;
Athirady Tamil News

கொவிட்-19 தடுப்பூசி எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்!! (கட்டுரை)

0

உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் கொவிட் 19 தொற்று இலங்கையில் பதிவாக ஆரம்பித்து மார்ச் 10 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இந்த நிலையில் இத்தொற்று பரவுதலின் தற்போதைய நிலைமை, தடுப்பு மருந்தேற்றல், அது தொடர்பில் நிலவும் ஐயங்கள், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர ‘தினகரன் வாரமஞ்சரி’க்கென வழங்கிய விஷேட பேட்டி…..

கேள்வி – இந்நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளமை தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில் – கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படுவதால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். மாறாக இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தவென நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே தற்போது இத்தொற்று குறைவடைந்து வருகின்றது. இத்தடுப்பூசியின் பிரதிபலன் கிடைக்க சிறிது காலம் எடுக்கும். ஏனெனில் இத்தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்கள் தான் கடந்துள்ளன.

கேள்வி – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர், தாம் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்வது குறைடைந்துள்ளதாகவும் அதனால்த்தான் தொற்றாளர்களின் எண்ணிக்ைக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனரே?

பதில் – – அதில் உண்மையில்லை. நாம் பி.சி.ஆர் பரிசோதனைகளைக் குறைக்கவுமில்லை. அது குறையவும் இல்லை. இப்பரிசோதனையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். அதாவது தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் அவருடன் நெருகிப்பழகியவர்கள், தொடர்புகளைப் பேணியவர்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம். ஆனால் தற்போது இத்தொற்றாளர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் நெருங்கிப் பழகும் மற்றும் தொடர்புகளைப் பேணியவர்களது எண்ணிக்கையும் குறைவடைந்திருக்கின்றது. அத்தோடு வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாகக் குறைவடைந்துள்ளது. இவற்றின் விளைவாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையும் குறைவடைந்திருக்கின்றது. ஆனால் சமூகத்தில் இத்தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

இருந்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அரசாங்க மருந்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமும் கொவிட் 19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த நாம் முன்னெடுக்கும் எந்த நடவடிக்கை தொடர்பிலும் எம்மைப் பாராட்டுவதில்லை. அவர்கள் எப்போதும் எமது வேலைத்திட்டங்களில் பிழைகளையே காண்கின்றனர். அவர்களது குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் இல்லை. வீணாக பொய் கூறுகின்றனர்.

பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கையைக் குறைத்து தொற்றாளர்கள் பதிவாவதைக் குறைத்துக் காண்பிப்பதாயின் அடையாளம் காணப்படாத தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொத்தணிகள் உருவாகிவிடும். இதனை நாம் அறியாதவர்கள் அல்லர்.

கேள்வி – கொவிட் 19 தடுப்பு மருந்து தொடர்பில் வெவ்வேறு விதமான கதைகள் நிலவுகின்றவே?

பதில் – – இத்தடுப்பூசியைப் பெறக்கூடாத சில பிரிவினர் உள்ளனர். குறிப்பாக சில மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுகளால் தீவிர ஒவ்வாமைக்கு உள்ளாகக் கூடியவர்கள் இதனைப் பெறலாகாது.

அதேநேரம் கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கும் பிள்ளை பெற எதிர்பார்த்திருப்போருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் அதுதொடர்பான ஆராய்ச்சிகளின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவற்றின் முடிவுகள் கிடைக்கப்பெறும்போது தடுப்பூசியை அவர்களுக்கு வழங்குவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும். இத்தடுப்பூசி நல்லதல்ல என்பதற்காக இவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை. அத்தோடு இத்தடுப்பூசியைப் பெற்றால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கும் ஆராய்ச்சி ரீதியில் எந்த சான்றும் கிடையாது. நாம் மிகவும் பாதுகாப்பான தடுப்பு மருந்தையே வழங்குகின்றோம். இத்தடுப்பூசிக்கு இந்நாட்டில் தீவிர பக்கவிளைவுகளும் இற்றைவரை பதிவாகவில்லை.

கேள்வி – இத்தடுப்பூசியைப் பெறுபவர்கள் வெயிலில் செல்லக்கூடாது, குளிக்கக்கூடாது, மது, புகைபிடித்தல் கூடாது, உடற்பயிற்சியில் ஈடுபடலாகாது என்றபடி நிலவும் கூற்றுக்கள்?

பதில் – – இத்தடுப்பூசிக்கும் இக்கூற்றுக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. தடுப்பு மருந்தொன்றைப் பெற்றால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி ஏற்படும். அதுவே இங்கும் இடம்பெறுகின்றது. இதன் விளைவாக உடல் வலி, காய்ச்சல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் குளிப்பது தவறான காரியம் அல்ல. ஆனால் காய்ச்சல் இருக்கும் போது நாம் எவரையும் குளிக்கச் சொல்ல மாட்டோம். விரும்பிய உணவை உண்ணலாம். பருகலாம்.

