;
Athirady Tamil News

11 ஆண்டுகளாக ஜெனிவா பிரேரணை மூலம் தமிழருக்கு கிட்டிய விமோசனம் என்ன? (கட்டுரை)

0

“தமிழ் மக்களின் நெருக்கடி களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக் கூடிய தலைமைகள் எதுவும் இல்லை” என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது தமிழ் அரசியல்வாதிகளிற் பலருக்கும் பிடிக்கவில்லை. சிலர் என்னோடு தனிப்பட சண்டைக்கே வந்து விட்டனர். ஆனால், “சரியான கணிப்பு இது” என்று மக்கள் தரப்பிலிருந்து பலரும் பாராட்டினார்கள். இதில் இருவர் “இதை சற்று விரிவாக்கி தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக் கூடிய தலைமைகள் எதுவும் நாட்டிலேயே இல்லை. அதாவது அரசிலும் இல்லை. ஒட்டுமொத்தச் சிங்களத் தரப்பிலும் இப்பொழுது அப்படியானதொரு தலைமை கிடையாது” என்று குறிப்பிடுங்கோ” என்றனர்.

இதுதான் தலைமைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேறுபாடும் உண்மையுமாகும். அரசியல்வாதிகளை விட, இந்தத் தலைமைகளை விட மக்களில் பலர் தெளிவான பார்வையோடுள்ளனர். அவர்களுக்கு உண்மையும் யதார்த்தமும் புரியும். இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்வதற்கு எவருக்கும் கடினமில்லை. ஏன் பலருக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. தங்களின் நலன்கள் கெட்டு விடும் என்பதே இதற்குக் காரணம்.

ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதைப்போல, இவர்களைத் திருத்தவே முடியாது. ஆட்களை மாற்றுவதாலும் பயனில்லை. அப்படி ஆட்களை மாற்றுவதால் பயனிருக்கும் என்றால் தமிழ்த்தரப்பில் செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன் என்று ஆட்கள் மாறியிருக்கிறார்கள். ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இந்த இடத்தில் சுமந்திரனோ, சாணக்கியனோ, விக்கினேஸ்வரனோ, கஜேந்திரகுமாரோ இருந்தாலும் இதுதான் நடக்கும்.

பழைய கள்ளு புதிய மொந்தையில் என்ற மாதிரி. இதற்கு நல்ல உதாரணம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்று முலாம் பூசப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று மினுக்கிக் காட்டப்படுகிறது. தென்னிலங்கையில் சிங்களத் தரப்பிலும் இதுதான் கதை. அங்கே சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மறுவார்ப்பாக பொதுஜன பெரமுன என்றாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இப்பொழுது ஐக்கிய மக்கள் சக்தி என்று தோற்றம் காட்டுகிறது.

தவிர, ஐ.தே.கவும் சு.கவும் பழைய ரங்குப் பெட்டியாக இன்னும் மிஞ்சிக் கிடக்கின்றன. இவை எல்லாவற்றிலும் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். இவர்கள் எவரிடமும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற விசுவாசமான – நேர்மையான எண்ணம் கிடையாது. அதைப்போல நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி போன்றவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணமும் அதற்காகத் தம்மை அர்ப்பணிக்கின்ற மனப்பாங்கும் இல்லை. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனப் பார்வையும் செயற்றிட்டமும் கிடையாது. எதிர்த்தரப்புகளை மடக்கி தம்மை நிலைப்படுத்துகின்ற தந்திரோபாயத்துக்கு அப்பால் எந்த வெற்றிப் புள்ளிகளும் இவர்களிடத்தில் இல்லை.

