ததையும், அதன் பின்னர் ஒரு தமிழ் அதிகாரியை தூஷணவார்த்தைகளால் திட்டியதையும் அந்நாடாக்கள் பதிவுசெய்துள்ளன. இவ்வாறான சாட்சியங்களிருந்தும் இந்தக் காவியுடையானை இதுவரை சட்டம் தண்டிக்காமல் நடமாடவிட்டது ஏன்?

இந்த ஆசாமியைப் போலவே கலேகொட ஞானசார தேரர் என்ற இன்னுமொரு துஷ்டத் துறவியின் காடைத் தனங்களையும் நாடறியும். முஸ்லிம் மக்களுக்கெதிரான பல வன்செயல் நிகழ்வுகளுக்கு இவர் ஒரு மூலகாரணமாக விளங்கியதற்கு ஏராளமான ஆதாரங்களுண்டு. இவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட, அவரை பௌத்த தர்மத்தின் நிமித்தம் மன்னித்து விடுதலை வழங்கியவர் முன்னை நாள் ஜனாதிபதி சிறிசேன. அவ்வாறு விடுதலையான பின் இத்துறவி செய்த மிகப்பெரிய பாபம் மீண்டுமொரு நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி முல்லைத்தீவிலுள்ள நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இன்னொரு பௌத்த துறவியின் சிதையொன்றைத் தகனம் செய்து இந்து மதத்தவர் உள்ளங்களைப் புண்படுத்தியமை. அரசாங்கமோ கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது அதைவிடப் புதுமை. இப்போது இவர் நாடாளுமன்ற அங்கத்தவராகப் போகும் சாத்தியமிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. பௌத்தத்தின் பெயரால் கௌதமனின் வில்லர்களாக நடமாடும் இவர்களை ஊக்குவிக்கும் ஆட்சி முறையை என்னென்று கூறுவதோ?

இரண்டாவதாக, இவ்வாறான போலித்துறவிகளை ஏன் பௌத்த சங்கத்தினர் இன்னும் தமது சங்கத்திலிருந்து நீக்காமல் விகாரையின் அதிபதியாகவும் செயலாற்ற விட்டுவைத்துள்ளனர்? இவர்களின் செய்கைகளால் பௌத்த சங்கமே இழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ளதை அதன் மூத்த தலைவர்கள் உணராதிருப்பது விந்தையே.

மூன்றாவதாக, அகழ்வாராய்ச்சிக்காக பதினைந்து அங்கத்தவர்களைக்கொண்ட செயலணியொன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமித்துள்ள நிலையில் சுமணரத்தன போன்ற காவியுடைக் காடையர்களுக்கும் அச்செயலணியின் கடமையைச் செய்யும் அதிகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது?

நான்காவதாக இப்போலித் துறவிகளின் அட்டகாசங்கள் ஏன் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் மட்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன?

இவ்வினாக்களுக்கு விடைகாண்கையில் இவர்கள் ராஜபக்ச ஆட்சியின் காவலர்களாகச் செயற்படுவதை உணர முடிகின்றது. இதை விளக்குவதே இக்கட்டுரை.

2009இல் போர் முடிந்தபின் சிங்கள இனவாதம் பௌத்த பேராதிக்கவாதமாக மாறத் தொடங்கிற்று. தமிழரைத் தோற்கடித்து விட்டோம் என்ற வீராசேவசத்தோடு முஸ்லிம் இனத்தையும் நசுக்கி அடிமைகளாக்கிவிட்டால் நூறுவீத பௌத்த அரசை இலங்கையில் அமைத்துவிடலாம் என்ற எண்ணம் பேராதிக்கவாதிகளின் மனதில் அன்றிலிருந்தே துளிர்விடத் தொடங்கிற்று. அதற்கான விதை சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்தே நாட்டப்பட்டதை வரலாறு கூறும். அனால் அந்த விதை துளிர்விட்டு விருட்சமாய் வளர்வதற்கு ஜனநாயக ஆட்சிமுறை ஒரு தடையாக அமையலாம் என்பதையும் பேராதிக்கவாதிகள் உணர்ந்தனர். ஒரு முறை வென்றுவிட்டால் அந்த வெற்றியை அரசியல் யாப்பு மாற்றங்களைக் கொண்டு நிரந்தரமாக்கி விடலாம் என்பது இவர்களின் தந்திரம். அந்த இலக்கை வைத்துத்தான் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் அயராது பாடுபட்டு ராஜபக்ச வமிசத்தினரை ஆட்சிபீடத்தில் ஏற்றினர்.

