;
Athirady Tamil News

குடாநாட்டுக்கு பாயுமா நன்னீர்? (கட்டுரை)

0

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளம், கல்மடுகுளம், முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுக்குளம், உடையார்கட்டுகுளம் போன்ற குளங்களில் இருந்து வெளியேறி விரயமாகின்ற நீரை கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நன்னீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில், 60களில் முன்வைக்கப்பட்ட ‘ஆறுமுகம் திட்டம்’ மீண்டும் செயற்படுத்தப்படுவது தொடர்பாகத் தற்போது பெரிதும் பேசப்படுகின்றது.

‘ஆறுமுகம் திட்டம்’ 1962 ஆம் ஆண்டில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பால் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கைவிடப்பட்டடிருந்தது.

தற்போது, ஆறுமுகம் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆனையிறவு கடல் நீரேரியில் 23 சதவீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக, தற்போதைய அரசாங்கத்தால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பிரதேச மக்களுக்கும் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கும், புதிய திட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தி, கருத்துகளை அறிந்து கொள்ளும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாடானது 30 சதவீதமான மழை வீழ்ச்சியை மாத்திரமே பெற்று வருகின்ற அதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் 60 சதவீதமான மழை வீழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றன. இதனால்த்தான் வடமாகானத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து, யாழ். மாவட்டத்துக்குத் தண்ணீரைப் பெறுகின்ற திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

யாழ். குடாநாட்டின் நீர் தேவை அதிகரிப்பு என்பதற்கு அப்பால், நீர் பற்றாக்குறையும் நீரின் மாசடைதல் தன்மையும் அதிக அளவில் காணப்படுகின்றது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வள சபை ஆகியவற்றால் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அயல் மாவட்டங்களில் இருந்து நீரை கொண்டு வருவதே, இதற்கான தீர்வாக கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த காலங்களில் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, விவசாயிகள் மத்தியில் இருந்துவந்த எதிர்ப்புகளுக்கும் அரசியல்வாதிகள் இடையே அடிக்கடி இடம்பெற்ற கருத்து மோதல்களுக்கும் இத்திட்டம் தீர்வாகும் எனப் பலரும் கருதுகின்றனர்.

இந்த ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பல நன்மைகள் ஆராயப்பட்டன; அவையாவன:

யாழ். குடாநாட்டில் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இத் திட்டத்தின் மூலம், கடல் நீரால் ஏற்படும் உவர்த் தன்மை குறைவடையும்.

கடல்நீரேரிகளை அண்டியுள்ள உவர் நிலப் பகுதிகள், விவசாயத்துக்கு ஏற்புடைய நிலங்களாக மாற்றமடையும்.

வருடாந்தம் கடலுடன் கலக்கும் நன்னீரைச் சேமிப்பதன் மூலம், நீண்ட காலம் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதாக அமையும்.

தற்போதைய சூழ்நிலையில், யாழ். குடாநாட்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் கன மீ‌ற்றர் நீர், குடிநீருக்கான தேவையாகக் காணப்படுகின்றது. 2028 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கான குடிநீரின் தேவை 88,500 கன மீ‌ற்றர் ஆகவும் அதேபோல் 2058ஆம் ஆண்டில் இதன் தேவை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 350 கன மீற்றராக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ். குடாநாட்டுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, காலத்துக்குக் காலம் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ம. செல்வின், இது தொடர்பில் எழுதியுள்ள கட்டுரையொன்றில், ‘யாழ். குடாநாட்டின் நன்னீர் வளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக, சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னரே, பல்வேறு விதமான கருத்துகள் முன் வைக்கப்பட்டு இருக்கின்றன.

அதாவது, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒல்லாந்த தளபதி கென்றில் வான் றீடில், தொண்டமானாறு, நாவற்குழி நீரேரிகளில், கடல் வெள்ளத்தடுப்பு அணைகளை அமைப்பதன் மூலம், யாழ். குடாவின் நன்னீர் வளத்தை பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையை முன்வைத்திருந்தார்’ என்று ம. செல்வின் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வடமாகாண அரசாங்க அதிபராக இருந்த ரூவைனம் (1879), கோஸ்பேக் (1916) ஆகியோரால், ஆணையிறவு நீரேரி, தொண்டமனாறு உப்பு நீரேரி (நாவற்குழி) ஆகியவற்றை நன்னீர் நிலைகளாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தனர்.

