;
Athirady Tamil News

ஜெனீவாவும் நிலைமாறுகால நீதியும் தமிழர் அரசியலும்!! (கட்டுரை)

0

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷேல் பச்சலட், “உள்நாட்டு யுத்தம் முடிந்து, 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தமை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இதற்குப் பதிலளித்திருந்த இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, “உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு நாட்டினுடைய இறையாண்மை, சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம், தமிழர்களின் போராட்ட வடிவத்தில் ஒன்றாகத் தமிழ்க் கட்சிகளாலும், குறிப்பாகப் புலம்பெயர் தமிழர் தரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலைமாறுகால நீதி என்பது, இதன் அடிநாதமாக முன்னிறுத்தப்படுவதோடு, தொடர்ந்து நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் இந்தத் தரப்புகள் முன்னிலைப்படுத்தி வருகின்றன.

நிலைமாறுகால நீதியின் அடிப்படை என்பது, முரண்பாட்டுக்கால நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறலிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்திலும் தங்கியிருக்கிறது. ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற நிலையை அடைவதற்கு முன்னதாக, நடந்த அநீதிகள் அடையாளம் காணப்பட்டு, அதனை இழைத்தோர் அடையாளம் காணப்பட்டு, அதற்கான பொறுப்புக்கூறல் அவசியமாகிறது. அத்தோடு அந்த அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் என்பது அவசியமாகிறது. இதன் அடுத்தகட்டம் தான், ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற நிலையாக முடியும் என்பதுதான், நிலைமாறுகால நீதியின் சுருக்கமான தாற்பரியம்.

நிலைமாறுகால நீதி, பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம், சுயமரியாதை, மனிதம் என்பவற்றை முன்னிலைப்படுத்துகிறது. அவற்றை மறந்துவிட்டு, பேச்சளவில் மீளிணக்கப்பாட்டையும் சமாதானத்தையும் உருவாக்குவது என்பது, எளிதில் உடையக்கூடிய சமாதானத்தைத் தான் கொண்டு வந்து சேர்க்கும். நிற்க!

சர்வதேச சட்டங்களின் ஊடாகவும் சர்வதேசப் பொறிமுறைகளைப் பயன்படுத்தியும் இலங்கைக்கு அழுத்தம் தர முடியும் என்று மிகக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம், இன்று தமிழர்களிடையே பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியிருக்கிறது.

முப்பது வருட கால யுத்தம் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இந்தச் சர்வதேசப் பொறிமுறையும் பூகோள அரசியலும், தமிழர்களின் அடுத்த அரசியல் ஆயுதமாகத் தமிழ் அரசியல் தலைமைகளாலும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளாலும் முன்னிறுத்தப்பட்டு, வருகிறது.

ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 12 வருடங்களாகியும், எந்த விமோசனமும் கிடைக்கவில்லை என்ற விரக்தி தமிழ் மக்களிடையே காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, தமிழர் தரப்பு ஆதரித்த ‘நல்லாட்சி அரசாங்கம்’ நான்கு வருடங்கள் பதவியிலிருந்து சொல்லிக் கொள்ளக்கூடிய எந்தப் பெரு நன்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை.

எப்படித் ‘தனிநாடு’ என்ற ஆகாயக்கோட்டை, தமிழ் மக்களிடையே விற்கப்பட்டதோ, அதுபோலவே ஜெனீவாவும் ஆகிவிடுமோ என்ற விரக்தியும் அவநம்பிக்கையும் தமிழ் மக்களிடம் எழுவது ஆச்சரியப்படுவதற்கு உரியதல்ல.

சீனாவுக்கு ஆதரவான அரசாங்கம் இலங்கையில் ஆட்சியிலுள்ள போது, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் மேற்கு நாடுகள், தமக்கு ஆதரவான அரசாங்கம் நாளை இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் அடக்கி வாசிக்கும். இதுதான் தமிழ் மக்கள் கண்டு உணர்ந்த, சர்வதேச அரசியல் ஆகும்.

மியான்மாரில் ரொஹிங்கியாக்களுக்கு எதிரான சித்திரவதை, வன்முறை தொடர்பிலான வழக்கை கம்பியா ஊடாக, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) (இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்ததோடு குழப்பிக்கொள்ளக் கூடாது; அது வேறு) பாரப்படுத்தியதைப் போல, இலங்கைக்கு எதிராக ஒரு வழக்கையும் சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது, பல தமிழ் அமைப்புகளின், குறிப்பாக புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் ஆகும்.

