;
Athirady Tamil News

ஹிட்லரின் வல்லாட்சியில் இருந்து கற்றுக்கொள்ளுதல் !! (கட்டுரை)

0

இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான வார்த்தைகளுள் ஒன்றாக ‘ப்ளிட்ஸ்க்றீக்’ (Blitzkrieg) இருந்தது. ஜேர்மன் மொழியில் ‘பிளிட்ஸ்’ (Blitz) என்றால் மின்னல்; ‘க்றீக்’ (Krieg) என்றால் யுத்தம் என்று பொருள். ‘மின்னல் யுத்தம்’ என்பது, ஹிட்லர் தலைமையிலாக நாஸிகளுக்குப் பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த போர்த்தந்திரோபாயம் ஆகும்.

முதலாவது உலக யுத்தத்தில் தோற்று, தனது பொருளாதாரம், நிலம் என்பவற்றைப் பறிகொடுத்திருந்த ஜேர்மனியின் தலையெழுத்து, 1933இல் ஹிட்லரின் நாஸிகளின் ஆட்சியுடன் மாறுகிறது. வெறும் 43.9% வாக்குகளுடன் 1933இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லரின் நாஸிகள், சர்வாதிகாரத்துக்குள் ஜேர்மனியை கொண்டு வருகிறார்கள்.

அந்தச் சர்வாதிகாரம், ஜேர்மனியின் நிலப்பரப்பைப் பெருப்பிக்கும் ஹிட்லரின் பெரும் சாம்ராஜ்யக் கனவை நோக்கி, ஜேர்மனியைத் தள்ளுகிறது. முதலாவது உலகமகா யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ‘வேர்சாய் ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டபோது, அந்த ஒப்பந்தத்திலிருந்த முக்கிய விடயங்களில் ஒன்று, ஜேர்மனி, தன்னுடைய ஆயுதப் படையைப் பெருப்பிக்க முடியாது என்பதாகும்.

ஆனால், ஹிட்லரின் கனவு மெய்யாக வேண்டுமென்றால், பெரும் ஆயுதப்படைகள் தேவை. ஹிட்லரின் ஜேர்மனி, தன்னுடைய ‘வெஹ்ர்மாக்ட்’ (Wehrmacht) என்று அழைக்கப்படும் ஆயுதப்படைகளின் அளவைப் பெருப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. வேர்சாய் ஒப்பந்த மீறலை, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்தன. ஆனால், ஹிட்லர் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

ஹிட்லரின் கனவை நனவாக்கவல்லப் பெரும் விமானப்படையாக ‘லுப்ட்வாஃப’ ((Luftwaffe) நவீன தொழில்நுட்பங்களுடன் உருவானது. தரைப்படையிலும், நவீன தொழில்நுட்பத்தால் வலுவடைந்த ‘பன்ஸர்’ (panzer) எனும் கனரன தாக்குதல் டாங்கி உருவாக்கப்பட்டது. இவற்றின் ஒன்றுதிரட்டிய பலத்தைக் கொண்டு, திட்டமிட்டு எதிரியை முற்றாக அழித்தொழிக்கும் ‘ஃபேனிக்டுங்ஷ்லாக்ட்’ (Vernichtungsschlacht) என்று ஜேர்மனிய மொழியில் சுட்டும் ‘அழித்தொழிக்கும் யுத்தத்தை’ நாஸிகள் முன்னெடுத்தனர்.

இதன் விளைவு, ஒஸ்ட்ரியா, செக்கஸ்லொவாகியா, போலந்து, டென்மார்க், நோர்வே, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கைப்பற்றி, கிட்டத்தட்ட மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி, பெரும் ஜேர்மனிய சாம்ராஜ்ஜியமாகியது.

ஜேர்மன் படைகள், பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கி வந்தபோது, ஜேர்மன் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்துத் தாக்குதல் நடத்தினால், நெதர்லாந்து நகரை அழித்து, நாட்டைக் கைப்பற்றியது போல, தம்முடைய அழகிய பாரிஸ் நகரை அழித்துவிடுவார்களோ என்று எண்ணி, பிரான்ஸ் அரசாங்கம் பாரிஸ் நகரை விட்டு விலகி ஓடியது. நாஸிப்படைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல், பாரிஸ் நகருக்குள் நுழைந்தார்கள்.

இவை எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், ஹிட்லரின் புகழ்பாடுவதற்கல்ல. இங்கு, ஹிட்லரைப் புகழ்கிறவர்கள் இருக்கவும் செய்கிறார்கள். அதற்குக் காரணம், அறியாமையாகத்தான் இருக்க வேண்டும்.

