;
Athirady Tamil News

மீண்டும் தலை தூக்குமா ஐ.தே.க? (கட்டுரை)

0

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை ஸ்தாபித்ததும் ஒரு காலத்தில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்ததும் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸ போன்ற பலம்வாய்ந்த ஜனாதிபதிகளைத் தோற்றுவித்ததும் இலங்கையின் மூன்றாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலைமை, கவலைக்கு உரியதாக உள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்துக்கு, நான்கு மாதங்களாகியும், உறுப்பினர் ஒருவரை இன்னமும் நியமித்துக் கொள்ள முடியாமல் அக்கட்சி தவிக்கிறது. அந்த அளவுக்கு, எதிலும் முடிவு எடுக்க முடியாத கட்சியாக ஐ.தே.க சீர்குலைந்திருக்கிறது.

இரண்டு கட்சிகள் மட்டுமே, இன்னமும் தமக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் இருக்கின்றன. ஒன்று, ஐ.தே.க. மற்றையது, கலகொடஅத்தே ஞானசார தேர், அத்துரலியே ரத்தன தேரர் ​ஆகியோர் தலைமை தாங்கும் ‘அப்பே ஜன பல பக்‌ஷய’ (எமது மக்கள் சக்தி கட்சி) என்ற கட்சியாகும்.

தேரர்களின் கட்சி, முஸ்லிம் விரோதத்தை மூலதனமாக்கியே களத்தில் இறங்கியது. ஆனால், அதற்கு ஒரு மாவட்டத்தில்கூட, பௌத்த மக்கள், ஓர் ஆசனத்தையாவது வழங்கவில்லை. ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே, அக்கட்சிக்குக் கிடைத்தது. தேசப் பற்றையும் சமயப் பற்றையும் மூலதனமாக்கியவர்கள், இறுதியில் அந்த ஓர் ஆசனத்துக்காகக் கைகலப்பிலும் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது.

இறுதியில், 1989ஆம் ஆண்டு ஐக்கிய சோஷலிஸ முன்னணியின் செயலாளர் ராஜா கொல்லுரேயும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ. அமிர்தலிங்கமும் செய்ததைப் போல், தேரர்களின் கட்சியின் செயலாளர் வேதினிகம் விமலதிஸ்ஸ தேரர், அந்தத் தேசிய பட்டியல் ஆசனத்துக்குத் தமது பெயரைத் தேர்தல் ஆணையகத்துக்குப் பரிந்துரை செய்துவிட்டுத் தலைமறைவானார்.

அவரைச் சிலர் கடத்தி, ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்றதாகவும் சில வதந்திகள் சமூக வலைத் தளங்களில் பரவின. ஆனால், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவாவது, அவர் வெளியே வரவில்லை.
இந்தக் கட்சியைப் போலல்லாது, ஐ.தே.கவானது, இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே, வரலாற்றில் ஓர் அங்கமாகிய கட்சியாகும். அந்தக் கட்சிக்கு, நான்கு மாதங்களாகியும் தமக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்கு, ஓர் உறுப்பினரை நியமித்துக் கொள்ள முடியாதிருக்கிறது என்பது பாரதூரமான விடயமாகும்.

உண்மையிலேயே, இந்த நிலைமைக்கு ஆளாகியிருப்பது ஐ.தே.கவா அல்லது, அதன் தலைவரா? ஒரு கட்சியின் கொள்கைகளையோ அதன் நடவடிக்கைகளையோ வெறுத்து, அதன் உறுப்பினர்கள் அந்தக் கட்சியை விட்டு விலகிப்போவதாலோ சிதறிப் போவதாலோ, இது போன்றதொரு நிலைமைக்கு அக்கட்சி தள்ளப்பட்டால், அது அந்தக் கட்சியின் வீழ்ச்சி எனலாம்.

ஆனால், ஐ.தே.க விடயத்தில் என்ன நடந்தது என்றால், கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் போது, உறுப்பினர்கள் ஒரு சிலரைத் தவிர அனைவரும், தற்போதைய தலைவரைக் கைவிட்டு, மாற்றுத் தலைமையை ஏற்றுக் கொண்டமையே, ஐ.தே.கவுக்குள் நடந்தேறியுள்ளது. அந்தவேளையில், தலைவர் விட்டுக் கொடுத்து இருந்தால், கட்சியின் பெயரில் 50, 60 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்பட்டு இருப்பார்கள்.

இப்போது, ஐ.தே.க என்ற கட்சி, சஜித் பிரேமதாஸவிடமே இருக்கிறது. ஐ.தே.க என்ற பெயர்ப் பலகை, ரணில் விக்கிரமசிங்கவிடம் இருக்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இதுவே நடந்தது. அதன் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக, மஹிந்த ராஜபக்‌ஷவிடம் சென்று விட்டார்கள். ஒரு சிலருடன் கட்சியின் பெயர்ப் பலகையை, மைத்திரிபால சிறிசேன வைத்திருக்கிறார். அவர் இம்முறை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாவிட்டால், அவருக்கும் ரணிலுக்கு நடந்த கதிதான் நடந்திருக்கும்.

மற்றுமொரு வகையில், ஐ.தே.க பிளவுபட்டாலும், பிளவுபட்ட இரண்டு குழுக்களும், பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ ல.சு.கவும் செய்ததைப் போல் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், ரணிலின் குழுவும் குறைந்தது ஐந்து ஆசனங்களையாவது வென்று இருக்கும். அத்தோடு, இரு குழுக்களும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றதை விட, ஓரிரண்டு ஆசனங்களையாவது கூடுதலாகப் பெற்றிருக்கும். அவ்வாறாயின், பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம், இவ்வளவு இலகுவாகக் கிடைத்திருக்காது.