இதனால்தான் நாடு வரவர சிக்கலான நிலைமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதை எவராலும் மறுக்கவே முடியாது. யுத்த காலத்தைத்தான் விடுவோம். அது ஆயிரம் சிக்கல்களையும் முடிச்சுகளையும் கொண்டது. யுத்தம் முடிந்து பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் பதினொரு ஆண்டுகளில் தமிழ்த்தரப்பும் சரி, சிங்களத் தரப்பும் சரி உருப்படியாக எதையாவது இந்த நாட்டுக்கும் தாம் சார்ந்த மக்களுக்கும் செய்திருக்கின்றனவா? பதிலாக நாட்டைச் சர்வதேச நெருக்கடிக்குள்ளும் பிராந்திய அழுத்தத்திற்குள்ளுமே தள்ளி விட்டிருக்கின்றன. அதாவது தமக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய – கண்டிருக்க வேண்டிய இணக்கப்புள்ளிகளை விட்டு விட்டு, வெளிச் சக்திகளின் கால்களில் மண்டியிட்டிருக்கின்றன. இதனால் நாடு மிகப் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இன்றைய சூழலில் நாடு இன்னொரு யுத்தச் சூழலுக்குள்ளேயே இருக்கிறது. அப்படி நம் கண்களுக்குப் புலப்படவில்லையே தவிர, உள் நிலைமை அதுதான்.

இது ஏன் நிகழ்கிறது? இந்த நிலைமை எப்படித் தொடர்கிறது? என்றால், ஒன்று பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும் மிகத் திறமையாக இலங்கைச் சமூகங்களைப் பிரித்தாளுகின்றன என்பது. இரண்டாவது, இந்தப் பிரித்தாளும் தந்திரத்துக்கு இலகுவில் இலங்கைச் சமூகங்களும் அவற்றின் அரசியல் தலைமைகளும் இலகுவாகப் பலியாகின்றன என்பது. மூன்றாவது, தமக்கிடையில் இணக்கப்பாட்டையும் ஒருமைப்பாட்டையும் காணக்கூடிய மனநிலையை – உள நிலையை இந்தச் சமூகங்களும் இழந்து நிற்கின்றன. தலைமைகளும் அவற்றுக்குத் தயாரில்லை. அவை இணக்கப்பாட்டுக்குச் செல்வதை விட, ஒருமைப்பாடுகளைக் காண்பதை விட பகை நிலையையும் முரண் நிலையையும் வளர்ப்பது இலகு. அதிக லாபம் தரக்கூடியது என நம்பியிருக்கின்றன என்பது.

நான்காவது, தங்கள் கடந்த கால அனுபவங்களை (பட்டறிவை) பாடமாகக் கொள்வதற்கு இலங்கைச் சமூகங்கள் தயாரில்லை என்பது. இதில் பிராந்திய சக்திகளும் சர்வதேச சமூகமும் எப்படியெல்லாம் செயற்படும்? அவற்றின் நோக்கு என்ன? தந்திரம் என்ன? இலங்கைச் சமூகங்களாக இருக்கும் நாம் தொடர்ச்சியாக இப்படியே முரண்பட்டுக் கொண்டும் பகைமை நிலையிலும் இருந்தால் நாட்டுக்கும் தமக்கும் ஏற்படும் பாதிப்புகள் எப்படியானது? கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பதென்ன? இந்த நிலை இப்படியே நீடித்தால் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதைக் குறித்துச் சிந்திக்காதோராய் இருப்பது.

ஐந்தாவது, மாற்றங்களை நிகழ்த்த விரும்பும் சக்திகளை மக்கள் இனங்காண மறுப்பதும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளத் தயங்குவதுமாகும். உண்மையிலேயே நாட்டில் மாற்றத்தை உண்டாக்க விரும்பும் தரப்புகள் உண்டு. ஆனால், அவை நிதிப்பலம். ஊடக ஆதரவு. மக்களிடம் போதிய அறிமுகமற்ற – செல்வாக்கற்ற நிலையிலேயே உள்ளன. இவற்றை முன்கொண்டு செல்லும் பொறுப்பை ஊடகவியலாளர்களும் மாற்றாளர்களும் புத்திஜீவிகளும் எடுப்பதில்லை. அவர்களும் பழைய இனவாத அலைகளில் இழுபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