மேற்கத்தையே வரலாறு, இங்கு பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதில்லை. இரண்டாம் உலகமகா யுத்தம் என்ற ஒன்று நடந்தது என்பதைத் தாண்டி, அதைப் பற்றி எதுவும் கூறப்படுவதோ, கற்பிக்கப்படுவதோ அரிதிலும் அரிது. இதன் விளைவாக ஹிட்லரையும் நாஸிகளையும் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமல், ஹிட்லரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினுடையதும் அமெரிக்க மேலாதிக்கத்தினுடையதும் எதிரியாகப் பார்த்து, அதன்வாயிலாக ஹிட்லரை மோகிக்கும் தன்மைகள், இங்கு காணப்படுவதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உலக வல்லரசுகள் ஒன்றிணைந்து, ஹிட்லரை வீழ்த்தியதாக எண்ணுகின்றவர்களும் உண்டு. ஆனால், ஹிட்லரின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைவிட, ஹிட்லர்தான் மிகமுக்கிய காரணகர்த்தா ஆவார்.

வெற்றிகள் தந்த மமதை, ஹிட்லரை யதார்த்தத்திலிருந்து விலகிப்போகச் செய்தது. தன்னுடைய ‘லுப்வாஃப’வினாலும் ‘பன்ஸர்’ டாங்கிகளினாலும் பெரும்படைப் பலத்தாலும் வெல்லமுடியாத போர் ஒன்றில்லை என்று ஹிட்லர் ஆழமாக நம்பினார். தன்னுடைய படைகள் தோற்பதையும் அழிவதையும் அறிந்தபோதும், அந்த யதார்த்தத்தை ஏற்க அவர் மறுத்தார். ‘தூய ஜேர்மனியன் சரணடையாதவன்’ என்று அவர் யோசித்திருக்கலாம். ஹிட்லரின் இனவெறி அவரது பெரும் குறைபாடு.

ஹிட்லரின் நாஸிகள், ‘தூய இனம்’ பற்றிய பிரக்ஞையைக் கொண்டிருந்தனர். தூய ஜேர்மானியர்களை, ஆரியர்களாக வரையறுத்த நாஸிகள், ஏனைய இனங்களோடு கலப்படைவதால், ஆரியத்தின் தூய்மை கெடுகிறது என்றார்கள். தாம், ‘ஆரியர்’ அல்லாதோர் என்று கருதியவர்களை, ‘உன்டமென்ஷ்’ (untermensch) என்று அழைத்தார்கள்.அதாவது, தாழ்ந்த மனிதர்கள் என்று பொருள். யூதர்கள், றொமேனிய ஜிப்சிகள், ஸ்லாவியர்கள் (போலந்து, ரஷ்யா, சேர்பிய மக்கள்), கறுப்பர்கள், கறுப்பர்களோடு கலப்படைந்த ஏனைய இனத்தோர் ஆகியோரை, ‘உன்டமென்ஷ்’ என்று நாஸிகள் குறிப்பிட்டார்கள்.

உன்டமென்ஷ்களை ஜேர்மனியில் தலையெடுக்க விடமாட்டோம் என, முக்கிய நாஸித் தலைவரும் பெரும் இன அழிப்பான ‘ஹொலகோஸ்ட்’ கொடூரத்தின் இயக்குநருமான ஹய்ன்றிக் ஹிம்லர் சூளுரைத்தார். விளைவு, உலகம் கண்ட பெரும் மனித அவலங்கள், நாஸிகளால் நிகழ்த்தப்பட்டன.

1935இல், ‘நுரெம்பேர்க் சட்டங்கள்’ என்று அறியப்படும் இனத்தூய்மைச் சட்டங்களை, ஹிட்லர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, ஆரிய ஜேர்மானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான திருமணம், உடலுறவு தடைசெய்யப்பட்டன. பின்னர், இந்தச் சட்டத்துக்குள் ஜிப்சிகளும் கறுப்பர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் உள்ளடக்கப்பட்டனர். மேலும், ஆரியர் அல்லாத யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டம், யூதர்கள் கைதுசெய்யப்பட்டு, வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். யூதர்கள் மட்டுமல்ல, றொமெனியர்கள் கொம்யூனிஸ்டுகள் எனச் சந்தேகிக்கப்பட்டோர், அரசியல் எதிரிகள், ரஷ்ய யுத்தக் கைதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் எனப் பல இலட்சம் பேர், வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஒருபுறம் பட்டினி, மறுபுறத்தில் சித்திரவதை என, இந்த முகாம்களில் நாஸிகள் நடத்திய மனித அவலங்கள், சொல்வதற்குக் கூடப் பயங்கரமானவை. ‘உன்டமென்ஷ்’களை, மனிதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த மனிதர்களின் தோலிலிருந்து, தோற்பொருள்கள் செய்துகொண்டார்கள்.