உண்மையிலேயே, சஜித்தைப் பார்க்கிலும் ரணில் ஆளுமை உள்ளவர். சர்வதேச ரீதியாகவும் சஜித்தைப் பார்க்கிலும் அங்கிகாரம் பெற்றவர். ஆனால், தம்மைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை, சரியாக உணர அவரால் முடியாமல் போய்விட்டது.

கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள், தம்மைக் கைவிட்டு சஜித்துடன் இணைகிறார்கள் என்பதை, அவரால் உணர முடியவில்லை. சஜித்தை விட, ரணிலை விரும்பிய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் லக்‌ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹாஷிம் போன்ற தமது நெருங்கிய சகாக்களும் தம்மை விட்டுப் பிரியும் போதாவது, அவர் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

அசைக்க முடியாத ஆட்சி எனப் பலர் நினைத்த மஹிந்தவின் அரசாங்கத்தை, எப்போது ஐ.தே.க வீழ்த்தியதோ, அன்றே அக்கட்சி தனது தலையிலும் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு, ஐ.தே.கவின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு, மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாக்களித்தனர். ஒன்பது ஆண்டு கால மஹிந்தவின் ஆட்சி, ஊழல் மலிந்ததும் மக்களது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாத அடக்குமுறை நிறைந்ததுமான ஆட்சியாகவே இருந்தது. அதை எதிர்த்தே, அன்று மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.

மைத்திரிபால பதவியேற்றவுடனே, ரணிலும் பிரதமராகப் பதவிக்கு வந்தார். ஊழல் ஆட்சி முடிவடையும் ராஜபக்‌ஷர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவியும், தொழில்கள் பெருகும், நாடு அபிவிருத்தி அடையும் என்று மக்கள் எதிர்ப்பார்த்தார்கள். சில ராஜபக்‌ஷர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள்.

ஆனால், ரணிலுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையில் ஏதோ கள்ளத் தொடர்பு இருக்கிறது என மக்கள் சந்தேகிக்கும் அளவுக்குச் சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்தன. ஊழல் பேர்வழிகள் கூண்டில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக, மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. தம்மோடு ஆட்சி நடத்தும் மைத்திரிபால, தமக்குச் சவாலாக வரக்கூடாது என்பதற்காக ரணில், மஹிந்தவை மீண்டும் தலைதூக்க இடமளித்தார்.

ஊழல் தொடர்பாக, ஐ.தே.க மக்களுக்கு அன்று அளித்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றி இருந்தால், மஹிந்த மீண்டும் அரசியல் ரீதியாகத் தலைதூக்கி இருக்க மாட்டார். அதேபோல், ஐ.தே.க மீதான நம்பிக்கையை, மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். மைத்திரியுடன் ஐ.தே.க மோதுவதற்கும், இந்தப் பிரச்சினையே அடிப்படைக் காரணமாகியது.

ஐ.தே.க படுதோல்வி அடைந்த, முதலாவது முறை இதுவல்ல. 1956ஆம் ஆண்டு, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க பதவிக்கு வந்த தேர்தலில், ஐ.தே.க வெறும் எட்டு ஆசனங்களையே பெற்றிருந்தது. ஆனால், அக்கட்சி 1960ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நடைபெற்ற அடுத்த பொதுத் தேர்தலில், டட்லி சேனாநாயக்கவின் தலைமையில் மீண்டும் பதவிக்கு வந்தது. இது போன்றதோர் எதிர்பார்ப்பில், இன்று இருக்க முடியாது. ஏனெனில், ஐ.தே.க ஆதரவாளர்கள் மொத்தமாக சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள். அன்று, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் ஆட்சி, நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. கொரோனா வைரஸின் முதலாவது அலையின் போது, அரசாங்கத்தின் திறமையால்தான் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது என்பதைப் போல், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளில் சிலர் கூறித் திரிந்தனர்.

ஆயினும், அரசாங்கமே இரண்டாவது அலைக்கு இடமளித்தது. இப்போது, அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது. பொருளாதாரத் துறையில் எதுவும் நடைபெறவில்லை. எல்லாவற்றையும் கொரோனா வைரஸின் தலையில் போட்டு தப்பித்துக் கொள்வதைத் தவிர, அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.

“முப்பது ஆண்டு காலப் போரை, முடிவுக்குக் கொண்டு வந்தேன்” என்று கூறியே, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, பொதுத் தேர்தலிலும் 144 ஆசனங்களை மஹிந்த வென்றார். அந்த அரசாங்கமே, நான்கு ஆண்டுகளில் சரிந்தது.

எனவே, இந்த அரசாங்கம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை, ஊகித்துக் கொள்ள வேண்டும். எனினும், அரசாங்கத்தின் பலவீனத்தால் பயன்பெறுவதாக இருந்தால் அது, ஐ.தே.கவுக்கானது அல்ல; சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கானதே ஆகும்.

பொதுத் தேர்தலை அடுத்து, ஐ.தே.க காணாமற்போனதைப் போன்ற ஒரு நிலைமையே உருவாகி இருக்கிறது. ஊடகங்களைப் பாவித்து, தாம் இன்னமும் நாட்டில் ஒரு சக்தி என்பதைக் காட்ட, ஐ.தே.க தலைவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், பொதுஜன பெரமுன சில நாள்களில் இரண்டு மூன்று ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியது. அரசாங்கத்தின் குறைகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டது. அவ்வாறானதோர் உற்சாகத்தை, ஐ.தே.க தலைவர்களிடம் காணக் கூடியதாக இல்லை.

அறிவும் ஆளுமையும் வாய்மையும் உள்ள ஒருவரை, தமது தேசிய பட்டியல் ஆசனத்துக்கு நியமித்தால் மட்டுமே, இந்த நிலைமையை ஐ.தே.கவால் மாற்ற முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*