மேலும் சிகரெட் மற்றும் மதுசாரத்துக்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல. இவற்றின் பாவனை இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான காரணம் அல்ல. என்றாலும் சிகரெட், மது பாவனையாளர்களும் இத்தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மத்தியில் வெளிப்படாத நோய்கள் அதிகமாகக் காணப்படும். அதனால் அவர்கள் இத்தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தலும் அதிகம். அதன் விளைவாக உயிராபத்து அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்க நேரிடும். இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

கேள்வி – இத்தடுப்பூசியைப் பெற்ற இரண்டு நாட்களின் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனரே?

பதில் – – கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் 40 முதல் – 55 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்த போது அவர்கள் இருவரும் இதய நோயின் விளைவாக உயிரிழந்துள்ளனர். அவர்களது இதய நாளங்களில் கொழுப்பு பெரிதும் படிந்து அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஒருவருக்கு நீரிழிவு நோயும் காணப்பட்டுள்ளது. இவற்றின் விளைவாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் இம்மரணங்களுக்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை எமது சிரேஷ்ட பிரஜைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இத்தடுப்பூசி வழங்கப்படுகின்றது. அவர்களையும் இத்தொற்றிலிருந்து பாதுகாப்பதே எமது நோக்கம். ஆனால் இத்தடுப்பூசியைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் சிரேஷ்ட பிரஜைகள் மத்தியில் உயிரிழப்பு அதிகமாகக் காணப்படுவது இயல்பானது.

என்றாலும் தடுப்பூசி பெறுபவர்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு விரிவான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தடுப்பூசியினால் மரணங்கள் ஏற்படுமாயின் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளவே எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி – இத்தடுப்பூசியை ஒவ்வாமை, பாலூட்டும் தாய்மார், கரப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டாமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அப்படியாயின் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள், புற்று நோய்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வழங்க முடியுமா?

பதில் – -நிச்சயமாக. தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு கட்டாயம் இத்தடுப்பூசியை வழங்க வேண்டும். இத்தடுப்பூசியை வழங்கவென நாம் தயாரித்துள்ள முன்னுரிமைப் பட்டியலில் தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக நோய்க்குள்ளாகி இரத்த மாற்று ‘டயலிஸ்’ செய்பவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளவர்களுக்கும் இனம் காணப்படாத சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும், நீரிழிவு நோயாளர்களுக்கும் இத்தடுப்பூசியை வழங்குவோம். ஏனெனில் தொற்றா நோயாளர்களுக்கு அதிக உயிராபத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது இத்தொற்று.

இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக, தாம் பயன்படுத்தும் மருந்துப்பொருட்களிலும் பாவனையிலும் எவ்வித மாற்றங்களையும் அவர்கள் செய்ய வேண்டியதில்லை. இத்தடுப்பு மருந்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அவர்கள் தொற்றா நோய்க்கான மருந்துகளை தொடர்ந்தும் பாவிக்கத் தவறக்கூடாது.

கேள்வி – இத்தடுப்பூசி வழங்கும் சில நிலையங்களில் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கும் கொவிட் 19 கொத்தணிகள் உருவாகலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றதே?

பதில் – – நாட்டில் எல்லா மக்களுக்கும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டளவில் தான் இத்தடுப்பூசி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் கிடைக்கப்பெறும் ஒழுங்குக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்குகின்றோம். என்றாலும் தமது முறை வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து ஒவ்வொருவரும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே இத்தடுப்பு மருந்து வழங்கல் மூலம் உரிய பிரதிபலன் கிடைக்கப்பெற வழிவகுக்கும். ஒவ்வொருவரும் தாம் வாழும் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர், மருத்துவமாது, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் தொடர்புகொண்டு தாம் வாழும் பிரதேசத்தில் இத்தடுப்பூசி வழங்கப்படும் தினத்தில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட மற்றொரு நாளில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். அதனால் இத்தடுப்பூசியைப் பெறவென முண்டியடிக்கத் தேவையில்லை,

முதலில் கொவிட் 19 தொற்று தொடர்பிலான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளில் ஈடுபடும் சுகாதார துறையினர், பொலிஸார் உள்ளிட்ட முப்படையினர் அடங்கலான முன்னணியில் நின்று கருமமாற்றுபவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தொற்று அடிக்கடி பதிவான துறைமுகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களின் ஊழியர்களுக்கும், தற்போது உள்ளூராட்சி மன்றகளில் திண்மக் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. ஏனெனில் இவர்களும் இத்தொற்றுக்கு அடிக்கடி உள்ளாகக்கூடியவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் இத்தொற்று பரவுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்கும் வகையிலேயே இவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அச்சுறுத்தல் மிக்க பிரிவினருக்கு தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

ஆனால் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்படுவதில்லை. அதனால் எவரும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லவும் தேவையில்லை.