இந்த நோக்கத்துக்கு வலுச்சேர்க்க தமிழர் தரப்பில் பல சர்வதேச சட்டத்தில் அறிவும் அனுபவமும்மிக்க தொழில்நுட்பவல்லுனர்கள் (technocrats) இருக்கிறார்கள்.இலங்கைக்கு எதிரான வழக்கை எப்படி சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பதற்கான மிகச் சிறந்த உபாயங்களை, அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உபாயங்கள், அறிவுசார் ரீதியில் மெச்சத்தக்கவை.

ஆனால், சர்வதேசச் சட்டங்களுக்கு நிறைய மட்டுப்பாடுகள் உண்டு. குறிப்பாக, ஓர் அரசின் இறைமை என்பது, மிக முக்கிய மட்டுப்பாடு; சர்வதேச, பிராந்திய, பூகோள அரசியல் என்பவையும் இங்கு முக்கிய மட்டுப்பாடுகள் என்பதும் இந்தத் தொழிநுட்ப வல்லுனர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மிகச்சிக்கலானதொரு சதுரங்க ஆட்டத்தை ஆடுவதுபோல, இந்த ஆட்டத்தை இவர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் நல்ல தீனிபோடும் ஆட்டம் இது. நிற்க!

‘பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு சீவன் போகுதாம்’ என்று ஒரு சொல்லடைவுண்டு. இன்றைய சூழலில், இலங்கையின் பொருளாதாரத்தில் பின்தங்கிய கடைசி இரண்டு மாகாணங்கள் தமிழரின் ‘தாயகம்’ என்று உரிமைகோரப்படும் கிழக்கும் வடக்கும் ஆகும்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளாகப்போகும் நிலையில் கூட, அங்கு பெரும் பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. தமிழர்கள் சிலாகித்துக் கொள்ளும் கல்வியைப் பொறுத்தவரையில் கூட, யுத்தகாலத்தை விட, பின்தங்கிய நிலையை வடக்கும், கிழக்கும் சந்தித்து வருகின்றன.

ஆனால், அறிவும் அனுபவமும் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் புலம்பெயர் தமிழர்களின் அக்கறை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றிச் சிந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதையும் கடந்தகாலத்துக்கான நீதியையும் தமிழ் மக்களின் இன்றை பொருளாதார சமூக நிலையையும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் இங்கு ஒன்றோடொன்று ஒப்பிடவில்லை.

ஆனால், தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திப்பவர்களாகத் தம்மை முன்னிறுத்துகிறவர்கள், கடந்தகாலத்துக்கான நீதி தொடர்பில் காட்டும் கரிசனத்தின் ஒரு துளியை என்றாலும் தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு வலுச்சேர்ப்பது தொடர்பில் காட்டவில்லையே என்ற ஆதங்கம் பலரிடமும் இருக்கிறது. அவர்களைத் ‘துரோகிகள்’ என்று எளிதாக முத்திரை குத்திக் கடந்துவிடலாம்.

ஆனால், அது தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையைப் பெற்றுத்தரும்? இந்த மண்ணில் வாழாத, இங்கு வாழும் திட்டம் கூட இல்லாதவர்களுக்கு, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் இந்த மண்ணில் தங்கியிராதவர்களுக்கு, இந்த மண் பற்றியும், இந்த மக்கள் பற்றியுமான தொலைநோக்கும்பார்வையும், அத்தகைய தொலைநோக்குப்பார்வையால் விளையும் நிகழ்ச்சிநிரலும் அவசியமில்லை.

அவர்களுக்கு இதை உச்சபட்ச நேர்மையுடன் கூட முன்னெடுக்கலாம். ஆனால், அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கப்போவதில்லை. ஆனால், இந்த மண்ணில் வாழ்கிற, வாழப்போகிற தமிழ் மக்களின் நிலை என்ன, என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தமிழ் அரசியலின் நிலையை மிகச் சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தமிழர் அரசியல் பரப்பில் தொழில்நுட்பவல்லுனர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள், ஆனால், தொலைநோக்குப் பார்வையுடையவர்கள் (visionaries) எவருமே இலர். தமிழ் மக்களின் எதிர்காலத்தை பரந்தபார்வை கொண்டு திட்டமிட்டு, அதற்கேற்றாற் போல அரசியலை முன்னெடுக்கும் தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்கள் இன்மைதான் தமிழ் மக்களின் மிகப்பெரிய சாபக்கேடு.

இன்று தமிழ் மக்களின் அரசியல் என்பது புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சிநிரலுக்கும், சில தொழில்நுட்பவல்லுனர்களின் நிகழ்ச்சிநிரலுக்கும் ஏற்ப இயங்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சிநிரல் அல்ல. இவற்றுக்குத் தொலைநோக்குப் பார்வை கிடையாது. தமிழ் மக்களின் இன்றைய தேவை தொலைநோக்கும் தீர்க்கதரிசனமும் மிக்கதோர் அரசியல் பயணம். அதனை அவர்களே முடிவுசெய்ய வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + thirteen =

*