என்பதால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டிகளும் இல்லை. தீர்க்கதரிசிகளும் இல்லை. தலைவர்களும் இல்லை என்று அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. மிக இலகுவாகவே பரிகாரம் காண வேண்டிய பல பிரச்சினைகள் பத்தாண்டுகளுக்கு மேலாக பாராமுகமாகவே இருக்கின்றன, இழுத்தடிக்கப்படுகின்றன என்றால், அதற்குக் காரணம் என்ன? இதற்கான நோக்கம் என்ன? ஒரு சிறிய கேள்வி அல்லது சிறியதொரு உதாரணம், போரிலே உடல் உறுப்புகளை இழந்த நிலையில் எண்பது ஆயிரம் பேர் வரையில் வடக்குக் கிழக்கில் மட்டும் உள்ளனர். அதைப்போல இதே எண்ணிக்கையுடைய பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உண்டு. இவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டம் என்று எதை அரசாங்கமும் இந்தக் கட்சிகளும் இந்தத் தலைமைகளும் உருவாக்கியுள்ளன? என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்?

இப்படிப் பல நூறு பிரச்சினைகள் நம்மால் தீர்க்கப்பட்டிருக்கக் கூடியவையும் தீர்க்க வேண்டியவையும் உண்டு. இதைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பது ஏன்? இது எந்த வகையில் நியாயமானது?

முக்கியமாக இவற்றிடம் அர்ப்பணிப்புணர்வும் மக்கள் மீதான கரிசனையும் இல்லை என்பதே இதற்கான காரணமாகும். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால், இவற்றுக்கு தங்கள் மக்கள் மீதான கரிசனையையும் விட பிராந்திய – சர்வதேச சக்திகளே இன்று முக்கியமாகி விட்டன. அவற்றின் நிகழ்ச்சி நிரலே முக்கியமாகி விட்டது. அவற்றுக்காக காவடி எடுப்பதே வழமை – பெருமை என்றாகி விட்டது. இதுவே இன்று மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராகியுள்ளது.

இதை இவை மறுத்துரைப்பதாக இருந்தால் இந்தத் தலைமைகளிடத்திலும் இந்தக் கட்சிகளிடத்திலும் நாம் பல கேள்விகளை எழுப்ப முடியும். அதிகம் ஏன், தமிழ்க்கட்சிகளிடத்திலேயே ஒன்றிரண்டு எளிய கேள்விகளைக் கேட்கலாம். காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வைக் காண்பதற்கு அந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்களே. அந்தப் போராட்டத்தில் உங்களுடைய நேர்மையான பங்களிப்பு என்ன? அந்த மக்களுக்கு என்ன வகையான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளீர்கள்? அதற்கான கால வரையறை என்ன? அதுவரையிலும் அந்தக் குடும்பங்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆதரவற்ற நிலை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றுக்கு நீங்கள் இதுவரையில் செய்துள்ள ஏற்பாடுகள் என்ன? எத்தனை குடும்பங்களை நீங்கள் இதுவரையில் பராமரித்து வருகிறீர்கள்? அவர்களுடைய வீடுகளுக்கு போய் வருகிறீர்களா? அப்படியென்றால், அது எவ்வளவு எனப் பட்டியலிட முடியுமா? அப்படி நீங்கள் சென்று வரும்போது கண்டுணர்ந்தது என்ன? அப்படிக் கண்டுணர்ந்தவற்றுக்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்திருக்கிறீர்கள்? இதைப்பற்றி எங்காவது குறிப்பிட்டிருக்கிறீர்களா? உங்கள் கட்சியில் இதைப்பற்றி நீங்கள் பேசியதென்ன? எடுத்த தீர்மானம் என்ன? அந்தத் தீர்மானத்தின்படி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

இப்படி போராளிகளின் விடயங்களுக்கு நீங்கள் மேற்கொண்டிருக்கும் திட்டங்களும் செயற்பாடுகளும் என்ன? அவற்றின் பலன்கள் எவ்வாறுள்ளன? இன்னும் மண வாழ்க்கையை எட்டாமல் தனியே வாழும் 40 வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் பெண் போராளிகளின் நிலைக்கு உங்களுடைய ஏற்பாடுகள் என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 18 =

*