;
Athirady Tamil News

முஸ்லிம்களை விற்றுப் பிழைத்தல் !! (கட்டுரை)

0

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், இரு பௌத்த உயர்பீடங்களின் எதிர்ப்பறிக்கை, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, ஆளும் தரப்பின் உள்ளக முரண்பாடுகள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியாத சிக்கல் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கின்றது.

கடந்த 22ஆம் திகதி, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்தன. 148 எம்.பிக்களின் வாக்குகளையே பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் ஆளும் தரப்பு இருந்த போதிலும், எதிர்த்தரப்பின் எட்டு எம்.பிக்கள் ஆதரவளித்ததன் காரணமாக, அரசாங்கத்தின் அங்கலாய்ப்பு, அமோகமாக நிறைவேறி இருக்கின்றது.

தற்போது 223 எம்.பிக்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சூழலில், 19ஆவது திருத்தத்தை முன்னின்று கொண்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மறுபுறத்தில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் டயானா கமகேயும் எதிரணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சி எம்.பிக்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், ஷாபி ரஹீம், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், அ. அரவிந்த்குமார், இர்ஷாக் ரஹ்மான் ஆகியோர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் சில விடயங்கள், பட்டவர்த்தனமாகி உள்ளன. அதாவது, கடந்த தேர்தலில், சிறுபான்மை மக்களின் குறிப்பாக, முஸ்லிம்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்ற தோரணையிலேயே பொதுஜன பெரமுன கட்சி செயற்பட்டது. தனிச் சிங்கள ஆட்சியை நிறுவப் போவதாகப் பிரசாரம் செய்தது. ஓரளவுக்கு அதைச் செய்தும் காட்டியது. அதன்பிறகும், “முஸ்லிம் கட்சிகளுடன் கைகோர்க்கும் எண்ணம், ‘மொட்டு’க்குக் கிடையாது” என்றே, ஆளும் தரப்பினர் கூறிவந்தனர்.

ஆனால், ஆறு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வெற்றி, உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப் பார்த்தால், 69 இலட்சம் வாக்குகளுடன் சிங்களப் பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை, சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானித்திருக்கின்றன.

இவ்வாறு, முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவளித்தமை, இரண்டு கோணங்களில் பார்க்கப்படுகின்றது. “இந்த ஆட்சியில் நம்பிக்கை வைத்து, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போதுதான், சரியான பாதைக்கு வந்திருக்கின்றார்கள்” என்று, ராஜபக்‌ஷ ஆதரவு முஸ்லிம் கட்சிகளும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.

மறுபக்கத்தில், 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்த போது இருந்த நிலைப்பாட்டை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், தலைகீழாக மாற்றிக் கொண்டு உள்ளமையானது, அதிகபட்ச அதிகாரமுள்ள ஆட்சிக்குத் துணைபோவது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகம் வழங்கிய ஆணைக்கு மாறுசெய்வதும் ஆகும்.

இதன்மூலம், முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுவதற்கு ஆறு எம்.பிக்களும் வழிவகுத்துள்ளனர் என்ற கருத்து, கடுந்தொனியில் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது.

முஸ்லிம்களில் கணிசமானோர், இத்தீர்மானம் சரியென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றனர். இச்சூழலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் விலைபோய்விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்லிம் கட்சிகள், அர்த்தமற்றதும் தளம்பலானதுமான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு, வெளியில் இருந்து முஸ்லிம் எம்.பிக்கள் மீது சொல்லப்படுகின்ற அரசியல் விமர்சனங்கள், சில நாள்களில் ஓய்ந்து விடலாம். முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் சிலவற்றுக்கு விளக்கமளிக்கலாம், பலதைக் கண்டும் காணாமல் விட்டுவிடலாம். துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறுதான் தமக்கெதிரான விமர்சனங்களை, எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் காலாகாலமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை, முஸ்லிம் சமூகத்தை வைத்து, அரசியல் பிழைப்பு நடத்துவதும் சிங்கள தேசியத்துக்கு எதிரான கேடயமாகப் பயன்படுத்துவதும் தமக்குத் தேவை என்று வருகின்ற வேளையில், தமது சொந்த இலாபங்களின் அடிப்படையில் ‘பல்டி’ அடிப்பதுமே பிரச்சினையாகும்.

