;
Athirady Tamil News

ஒல்லிமடுவில் ஒளிந்திருக்கும் உண்மைகள் !! (கட்டுரை)

0

நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை, உலகில் வாழும் உயிர்கள் யாவும், நீரின் மகத்துவம் அறியும் போது உணர்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால், ‘மிலேனியம் அபிவிருத்தி இலக்கு’ உருவாக்கப்படும் போது, அதன் குறிக்கோள் ‘இலக்கம் 7’ இனை இற்றைப்படுத்தி, 2017 இல் நிலைபேறான பேண்தகு அபிவிருத்தி உருவாக்கும் போது, பாதுகாப்பான குடிநீர் வழங்கலின் முக்கியத்துவம் காரணமாக, 2030ஆம் ஆண்டளவிலே நீரின் தரம் மேம்படுவதும் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

நீர், உயிரொன்றின் பிறப்பிலும் இருப்பிலும் கைத்தொழில் அபிவிருத்தியிலும் முதன்மையான தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில், குடிப்பதற்கான சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பலஇன்னல்களை எதிர்நோக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ்வாறான ஒரு பிரதேச மக்ககளின் கதையே இது…

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பில் போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமமே மண்டூர்.

இயற்கையான ஆறு, பச்சை பசேல் எனக் கம்பீரமாய் காட்சி தரும் மரங்கள், வேளாண்மை என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இயற்கையான அழகிய கிராமமே மண்டூர் ஆகும். மண்டூர் கிராமத்தின் தெற்கு கிராம சேவகர் பிரிவில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமமே ஒல்லிமடுவால் ஆகும்.

இங்கு வாழும் மக்கள், தமது அன்றாட ஜீவனோபாய தொழிலாக வேளாண்மை, விவசாயம், செங்கல் உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஒல்லிமடுவால் கிராமத்தில் 51 வீடுகளில் 85 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான குறைபாடாக, குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றது.

ஒல்லிமடுவால் கிராமம் கிறவல், பாறைகள் நிறைந்த பகுதியாக காணப்படுவதால், கிணறு வெட்டி குடிநீரைப் பெறுவது கடினமான காரியமாகும். அத்துடன், ஆற்றை அண்டிய பகுதி என்பதால் குடிப்பதற்கு உகந்த நீரைப் பெறுவதும் சிரமமாகும். இதனால், ஆற்றுக்குச் சென்று பூவல் (ஆற்றோரத்தில் சிறிய குழி தோண்டி, நீரை வடித்து எடுக்கும் முறை) அமைத்து, அதில் ஊறும் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர்.

2016ஆம் ஆண்டில், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு ‘Ampara Phase 3’ திட்டத்தின் மூலமாக, குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த குடிநீர் திட்டத்தின் நீர் வழங்கல் பிரதான குழாய், ஒல்லிமடுவால் கிராமத்தின் கமநல கேந்திர நிலைய வீதி ஊடாகவே ஏனைய பகுதிகளுக்குச் செல்கின்றது. அம்பாறையிலிருந்து வரும் நீர்க்குழாய், ஒல்லிமடுவால் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற போதிலும், கமநல கேந்திர நிலைய வீதியின் இருமருங்கிலும் வசிக்கும் 11 வீடுகள் மாத்திரமே, குடிநீர் இணைப்பைப் பெறுகின்றன.

இருப்பினும், கமநல கேந்திர நிலைய வீதியில் இருந்து செல்லும் 200 மீற்றர் முதல் 300 மீற்றர் நீளம் கொண்ட உள்வீதிகளில் வசிக்கும் 69 குடும்பங்களைக் கொண்ட 40 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான குடிநீர் குழாய்கள் உள்வீதிகளில் பொருத்தப்படவில்லை. இதனால், இந்த உள் வீதிகளில் வசிக்கும் மக்கள், குடிநீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

“காலையில் நேரத்துக்கு எழுந்து குளித்துவிட்டுப் பாடசாலைக்குச் செல்வதற்குத் தண்ணீர் இல்லை; பக்கத்து வீட்டுக்குப் போய் தண்ணீரை எடுத்து வந்துதான் குளிக்கின்றோம். இதனால் பாடசாலைக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகின்றது” என ஒல்லிமடுவால் கிராமத்திலுள்ள உயர்தரம் கற்கும் மாணவி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஒல்லிமடுவால் மக்கள் குடிநீரைப் பெறுவதற்காக, அப்பிரதேசத்திலுள்ள ஒரேயொரு கிணற்றுக்குச் சென்றும், குடிநீர் இணைப்புப் பெற்றுள்ள வீடுகளிலும் மனிதாபிமான ரீதியில் குடிநீரைப் பெறுகின்றனர். குளிப்பதற்கும், ஏனைய அன்றாட தேவைகளுக்கும் அருகிலுள்ள ஆற்று நீரைப் பயன்படுத்துவதுடன் ஆற்றுக்கு செல்லும் போது, முதலைகளின் நடமாட்டம், அட்டை கடி போன்றவற்றால் தாம் பெரிதும் துன்பப்படுவதாகவும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, வெயில் நேரங்களில் ஆற்றுக்கு சென்று நீரைப் பெற்று வர வேண்டிய தேவை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால், ஒல்லிமடுவால் கிராமத்தில் 2016ஆம் ஆண்டு முதல் நிருமாணிக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கி ஒன்று இதுவரை பூரணப்படுத்தப்படாமல் உள்ளது.