யூதர்களை, அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அறைக்குள் மூடி, விஷவாயுவைச் செலுத்தி, கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இவையெல்லாம், ஏதோ இருண்ட யுகத்தில், கற்காலத்தில் நடந்ததல்ல. கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் நடந்த பெரும் மனித அவலம் இது.

ஹிட்லரும் அவரது நாஸிகளும் அரங்கேற்றிய பெரும் மனித அவலம், ஓர் இனவெறி அரசியலாகத்தான் தொடங்கியது. ஜேர்மனியின் பெரும்பான்மையைக் கவர்ந்திழுக்க, யூதர்களை எதிரிகளாகவும் அவர்கள் தூய ஜேர்மானியர்களைச் சீரழிப்பதாகவும், அவர்களே ஜேர்மனியின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் காரணகர்த்தாக்கள் எனவும் முன்னிறுத்தி, அவர்களை வேண்டாத அந்நியர்களாக நிலைப்படுத்தும் ‘பெருந்திரள்வாத’ அரசியலே, ஹிட்லரை அதிகார பீடத்தில் இருத்தியது.

அடுத்ததாக, ஜனநாயகக் கட்டமைப்புகளைப் பலமிழக்கச் செய்த நாஸிகள், சர்வாதிகார ஆட்சியை இராணுவத்தினதும் தமது எஸ்எஸ் துணைப் படையினதும் பலத்தைக் கொண்டு முன்னெடுத்தனர். சிறுபான்மையினரான யூதர்களின் உரிமைகள், கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, கடைசியில் அவர்கள் வதைமுகாம்களுக்கு ரயிலேற்றி அனுப்பி வைக்கப்பட்டார்கள். அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் அமைதியாக்கப்பட்டார்கள். ‘என் இனம்தான் பெரியது; அதுவே உலகை ஆளும்’ என்ற இனவெறி, ஹிட்லருக்கு குறுங்கால வெற்றியை ஈட்டித் தந்திருந்தாலும் அதுவே, ஹிட்லரின் அழிவுக்கும் வழிகோலியது. ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் அரங்கேறிய மனித அவலம் தான், வரலாற்றுச் சோகம்.

ஆனால், ஹிட்லரினதும் நாஸிகளினதும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கொண்ட வரலாற்றை, நாம் கற்றறிவதன் மூலம், சர்வாதிகாரம் ஒன்று உருவாகி வருவதற்கான அறிகுறிகளையும் அதன் தன்மைகளையும் பெரும் மனித அவலம் அரங்கேறப்போகிறது என்பதற்கான சமிக்ஞைகளையும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஜனநாயகக் கட்டமைப்புகள் பலமிழக்கச் செய்யப்பட்டு, ஒரு நபரிடமோ குழுவிடமோ அதிகப்படியான அதிகாரங்கள் குவிவதும் இராணுவத்துக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுவதும் ஆட்சியின் எல்லாத் துறைகளிலும் இராணுவத் தலையீடும் இராணுவத்தின் கட்டுப்பாடும் ஆட்சியாளர் தம்மால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கமுடியும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதும் அதன்மூலம் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று மக்களை நம்பவைக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவதும் ஊடகங்கள் மீதும் ஊடக சுதந்திரம் மீதும் தாக்குதல் நடத்துவதும் ஆட்சியைப் புகழும் பிரசாரங்களைப் பெருமளவில் முன்னெடுப்பதும் ஆட்சியை விமர்சிப்பதையும் அரசியல் மாற்றுக்கருத்துகளையும் கட்டுப்படுத்துவதும் நீதிமன்றை அரசியல் மயப்படுத்துவதன்மூலம் அதன் நம்பகத் தன்மையைச் சிதைப்பதும் மனித உரிமைகள் பற்றிய கரிசனையைத் தவிர்ப்பதும் தேசியவாதம், தேசப்பற்று ஆகியவற்றைப் பெருமளவில் எழுச்சி அடையச் செய்து, அதைத் திட்டமிட்ட பிரசாரங்கள் மூலம் பலப்படுத்துவதும் ஏற்படும் பிரச்சினைகளுக்குச் சிறுபான்மையினரையும் வௌிநாட்டவரையும் பழிசொல்லுவதும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுத்தல், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும் ஆட்சியை ஆதரிப்பவர்களைத் ‘தேசப்பற்றாளர்களாகவும்’ ஏனையவர்களைத் ‘துரோகிகளாகவும்’ முத்திரை குத்துதலும் போன்ற விடயங்கள், ஒருநாட்டில் ஏற்படத் தொடங்கும் போது, அந்நாடு சர்வாதிகார வல்லாட்சியை நோக்கிப் பயணிக்கிறது என்பதை, நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆரம்பத்திலேயே மக்கள் சுதாகரித்துக் கொண்டால், பெரும் மனித அவலம் மீண்டும் இந்த உலகில் அரங்கேறுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*