;
Athirady Tamil News

எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்? (கட்டுரை)

0

திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது.

ஒவ்வொரு நாட்டோடும் செய்யப்படவுள்ள ஒப்பந்தங்கள் பற்றிய கால எல்லைகளை மீளாய்வு செய்து அதன்பின்னரே அந்த ஒப்பந்தங்களை ரத்துச் செய்வதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பது வழமை. அந்த அடிப்படையில் MCC எனப்படும் இந்த ஒப்பந்தத்தின் கால எல்லையும் முடிவடைந்ததாலேயே அமெரிக்கா அதனை ரத்துச் செய்துள்ளது.

இலங்கையோடு மாத்திரமல்ல வேறு சில நாடுகளோடும் கைச்சாத்திடப்படாமல் நீடித்துச் செல்லும் இவ்வாறான ஒப்பந்தங்களை ஏற்கனவே அமெரிக்கா ரத்துச் செய்யதுள்ளது.

MCC எனப்படும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிடுமாறு இலங்கையில் மகாநாயக்கத் தேரர்கள், பௌத்த அமைப்புகள் ஆரம்பம் முதலே தீவிரமாக எதிர்த்திருந்தன. 2018ஆம் ஆண்டு செப்பெரம்பர் மாதம் நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றச் சென்றிருந்தார். அதன்போதே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் அப்போதைய நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், (Brock Bierman) மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியிருந்தார்.

480 மில்லியன் டொலர் நிதியை தானாகவே வழங்க அவர் முன்வந்தார். இது பற்றி மைத்திரிபால சிறிசேன அப்போது நியுயோர்க்கில் இலங்கைச் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியுமிருந்தார். இதன் பிரகாரம் இந்த நிதியை வழங்குவதற்கான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மகாநாயக்க தேரர்கள், பௌத்தகுருமாரின் எதிர்ப்புகள் காரணமாகவே ஒப்பந்தம் கைச்சாத்திடத் தாமதமாகியது. இலங்கையில் விவசாயத்துக்குரிய நிலங்களை விற்பதற்குரிய நிலங்களாக மாற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான இலக்காக இருந்தது.

இதனால் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கும் எண்பது சதவீதமான விவசாய நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சத்தினாலேயே பௌத்தகுருமார் இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர் என்பது பொதுவாகத் தெரிந்த கதை.

ஆனால் கொழும்பின் உப நகரமாகத் திருகோணமலை நகரை மாற்றியமைப்பதே பிரதான நோக்கம். கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும், திருகோணமலையில் இருந்து கொழும்புக்கும் குறைந்தது மூன்று மணிநேரத்தில் செல்வதற்குரிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் MCC எனப்படும் இந்த ஒப்பந்தத்தின் பிரதான உள்ளடக்கங்களில் ஒன்று.

இதன் காரணமாகவே ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மைத்திரி- ரணில் அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்து. அது குறித்த ஆலோசனைகளும் இலங்கையிடம் இருந்து அப்போது பெறப்பட்டுமிருந்தன.

இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்திற்கு முன்னரே மூன்று அமெரிக்கப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பயிற்சிகளை இலங்கைக் கடற்படைக்கு திருகோணமலைக் கடற்பரப்பில் வழங்கியிருந்தன.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கான அணுகுமுறைக்குள் இலங்கை அரசை உள்வாங்கும் நோக்கிலும் திருகோணமலையை அமெரிக்காவுக்கு வழங்கியதற்கான நன்றிக் கடனாகவும் இந்த (MCC எனப்படும் கூட்டுத்தாபனத்தின் மூலமாக வழங்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விமல் வீரவன்சவும் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேகாலப் பகுதியில்தான் இலங்கை இராணுவத்திற்கு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துமிருந்தது. இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் அதனடிப்படையில் இந்த நிதியை வழங்குவதாகவும் அப்போது கூறியிருந்தார்.

ஆகவே திருகோணமலை நகரை மையப்படுத்தியதாக அமைந்திருந்த MCC ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, கிழக்குப் பிரதேசத்தை தமிழ்பேசும் மக்கள் தமது தாயகப் பிரதேசம் என்று கூற முடியாத அளவுக்கு இலகுவான முறையில் சிதைக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் வடக்குக் கிழக்கு நில அடிப்படையில் இணைக்க முடியாதவொரு சூழலும் உருவாகியிருக்கும்.

இந்தத் திட்டத்தை வெளிப்படையாகச் சிங்களக் கடும்போக்காளர்களுக்கு எடுத்துக் கூறமுடியாத நிலமை அன்று மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்தது. ஏனெனில் 2015 மேற்குலக நாடுகளின் திட்டத்தின்படி நல்லாட்சி என்று கூறியே அவர்கள் ஆட்சியமைத்திருந்தனர். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலையும் காப்பாற்ற வேண்டியதொரு தேவை ரணில் விக்கரமசிங்கவுக்கும் இருந்தது.

தற்போது இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதால், அமெரிக்கா இலங்கை மீது கோபமாக இருப்பதாகவும், இதனால் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு அது ஜெனீவா மனித உரிமைச் சபை வரை தாக்கம் செலுத்தும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல- ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த முன்னாள் அமைச்சர பாட்டாலி சம்பிக்க ரணவக்கவும் கோட்டாபய ராஜபக்சவும் முரண்பட்டுக் கொண்டதே காரணமாகும்.