“நாங்கள், மண்டூர் முதலாம்பிரிவின் ஒல்லிமடுவால் கிராமத்தில் வசித்து வருகின்றோம். கொலனித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற நாம் குடியிருக்கும் நிலத்துக்கு இன்னும் உறுதி கிடைக்கவில்லை; கேட்டால் வரவில்லை என்றுதான் சொல்கின்றார்கள். நாங்கள் ஓலைக் குடிசையில் இருந்தோம். அப்போது அரசாங்கம் தகரம் தந்தது. நாங்கள் காட்டுக்குள் இருப்பது போன்றுதான் உள்ளது” எனத் தெரிவிக்கிறார் ‘கிழக்கின் ஒளி’ கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ. இராசரெத்தினம்.

தமது வாழ்வு கடந்து போனாலும் தமது பிள்ளைகள், அடுத்த சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்; அப்போதுதான் அவர்களது எதிர்காலம் சிறந்துவிளங்கும் என்பது ஒல்லிமடுவால் கிராமத்தவர்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.

“எமது கிராமத்திலுள்ள 32 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசாங்கத்தால் 120,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது அந்தக் காசை, மாதாந்தம் 1,000 ரூபாய் வீதம் மீளத் செலுத்துமாறும், அவ்வாறு செலுத்தாதுவிட்டால் வழக்குப்போட உள்ளதாகவும் சொல்கின்றார்கள். எமக்குக் காசு தரும்போது ஒன்றும் சொல்லவில்லை; தற்போதுதான் சொல்கின்றார்கள். அது கடனடிப்படையில் வீடுகட்டுவதற்குத் தந்த காசு என்று. எமக்குக் காசு தரும்போது, வீடுகட்டுவதற்குக் கடனாகத் தருகின்றோம் என யாரும் சொல்லவில்லை. தற்போது மீளச் செலுத்தச் சொன்னால், எவ்வாறு செலுத்துவது? அந்த நிதியில் ஓர் அறையும் குசினியும் கட்டியுள்ளோம். அவ்வாறான வீட்டில் 3, 4 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குடிநீருக்காக இருக்கும் ஒரு கிணறும் ஏப்ரல் மாத்திலிருந்து வற்றிவிடும். எமது பாலர் பாடசாலையையும் விருத்தி செய்யவேண்டும். எமது கிராமம் பின்தங்கிய நிலையில் உள்ளது. எமது கிராமமும் ஏனைய கிராமங்கள் போல் முன்னேறவேண்டும் என்பது எனது ஆசையாகவுள்ளது” என்கிறார் மணி சறோஜாதேவி.

“வீடமைப்பு அதிகார சபையால் வீடு கட்டுவதற்கு வழங்கிய நிதியை மாதாந்தம் 1,000 ரூபாய் வீதம் சிலர், மிகவும் சிரமத்தின் மத்தியில் மீளச் செலுத்தி வருகின்றார்கள். ஆனால், அந்த நிதியை மீளச் செலுத்தும் அளவுக்கு இங்குள்ள மக்களின் நிலை இல்லாமலுள்ளது. இக்கிராமத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். எது எவ்வாறு அமைந்தாலும் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எமது ஒல்லிமடுவால் கிராம மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண உடன் முன்வர வேண்டும்” என போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் ஒல்லிமடுவால் வட்டார முன்னாள் உறுப்பினர் செல்லத்துரை திருக்குமார் தெரிவித்தார்.

“பிரதான வீதியால் குழாய்நீர் செல்கின்றது. கிராம மக்கள் தனிப்பட்ட இணைப்புகள் பெற்று, அதிலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் அந்நீரைப் பெறுவதற்கு விண்ணப்பித்தால், சமூர்த்தி பயாளிகளுக்கு சலுகைகள் உள்ளன. இணைப்பைப் பெற்றுக்கொள்ளும் செலவும் குறைவாகத்தான் வரும். பிரதேச செயலகமும் பொது மக்களும் இணைந்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு முன்வைந்துள்ள கோரிக்கைக்கு அமைவாக, ஒல்லிமடுவால் கிராமத்தில் உள்ள இரண்டு வீதிகளுக்கு 100 மீற்றர் வரையான நீளத்துக்கு குழாய் நீர் பதிக்கும் வேலைத்திட்டம் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் குறிப்பிடத்தக்களவு குடும்பங்கள் நீரைப் பெற முடியும்” என போரதீவு பற்று, பிரதேச செயலாளர் இராசநாயகம் இராகுலநாயகி தெரிவித்தார்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், சிறார்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்களும் இக்கிராமத்தில் நீருக்காக அல்லற்படுவதை அவதானிகக முடிகின்றது. எது எவ்வாறு அமைந்தாலும், ஒல்லிமடுவால் கிராமத்தில் உள்ளவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே! அவர்களுக்கும் அடிப்படைத் தேவையாகவுள்ள சுத்தமான குடிநீர், வீட்டு வசதிகள், மலசலகூட வசதிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.