இதைத்தான் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தல் என்று கூறப்படுகின்றது. இது, காலாகாலமாக இடம்பெற்றுக் கொண்டு வருவதையும், இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதின், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு நாளன்று சபைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ரிஷாட்டின் கைது தொடர்பாக, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒருவிதமான மனக் கிலேசமும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியும் ஏற்பட்டிருந்த சமயத்திலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியூதீனும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகவே வாக்களித்தனர். ரிஷாட்டோடு சேர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஸாரப் எதிராக வாக்களித்திருந்தார். மற்றைய இருவரும் ஆதரவளித்திருந்தனர். இருப்பினும் முஸாரப், இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இதேசமயம், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிர்த்து வாக்களித்தார். அவருடன் சேர்ந்து 20 இற்கு எதிராக, அக்கட்சியின் ஓர் உறுப்பினர் கூட வாக்களிக்கவில்லை. ‘20 வேண்டாம்’ என்ற சிகப்பு கைப்பட்டியுடன் சபைக்கு வந்திருந்த எம்.எஸ்.தௌபீக் எம்.பி உட்பட, நான்கு உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர். இது, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நஸீர் எம்.பியிடம், 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து, நையாண்டி செய்ததையும் காண முடிந்தது.

அரசியலில் எல்லாக் காலத்திலும், ஒரே விதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை. 1978ஆம் ஆண்டு, ஜே.ஆர் ஜெயவர்தன இரண்டாம் குடியரசு யாப்பைக் கொண்டு வந்தது முதற்கொண்டு, அதை எதிர்த்துவந்த சுதந்திரக் கட்சிக்காரர்கள்தான், இன்று ஆளும் தரப்பில் இருந்துகொண்டு, ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்க வழிகோலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தனர்.

நிறைவேற்றதிகாரத்தை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியினரே, 2015இல் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்னின்றனர்.

அந்தவகையில், முஸ்லிம் கட்சிகளினதோ சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினதோ நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்; ஏதாவது, சுய ‘பேரங்களின்’ அடிப்படையில், பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆதரவளித்திருக்கலாம். அன்றேல், முஸ்லிம் கட்சிகள், ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களுடன் முரண்பட்டுச் செயற்படுவது, நல்லதல்ல என்ற நியாயமான காரணத்தின் அடிப்படையில், ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

ஆயினும், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் ஒரு கட்சியாக, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காமையும் தலைவர்கள் ஒருபுறமும் எம்.பிக்கள் மறுபுறமும் நின்றமையும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

கட்சிகளின் கட்டுக்கோப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கின்றது. அவர்கள் தரப்பில், என்னதான் விளக்கமளிக்கப்பட்டாலும் கூட, இதுவொரு நாடாக பாணியில் திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பதே நிதர்சனமாகும்.

20ஆவது திருத்தச் சட்டமூலமானது முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பையும் கொண்டு வரவில்லை. இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும், ஒரேவகையான தாக்கத்தையே உண்டுபண்ணும். இவ்வாறான காரணங்களால், அதை ஆதரிக்கலாம்.

அதேபோன்று, இத்திருத்தமானது மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைப் பலப்படுத்தும் என்ற அடிப்படையிலும் ஏற்கெனவே, 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தன என்ற அடிப்படையிலும் 20 இனை எதிர்த்திருக்கலாம். ஆனால், இங்குள்ள பிரச்சினை அதுவல்ல; மாறாக, இதில் முஸ்லிம் சமூகம் பகடைக்காயாக ஆக்கப்பட்டமை ஆகும்.

2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பிரசாரத்தைச் செய்தன. அவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காட்டி, சிங்கள வாக்குகளைப் பெற்றது போல, இவர்கள், ராஜபக்‌ஷர்களைச் சர்வாதிகாரிகள் போல விமர்சித்தே, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றனர்.

இதனாலும், பொதுஜன பெரமுனவின் பிரசாரங்களாலும் சிங்கள மக்கள், முஸ்லிம் சமூகத்தை வெறுப்புடன் பார்க்கும் நிலை தோன்றியது. சிங்கள மக்களை, முஸ்லிம்களும் வித்தியாசமாகப் பார்த்தனர். இவ்வாறு, சிங்கள – முஸ்லிம் மக்களுக்கு இடையில், முரண்பாட்டை ஏற்படுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மு.கா, ம.கா, எம்.பிக்கள், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமையே, இங்கு பிரச்சினைக்குரிய விடயமாகும்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தமையை நியாயப்படுத்த முடியும். ஆனால், மக்களிடையே இனவாத உரைகளை நிகழ்த்தி, மக்களை ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, இன்று மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதை சம்பந்தப்பட்ட முஸ்லிம் எம்.பிக்களும் கட்சிகளும் நியாயப்படுத்தவே முடியாது. இதைவிட, ராஜபக்‌ஷர்களும் அவர்களுக்கு நேரடியாக ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வளவோ மேல்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 20 =

*