;
Athirady Tamil News

ஒரு கிராமத்தின் சொல்ல மறந்த கதை !! (கட்டுரை)

0

கடலையும் வயலையும் மலையையும் மட்டுமல்ல, ஆங்காங்கே வறுமையின் கொடூரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது அம்பாறை மாவட்டம். அப்படி மிகப்பெரும் துயரம் நிறைந்த, மிக மோசமான நிலை கொண்ட ஊராக ‘கொக்கிளான்கால்’ கி​ராமம் காணப்படுகின்றது.

நான்கு மதப்பிரிவினரும் வாழும் இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 7ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள ‘அரபா நகர்’ என்ற ஊரே இவ்வாறு ‘கொக்கிளான்கால்’ என்று அழைக்கப்படுகிறது. குளத்தோரம் என்பதால், கொக்குகளின் வருகை அதிகம் என்ற காரணப் பெயராக, இந்தப் பெயர் ஊருக்கு வந்ததாக இங்கு வாழும் முதியவர்கள் கூறுகிறார்கள்.

ஒருமனிதன் வாழத் தேவையானவற்றில், இயற்கை பரிசாகக் கொடுத்த தூய காற்றை தவிர, எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கில்லை.

பிரதான பாதையிலிருந்து, பல கிலோ மீற்றர் குண்டும் குழியுமான பாதையூடாக, பல நெளிவு சுளிவுகளுடன் இந்த ஊரை நோக்கிச் செல்லும் போதே, ஊரின் அவலநிலை துயரத்துடன் வரவேற்கும்!

உச்சி வெயிலில் பாலைவனம் போன்று காட்சியளித்த இந்த பிரதேசத்தில், ஓட்டு வீடுகள் கண்ணில் படவேயில்லை. தென்னை ஓலைகளால் வேயப்பட்ட வீட்டுக் கூரைகளும் கம்புகள் படங்குகள், கிடுகுகள், தகரங்கள் போன்றவற்றால் மறைக்கப்பட்ட இருப்பிடங்களும் கிராமத்தின் வறுமையைக் காட்சிப்படுத்துகின்றன. இந்தக் குடில்களும், சாதாரணமாக ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு உயரம் கொண்டவையாகவே அதிகம் காணப்படுகின்றன.

36 குடும்பங்கள் வாழும் கொக்கிளான்கால் ஊரில், 150 பேரளவில் வசிக்கிறார்கள். வேளாண்மையும் கூலியும் ஆற்று மீன்பிடியுமே இவர்களது பிரதான தொழில்களாக இருக்கின்றன.

தங்களின் இருப்பிடங்களுக்கு மின்சார வசதி இல்லை என்று கூறும் மக்களின் வீடுகளுக்கு நீரிணைப்புகளும் இல்லை. குடிநீரைப்பெற மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரஹ்மத் நகர் பள்ளிவாசலுக்கு அல்லது, நூர் பள்ளிவாசலுக்கு சென்றே குடிநீரை பெற்று வருவது ஏழைத் தாய்மாருக்கு மேலதிக சுமையாக இருக்கிறது.

தமது இதர தேவைகளுக்காக ‘பூவல்’ எனப்படும் நிலக்கீழ் நீரைப் பாவிக்கும் இந்த மக்களுக்கு, அதன் மூலம் ஏற்படும் நோய்கள், உயிராபத்துகள் பற்றி எவ்வித அறிவும் இல்லாமல் இருப்பதும் வேதனையான ஒன்றே! 6-7 அடி ஆழம் கொண்ட ‘பூவல்’ எனப்படும் நிலக்கீழ் நீர்நிலையானது, எவ்வித பாதுகாப்புமின்றி நிலமட்டத்திலையே உள்ளது. இதனால் சிறுபிள்ளைகள் மாத்திரமின்றி, இருள் சூழ்ந்த பொழுதுகளில் பெரியவர்களும் உயிராபத்துடனே வாழ்கிறார்கள்.