இப்பேராதிக்கவாதத்தின் பலமுள்ள ஒரு தூணாகச் செயற்படுபவர்களே கடும்போக்குள்ள பௌத்த துறவிகள். அவர்களுள் மேற்கூறிய காவியுடையார்களும் அடங்குவர். ஆனால் மொத்த பௌத்த துறவிகளும் கடும்போக்காளர்களல்ல என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். பௌத்த தர்மத்தின் உண்மையான மானிடத்தை அவர்களும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் போதிக்கும் இக்கௌரவ துறவிகளுக்கும் அரசியல் களத்திலிறங்கிக் கூத்தாடும் கடும்போக்காளர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இத்தூயவர்கன் கடும்போக்குடைய தமது சகாக்களைப் பற்றிய கருத்துக்களையும் ஏன் கண்டனங்களையுங்கூட வெளிப்படையாகக் கூறாதிருப்பது பௌத்த சங்கத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என்ற நல்லெண்ணத்தினாலேயே.

இருந்தும், இன்றைய ஆட்சியினர் பேராதிக்கவாதத் துறவிகளின் ஆதரவால் ஆட்சிபீடம் ஏறியதால் அத்துறவிகளின் கைப்பிடிக்குட் பலமகச் சிக்கியுள்ளனர். இத்துறவிகளுக்குப் பின்னால் பௌத்த முதலாளி வர்க்கமொன்றும் அதன் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றது என்பதையும் மறக்கலாகாது. அதனைப் பற்றிய விரிவான விளக்கம் இப்போது அவசியமில்லை.

பௌத்த பேராதிக்க வாதத்தின் தலையாய நோக்கம் இலங்கை ஒரு தேரவாத பௌத்த அரசாக மாறவேண்டும் என்பதே. 1972 தொடக்கம் இன்றுவரை வரையப்பட்ட இலங்கையின் சகல அரசியல் யாப்புகளிலும் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டிருப்பது இப்பேராதிக்கவாதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதற்கும் ஒரு படி மேலே சென்று நாட்டின் சட்டதிட்டங்கள் யாவும் தேரவாத பௌத்தத்தின் போதனைகளின் அடிப்படையில் அமைந்து சகல துறைகளையும் சிங்கள பௌத்தர்களே கட்டியாள வேண்டும் என்பதே அவர்களின் அந்தரங்க நோக்கம். ஒரே நாடு ஒரே சட்டம் என்று அவர்கள் கூறுவதன் பொருளும் இதுதான். அதனைச் செயற்படுத்துவதற்காகவேதான் இன்று நாடாளுமன்றத்தில் யாப்புத் திருத்தம் பற்றி நடைபெறும் அத்தனை போராட்டங்களும். ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியின் நிலைக்கு உயர்த்தி, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையையும் அதன் பிரதம மந்திரியையும் முறையே ஓர் அஞ்சலகமாகவும் அஞ்சல் சேவகனாகவும் மாற்றி, “செய், செய்யாதே”, என்றவாறு கட்டளை அடிப்படையில் நாட்டை ஆள்வதற்காகவே இந்த அரசியல் திருத்தப் போராட்டம் நடைபெறுகின்றது.

இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு அதிபிரதான தேவை ஜனாதிபதியாய் வீற்றிருப்பவர் நூறுவீதம் பௌத்த ஆதிக்கத்தில் நம்பிக்கையுடையவராய் இருக்கவேண்டும். பேராதிக்கவாதிகளின் பார்வையில் கோத்தாபய ராஜபக்ச அந்தத் தகுதியைப் பெற்றுள்ளார். உதாரணமாக, மகாவம்சத்தின் கதாநாயகன் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்ததுபோன்று விடுதலைப் புலிகளின் தமிழ்ப் படையை இவர் தோற்கடித்து பௌத்த சிங்களவரின் வீரத்தை நிலைநாட்டியுள்ளார். இரண்டாவதாக, பௌத்த சாசனத்தின் பாதுகாவலராக இவர் செயற்படுகிறார். மூன்றாவதாக, இடைக்கிடையே தவறாது பௌத்த சங்கத்தினரை அவரின் உத்தியோகத் தலத்துக்கு அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கிறார். நான்காவதாக, மண்ணுக்குட் புதைந்துகிடக்கும் பௌத்த புராதனச் சின்னங்களைத் தோண்டியெடுத்து அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நூறுவீதம் பௌத்தர்களைக் கொண்ட ஒரு செயலணியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே, இவரைவிடவும் ஒரு செயற்றிறன்கொண்ட பௌத்தரை பேராதிக்கவாதிகளால் தேடமுடியவில்லை. எனவே கடும்போக்குத் துறவிகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே கோத்தாபயவும் அவருடைய ராஜபக்கச வமிசமும். ஆகவேதான் இந்த ஆட்சியின் காவலர்களாக கடும்போக்குத் துறவிகள் செயற்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில் சுமணரத்தன, ஞானசார போன்ற காவியுடையாரின் செயல்களை மீண்டும் ஒரு முறை நோக்குவோம். தமிழரும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களாக மற்றவேண்டுமென்பது சிங்களத் தலைமைத்துவத்தின் நீண்டகாலக் கனவு. சுதந்திரம் கிடைத்ததன்பின் அது படிப்படியாக நனவாகிக் கொண்டும் வந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சுமார் கால் நூற்றாண்டாக அந்த வளர்ச்சிக்குத் தடைபோட்டதும் உண்மை. ஆனால் போர் முடிந்ததன்பின் மீண்டும் அக்கனவு ஒரு புதிய வேகத்துடன் நனவாகின்றது. இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம். ஏனையோர் வாடகைக் குடிகள் என்று ஞானசார போன்ற காவியுடையினர் கதறுவதையும், நாட்டின் எந்தப் பகுதியும் எந்த ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று மகிந்த ராஜபக்ச அடிக்கடி மேடைகளில் முழங்குவதையும் சிந்தித்துப் பார்த்தால் அவற்றின் அந்தரங்கத்தில் கிழக்கையும் வடக்கையும் நாங்கள் முற்றுகையிட்டே தீர்வோம் என்பதுபோல் இல்லையா?

