;
Athirady Tamil News

நோய்கள் குறைந்தாலும் விளைச்சல் அதிகரிக்குமா? சரிகள் பிழைகளாகின்றன!! (கட்டுரை)

0

அரசாங்கத்தின் சேதனப் பயிர் செய்கை திட்டத்தில் ‘நஞ்சற்ற உணவு’ எனும் திட்டத்தைப் பாராட்டினாலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையும் முன்வைக்காமல், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது, பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

நாட்டின் முதுகெலும்பெனக் கூறப்படும் விவசாயிகளின் நலன்களில் அக்கறை காட்டாமல், அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுக்காமல், திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பது, கவலை தரக்கூடிய விடயமாகும்.

குறிப்பாக, சேதனப் பசளை தொடர்பான பயன்பாட்டில், எவ்வாறு வெற்றி அடையலாமென்பது பற்றி, முறையாகவும் பூரணமாகவும் விவசாயிகளை, அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றார்கள்.

இரசாயன பயிர்ச்செய்கையில் முழ்கிப்போயுள்ள விவசாயிகள், சேதனப் பசளை என்றதும், அவர்கள் வேளாண்மை செய்யும் காலத்தைக் கணிப்பீடு செய்வதையும் விளைச்சலின் வினைத்திறனையும் தான் பார்க்கிறார்கள். அதுதான் யதார்த்தமானது; அதில் தவறில்லை.

உதாரணமாக, ஒரு போகத்தின் காலம் சுமாராக மூன்றரை மாதம் (ஏறக்குறைய 105 நாள்கள்) என வைத்துக்கொண்டால், இக்காலப்பகுதியைத் திட்டமிட்டு வைத்துக் கொண்டே விவசாயிகள், நெற்பயிர் செய்கையில் ஈடுபடுவார்கள்.

இதன்போது, முதற்றடவையாக உழுது விட்டு, விதைப்பு வேலை நடைபெறும். பின்னர், நிலத்தில் காணப்படும் ஈரப்பதனுக்கு ஏற்றாப்போல், நீர் தேவையென்றால், நீரைக்கட்டுவார்கள். இல்லாவிட்டால், அவ்வாறே, விடுவார்கள். குறிப்பட்ட நாள்கள் சென்ற பின்னர், பயிர் வளர ஆரம்பமாகும். இந்த நேரத்தில், முறையற்ற விதத்தில் பயிர் வளரும். அதாவது, சில இடத்தில் கட்டையாகவும், சில இடத்தில் வளராமலும் இருக்கும்.

அந்த நாள்களில், விவசாயிகள் நிலத்துக்குத் தேவையான பசளைகளைக் கொடுக்க வேண்டும். இதன்போது, நெற்பயிருக்கு யூரியா எனும் பசளையைப் பாவிப்பார்கள்.பிறகு, குடளைப் பருவத்துக்கான பசளையைப் பயன்படுத்துவார்கள். இக்குடளைப் பசளை பாவிப்பதால்,நெற்பயிர் வீரியமடைந்த நிறைவான நெல் மணிகளைத் தரும். இவ்வாறு பாவிக்காவிட்டால், நெல்லின் நிறைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

இதேவேளை, இங்கு பாவிக்கப்படும் நிலப்பசளைக்கு ‘TSP’, யூரியா, பொட்டாசியம் என மூன்று வகைப் பசளைகளைப் பாவிப்பார்கள். இதனால் பயிரின் வளர்ச்சி, மிக வேகமாக இருக்கும். இதில் விசேடம் என்னவென்றால், இவை பயன்படுத்தப்படும் போது, பயிர்கள் பச்சைப்பசேல் என பூரணத்துவமாகச் சிறப்புடன் காட்சியளிக்கும்.

இதேவேளை,சில பயிர்கள் ஆங்காங்கே வளராமல், இருக்கும் நிலையில், அவற்றை வளர்ச்சியடையச் செய்வதற்காக ‘உப்பு எண்ணெய்’யைப் பயன்படுத்துவார்கள். இதனால், உடனடியாகப் பயிர்கள் அடர்த்தியாக வளரும். இதன்போது, வெயில் தாக்கத்தால், பயிரில் பச்சையத் தன்மை இழக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ‘ஹைதரோகொம்பஸர்’ எனும் இரசாயனத்தைப் பாவித்தால், அது பச்சையத்தை வெளிப்படுத்தும்.

இவ்வாறு, இரசாயனம் அதிகமாகப் பாவிக்கப்பட்டாலும் விவசாயிகள் நெற்பயிரின் தன்மையில் மகிழ்ச்சியடைவார்கள். இந்த விவசாயத்தில் அசேதனப் பசளைகளை (இரசாயனம்) பயன் படுத்தி, அதிக விளைச்சலைப் பெறுவார்கள். இதேவேளை, ‘டிஸ்கவரி, அல்ட்டா’ போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்துவதால்,நெற்பயிர்கள் (வாட்டசாட்டமாக) சிறந்து காணப்படும்.