இந்த ஒப்பந்தத்தை அப்போது செயற்படுத்த இருந்தவர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க. இவர் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர். இவருடைய பரிந்துரையின்பேரிலேயே அப்போது கொழும்பு- திருகோணமலை அதிவேகச் சாலைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது.

அதிவேகச் சாலையோடு சேர்ந்து திருகோணமலை நகரை எப்படி சிங்கள மயப்படுத்துவது என்பதற்கான திட்டவரைபாகவும் அது அமைந்திருந்தது. அந்த வரைபடத்தை பாட்டாலி சம்பிக்க ரணவக்க அன்று முதன் முதலில் சம்பந்தனிடமே கையளித்துமிருந்தார். அதன் உள்ளடக்கம், அது பற்றிய ஆபத்துக்கள் எதனையுமே சம்பந்தன் அறிந்திருக்க வாய்ப்பில்லையா அல்லது தெரிந்தும் தனது இயலாமையினால் அமைதியாக இருந்தாரா என்பது பற்றிய கேள்விகளும் உண்டு.

திருகோணமலை நகர அபிவிருத்தி என்ற வாஞ்சையோடு அந்த வரைபடத்தை சம்பந்தன் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிடம் இருந்து பெற்றிருக்கவும் கூடும்.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் கடுமையாக உழைத்தவர்தான் சம்பிக்க ரணவக்க. பௌத்த குருமாரை ஒன்றிணைத்து ஜாதிக கெல உறுமய என்ற அமைப்பை உருவாக்கி ஈழப்போரை நடத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் ராஜபக்ச சகோதரர்களுக்குக் கொடுத்தவர்தான் இந்த சம்பிக்க ரணவக்க.

ஆனால் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இவர் அமெரிக்காவுக்கு விசுவாசமான ஒருவராக மாற்றமடைந்து ரணில் விக்கிரமசிங்கவோடு நெருக்கமாகினார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கக் கடுமையாக உழைத்திருந்தார்.

அமெரிக்க நண்பரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவோடு நெருக்கமான சம்பிக்க ரணவக்க ரணில் மைத்திரி அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

ஆகவே சம்பிக்க ரணவக்கவுடன் ஏற்பட்ட உள்ளக அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கைகளிலும் தடங்கல் ஏற்பட்டிருந்தன. பௌத்த தேரர்கள், ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் எதிர்ப்பும் இருந்தது உண்மை.

ஆனால் அதனையும் தாண்டி MCC எனப்படும் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தத்தைச் செய்து 480மில்லியன் டொலர்களை பெற வேண்டிய தேவை ராஜபக்ச அரசாங்கத்துக்கு உண்டு. அத்துடன் திருகோணமலை நகரை சிங்கள மயப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பதும் தெரிந்த ஒன்று.

ஆனால் சம்பிக்க ரணவக்கவோடு எழுந்த முரண்பாட்டால், இந்த ஒப்பந்தம் கைகூடவில்லை. அமெரிக்காவினால் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர ஆகியோர் கூட இதுவரை கருத்துக்களை வெளியிடவும் இல்லை. இருந்தாலும் திருகோணமலை தற்காலிகமாகத் தப்பியது என்பதே ஆறுதல்.

அதேவேளை, ரணில் மைத்திரி அரசாங்கத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குத்தகைக்கான ஒப்பந்தத்தையும் ரத்துச் செய்ய வேண்டியதொரு அவசியம் கோட்டாபயவுக்கு உண்டு.

ஆகவே MCC எனப்படும் அமெரிக்க நிறுவனத்துடன் செய்யப்படவிருந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் தவிர்த்ததன் மூலம், அம்பாந்தோட்டைத் துறைமுகக் குத்தகைக்கான ஒப்பந்தத்தையும் செயற்படுத்தாமல் தவிர்த்துக்கொள்ள முடியுமென கோட்டாபய கருதவும் கூடும்.

அதன் மூலம் இலங்கை, அமெரிக்கா பக்கமும் இல்லை சீனாவோடும் இல்லை இலங்கை தனித்துவமாவே செயற்படுகின்றது என்றவொரு செய்தியை ஒப்பாசாரத்துக்கேனும் சிங்கள மக்களுக்குக் கூற வசதியாக இருக்குமென்றும் கோட்டாபய நம்புகிறார் போலும்.

ஆகவே இதுதான் நிலமை. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை மையமாகக் கொண்டே இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வுகள் ஒவ்வொன்றும் அமைகின்றன. மேற்குலக நாடுகளின் திட்டங்களினால் இலங்கையில் ஆட்சி மாற்றப்பட்டாலும் அந்த மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒத்துழைத்தல், அந்த நாடுகளின் நோக்கங்களைச் செயற்படுத்துதல் என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவர் என்பது கண்கூடு.

அவர்களுக்கிடையே முரண்பாடுகள், மோதல்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளை முடக்கும் விடயத்தில் ஏதோவொரு வழியில் அவர்கள் ஒரு புள்ளியில் வந்துவிடுவர்.

பொம்பியோ கடந்த ஒக்ரோபர் மாதம் இலங்கைத் தீவுக்கு வந்திருந்தபோது அரச ஊடகமான ரூபவாஹினிக்கு வழங்கிய நேர்காணலில் MCC ஒப்பந்த நகர்வை இலங்கை அரசு தயங்காமல் கைவிடலாம், ஏனென்றால் அமெரிக்க இலங்கைக் கூட்டுறவுக்கு பல வழிகள் இருக்கின்றன, அவற்றுள் MCC என்பது ஒன்று மட்டுமே என்றும் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − two =

*