ஐ.நா. அறிக்கை ஏற்படுத்தியிருக்கும் உணர்வலை!! (கட்டுரை)

பெப்ரவரி 22ஆம் திகதியில் ஆரம்பமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பான விடயம் இலங்கைக்கு சோதனை மிகுந்த ஒன்றாக அமையபோகிறது. மேற்படி கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பற்ச்லட் இலங்கை தொடர்பாக 17 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை 47 உறுப்பு நாடுகளுக்கு கடந்த ஜனவரி 27 ஆம் திகதி அனுப்பியிருந்தார். மேற்படி அறிக்கையின் விபரங்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. குறிப்பிட்ட அறிக்கையில் ஆறு விடயங்களில் ஆணையாளரின் கவனம் குவிக்கப்பட்டிருந்தது.
சிவில் செயற்பாடுகளில் ராணுவ மயமாக்கல்.
20அவது திருத்தத்தின் ஊடாக இதற்கான பாதுகாப்பு வழங்கப்படல்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் அரசியல் தலையீடு.
பெரும்பான்மையினரின் மேலாதிக்கம்.
சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் சுருங்கி வருதல்.
மோசமான மனித உரிமை மீறல்களை நோக்கிய மீள் நகர்வு.
மேலும் மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரிவினர்,அரச அதிகாரிகள் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள், பயிற்சிகள் இடைநிறுத்தப் பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கல், அவர்களுக்கு பயண தடைகளை விதித்தல் என பல்வேறுபட்ட பரிந்துரைகளை ஆணையாளர் விடுத்துள்ளார். உலகம் எதிர்பார்க்கின்ற மனித உரிமை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாத நிலை தொடர்வதாகவும் இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் தொடர்பாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படாமல் இவ்விடயங்கள் தோல்வியையே தழுவியுள்ளன என்றே ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் உலகளாவிய ரீதியில் சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பன இலங்கைமீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி வருகின்றன. குறிப்பாக போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக மாறியுள்ளது.
மேற்படி அறிக்கை வெளியாகிய உடனேயே தமிழ்மக்கள் தரப்பில் மிகவும் நம்பிக்கை வழங்கிய பிரதிபலிப்புகள் வெளிவர தொடங்கின. மனித உரிமைப் பேரவை செயற்பாடுகளில் அதிக கரிசனை காட்டி விடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிக்கை திருப்தி அளிப்பதாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் வடக்கு, கிழக்கு முழுவதும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்கள் மேற் கிளம்பியுள்ளன. இப்போராட்டங்களில் இஸ்லாமிய மக்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இலங்கை ஆட்சியாளர் தமது நிலைப்பாட்டை அடக்கியே வாசித்து வந்தனர். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் மேற்படி அறிக்கையுடன் வெளியான யுத்த மீறல்கள் தொடர்பான காணொளி வெளியீட்டை கண்டித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அரசியல் தொடர்பான அம்சங்கள் பிரதிபலிக்கின்றன என்றும் கனடா, லண்டன் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து விடயங்கள் நகர்கின்றன என்றும் கருத்துக்களைக் கூறியிருந்தார். இறுதியாக கடந்த மூன்றாம் திகதி அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் மேற்படி அறிக்கை 17 பக்கங்களைக் கொண்டதாக இருந்தாலும் அதில் இரண்டு பக்கங்களே விடயங்களை உள்ளடக்கியது என்றும் ஏனையவை ஆதாரமற்றவையென தனது கருத்தை முன் வைத்திருந்தார்.
மேலும் இலங்கை அரசாங்கம் கடந்த ஜனவரி 22ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதி எ.எச்.எம். நவாஸ் தலைமையில் மூன்றுகு பேரை நியமித்து முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனை அமுலாக்கல் தொடர்பாக ஆராயுமாறு பணித்துள்ளது. இதனை தவிர இலங்கை அரசாங்கம் வேறு எதனையும் முன் எடுக்காமல் கூட்டத்தொடரை சந்திக்கவுள்ளது.
இதேநேரம் தென்னிலங்கையில் ஆங்கில ஊடகங்கள் மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பாக அதிக சிரத்தை எடுத்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. மீண்டும் இலங்கை சர்வதேச ரீதியாக ஒதுக்கப்படலாம் என்ற கவலையை அவை பதிவு செய்துள்ளன. மேலும் 2010 தொடக்கம் 2015 வரையிலான மஹிந்த ராஜபக்ச யுகத்தை அவை மீண்டும் ஞாபகப்படுத்தியும் உள்ளன. மேற்படி அறிக்கைக்கு எதிராக குரல் எடுப்பதன் மூலம் உள்ளூர் தேர்தல்களில் அனுகூலங்களைப் பெற முடியுமே தவிர சர்வதேச ரீதியாக இலங்கை தனிமைப்படுத்தப்படும் ஆபத்தை அவை அழுத்தி உரைத்துள்ளன.
துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான சர்ச்சை மேல் வந்த நிலையில் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை சற்று பின்நிலையில் இருந்த நிலையில் கிழக்கு முனையம் இன்று சர்வதேச விவகாரமாக மாறியுள்ள நிலையில் கிழக்கு முனையம் மற்றும் மனித உரிமை பேரவையின் அறிக்கை ஆகிய இரண்டு விடயங்களும் இன்று இலங்கையை சர்வதேச அரசியல் சுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளன.
மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சல் பற்ச்லெட் வரலாற்றில் மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையாளராக காணப்படுகின்றார். இவரது தந்தை அல்பெடோ பற்ச்லெட் சிலி நாட்டில் விமானப்படை தளபதியாக இருந்தார். இவர் உலகின் முதல் முதலாக வாக்குப் பலத்தின் மூலம் தெரிவான சோசலிச ஜனாதிபதியான அலன்டேய்க்கு விசுவாசமாக இருந்தவர். 1973இல் சதி மூலம் அலன்டேயின் பதவி பறிக்கப்பட்ட பின் ஆணையாளரின் தந்தை சிறை வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி சிறையிலேயே உயிர் நீத்தார். ஆணையாளரும் தாயும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் அடைந்தனர் . ஆனாலும் 2006ல் நடைபெற்ற சிலி நாட்டின் அதிபர் தேர்தலில் மிச்செல் பற்ச்லெட் வெற்றி பெற்றதுடன் அந்நாட்டை திறம்பட நிர்வாகித்து மனித உரிமை மீறல்கள் இடம் பெறாமல் ஆட்சி செய்தவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். மீண்டும் 2014இல் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் மிச்சல் பற்ச்லெட் வெற்றி பெற்று 2018 வரை சிலி நாட்டின் அதிபராக இருந்துள்ளார். இதன் பின்பே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளராக பதவி ஏற்றுள்ளார். புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைற்றனின் வருகையும் அமெரிக்க மக்களின் நிற வேற்றுமைக்கு எதிரான முழக்கமும் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சல் பற்ச்லெட்ரின் கொள்கைகளும் இலங்கை அரசாங்கத்துக்கு சவாலான நிலையேய 46வது மனித உரிமை கூட்டத்தொடரில் வழங்கும்.