;
Athirady Tamil News

கிழக்கிலங்கை மக்களின் அரசியல் நகர்வும் 13 வது திருத்தமும்!! (கட்டுரை)

0

இக்கட்டுரை பிரசுரிக்கப்படும் போது பல சர்ச்சைகளுக்கு பின்னரான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றருக்கும். இந்த நிகழ்வானது தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நகர்வில் மிக முக்கிய தருணமாகவே பார்க்கப்படுகின்றது. இருப்பினும் இக்கட்சியின் இப்பாய்ச்சலினை வெறும் கட்சி அரசியலுடன் மாத்திரம் வரம்பிடமுடியாது கிழக்கிலங்கை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி தாம், தமது தனித்துவத்தை நாங்களே வடிவமைத்துக் கொள்கின்றோம் என்பதை தமிழ் தேசியத்திற்கும் பலமாக வலியுத்தியுள்ளனர்.

இப்பின்னணியில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளாவான வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றது மட்டுமின்றி, அதன் தலைவர் சிறையில் இருந்தவாறே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதிகளை புறந்தள்ளி மாற்றீடான அரசியல் தலமையாக தன்னையும் தன் கட்சியையும் அடையாளப்படுத்திய பெருமை இக்கட்சியின் தலமையையே சாரும்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் இவர்களால் இயற்றப்பட்ட நியதிச் சட்டங்களின் ஊடாக மாகாண சபையினை செயற்திறன் மிக்க அரசியல் இயந்திரமாக செயற்படுத்திக் காட்டியமையும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதக நிலையை நடைமுறையில் வெளிக்கொணர்ந்தமை அபிவிருத்தி உள்ளிட்ட பல காரணிகளை வரிசைப்படுத்த முடியும்.

2007 ஆம் ஆண்டு காலப் பகுதில் அன்றைய அரசுடன் இணக்க அரசியலை முன்னெடுக்க முடியும் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இவ் அரசியல் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகளை ஓர் அரசியல்கட்சியாக பதிவு செய்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் போது பலமாக எதிர்த்த பலர், இது வீண்முயற்சி ஒரு காலமும் தமிழ் மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் தேவைக்கு உருவாக்கப்பட்டும் கட்சியாகவே அமையும், அதன் எதிர்காலம் மிகமோசமாக அமையும் என வாதிட்டபோது, அவர் இது உண்மையாக இருப்பது போல் இருப்பினும் இன்னும் 10 வருடங்களுக்கு பின்னர் எங்கள் அரசியல் சித்தாந்தத்தை மக்கள் ஏற்பார்கள். எங்கள் கட்சியின் பின்னால் அணிதிரள்வார்கள் என்று கூறிய தீர்கதரிசனமான அவரின் அரசியல் எதிர்வுகூறல் மிகச்சரியாக இன்று அமைந்துள்ளதன் மூலம் தலைவரின் வழிகாட்டலில் கீழ் கட்சி பயணித்துள்ள யதார்த்தத்தை புரிந்துகொள்ளச் செய்கின்றது.

கிழக்கு மக்களின் இவ் அரசியல் நிலைப்பாடானது மிக நிதானமான முறையில் நகர்த்தப்பட்ட அரசியல் நகர்வு. எந்தவித அழுத்தங்களின் மூலமாகவோ அதிகாரத்தின் மூலமாகவோ ஒர் இரவில் மாறவில்லை என்பது நிதர்சனமாகும். இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக அல்லது தீர்வினை நோக்கிய நகர்வாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இவரும் கட்சியும் செயற்பட்டார்கள்.

அவ்வேளையில் வல்லரசுகளின் ஆதரவுடன் நிறைவடையப்போகும் நிலையில் இருந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் வாழ்வியல் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பதனையும் பேரம் பேசும் சக்தியற்ற நிலையில் தமிழர்களுக்கு பேசுபொருளாக வைக்ககூடிய தீர்வுப் பொதியாக மேற்படி 13வது திருத்தமும் இந்தியாவும் மட்டுமே எஞ்சும் என்பதைனையும், இந்தியாவை மீறி எமக்கு எதுவும் கிடைக்க பூகோள அரசியல் சந்தர்ப்பம் வழங்காது என்பதையும் உணர்ந்தாலேயே தனது மரணத்திற்கு இரு நாட்களுக்கு முன்னரும் வழங்கிய நேர்காணலிலும் இதனை அவர் நேர்த்தியாக கூறினார்.

இன்றைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற மையப் புள்ளியாக மீண்டும் 13வது திருத்தச் சட்டத்தை பெற்றுக்கொள்ளுதல் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய சர்வதேச தரப்புக்களும் முன்நிறுத்தியுள்ளனர். இதனை அண்மையில் மனித உரிமைசெயற்பாட்டாளரான கிருபாகரனும் வெளிப்படுத்தியுள்ளார். கிழக்கிலங்கை மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் 13வது திருத்தத்தை முறையாக அமுல்படுத்துவதே தமக்கு தற்போது தேவையான அரசியல் நகர்வு என்பதை அறிவித்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பினையே சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது பாராளுமன்ற கன்னியுரையில் பதிவு செய்துள்ளார்.

எனவே அன்று ஆட்சி செய்த இன்றைய அரசாங்கமும் அதனைச் சார்ந்தவர்களும் அமரர் குமாரசாமி நந்தகோபனும் அவரது கட்சியும் அரசு மீது வைத்த நம்பிக்கையை நிறைவு செய்வதாக இருந்தால் சட்டத்தினால் பிரிந்திருக்கும் வடகிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரத்தை வழங்குவதே தமிழ் மக்களுக்கும் அவருக்கும் செய்யும் கௌரவமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.