;
Athirady Tamil News

உள்ளங்கைப் புண்ணுக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை செய்ததன் விளைவே இலங்கையும் இந்துமகா சமுத்திரப் பிராந்தியமும் அமைதியிழக்கக் காரணம்; சுரேஷ்!! (கட்டுரை)

0

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் இலங்கைத் தீவிலும் இந்துமகா சமுத்திர பிராந்தியத்திலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை நியாயமாகவும் தர்மத்தின் அடிப்படையிலும் கையாண்டிருந்தால் நாடு இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்காது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

“இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்பது இப்பொழுது பாரிய விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் நாடு அல்லோல கல்லோலப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், இருபத்தியொருபேர் கொண்ட சீன உயர்மட்டக் குழுவினரின் வருகையும் இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக்பொம்பியோ வரவிருப்பதும் இதற்கு முன்னர் இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான காணொளித் தொடர்பாடல் மூலமான பேச்சுவார்த்தைகளும் ஊடகங்களில் பலத்த சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றது.

மாறிமாறிவந்த இலங்கை அரசாங்கங்களின் தமிழர் விரோத உள்நாட்டுக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு உதவிகளும் இலங்கையை ஏற்கனவே பொருளாதார ரீதியாக படுபாதாளத்தில் தள்ளியிருக்கின்றது. ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஒரே நாட்டிற்குள் அவர்களுக்கான ஒரு சுயாட்சியைக் கொடுப்பதனூடாக இலகுவாகத் தீரத்திருக்க முடியும். ஆனால் மாறாக, தமிழினத்தை அழித்தொழிக்கக்கூடிய ஒரு பாரிய யுத்தத்திற்கு மூலகாரண கர்த்தாக்களாக அரசாங்கமே இருந்து வந்திருக்கின்றது. இந்த யுத்தத்தை நடாத்துவதற்கு சர்வதேச ரீதியாக இவர்கள் பெற்ற கடனும் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார வங்குரோத்து நிலைமைகளும் பிரத்தியேகமாக, அமெரிக்க வல்லாதிக்கத்தின் பிடியிலிருந்து உலகை மீட்டு, தனது வல்லாதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான சீனாவின் ‘பட்டுப்பாதை’த் திட்டத்திற்கும் ‘ஒரேசாலை ஒரே பெல்ட்’ -‘ஒன்ரோட் ஒன் பெல்ட்’ என்னும் சீனாவின் எண்ணத்தை ஈடேற்றுவதற்கும் இலங்கையை நிர்ப்பந்தித்துள்ளது.

இதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை துறைமுகமும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களும், துறைமுக நகரத்தின் ஒருபகுதியும் சீன அரசாங்கத்திற்கு தொண்ணூற்றொன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியின்மைக்கும் நிரந்தரமாகவே வழிகோலியிருக்கின்றது. ஆனால், இலங்கையினுடைய அரச தலைவர்களும் அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களின் பேச்சாளர்களும் சீனாவுடனான உறவு வெறும் பொருளாதார உறவுகளே அன்றி, பாதுகாப்பு அல்லது இராணுவ ரீதியான உறவுகளல்ல என்று சொல்ல முயற்சிக்கின்றார்கள்.

இந்தியா நூற்றுமுப்பதுகோடி மக்களைக் கொண்ட எமது அண்டை நாடு ஆகும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் அக்கறைகொண்டு செயற்பட்டுவரும் ஒரு நட்பு நாடாகும். இந்திய அரசாங்கம் தமது நாட்டின் பாதுகாப்பின்மீது அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதுடன் தனது தென்பகுதியிலிருந்து தனது பாதுகாப்பிற்கு எத்தகைய குந்தகமும் ஏற்படக்கூடாது என்றும் எதிர்பார்க்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்தியா தனது சகோதரநாடு என்று கூறிக்கொண்டாலும்கூட, சீனா அண்மைக்காலமாக இலங்கைக்குள் செலுத்தும் செல்வாக்கானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ என்ற ஐயுணர்வு இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை விரும்பும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை இலங்கை வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

இலங்கை என்பது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாகும். அந்தத்தீவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை சீன அரசாங்கத்திற்கு தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பதென்பதும் இதனால் அண்டை நாடுகளுக்கு ஆபத்தில்லை எனக் குறிப்பிடுவதும் சிறுபிள்ளைத்தனமானது. சீன அரசாங்கமானது தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆபிரிக்க ஆசிய நாடுகளில் பல நாடுகளை தனது கடன் பொறிக்குள் வீழ்த்தியிருக்கின்றது. இலங்கையும் அவ்வாறே கடன்பொறிக்குள் வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தமான விடயம். ஆனால், இதனை உணர்ந்துகொள்ளாமல் சீனாவிடம் மேலும் மேலும் கடனைப் பெற்றுக்கொள்ள முயல்வதும் நாங்கள் கடன்பொறிக்குள் விழவில்லை என்று நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வதானது “குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்னும் பழமொழியை நினைவூட்டுவதாக அமைகிறது.

இலங்கையினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் அரச பேச்சாளர்களும் இலங்கை அணிசேராக் கொள்கையைக் கொண்டிருப்பதாகவும் தாங்கள் சகல நாடுகளுடனும் சம உறவுகளைப் பேணுவதாகவும் சொல்லிக்கொண்டாலும்கூட, அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் சீன சார்பாகவே அமைந்திருக்கின்றது என்பது உலக நாடுகளுக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்த சூழலானது இலங்கையை வல்லாதிக்க சக்திகளின் கால்பந்து மைதானமாக மாற்றியுள்ளது.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அந்த தேசிய இனத்திற்கு எதிராக ஒரு பாரிய யுத்தத்தை நடாத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் கொலை செய்து, பல்லாயிரம் கோடி சொத்திழப்புக்களை உருவாக்கி, இன்று பொருளாதார வங்குரோத்திற்குச் சென்று, சர்வதேச நாடுகளின் விளையாட்டுக் களமாகத் தன்னை மாற்றி செயற்படுவதானது “உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு களிம்பு பூசி ஆற்றுவதை விடுத்து, இதயத்தில் சத்திர சிகிச்சை” மேற்கொண்டதன் விளைவாகும்.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை ஒன்றுபட்ட இலங்கைத் தீவிற்குள் தீர்ப்பதற்கு ஒரு சமஷ்டி அமைப்பினூடாக அதனைச் சாத்தியமாக்கலாம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கூறும்போது அது இலங்கையின் இறையாண்மைக்கு பேராபத்தாக அமைந்துவிடும் என்று குரல் கொடுக்கும் சிங்கள தரப்புக்கள் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை தொண்ணூற்றொன்பது வருட குத்தகைக்கு விடுவதும் விலைபேசி விற்பதும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகாதா என்பதை சிங்கள பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − ten =

*