கேள்வி – தற்போது இத்தடுப்பூசி வழங்கப்படும் பிரதேசங்கள்?

பதில் – – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரப் பிரதேசங்களிலும் தற்போது இத்தடுப்பூசி வழங்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சுகாதார ஊழியர்கள், கொவிட் 19 பராமரிப்பு பணியில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் மாத்திரமல்லாமல் தனியார் வைத்தியசாலைகளின் டொக்டர்கள், தாதியர் உள்ளிட்ட ஊழியர்ளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு சிறுநீரகப் பாதிப்புக்கு இரத்த மாற்று ‘டயலிஸஸ்’ செய்பவர்களுக்கும் இத்தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பு மருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைக்கப்பெற்று வருவதால் அதிக பிரதிபயன்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களுக்கு முதலில் வழங்கப்படுகின்றன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தான் இத்தொற்றுக்கு அதிகளவானோர் உள்ளாகினர். இங்கு இத்தொற்றுக்குள்ளானவர்கள் ஊடாகவே கிராமங்களுக்கும் இத்தொற்று பரவியது. அதனால் இங்கு இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. அதன் ஊடாக இத்தொற்று கிராமத்திற்கு செல்வது இயல்பாகவே கட்டுப்படும்.

கேள்வி – இந்நாட்டில் அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துக்கு அனுமதியளிக்கப்பட்டு அது பயன்பாட்டிலும் இருக்கும் நிலையில் ரஷ்ய உற்பத்தியான ‘ஸ்புட்னிக் – வி’ என்ற தடுப்பூசிக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதே?

பதில் – – நாம் அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தில் 18 மில்லியனை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்து கேள்விப் பத்திரமும் சமர்ப்பித்துள்ளோம். ஆனால் அத்தடுப்பூசி பல நாடுகளுக்கும் வழங்கப்படுவதால் எமக்கு கொஞ்சமாகவே கிடைக்கப்பெறுகின்றது. அதன் விளைவாகவே 05 இலட்சம் தடுப்பூசி, பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே வழங்கியுள்ள வாக்குறுதிக்கு அமைய ‘கொவெக்‌ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 02 இலட்சத்து 74 ஆயிரம் ‘அஸ்ட்ராசெனகா’ தடுப்பு மருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) கிடைக்கப்பெறுகின்றது.

என்றாலும் ஏனைய தடுப்பு மருந்துகள் தொடர்பிலும் நாம் மிகுந்த முன்னவதானத்துடன் கவனம் செலுத்தி வருகின்றோம். அந்த வகையில் தான் தேசிய மருந்துப்பொருள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நிபுணத்துவக் குழு ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கு ஏற்ப அவர்கள் அங்கீகார சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் பின்னர் தடுப்பு மருந்துகள் தொடர்பான இந்நாட்டின் உச்ச சபையாக விளங்கும் தொற்று நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழு சிபாரிசுகளை அளிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அத்தடுப்பூசியை இங்கு கொண்டு வர முடியும். ஆனாலும் முதலில் வழங்கும் நிறுவனத் தடுப்பூசியையே இரண்டாம் தடவையும் வழங்க நாம் தீர்மானித்திருக்கின்றோம்.

கேள்வி – நிறைவாக, நாட்டு மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரைகள் யாது?

பதில் – – இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக ஒருவருக்கு இத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோயின் தீவிரநிலையும் குறைவடையும். அத்தோடு இத்தொற்றுக்குள்ளாகின்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான காரணங்கள், உயிரிழப்புக்கான சந்தர்ப்பங்களும் கூட குறையும். ஆனாலும் இத்தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இத்தொற்று மிகவும் அரிதாக ஏற்பட முடியும். அவ்வாறு ஏற்படுமாயின் அவர்களிடமிருந்து ஏனையவர்களுக்கு இத்தொற்று பரவலாம். அதனால் தடுப்பூசி பெற்றவர்களும் முன்னவதானத்துடன் செயற்பட வேண்டும். தடுப்பூசியைப் பெற்று விட்டதற்காக முகக்கவசம் அணிவதையோ, கை கழுவதையோ, சமூக இடைவெளியைப் பேணுவதையோ தவிர்க்க முடியாது. அதனால் ஆராய்ச்சி ரீதியான முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையும் ஒவ்வொருவரும் கொவிட் 19 தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவது அவசியம். அத்தோடு இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள அச்சப்படவும் தேவையில்லை. அதனைப் பெற்றுக்கொள்ள முண்டியடிக்கவும் தேவையில்லை. உரிய நேர காலத்தில் நிச்சயம் தடுப்பூசி கிடைக்கப்பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + four =

*