;
Athirady Tamil News

கொரோனா வைரஸ் என்பது உலகயளவில் அச்சத்துக்கு அப்பாற்பட்டு சாதாரண வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது!! (கட்டுரை)

0

இன்றைய சூழலில் கொரோனா வைரஸ் என்பது உலகயளவில் அச்சத்துக்கு அப்பாற்பட்டு சாதாரண வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது, கொவிட்டுடன் வாழப் பழகிவிட்ட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். அதில் பிரதானமானது ஒருமுறை கொவிட் தொற்று ஏற்ப்பட்டு முழுமையாக குணம்பெற்ற ஒருவருக்கு மீண்டும் அதேநோயின் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? இது பற்றி இன்றைய விஞ்ஞானம் என்ன சொல்கிறது என இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சாதாரணமாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பின் அவருக்கு 14 நாட்களின் பின்னரோ அல்லது ஒரு மாதம் இரண்டு மாதங்களின் பின்னரோ மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் சில வேளைகளில் பாசிட்டிவ் என முடிவு வந்ததாக நீங்கள் செய்திகளில் அறிந்திருப்பீர்கள். இது உண்மையில் சாதாரணமானது. இது புதிய தொற்று கிடையாது. கிருமிகள் பொதுவாக வலுவிழந்த நிலையில் உடலில் தொடர்ந்து காணப்படும் போதே இத்தகைய முடிவுகள் வரும்.

ஆனால், இவை இன்னொருவருக்கு தொற்றை ஏற்படுத்தாது. ஆனால் ஒருமுறை தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணம் பெற்ற ஒருவருக்கு மீளவும் வேறு ஒரு வழியில் கிருமிகள் உட்சென்று அவரில் இன்னொருமுறை நோய்த் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே கேள்வி. ஆனால் இந்தச் சந்தேகத்துக்கான விடையும் இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன. அந்த முடிவு என்னவென்றால் ஒருவருக்கு மீள்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் உள்ளன.

இது எவ்வாறு சாத்தியமாகும் என நீங்கள் எண்ணலாம், தற்போதைய செய்திகளில் நீங்கள் அவதானித்திருப்பீர்கள் வைரஸ் உருமாறுகிறது என்பதை. அதாவது வைரஸானது சீனாவில் உருவானாலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மக்களிடையே தொற்றுகளை உண்டாக்கி செல்லும்போது அதன் அமைப்பில் சிறிய, சிறிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் வைரஸின் வலுவை கூட்டலாம், குறைக்கலாம் அல்லது அதன் இயல்பு அடிப்படை அமைப்பிலிருந்து பெரிய மாறுதல்களை கூட உண்டாக்கலாம்.

இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம், இது உண்மையில் நடந்த ஒன்று, சீனாவில் வுஹான் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பூரண சுகம் பெற்று அமெரிக்கா சென்று சிறிது காலத்தின் பின் அவர் மீளவும் தொற்றுக்கு உள்ளானார். அவரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் வைரஸ்கள் சம்பந்தமான ஆய்வுகள் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வைரஸ் அன்றி உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் மூலம் தாக்கத்துக்கு உள்ளாமை தெரிய வந்தது. இது உலகளாவிய ரீதியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மீள்தொற்றுக்கள், தொடர்ச்சியான அலைகளையும் ஏற்படுத்தலாம் எனும் அச்சத்தை விதைத்துள்ளது. இந்த பிரச்சினை தடுப்பூசி விடயத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் தடுப்பூசி இன்று உள்ள வடிவத்தில் வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கும், ஆனால் வைரஸ் உருமாறும்போது இந்த வைரஸ்களை தடுக்க முடியாமல் போய்விடும்.

உதாரணமாக சமீபத்தில் இங்கிலாந்தில் புதிய வடிவில் வைரஸ் பரவியபோது அங்கு ஏற்கனவே செலுத்தப்படும் தடுப்பூசியில் புதிய வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட போவதாகவும் அதற்கு ஒன்றரை மாதங்கள் அவகாசம் வேண்டும் எனவும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

வைரஸ் உருமாற்றம் மட்டுமன்றி இன்னுமொரு காரணம் கூட ஒருவருக்கு மீள்தொற்று ஏற்படுமா என்பதை தீர்மானிக்கிறது. அது என்னவென்றால் ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தி. உதாரணமாக உங்களுக்கு சிறிய வயதில் அம்மை நோய் ஏற்பட்டிருந்தால் அது மீளவும் உங்களை தாக்காது என்பதை அறிந்திருப்பீர்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்றால் மனித உடலினுள் உள்நுழையும் கிருமிகளுக்கு எதிராக உடலால் சுரக்கப்படும் பிறப்பொருள் எதிரிகளில்,கிருமிகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் கலங்களும் உருவாக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய கலங்கள் பெரும்பாலானோரின் ஆயுள் முழுவதும் நீடித்து அந்த நோய்க்கிருமிகள் ஒருவரது உடலில் உள் நுழையும் போது ஏற்படும் செயற்பட்டு மீள்தொற்றினை தடுக்கும். இது அடிப்படை மனித உடலின் பாதுகாப்பு அமைப்பு. இந்த பாதுகாப்பு பொறிமுறை ஒரு சிலரில் பலமிழந்து காணப்படலாம் அல்லது இந்தச் கிருமிகளுக்கு எதிராக அந்த பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கும் ஆற்றல் நமது உடலுக்கு குறைவாக காணப்படலாம். இது பற்றிய ஆய்வுகள் தற்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பொறிமுறையின் அடிப்படையில்தான் தடுப்பூசிகள் கூட தொழிற்படுகின்றன.

எனவே, தான் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தினால் எவ்வளவு காலத்துக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பற்றி இன்றுவரை இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான் ஆபத்து நீங்கவில்லை. நாம் நமது பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் .பொருத்தமான தடுப்பூசி வகைகள் உருவாக்கப்படவேண்டும் அவை காலத்துக்குக் காலம் புதிய வடிவுக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும். அரசுகள் சிறந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த நோய் நிலைமை ஒரு மனிதப் பேரவலத்தை உண்டாக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*