பல்லின மக்கள் வாழும் ஏந்தவொரு நாட்டிலும் மக்கள் பல காரணங்களுக்காக இடம்விட்டு இடம் நகர்வதும் அவ்வாறு நகரும்போது சில இடங்களின் இன அடர்த்தி காலப்போக்கில் மற்றமடைவதும் இயல்பு. ஆனால் ஆட்சியாளரே திட்டமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் சகல பாகங்களிலும் பெரும்பான்மையக மாற்ற முனைவது மற்ற இனங்களின் இன ஒழிப்புக்குச் சமனானது.

இதனாலேதான் ஏற்கனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தமிழருடன் அதிகாரப் பகிர்வல்ல, பொருளாதார வளர்ச்சியே என்ற ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐந்து பௌத்த துறவிகளை உள்ளடக்கிய பதினைந்து பௌத்தர்களைக் கொண்ட தொல்லியல் செயலணியொன்றை கிழக்கிலே நிறுவி இந்த இனமாற்றக் கனவுக்கு ஓர் உத்வேகத்தை வழங்கியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

இதுவரை இந்தச் செயலணியின் நடவடிக்கைகளால் நடைபெற்ற மூன்று சம்பவங்கள் கிழக்கின் இனக் கொந்தளிப்புக்கு வழிவகுப்பதை உறுதிப்படுத்துகின்றன. முதலாவது, அவசர அவசரமாக இச்செயலணியினர் பொத்துவிலில் மேற்கொண்ட அத்துமீறல்கள் அங்குவாழ் முஸ்லிம் குடியானவர்களை வீதி இறங்கிப் போராட வைத்தன. அதன்பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேசத்தில் திரியாய் என்னும் இடத்தில் தமிழ் விவசாயிகள் தமக்குச் சொந்தமான நிலங்களுக்குச் சென்று விவசாய வேலைகளை ஆரம்பிக்க முயன்றபோது, செயலணியைச் சோந்த துறவியொருவர் அந்நிலம் அகழ்வாராய்ச்சிக்காகக் குறிவைக்கப்பட்டுள்ளதால் அதற்குள் யாரும் பிரவேசிக்கக் கூடாதென்றும் பிரவேசித்தால் சிறையில் அடைக்கப்படுவரென்றும் அச்சுறுத்தி அவ்விவசாயிகளைத் தடுத்துவிட்டார். கடைசியாக, மட்டக்களப்பில் சுமணரத்தனவின் ஆரம்பத்தில் கூறப்பட்ட அட்டகாசம். இவருக்கெதிராக நீதிமன்றம் பிடியாணையொன்றை அனுப்பி இருந்தாலும், ராஜபக்ச ஆட்சி, காவாலிகளாயினும் காவியுடை போர்த்தியோருக்கெதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை. ஏனனில் அவர்களே ஆட்சியினரதும் அவ்வாட்சி வம்சத்தினதும் காவலர்கள்.

இவ்வாறான செயல்களால் இனவாதம் வளர்க்கப்பட்டு அது மதவாதமாகவும் மாறி உள்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கப்போவது திண்ணம். இதற்கு மத்தியில் கொள்ளை நோயின் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடிகள் முற்றுவதையும் தடுக்க முடியாது. எதிர் வரப்போகும் அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கை இந்த நெருக்கடியைத் நிச்சயம் தெளிவுபடுத்தும். இனக்கொந்தளிப்பும் பொருளாதாரச் சீரழிவும் இணையும்போது அது அரசாங்கத்தின்மேல் மக்களின் அதிருப்தியைப் பெருக்குமே ஒழிய தணிக்காது. அவ்வாறு பொருளாதார அடிப்படையில் எழுகின்ற பொதுமக்களின் சீற்றத்தை இனவாதச் சீற்றமாகத் திசைதிருப்ப கிழக்கிலே இயங்கும் செயலணியும் அதற்கு ஆதரவாகச் செயற்படும் காவியுடை சுமணரத்தனாக்களும் ராஜபக்சாக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + fifteen =

*