;
Athirady Tamil News

கொரோனாவுடன் வாழப்பழகச் சொல்லும் தலைமைத்துவமும் குடும்பத்துடன் வாழ விடாத வடக்கு சுகாதாரத் துறையும்!! (கட்டுரை)

0

இலங்கையில் கொரோனாவின் ஆட்டத்தினால் பலியானோர் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40000ஐயும் தாண்டி விட்டது . கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் காலடி எடுத்து வைத்த சீன நாட்டுக் கொரோனாவையும் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வந்த ஐரோப்பிய கொரோனாவையும் எதிர்த்து நின்று இலங்கை அரசும் சுகாதாரத்துறையும் போராடிக் களைத்து இறுதியில் நாட்டின் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவே ” கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் மக்களே ” என அறிவித்தும் விட்டார்.

அதனால் தற்போது இலங்கையில் ”தாய் வீட்டுக்கு செல்லும் பிள்ளை” போல் கொரோனா தங்கு தடையின்றி சகல இடங்களுக்கும் செல்லத் தொடங்கியுள்ளது. கொரோனா ஒருபக்கம் தனது வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க மக்கள் மறுபக்கம் கொரோனா சுகாதார விதி முறைகளுடன் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியதுபோல் மக்கள் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொண்டு வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கள் எண்ணிக்கையும் குணமடைவோர் எண்ணிக்கையும் இலங்கை -இந்திய கிரிக்கெட் போட்டிபோல் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கொரோனாவுடன் மக்கள் வாழப்பழகிவரும் நிலையில் அவரவர் தமது குடும்பங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமது தொழில்கள் நிமிர்த்தம் மேல் மாகாணத்தில் கொரோனாவுடன் வாழப்பழகிய வடக்கு மாகாணத்தை அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தமது குடும்பங்களுடன் வாழ வடக்கு சுகாதாரத்துறையினர் பெரும் தடைக்கல்லாகவே இருக்கின்றனர். இந்த விடயத்தை கொஞ்சம் விலாவாரியாகப் பார்ப்போம்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி கொரோனா தனது இரண்டாவது ஆட்டத்தை முதலில் மினுவான்கொடை ஆடைத்தொழிற்சாலையிலும் அடுத்ததாக பேலியகொடை மீன்சந்தையிலும் ஆரம்பித்த நிலையில் மேல்மாகாணம் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டதனால் சுகாதாரத்துறையால் ”கொரோனா அபாய வலயம்” என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஊரடங்கு ,முடக்கம், தனிமைப்படுத்தல் என மேல் மாகாணம் அமளிப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது.

பேலியகொடை மீன்சந்தைக்கு நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் தொழில் நிமிர்த்தம் வந்து செல்வோரே அங்கிருந்து தமது மாவட்டங்களுக்கு கொரோனாவை அழைத்து சென்ற போதும் மேல்மாகாணமே பழிச்சொல்லை ஏற்றது. இதனால் மேல்மாகாணத்தில் உள்ளவர்கள் தமது மாகாணங்கள், மாவட்டங்களுக்கும் நுழைய சில மாகாணங்கள் தடையும் இன்னும் சில மாகாணங்கள் கடும் கட்டுப்பாடுகளும் விதித்தன. தமது மாகாண ,மாவட்ட மக்கள் மேல் மாகாணத்தில் இருந்தால் கூட அவர்களையும் சொந்த இடங்களுக்கு வரவேண்டாமென பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டன. எனினும் பின்னர் படிப்படியாக அந்தக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பின்னர் சொந்த இடங்களுக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொரோனா பரவாதிருக்க, அதனைக்கட்டுப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம். அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் தமது தொழில் நிமிர்த்தம் மேல்மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் தங்கியிருப்போருக்கு இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் எந்தளவுக்கு நியாயமானது என்பதே கேள்வி. இவ்விடயத்தில் வடக்கு மாகாணத்தை இங்கு கவனத்தில் எடுத்துப் பார்ப்போம்.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெருமளவானோரின் குடும்பங்கள் வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் கொழும்பில் பணிபுரிவோர் வாடகை வீடுகளிலும் அறைகளிலும் தங்கியிருந்து தொழில்களை மேற்கொள்வதுடன் வாரத்தில் ஒரு தடவை அல்லது மாதத்தில் இருதடவைகள் வடக்கில் உள்ள தமது குடும்பத்தினரிடம் சென்று வருவது வழமை. இவர்களை நம்பித்தான் கொழும்புக்கும் யாழுக்குமிடையில் தினமும் 40 க்கும்மேற்பட்ட சொகுசு பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது ஆட்டம் தொடங்கிய நாள் முதல் மேல் மாகாணத்திலிருந்து வடக்கே வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வடக்கு சுகாதாரத்துறை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. வடக்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் அவசியமானவையே. அதனால்தான் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரையில் மேல்மாகாணத்திலுள்ள வடக்கை சேர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பாது பல்வேறு துன்பங்கள்,சிரமங்களுக்கு மத்தியிலும் மேல்மாகாணத்திலே தங்கியிருக்கின்றனர். பலர் சொந்த இடங்களுக்கு ஒருதடவை சென்றுவர விரும்பினாலும் வடக்கில் இறுக்கமாக அமுல்படுத்தப்படும் 14 நாள் தனிமைப்படுத்தல் அந்த ஆசைக்கும் தேவைக்கும் தடைபோட்டுள்ளது.

