;
Athirady Tamil News

இன்னொரு ஆணைக்குழுவை அமைக்கின்றது அரசாங்கம்!! (கட்டுரை)

0

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்கள் வெளியிட்ட அறிக்கைகள் பரிந்துரைகள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூவர் கொண்ட புதிய ஆணைக்குழுவை அமைக்கவுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ,ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த இலங்கையின் பொறுப்புக்கூறல்கள் குறித்த நிபுணர்கள் குழு ( தருஸ்மன் குழு அறிக்கை) காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ( மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு) போன்றவை தெரிவித்த விடயங்கள் குறித்தும புதிய ஆணைக்குழு ஆராயும் என வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை தெரிவிக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் அரசாங்கம் தெரிவி;க்கவுள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த காலங்களில் ஆராய்ந்த அமைப்புகள் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்காக புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும் என கடந்த ஜெனீவா அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாமா என ஆராய்ந்து இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார செயலாளர் ஒரு வார காலத்திற்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற அல்லது தற்போது கடமையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் அதற்கு தலைமை தாங்கவுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடாளுமன்ற கலைப்பு தேர்தல்கள் காரணமாகவே இந்த ஆணைக்குழுவை அமைப்பது தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னொரு ஆணைக்குழுவை மூலம் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயலவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உலகம் மாறிவிட்டது ஆதாரங்கள் மாறிவிட்டன நாங்கள் ஏற்கனனவே ஏனையவர்கள் செய்ததை மீண்டும் செய்ய முயலவில்லை, எனவும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் ஆணைக்குழுவை அமைக்கவில்லை இலங்கை குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையிலேயே ஆணைக்குழுவை அமைக்கின்றார் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் இது ஜெனீவாவிற்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதி எனவும் தெரிவித்துளளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − nine =

*