;
Athirady Tamil News

ILO C190 சமவாயம்: பணியிட துன்புறுத்தல்கள் !! (கட்டுரை)

0

உலக தொழிலாளர் ஸ்தாபனத்தால், ‘வேலை உலகில்’ (world of work) இடம்பெறும் வன்முறைகளையும் துன்புறத்தல்களையும் இல்லாதொழித்து, அனைவருக்கும் பாதுகாப்பான வேலைத்தளங்களை உருவாக்கும் நோக்கில் C190 சமவாயம் பரிந்துரைக்கப்பட்டு, நேற்றுடன் (25) இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

பெண் தொழிற்சங்கத் தலைவர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால், சுமார் ஒரு தசாப்த காலமாக மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் பெறுபேறாக, வேலையுலகில் இடம்பெறும் பால்நிலைசார் வன்முறைகள், துன்புறுத்தல்களைத் தடுக்கவும் வௌிக்கொண்டு வருவதற்குமாக, சர்வதேச தொழிலாளர் தாபனம் C190 சமவாயத்தைப் பரிந்துரைத்தது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தால், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, ஜெனீவாவில் நடைபெற்ற தொழிலாளர் சம்மேளனத்தின் 108 ஆவது மாநாட்டின்போது, பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள், துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், C190 சமவாயம் முன்வைக்கப்பட்டது. மேற்குறித்த திகதியில் C190 சமவாயம் முன்வைக்கப்பட்டாலும், ஜூன் மாதம் 25ஆம் திகதியே முழு வீச்சுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

பணிக்குச் செல்லும் போது, பணியிடங்கள், பணி முடிய வீடு திரும்பும்போது இடம்பெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகளை போன்றவற்றை இல்லாதொழித்து, பாதுகாப்பான வேலையுலகை உருவாக்க வேண்டும் என்பதே, இச்சமயவாயத்தின் நோக்கமாகும்.

துன்புறுத்தல்கள், வன்முறைகள் என்கிறபோது, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள், நடைமுறைகள், அச்சுறுத்தல்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ஏதாவதொரு செயல், நிகழ்வு மீண்டும் மீண்டும் இடம்பெறல், உடல், உளவியல், பாலியல், பொருளாதார ரீதியிலான தீங்கு, பாலின அடிப்படையிலான வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றைக் கொள்ளலாம்.

‘பாலின அடிப்படையிலான வன்முறை, துன்புறுத்தல்’ என்பன, நபர்களை நோக்கியதாக வரையறுக்கப்படுகின்றன. அதாவது, பால்நிலையைக் காரணம் காட்டித் துன்புறுத்துதல், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நோக்கிய துன்புறுத்தல்கள் வன்முறைகள் என்பனவாகும்.

இந்தப் பிரகடனத்தின் மூலமாக, அங்கத்துவ நாடுகள் வன்முறையை ஒழிப்பதற்கு ஒழுங்கு விதிகளை அமைத்துக் கொள்வதற்காக சேவை வழங்குநர்களும், ஊழியர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், பணியிடத்தில் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறை வருமானம் பெறும், மாற்றுப்பாலின தொழிலாளர்கள் ஆகியோருடைய அனுபவங்களைப் பிரதிபலிப்பதாக இப்பிரகடனம் அமைந்துள்ளது. மிக வலுமிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பெண்ணியவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என அனைவரும் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகளினூடாகப் பாகுபாடு, ஓரங்கட்டல், அடக்குமுறை என்பன, எவ்வாறு வேலையுலகில் வன்முறைகள், துன்புறுத்தல்கள் என்பவற்றுக்கு மூல காரணமாக அமைகிறது என்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எந்தவித ஒப்பந்தமும் இல்லாம் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட, ஏனைய முறைசாராத் தொழிலாளர்களும் C190 சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டு உள்ளமையால், இச்சமவாயம் அனைத்து உழைக்கும் வர்க்கத்துக்கும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு முக்கிய சமவாயமாகக் கருதப்படுகிறது.

உருகுவே (ஜூன் 2020) பீஜீ (ஜூன் 2020), நாம்பியா (டிசெம்பர் 2020), ஆர்ஜென்டினா (பெப்ரவரி 2021), சோமாலியா (மார்ச் 2021), ஈக்குவடோர் (மே 2021) ஆகிய நாடுகள் இதுவரை C190 சமவாயத்தை நிறைவேற்றி உள்ளன. சிலி, இத்தாலி ஆகிய நாடுகள், தேசிய நிறைவேற்றல் நடவடிக்கைளைப் பூர்த்தி செய்துள்ளன. எனினும், அந்நாடுகள் இரண்டும் இதுவரை உத்தியோகபூர்வ ஆவணங்களை, உலக தொழிலாளர் ஸ்தாபனத்துக்கு அனுப்பவில்லை.

தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் சர்வதேச தொண்டு நிறுவனமான ‘சொலிடாரிட்டி சென்ரர்’ முன்னெடுத்துள்ள முயற்சிகளின் பயனாக, இலங்கையில் C 190 சமவாயத்தை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக, கடந்த மார்ச் மாதம் குறித்த சமவாயத்தை இலங்கையில் நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பான உரையை நிகழ்த்தியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பியான ரோஹினி கவிரத்னவும் C190 சமவாயம் இலங்கையில் நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் C190 பரிந்துரையை, புதிய சட்டமாக நடைமுறைப்படுத்துவதாயின் பல ஆண்டுகள் செல்லக்கூடும் என்ற நிலையில், நாட்டில் ஏற்கெனவே உள்ள தொழிலாளர் சட்டத்துக்குள் இதை உள்வாங்க முடியுமா என்பது தொடர்பிலும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கை, C190 பிரகடனத்தை, இலங்கையில் பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் துன்புறத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைவோம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*