ஒருபக்கம் கொரோனா தன் வேலையை செய்து கொண்டிருக்க, மறுபக்கம் மேல் மாகாணத்தில் அரச,தனியார் நிறுவனங்களும் வழமைபோலவே தமது சேவைகளையும் வேலைகளையும் முன்னெடுத்து வருவதனால் இங்குள்ள வடக்கு மாகாணத்தவர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தவர்கள் [யாழ் மாவட்டத்திலேயே 14 நாள் தனிமைப்படுத்தல் தீவிரமாக அமுல் படுத்தப்படுவதாலேயே வடக்கில் அந்த மாவட்டம் மட்டும் இங்கு குறிப்பிடப்படுகின்றது] வழமை போல் வாரத்துக்கு ஒருதடவையோ அல்லது மாதத்திற்கு இரு தடவையோ தமது சொந்த இடத்துக்கோ குடும்பத்திடமோ செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள ஒருவர் வெள்ளிக்கிழமை அங்கிருந்து யாழ்மாவட்டத்துக்கு புறப்பட்டால் அவர் சனி,ஞாயிறு தினங்களில் குடும்பத்துடன் நின்று விட்டு ஞாயிறு இரவு அல்லது திங்கட்கிழமை இரவு அங்கிருந்து மீண்டும் மேல்மாகாணத்துக்கு புறப்படுவதே பலரின் வழமை .ஆனால் தற்போது மேல் மாகாணத்திலிருந்து வருவோருக்கு கடடாய 14 நாள் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படுள்ள நிலையில் மேல்மாகாணத்திலுள்ள ஒருவர் இரு நாள் விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்தால் அவர் 14 நாட்களுக்கு பின்னரே மேல்மாகாணத்துக்கு அதாவது வேலைக்கு மீண்டும் திரும்ப முடியும் .இப்படி ஒருவர் ஒரு மாதத்தில் இருநாள் விடுமுறையில் வந்தால் கூட 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்தில் 14 நாள் விடுமுறை எடுக்கும் ஒருவரை எந்த அரச நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் வேலையில் வைத்திருக்கும்?

மேல்மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வரும்போது அவர் மட்டும் 14 நாள் தனிமைப்படுத்தப்படவில்லை. அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்படுகின்றது. அந்த குடும்பத்தில் அரச ,தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோர் இருந்தால் அவர்களும் அந்த 14 நாட்களும் தொழிலுக்கு செல்லமுடியாது. இந்தப்பிரச்சினையால் தான் ஆயிரக்கணக்கான யாழ் மாவட்டத்தவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வடக்கு சுகாதாரத்துறையின் 14 நாள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு மதிப்பளித்து சொந்த இடத்துக்கு திரும்பாது,தமது குடும்பத்தின் நன்மை,தீமைகளில் கூட பங்கேற்காது மேல்மாகாணத்திலேயே பல்வேறு நெருக்கடிகள் துன்பங்களுக்கு மத்தியிலும் தங்கியிருக்கின்றனர்.