இவ்வாறான வழமைகள் காணப்படும் சந்தர்ப்பத்தில், சேதனைப் பசளை திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால், விவசாயிகள் குழப்படைந்து காணப்படுகின்றார்கள். சேதனப் பசளை மூலம் மட்டு​மே, நெற்செய்கை பண்ணப்பட்டால், பயிரின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பை, எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து அரசாங்கம் எந்தவித தௌிவுபடுத்தல்களையும் வழங்கவில்லை என்பது கவலைக்குரிய போக்காகக் காணப்படுகின்றது.

தற்போதைய நிலையில், விவசாயிகள் சேதனப் பசளையைப் பயன்படுத்தினால் விளைச்சல் குறையலாமெனவும், சிலநேரங்களில் வழமையான காலத்தை விட வும் அதிகமான காலத்தை எடுக்கக் கூடியதாகவும் இருக்கலாமெனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இரசாயப் பசளைப் பாவனைக்குப் பழக்கப்பட்ட தற்போதுள்ள நிலங்களில், சேதனப் பசளை உடனடியாகப் பயன் அளிக்காதெனத் தெரிவிக்கும் விவசாயிகள், சேதனப் பசளை, நிலத்தைச் சேர்வதற்கு சுமார் ஒன்று அல்லது ஒன்‌றரை வருடங்கள் செல்லலாமெனவும் தெரிவிக்கின்றனர். அதாவது, குறைந்தது மூன்று போகங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கலாமெனவும் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை, பயிர்ச் செய்கையின்போது இரசாயனங்கள் அதிகமாகப் பாவிப்பதால், மக்களுக்கு நோய் அதிகமாக ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில், சேதனப்பசளைப் பயன்பாட்டில், நெற்பயிர்களுக்கிடையே காணப்படும் இடைவெளிகளை, எவ்வாறு சீர் செய்வதென்பது பற்றி, விவசாயத் திணைக்களமோ அது சார்ந்த திணைக்கள‍ங்களோ இதுவரையில் விவசாயிகளுக்கு தௌிவுபடுத்தவில்லை. நெற்கதிர்கள் நிறையில் வேறுபாடாக இருக்கும்போது, எவ்வாறான நடவடிக்கைளை எடுப்பது குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.

நெற்கதிர்கள் முதிர்ச்சியடையவில்லை என்றால், இதற்கு என்ன செய்வது என்பது குறித்த பூரண அறிவுறுத்தல்கள் இல்லை. உதாரணமாக, ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் நெற்காணியில் சுமாராக 35 – 40 மூடைகள் நெல் விளைச்சல் கிடைக்கும். இது சாதாரணமாக, அசேதனப் பசளை பாவிப்பதால் கிடைப்பதாகும். இதேவேளை, சேதனப் பசளை பயன்பாடின்போது, இதனைவிடக் குறைவான அறுவடையைத்தான் எதிர்பார்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அதிகப்படியான விளைச்சலை, சேதனப் பசளை மூலம் எப்போது பெறலாமென விவசாயிகள் கேள்வி கேட்கின்றனர். தற்போது அரசாங்கம் சேதனப் பசளையை எவ்வாறு பங்கீடு செய்யப்போகின்றது? சில பிரதேசத்திலுள்ள மண்ணின் வகையில், இதன் விளைச்சல் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த கேள்வியும் எழுகின்றது.

சில நிலங்கள், அதிமான களிமண் தன்மையுடன் காணப்படுவதால் சேதனப்பசளை எவ்வாறு பயன்தரும்? சில பிரதேசம் மணல் நிலமாகக் காணப்படும். இதில் சாதாரணமாக விளைச்சல் குறைவாகவே காணப்படும். இதற்கு, சேதனப் பசளை எவ்வாறு கைகொடுக்கும்? இதற்கான விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

சேதனப்பசளை முறைமை, கைகொடுக்காத சந்தர்ப்பத்தில், அரசாங்கம் விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றது? ஊக்குவிப்புக்கு சேதனப்பசளையை எந்த அடிப்படையில் செயற்படுத்தப்போகின்றது.

பயிர்களில் பூச்சிகள் காணப்படும்போது, இரசாயனப் பதார்த்த பூச்சிகொல்லிகளைக் கொண்டு அதனை இல்லாமல்செய்கின்றனர். இப்போதுள்ள சேதனப்பசளை முறையில் செய்யும்போது, பூச்சிகளின் தொல்லைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் உள்ளன? இவற்றுக்கான முழுமையான பதில் முறையாகக் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இவை இவ்வாறு இருக்க, ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு, சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகி உள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என அரசாங்கம், தெரிவித்துள்ளது.

சுமார், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு அசேதன உரவகைகளுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளமையால், மக்களின் ஆரோக்கியம் மோசமடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் காரணமாக, சேதனப் பயிர்ச்செய்கைக்கு உதவும் நுண்ணுயிர்கள் நாசமாக்கப்பட்டு உள்ளதுடன், நீர், சூழல் மாசுறுதல்களும் அதிகரித்து உள்ளதாகவும் சுமார் 200 நச்சுப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அசேதன உரப் பாவனை காரணமாக, சிறுநீரக நோயாளர்கள், புற்று நோயாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாடு, ஊனமுற்ற குழந்தை பிறப்பு என்பவற்றுக்கும் காரணமாகியுள்ளதாக வைத்தியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, விவசாயிகளுக்கு முறையாக சேதனப்பசளை முறை விளங்கப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*