இவற்றின் தொடர்ச்சியாக, 193 ஆம் ஆண்டு, தேசிய அரசுப் பேரவை உறுப்பினராக இருந்த பாலசிங்கம் என்பவர், உவர் நீரேரிகளை நன்னீராக மாற்ற வேண்டியதன் அவசியத்தை முன்மொழிந்தார்.

1950ஆம் ஆண்டிலேயே, நீர்ப்பாசனப் பொறியியலாளரான எஸ். ஆறுமுகம், யாழ்ப்பாணத்துக்கான நீர் வள அபிவிருத்தித் திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டமே, ‘ஆறுமுகம் திட்டம்’ எனவும் யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத் திட்டம் எனவும் பிற்காலத்தில் குறிப்பிடப்படுகின்றது.

ஆறுமுகத்தின் திட்டத்தின்படி, வடமாகாணத்தில் பெருநிலப்பரப்பில் உருவாகி, வடக்கு நோக்கி ஓடும் கனகராயன் ஆற்றின் புளியங்குளம், மாங்குளம் ஊடாக இரணைமடு குளத்துக்குள் நிரம்பி, பின்னர் மேலதிகமாக வழிந்தோடும் நீரை, ஆணையிறவு நீரேரிக்குள் சேர்ப்பதன் மூலம், ஆணையிறவு நீரை நன்னீர் ஏரியாக மாற்றுதல்; ஆனையிறவு நீரேரியின் கிழக்குப் பகுதியை, மண்அனை மூலம் கடலில் இருந்து வேறுபடுத்தி, முள்ளியான் வாய்க்கால் ஊடாக வடமராட்சியின் நீரேரியுடனும் அதன் வழியாகத் தொண்டமனாறு நீரேரியுடன் இணைத்து, நன்னீர் நீர்வளத்தை பாதுகாக்க முடியும் என்ற சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவு பெற்றதும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த யூதர்கள், இஸ்‌ரேலில் ஒன்று சேர்ந்தனர். ஆனால், இஸ்‌ரேலின் பெரும் பகுதி, பாலைவனப் பிரதேசமாகும். கோடை காலத்தில் கடுமையான வெப்பமும் குளிர் வானிலையில் கடும் குளிராகவும் இருந்தது.

தண்ணீரின் தேவை அதிகமாகவே இருந்த போதும், யூதர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. நீர் நிலைகளைத் தேடினார்கள்; இஸ்‌ரேலின் ஜோர்தான் நதியின் நீரை, கலிலோ என்ற ஏரியில் மடக்கிப் பிடித்தனர். குறித்த ஏரியானது, நில மட்டத்தில் இருந்து 700 அடிக்கும் கீழாகக் காணப்பட்டது. இந்த நீரை, 800 அடிக்கும் மேலாக நீர்இறைக்கும் இயந்திரம் மூலம், இஸ்‌ரேலின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளின் பாலைவன நிலங்களுக்கு கொண்டு சென்று, பயிர்செய்கையை மேற்கொண்டார்கள்.

அங்கு, வெப்பத்தைக் குறைப்பதற்கு, மரங்கள் தேவை என்பதை உணர்ந்து, மரநடுகையை அவர்கள், மரபுரீதியான சம்பிரதாயமாகக் கொண்டு வந்தனர்.

இஸ்‌ரேலின் நீர் வளம் முழுவதும் அரசாங்கத்துக்குச் சொந்தமானது. ஆதலால், விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் விவசாயத்துக்குப் பயன்படுத்தமுடியும். ஒரு சொட்டு நீர் கூட மேலதிகமாகக் கிடையாது.

வருமானம் தரக்கூடிய பூக்கள், காய்கறிகள், பழப்பயிர்கள் என்பவற்றை குறைந்தளவு நீரில் பயிரிட்டு, அதிக இலாபம் ஈட்டுகின்றனர். இஸ்‌ரேலில், ஒரு விவசாயினுடைய ஆண்டு வருமானம் 66,000 அமெரிக்க டொலராகும்.

எனவே, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில், ஆறுமுகம் திட்டம் தொடர்ந்தும் பேசப்படுமா? முன்னெடுத்துச் செல்லப்படுமா என்பது தீர்க்கதரிசனத்துடன் சிந்திக்கக்கூடியவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − one =

*