;
Athirady Tamil News

நாவை நீட்டக் கூடாது !! (கட்டுரை)

0

உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பாகவும், ஓர் ஈரப்பதனுடன் வைத்திருக்கப்படும் உறுப்பாகவுமே நாக்கு (நா) இருக்கிறது. நாவடக்கம் பற்றி கேள்விப்பட்டிருப்போம், சில இடங்களில் வாயைத் திறக்காமல் இருந்திருந்தாலே பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இன்னும் சில இடங்களில், நாவும் எச்சிலும் ஆகக் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. தபாலகங்களில் முத்​திரை ஒட்டுவதற்கும், கடிதவுறையை ஒட்டுவதற்கும், ஏன், பத்திரிகையொன்றை இரண்டாக கிழிப்பதற்கும் ​எச்சிலே பயன்படுத்தப்படுகின்றது. ஆரம்ப காலங்களில், ஏதாவது தவறாக எழுதிவிட்டால், ஆசிரியருக்குத் தெரியாமல், எச்சில் தொட்டு அழித்தமையும் பலருக்கும் ஞாபகத்துக்கு வரலாம்.

இந்தக்காலத்தில், வாயையும் மூக்கையும் மறைத்தாற்போல, முகக்கவசங்கள் அணிந்திருப்பதால், வீணான வம்புகள் மட்டுமல்ல, பொது இடங்களில் எச்சில் கிடப்பதை கூட காண்பது அரிதாக இருக்கிறது. ஏன்? கண்களை மூடிக்கொண்டு நடக்கலாம். அந்தளவுக்கு எச்சில் தொல்லை வீதிகளில் இல்லை.

உலகம், இதுவரையிலும் இரண்டு மகா யுத்தங்களை சந்தித்திருந்தாலும், கொரோனாவுடன் மற்றுமொரு யுத்தம் இன்னுமே நிறைவுக்கு கொண்டுவரப்படவில்லை. ‘இரண்டாம் உலகப் போரில் மாத்திரம் இறந்தோரின் எண்ணிக்கை முப்பத்தேழு மில்லியனாக இருக்கலாம்’ என ஆய்வறிக்கையொன்று கூறுகிறது. இந்த எண்ணிக்கைத் தாண்டலாம் என்ற அச்சத்தை நாளாந்தம் கொரோனாவால்’பலியாவோர் எண்ணிக்கை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை நாற்பது இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. தவிரவும் தினம் தினம் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்த அனர்த்தத்திலிருந்து உலகைப் பாதுகாக்க உலகளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இன்று உலகளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கப்பட்டு இந்நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும்கூட இந்நோயை வெற்றி கொள்ளும் நிலைக்கு உலகம் இன்னும் வந்துவிடவில்லை.

‘மழை விட்டாலும் கூட வெள்ளம் வடிந்த பாடாக இல்லை’ என்று கூறப்படும் நிலையிலேயே கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ள இன்றைய நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் ஏன் இலங்கையிலும்கூட இதன் தாக்கம் அதிகரித்துள்ளமை மேற்குறிப்பிட்ட வாக்கியத்தை எமக்கு நினைவூட்டுவதாகவே உள்ளது.

‘கொரோனா’ ஆரம்பகாலங்களில் முதியோர்களைக் குறிவைத்துக் கொன்று குவித்தது. இன்று இளையோர்களும் சிறார்களும் கூட வயது வித்தியாசமின்றி இதன் உக்கிரத்துக்குப் பலியாகி வரும் நிலையில், விலங்குகளும் இத்தொற்றுக்கு ஆளாகியிருப்பது மிகவும் பாரதூரமானதொன்றாகும். எமது நாட்டில் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்கள் சிலவற்றுக்கும் வௌவால்களுக்கும் இந்நோய் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை பீதியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த செய்தியொன்று எமது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் அதிகரித்தமையைத் தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறையினர் உணவகங்களில் உணவைப் பொதிசெய்யும் நடவடிக்கைகளுக்காக, உணவைப் பொதிசெய்யப் பயன்படுத்தும் கடதாசிகளை எச்சில் தொட்டுப் பிரிக்கக் கூடாது என்றும் பைகளை ஊதிப் பிரிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதோடு இத்தடை உத்தரவை மிகவும் இறுக்கமாகக் கடைப் பிடித்து வருகின்றனர்.

நகரங்களில் உள்ள அனைத்து உணவகங்களும் கண்காணிக்கப் பட்டு மீறுவோர் சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுகின்றனர். இதற்கான மிக முக்கியமான காரணம் ‘கொரோனா’ எச்சில் மூலமாகப் பரவுவதே. இக் காரணத்தாலேதான் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் உணவகங்களில் மேற்கொள்ளப்படும் மேற்குறித்த நடவடிக்கைகளால் தொற்றுத் தீவிரமாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மூடப்பட்ட அறைக்குள் இருக்கும் ‘கொரோனா’ நோயாளி ஒருவர் ஒரு நிமிடத்திற்குச் சத்தமாகப் பேசினால் அவரது எச்சிலிலிருந்து வெளியேறும் கொரோனாக் கிருமிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாகும் என்றும் அவை நீண்ட நேரம் வரை உயிர்வாழும் என்றும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கத் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குறித்த நடவடிக்கையினை எமது நாட்டிலும் கடைப்பிடிப்பது பொருத்தமானதொன்றாக இருக்கும்.

