;
Athirady Tamil News

வீணடிக்கப்படும் காலம் !! (கட்டுரை)

0

மக்களின் பிரச்சினைகளும் நாட்டின் முன்னேற்றமும் கருத்தில் கொள்ளப்படாமல், வெறுமனே காலத்தை வீணடிக்கின்ற அரசியலும் ஆட்சியும் நிறைந்த பூமியாக, இலங்கை மாறியிருக்கிறது.

இந்த ஆட்சியில் மட்டுமன்றி, கடந்த நல்லாட்சிக் காலத்திலும் காலம் இப்படித்தான் கழிந்து போனது.

வாகனத்தில் பயணிக்கும்போது, வீதிக்கு குறுக்காக நின்ற மாடுகளை, வீதியை விட்டு அகற்றும் நோக்கத்தில் வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள், பிறகு பயணத்தை மறந்து, மாடுகளுக்குப் பின்னாலேயே போய்விடுவதைப் போல, மக்களை மறந்து, பிரச்சினைகளுக்குப் பின்னாலேயே செல்கின்ற ஒரு போக்கைக் காண முடிகின்றது.

மக்களுக்கு ஆயிரத்தெட்டு வாக்குறுதிகளை வழங்கி, பெரும் பரப்புரைகளைச் செய்து, ஆட்சியைப் பிடிப்பவர்கள் பின்னர் எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். இதில் சில பிரச்சினைகள், இயற்கையாகவே தோற்றம் பெறுகின்றன. பல விவகாரங்கள் வேண்டுமென்று, செயற்கைத்தனமாக உருவாக்கப்படுகின்றன.

இலங்கையில், எக்காலத்திலும் ஏதாவது ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. ‘பிச்சைக்காரனின் புண்ணைப்போல’ சில குழப்பங்கள் ‘பராமரிக்கப்படுகின்றன’.

இவ்வாறு குழப்பங்களும் நெருக்கடிகளுமாகக் காலம் கழிவதால், நாட்டின் அபிவிருத்தி, சாதாரண சிங்கள மக்களின் எதிர்பார்ப்பு, தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

உலகின் அநேக நாடுகளிலும் ஏதாவது ஒரு பிரச்சினை, குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், நெருக்கடிகளைச் சாதுரியமாகக் கையாளத் தெரிந்த ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கின்ற நாடுகள், குழப்பங்கள் குறைந்தளவில் காணப்படும் நாடுகள் போன்றவை பெருமளவு காலத்தை, நாட்டை முன்னேற்றுவதற்காகச் செலவிடுகின்றன.

ஆனால், இலங்கையானது கிட்டத்தட்ட எல்லாக் காலத்தையும் ஏதாவது நெருக்கடிக்காகவே செலவிட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், நாம் ஆரம்பித்த இடத்தில் இருந்து, ஒரிரண்டு அங்குல தூரமே முன்னோக்கி நடந்திருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில், குறைந்தது 30 வருடங்கள், ஆயுத மோதலிலேயே கழிந்து போனது. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன நல்லிணக்கம் வெற்றிபெறவில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், இனவாதமும் மதவாதமும் இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்களை நோக்கி ஏவிவிடப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட செயற்கைத்தனமான இந்த நகர்வால் காலம் வீணானதுடன் இன விரிசலும் ஏற்பட்டது.

இதை மூலதனமாக்கியே, நல்லாட்சி அரசாங்கம் 2015இல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தேசிய அரசாங்கத்துக்குள் எழுந்த உள்ளகக் குழப்பங்களால், சுமார் நான்கு வருடங்கள் வீணாக்கப்பட்டது.

2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தல் என்ற தோரணையில் மிகுதிக் காலமும் கடந்து போனது.

இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதமாகப் பயன்படுத்தியே மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பம், ஆட்சிப் பீடமேறியது. முன்னொருபோதும் இல்லாத எதிர்பார்ப்புகளை, மக்கள் மனங்களில் விதைத்தே அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் தோல்வி மட்டுமன்றி, மஹிந்த ஆட்சியின் வெற்றிப் பதிவுகளும் மக்கள் மனதில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு உள்ளேயே, பரவலாக விமர்சிக்கப்படுகின்ற ஒரு நிலைக்கு, இந்த அரசாங்கம் வந்திருக்கின்றது. அநேகமான விடயங்களில் தோல்விகண்டதும் மக்கள் திருப்திப்படும் விதத்தில் ஆட்சியை நடத்தாத ஓர் அரசாங்கமாக இந்த அரசாங்கம் கருதப்படுகின்றது. இது இரகசியமான விடயமல்ல.
பல எதிர்பாராத நெருக்கடிகளை, நாடு சந்தித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. கொரோனா வைரஸ் பரவல், கப்பல் தீப்பிடித்து மூழ்கியதால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை அழிவு, இவ்விரண்டாலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஆகியவை இதில் முக்கியமானவை.

ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைக்கும் ஆட்சிசெலுத்துகையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கும், இயற்கையான விடயங்கள் மட்டுமே காரணமல்ல!
மாறாக, இயற்கைப் பேரிடர் காலம் என்று கூடப் பார்க்காது, உருவாக்கப்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் சீன – இந்திய ஆதிக்கப் போட்டியும், மேலும் பல வேண்டாத விளைவுகளை உண்டுபண்ணி, நாட்டை அதளபாதாளத்துக்குக் கொண்டு செல்கின்றன.

கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களில் ராஜபக்‌ஷ குடும்பம், மக்களின் ஆணையைக் கோரி நின்றது. அபிவிருத்திசார் வாக்குறுதிகளுக்கு மேலதிகமாக, ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலால் மக்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த பயமும், பயங்கரவாதத்துக்கு எதிரான இனவாத கருத்தியலும் பெரும் முதலீடாக இருந்தன.

தமக்கு ஆணை வழங்கினால் நாட்டை தலைகீழாகப் புரட்டிப்போடுவோம் என்று ராஜபக்‌ஷர்கள் கூறினர். தாம் நினைத்ததைச் செய்து, நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டினர்.

அதன்படி, 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததன் மூலம், பொதுஜன பெரமுனவுக்குப் பெருவெற்றியைக் கொடுத்தனர். அதன்பின்னர், அரசமைப்பில் ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்; அதுவே நாட்டுக்கு நல்லது என்பதே, அவர்களது கற்பிதமாக இருந்தது.

அதற்கமைய, 20ஆவது திருத்தமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாட்டில் பிரச்சினைகளும் பின்னடைவுகளும் அதிகரித்ததே தவிர, குறைந்த மாதிரித் தெரியவில்லை. கொரோனாவை விட, பாரதூரமான அரசியல்சார் வைரஸ்கள் தொற்றியுள்ளன.

இப்போது, பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்கு வந்தால்தான், நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்கின்றனர். எனவே, அவருக்கு தேசிய பட்டியல் எம்.பி பதவியும் நிதி அல்லது பொருளாதார அமைச்சும் வழங்கப்பட வேண்டும் என்று கணிசமானோர் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

மறுபுறத்தில், அரசாங்கத்துக்குள் இருக்கின்ற இன்னுமொரு தரப்பே எதிர்க்கின்றது. அவருக்கு அப்பதவி வழங்குவதை சிலர் விரும்பவில்லை எனத் தெரிகின்றது.

பசில் ராஜபக்‌ஷ, அரசாங்கத்துக்குள் ஓர் அதிகாரமுள்ள பதவியில் அமர்ந்தால், நாட்டில் தற்போது இருக்கின்ற அரசியல், பொருளாதார, சுகாதார நெருக்கடிகள் எல்லாவற்றையும் அவர் தீர்த்து வைப்பார் என்று கணிசமானோர் சொல்கின்றனர். மறுபுறத்தில், யார் வந்தாலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைளைத் தீர்க்க முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

இதனால், ஆளும் தரப்புக்கு உள்ளேயே பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பசில் வந்தால், பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்கின்றார்கள். ஆனால், இப்போது அவருக்கு எம்.பி, அமைச்சு பதவிகள் வழங்கும் விவகாரமே, மேலும் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

பசில் ராஜபக்‌ஷ அரசியல் ரீதியில் திறமையானவர். பொருளாதார அபிவிருத்தி விடயத்தில் செயற்றிறன் கொண்டவர் என்று கருதப்படுபவர். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான மூலோபாயத் திட்டம் அவருடையது எனக் கூறப்படுகின்றது.

எனவே, அவர் பாராளுமன்றத்துக்கு வருவதோ அமைச்சராவதோ, ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், அதற்குச் சட்ட ரீதியான தடைகள் இருந்தால் அதுபற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அவர் உள்ளே வருகின்ற விடயம், இவ்வளவு பெரிய விவகாரமாக பெருப்பிக்கப்பட வேண்டியதில்லை.

இதனை ஒரு தேசிய பிரச்சினையாக்க தேவையில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி இருக்கத் தக்கதாக, இதையும் ஒரு இமாலய விவகாரமாக மாற்றுவது, இன்னும் கொஞ்சக் காலத்தை வீணடிக்கும் நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

ஆளும் தரப்பில்தான் இந்த நிலை என்றால், எதிரணியில் நிலைமை அதைவிட மோசமாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவால் எதிரணியைக் கூட பலமாக, கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது போயிருக்கின்றது என்பதே நிதர்சனமாகும்.

இந்நிலையில், இந்தக் கதைக்குள் ரணில் விக்கிரமசிங்க மிகச் சூட்சுமமான முறையில் உள் வந்திருக்கின்றார். எனவே, ரணிலின் நகர்வுகளைச் சுற்றிச் சுழலும் அரசியல் புதினங்களில் இன்னும் கொஞ்சக் காலம் வீணாகப் போவதாகவே உள்மனது சொல்கின்றது.

ஆக மொத்தத்தில், ஆளும் தரப்புக்குள்ளும் எதிரணிக்குள்ளும் உள்ளக முரண்பாடுகள் வலுவடைந்துள்ள பின்னணியில், நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலைமை மாற வேண்டும். நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டு வந்து, எல்லா மக்களினதும் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து, நாட்டை முன்னேற்றுவதிலேயே அரசாங்கமும் ஏனைய தரப்பினர்களும் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

அதைவிடுத்து, பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு இன்னுமொரு பிரச்சினையே காரணம் என்று, மக்களுக்குப் பொய் கற்பிதங்களைக் கூறிக் கொண்டே, ஆட்சிக்காலத்தை வீணடிக்கின்ற கலாசாரத்தை கைவிடுவதே, நாட்டுக்கு நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 14 =

*