சுகாதாரமான முறையில் கழிப்பிடவசதி இருக்க வேண்டும் எனும் சாதாரண மனிதனின் தேவைகூட இங்கு இல்லை. வயதுவந்த பெண்பிள்ளைகள் இங்கு வாழ்வதில் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் ஏராளம் என்கிறார் ஒரு தாய். சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்தும் இந்தக் கிராம மக்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தும் சுத்தம், சுகாதாரம் நிறைந்த கழிவறை எப்போது கிடைக்கும்?

இந்தப் பிரதேசத்தில் இருந்து கல்விகற்க பாடசாலைக்கு செல்லவேண்டுமாக இருந்தால், இறக்காமம் பாடசாலை 10 கிலோ மீற்றர் தொலைவிலும், வரிப்பத்தான்சேனை பாடசாலை 07 கிலோ மீற்றர் தொலைவிலும், குடுவில் பாடசாலை 04 கிலோ மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்தத் தூரத்தை நடந்தே செல்ல வேண்டியுள்ளதாகப் பெற்றோரும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர். “ஆசையாய்ப் பாடசாலை செல்லும் எங்களுக்கு, நடந்து செல்லும் களைப்புத் தீரவே பல மணித்தியாலயங்கள் எடுக்கிறது. அதனால் ஏற்படும் சோர்வால் ஒழுங்காகக் கல்விகற்க முடியாமல் இருக்கிறது. எங்களைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் தினமும் பலசிக்கல்களைச் சந்திக்கின்றனர்” என்றும் இங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

பாடசாலை செல்லும் போது, முதலைகள், விசம்கொண்ட பல ஊர்வனவற்றின் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் இப்போது பாடசாலைகள் நடைபெறாத நிலையில் எவ்வித கல்வி நடவடிக்கையும் இல்லாமல் பெற்றோருக்கு உதவியாக இருந்துவருவதாகவும் இந்த மாணவர்கள் தெரிவித்தார்கள். இந்த நிலைமைகளால், சிறுவர் தொழிலாளிகள் அதிகரிப்பார்களா? சிறந்த கல்விமான்கள் உருவாக்குவார்களா? எனும் கேள்வி எழுகிறது.

இரவில் பாம்புகளின் தொல்லை அதிகமாக இந்தக் கிராமத்தில் இருக்கிறது. பாம்புகள், அடிக்கடி சிறுவர், முதியோர்களின் கால்களுக்குள் சிக்கிவிடுகின்றன. இதனால் நிம்மதியான வாழ்க்கையும் இல்லை; தூக்கம் கூட இல்லை என்ற நிலையில் வாழ்க்கை நகர்வதாக இவர்கள் சலித்துக்கொள்கின்றார்கள். இதனால், இந்த பிரதேசத்துக்கு சூரியமின்சக்தி தெருவிளக்குகளையாவது பொருத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

நஞ்சு பாம்புகளின் நடமாட்டம் உள்ள இந்த பிரதேசத்திலிருந்து அவசரத்துக்கு வைத்தியசாலைக்கு செல்லவேண்டுமாக இருந்தால் மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். பல கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை பொது வைத்தியசாலை, இறக்காமம் பிரதேச வைத்தியசாலை போன்றவற்றுக்குச் செல்ல வீதிகள் கூட முறையாக இல்லாத இந்த ஊரின் தலையெழுத்தை, யார் மாற்றியமைப்பார்கள்?

ஒரு முஸ்லிம் தனவந்தர் தன்னுடைய ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றும் பணத்தை கொண்டு, அந்தப் கடமைக்கு பகரமாக ஒரு குடும்பத்துக்கு 10 பேர்ஜஸ் என்ற கணக்கில் நன்கொடையாக வழங்கிய காணிகளைக் கொண்டே, இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத இந்தக் கிராமத்தை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

கொரோனா சூழ்நிலை, பயணத்தடை போன்றவற்றால் இந்த மக்கள், முற்றாகத் தொழிலை இழந்திருந்தாலும் இதுவரை இந்த மக்களில் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீணான உயிரிழப்புகள், சேதங்களின் பின்னர், தலையில் கைவைத்து ஒப்பாரி வைக்க முன்னர், இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை அவசரமாக எடுக்க, பொறுப்பில் உள்ளவர்கள் முன்வரவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − nine =

*