தமிழகத்தில் மாத்திரமல்ல எமது நாட்டிலும் கூட தற்போதைய நெருக்கடி நிலையில் உணவகங்களிலிருந்து உணவைத் தருவித்து உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரப் புறங்களில் இவ்வாறான நடைமுறை காணப்படுகிறது. பயணத்தடை அமலில் இருந்துவரும் காலங்களில் கூட, வெதுப்பகங்கள் தம் பணியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘பொதிசெய்தல்’ என்பது தவிர்க்க முடியாததொன்றாக மாறிப் போய் உள்ளது. எனவே இவ்விடயத்தில் எமது கவனத்தைக் குவிக்க வேண்டியது அவசியமாகிறது.

‘கொரோனா’ காவிகள் எவரென்பது பலராலும் அறியப்படுவதில்லை. எமது கண்ணுக்குத் தெரிந்த, மற்றும் தெரியாத அந்த நபர் குறித்த எச்சரிக்கையுடன் நாமனைவரும் செயற்படவேண்டும் என்பது கட்டாயமாகும். உணவகங்களில் கூட்டமாகச் சென்று உணவுண்பது தவிர்க்கப் பட்டுள்ள போதிலும் சமைத்த உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதென்பது நிறுத்தப் படவில்லை. இந்த உணவகங்களின் சுகாதார நிலைமைகள் என்ன? இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இச்சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்றனரா? போன்ற விடயங்கள் கண்காணிக்கப் படவேண்டியது அவசியமாகும்.

மேலும் இவ் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சமூகப் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டியது கடமையாகும். பொதுமக்களைப் பொறுத்தவரை கூடிய பட்சம் வெளியிடங்களிலிருந்து உணவைப் பெற்று உண்பதைத் தவிர்த்துக் கொள்வது சிறப்பானதாகும்.

இன்று அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பயன்படுத்தப்படும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும். எமது நாட்டில் மக்கள் அவரவர் பொருளாதார நிலைக்கேற்றவாறு பல்வேறு விதமான முகக்கவசங்களை அணிகின்றனர்.

அங்கிகரிக்கப்பட்ட முகக்கவசங்களை அணிவோரும் அவற்றைச் சரியான விதத்தில் அணிகிறார்களா என்றால் அதுவும் இல்லை. சரியாக அணிவோரும் தமக்குத் தெரிந்தவர்களோடு உரையாடும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை நீக்கியபடி பேசுவதை நாம் அவதானித்திருப்போம். இது ஆபத்தானது என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகக்கவசங்களைப் பயன்படுத்திய பின்னர் அவற்றைச் சரியான விதத்தில் அகற்றுவதிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. சிலர் கண்ட கண்ட இடங்களில் அவற்றை வீசி எறிவதையும், விட்டுச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.இதனால் இதனை உண்ணும் விலங்குகளும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப் படும் பட்சத்திலேயே முகக் கவசங்களை அணிவதால் ஏற்படக்கூடிய பலாபலன்களை நாம் பெற்றுவிட முடியும்.

‘கொரோனாத் தொற்றை அதிகரிக்கக் கூடிய மற்றொரு விடயம் காசைத் தொட்டுக் கையாள்வதாகும். பெருமளவில் பணம் புழங்கும் இடங்களில் அவற்றை எண்ணிக் கணக்கிடுவதற்கு இலகுவாக எச்சிலைத் தொட்டு எடுக்கும் பழக்கம் மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. இது கிருமித் தொற்றை அதிகரிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதால் இப் பழக்கத்தை சம்பந்தப்பட்டோர் நிறுத்துவது அவசியமாகும்.

பணம் கைமாறிச் செல்லும் ஒன்று. எனவே பணத்தைக் கையாள்வோர் கொடுக்கல் வாங்கல் செய்து முடித்த பின்னர் கைகளைத் தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இத்தொற்று நீக்கியானது அறுபது வீதம் அல்ககோல் கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையான பயனுள்ளதாக இருக்கும்.

எனவே சந்தையிலுள்ள தொற்று நீக்கிகளைக் கொள்வனவு செய்யும்போது இதனைக் கவனித்து வாங்குவது பயனுள்ளதாகும். இவ்வாறான கிருமிநாசினிகளைக் கொள்வனவு செய்து பயன்படுத்த முடியாதவர்கள் எளிதில் கிடைக்கக்கூடிய சவர்க்காரங்களைப் பயன்படுத்தி கைகளைக் கழுவிக் கொள்வது அவசியமாகும்.

சட்டங்கள் எவ்வளவுதான் இறுக்கமானவையாக இருந்தாலும் அவற்றின் பலாபலன்களை அனுபவிப்பதென்பது மக்கள் அனைவரினதும் பொறுப்புடனான நடவடிக்கைகளிலேயே தங்கி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.