கொரோனாவைக்கட்டுப்படுத்த வேண்டுமெனில் இவ்வாறான 14 நாள் தனிமைப்படுத்தல் சட்டம் அவசியம் .அதனால் சில விடயங்களை பொறு த்தும் சமாளித்தும் கட்டுப்பட்டும்தான் மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென வடக்கு சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர் .அவர்கள் கூறுவதும் உண்மைதான். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ”ஒரேநாடு ஒரே சட்டம்”என்பதுபோல் வடக்கு சுகாதாரத்துறையின் இந்த 14 நாள் தனிமைப்படுத்தல் சட்டமும் ”அனைவருக்கும் ஒரே சட்டம் ” என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டால் சுகாதாரத்துறையினரின் மேற்படி கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும் .ஆனால் வடக்கில் 14 நாள் தனிமைப்படுத்தல் சட்டம் மேல்மாகாணத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் குறிப்பிட்ட சாராரை மட்டும் இலக்கு வைத்தே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே இங்குள்ள குற்றச்சாட்டு

இது தொடர்பில் மேல்மாகாணத்தில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ள வடக்கு மாகாண மக்கள் சார்பில் வடக்கு சுகாதாரத்துறையினரிடம் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

மேல்மாகாணத்தில் உள்ளவர்கள் வடக்கு மாகாணம் வந்தால் குறிப்பாக யாழ் மாவட்டம் வந்தால் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றால் வடக்கிலிருந்து மேல்மாகாணம் வந்து செல்வோருக்கு இந்த நடைமுறை பொருந்தாதா? அவர்கள் மேல் மாகாணம் வந்து ஓரிருநாட்கள் தங்கி விட் டு மீண்டும் வடக்கு திரும்பிய பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றார்களா?

இந்த 14 நாள் தனிமைப்படுத்தல் சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா? இதில் வடக்கு, தென்பகுதி அரசியல் வாதிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? அனைவருக்கும் பொதுவானது என்றால் கடந்த வரவு செலவுத்திட்ட விவாத நாட்களில் வடக்கிலிருந்து மேல்மாகாணத்தில் உள்ள பாராளுமன்றத்துக்கு அடிக்கடி வந்து சென்ற எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தினீர்கள்? அவர்களுடன் வந்த சாரதிகள், உதவியாளர்கள் எத்தனை பேர் உங்களால் தனிமைப்படுத்தப்பட்டார்கள்? அல்லது தென்பகுதிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஒரே மண் டபத்துக்குள் நூற்றுக்கணக்கான அரச உயர் அதிகாரிகளை மிகவும் நெருக்கமாக சந்தித்த தென்பகுதி அமைச்சர்களை தனிமைப்படுத்தினீர்களா?அல்லது அவர்களுடன் நெருங்கிநின்ற அரச உயர் அதிகாரிகளையாவது தனிமைப்படுத்தினீர்களா?

மேல்மாகாணத்திலிருந்து முதல் நாள் எடுத்த பி.சி.ஆர். அறிக்கையுடன் வந்தால் கூட 14 நாள் தனிமை ப்படுத்தலில் இருக்க வேண்டுமெனக்கூறும் நீங்கள் அவர்கள் வந்த கொழும்பு-யாழ் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களை 14 நாள் தனி மைப்படுத்துகின் றீர்களா? அவர்கள் முதல் நாள் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வருகின்றார்கள். அடுத்த நாள் இங்கிருந்து கொழும் புக்கு செல்கின்றார்கள்.இவர்கள் என் தனிமைப்படுத்தப்படுவதில்லை? அதுமட்டுமல்ல தினமும் மேல்மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. மீண்டும் திரும்பி செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் வந்த செல்கின்றனர். இவர்களை ஏன் தனிமைப்படுத்துவதில்லை?

இதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஏற்பட் ட தொழில் நுட்பக்கோளாறை சரி செய்வதற்காக எந்த மருத்துவ பரிசோதனைகளுமின்றி,கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 6பேர் கொண்ட குழுவைக் குறிப்பிட முடியும். இந்தக்குழு மருத்துவ பரிசோதனைகளின்றி வந்த நிலையில் அந்த பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கூட அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஏன் நீங்கள் 14 நாள் தனிமைப்படுத்தவில்லை? இந்தக்குழுவுக்கு மருத்துவ பரிசோதனையின்றி யாழ்ப்பாணம் வருவதற்கான அனுமதியை எப்படி வழங்கினீர்கள்?

இந்தக்குழு குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்த போது ஊழியர்கள் எதிர்த்ததையடுத்து அவ்விடத்துக்கு வந்த அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அந்த குழுவினரை அனுமதிக்க முடியாதுஎனக்கூறி திருப்பி அனுப்பிய பின்னர் மீண்டும் அந்தக்குழுவினர் திரும்பி வந்து பணி செய்ய அனுமதிக்குமாறு யாருடைய அழுத்தத்தில் உத்தரவு வழங்கப்பட்டது?

வடக்கு தெற்கு,அரசியல்வாதிகளுக்கு எந்த வித கொரோனா சட்டவிதிகளும் கிடையாது, 14 நாள் தனிமைப்படுத்தலும் கிடையாது, தென்பகுதியை சேர்ந்தோர் வடக்கே வரும்போது எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால் யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்ததுடன் ”மக்களின் பொறுப்பற்ற தனத்தால் யாழில் கொரோனா பரவுகின்றது” என வடக்கு ஆளுநர் பழியை மக்கள் மேல் போடுகின்றார். ஏன் தென்பகுதியை சேர்ந்தோர் வடக்கே வந்து செல்லும் போது கொரோனாவை பரப்பியிருக்கக் கூடாது?

வடக்கு அரசியல் வாதிகளில் தொற்ற மாட்டேன், தென்பகுதியிலிருந்து வரும் அமைச்சர்களுடனும் நான் வரமாட் டேன், கொழும்பு,யாழ் பஸ் சாரதிகள், நடத்துனர்களில் ,தொற்ற மாட்டேன் .அரசியல் செல்வாக்குள்ளோரின் அருகில் கூட செல்ல மாட்டேன் .ஆனால் மேல் மாகாணத்தில் வேலை செய்யும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தினரில் மட்டும் தொற்றுவேன்,அவர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு வருவேன் என வடக்கு சுகாதாரத்துறைக்கு கொரோனா சத்தியம் செய்துள்ளதா? அல்லது ஒப்பந்தம் கைச் சாத்திட்டுள்ளதா?என்பதற்கு வடக்கு மாகாண சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும்.

கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிகள் மக்களின் நன்மைக்கும் ஒவ்வொருவரின் குடும்பங்களினதும் பாதுகாப்புக்குத்தான் அமுல் படுத்தப்படுகின்றன என்பதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வாறான சட்டங்களை அனைவருக்கும் சமமாக அமுல் படுத்துங்கள்.குறிப்பிட்ட ஒருசாராரை மட்டும் இலக்கு வைத்து அமுல்படுத்தி அவர்களை உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்குட்படுத்தக்கூடாது. வடக்கு மாகாண சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் அது அரசியல் அழுத்தங்களுக்கும் மேல் மட்ட அழு த்தங்களுக்கும் உட்பட்டதொன்றாகவே உள்ளது என்பதுடன் சாதாரண மக்களிடமே தனது அதிகாரத்தை நிலைநாட்டும் துறையாகவும் உள்ளது. அத்துடன் இதில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தமது இஷ்டப்படி சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதனையே இவ்வாறான பாரபட்ச சுகாதார விதிமுறைகள் நிரூபிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + twenty =

*