;
Athirady Tamil News

சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த பேச்சுவார்த்தையும்!! (கட்டுரை)

0

சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450 கோடிடொலர்களை அடுத்த வருடம் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தக் கடனுதவிப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

சீனாவின் நிதிநிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கையின் நிதி அமைச்சு கேட்டுக்கொண்ட சலுகை அடிப்படையிலான 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவாhர்த்தை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சீனத் தூதரகம் ஞாயிறன்று டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை செய்திருந்தது. இந்தக் கடனுதவி பெய்ஜிங் நிர்வாகத்தில் ஒரு உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரியான யாங் யீச்சி தலைமையிலான சீனத்தூதுக்குழு கொழும்பு வந்;து சென்ற பிறகு அறிவிக்கப்பட்ட இலங்கைக்கான பெய்ஜிங்கின் 9 கோடி டொலர்கள் நன்கொடைக்கு மேலதிகமானதாகும்.

இந்தப் புதிய கடனுதவி அங்கீகரிக்கப்படுமாகவிருந்தால் இவ் வருடம் சீனாவிடமிருந்து இலங்கை பெற்றிருக்கக்கூடிய மொத்த கடன்கள் 100 கோடி டொலர்களுக்கும் அதிகமானமதாகும். கொவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று நோயின் விளைவான பொருளாதாரத் தாக்கங்களை இலங்கை சமாளிப்பதற்கு உதவியாகக் கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பெய்ஜிங் 50 கோடி டொலர்கள் அவசர நிதியுதவியை வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடுமையாக குவிந்திருக்கும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகள் குறித்த இலங்கை ஆராய்ந்து வருகின்ற நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர்கள் நாணய உடன்படிக்கை , பங்குச் சந்தையில் பெருமளவு முதலீடுகள், சீனாவின் பல கடன்வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 70 கோடி டொலர்கள் கடனுதவி உட்பட சகலவிதமான தெரிவுகளையம் இலங்கை ஆராய்ந்து வருவதாக பணம் , மூலதனச்சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடன் முடக்கம்

கடன் முடக்கம் ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பது குறித்து பரிசீலிப்பதாக கொழும்பு முன்னதாக அறிகுறிகளைக் காட்டியிருந்த போதிலும் கூட சீனாவிலிருந்து வந்த அதிகாரிகளுடன் கடன்முடக்கச் சாத்தியங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆராயவில்லை என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் ‘த இந்துவிற்கு’ கூறின. “ சீனாவிடமிருந்து வெறுமனே கடன்களை பெறுவது பற்றியல்ல. முதலீட்டுச் சாத்தியங்கள் குறித்தே இப்போது கவனஞ்செலுத்தப்படுகிறது” என்று உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின. நாடுகளினதும் நிறுவனங்களினதும் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் குறித்து மதிப்பிடும் (அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட) மூடிஸ் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இரண்டு படிநிலையினால் கீழிறங்கி இருப்பதாகவும் இலங்கை மிகவும் கடுமையான கடன் ஆபத்தைக் கொண்ட நாடுகள் வரிசையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

கடந்த பெப்ரவரியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கான தனது விஜயத்தின் போது கடன்களை மீள செலுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கைக் கையாளுவதற்கு உதவியாகக் கடனை மீளச் செலுத்த வேண்டிய தவணையை நீடிக்குமாறு இந்தியாவிடம் கேட்டிருந்தார். பிரதமர் ராஜபக்ஷவின் இந்த வேண்டுகோளையும் முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த 100 கோடி டொலர்கள் நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கான வேண்டுகோளையும் உத்தியோகபூர்வ மட்டத்தில் ஆராய்ந்து வருவதாக செப்டெம்பர் 26 பிரதமர் ராஜபக்ஷவுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இணையவழி உச்சி மகாநாட்டைத் தொடர்ந்து இந்தியா கூறியது. பௌத்த கலாசார பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக ஒரு கோடியே 50 இலட்சம் டொலர்கள் நன்கொடையை வழங்கவும் இந்தியா முன்வந்தது.

புவிசார் அரசியல் களம்

அதேவேளை, இம்மாத பிற்பகுதியில் இன்னொரு உயர்மட்ட விஜயத்திற்காக இலங்கை தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது. இது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தில் வல்லாதிக்க நாடுகளுக்கு இருக்கும் புவிசார் அரசியல் அக்கறைகள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதை உணர்த்தி நிற்;கிறது. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருவாரென்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு கூறியிருந்தார். உத்தியோகபூர்வ விஜயம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் ‘த இந்துவிற்கு’ கூறிய அதேவேளை, பொம்பியோ அக்டோபர் 27 ஆம் திகதி கொழும்பு வருவது சாத்தியமென்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் இந்தியாவுக்கு வருவாரென்றும் வட்டாரங்கள் கூறின.

கடந்த வருடம் இலங்கைக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த தனது விஜயத்தை பொம்பியோ இரத்து செய்த பிறகு இப்போது இலங்கைக்கு வருகின்றமை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கப்படுகிறது. கடந்த வருடம் ஜூனில் பொம்பியோவின் வெளிநாட்டு விஜயங்களின் கால அட்டவணையில் முரண்பாடுகள் இருந்த காரணத்தினாலேயே அவரால் அப்போது இலங்கைக்கு வர முடியவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் காரணம் கூறிய போதிலும் அந்த நேரத்தில் அமெரிக்காவுடனான உத்தேச வருகைப் படைகள் உடன்படிக்கைக்கு (ஏளைவைiபெ குழசஉநள யுபசநநஅநவெ ஏகுயு ) கணிசமான எதிர்ப்பு இலங்கைக்குள் கிளம்பியிருந்த நிலையில் அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. முன்னைய அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 48 கோடி நன்கொடைக்கான மிலேனியம் செலன்ஞ் கோப்ரேஷன் உடன்படிக்கையையும் ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்த்திருக்கிறது.

மேலும், இம்மாத இறுதியில் இலங்கைக்கு பொம்பியோ வருகிறார் என்றால் டோக்கியோவில் கடந்த வாரம் நடைபெற்ற ( அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ) ‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்கள் மகாநாட்டுக்குப் பிறகு சில வாரங்கள் கழித்து அவரது கொழும்பு விஜயம் அமைவதாக இருக்கும். பெய்ஜிங்குடனான ராஜபக்ஷ நிர்வாகத்தின் செயற்பாடுகளை பல்வேறு காரணங்களுக்காக குவாட்டின் உறுப்பு நாடுகள் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கின்றன.

ஜப்பானின் உதவியுடனான 150 கோடி டொலர்கள் செலவிவான இலகு ரயில் திட்டத்தை சுற்றாடல் மாசடைதல் மற்றும் ஏற்படக்கூடிய அதிக செலவு ஆகியவற்றைக் காரணங்காட்டி இலங்கை கடந்த மாதம் இரத்து செய்தது. மேலும், இலங்கையுடன் சேர்ந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணங்கிக் கொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டமும் தேசிய சொத்துக்களில் வெளிநாட்டு ஈடுபாட்டைத் தொழிலாளர்கள் எதிர்த்ததால் பிரச்சினைக்குள்ளாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 5 =

*