இறால் குழி , வெருகல் பகுதிகளுக்கு சாவுமணி!! (கட்டுரை)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறால் குழி கிராமம் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆறுகளில் உரிய அரச திணைக்கள அதிகாரிகளின் அனுமதிகளுடனும், அனுமதிகள் இன்றியும் மணல் அகழ்வு இடம் பெற்று வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் இப் பகுதி ஆறானது ஆழமாக்கப்பட்டதுடன் கடல் நீரானது நன்னீருடன் கலந்து உவர்தன்மை ஆனதால் ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டு வரும் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் ஆற்றங்கரையோரங்களிலுள்ள மரங்கள் நீரினால் அடித்துச் செல்லப்படுவதுடன் ஆறுகளிலுள்ள முக்கிய மீனினங்கள் அழிவடைகின்றது.
ஆறு ஆழப்படுத்தப்பட்ட காரணத்தினால் மகாவலி கங்கை நீரின் வேகம் அதிகரிக்கப்பட்டு கிராமத்தின் குடியிருப்புக் காணிகளையும் அரித்துக் கொண்டு செல்கின்றது, மாரி மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதால் இறால் குழிக் கிராமமும், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வெருகல், மாவடிச்சேனை போன்ற பகுதிகள் வருடா வருடம் மூழ்குவதுடன், வீடுகள் மற்றும் கிராமத்திலுள்ள வளங்கள் சேதமடைகின்றன. இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் வருடா வருடம் ஸ்தம்பித நிலை ஏற்படுகின்றது. இப்பகுதியில் உள்ள நன்னீர் ஒடை, மார்க் கண்டு ஒடை, பரவிப்பாஞ்சான் தளவாய் மணல் ஆறு போன்ற இடங்களில் நடைபெறும் சட்ட விரோத மணல் அகழ்வால் இந்த அவலம் ஏற்பட்டு இக் கிராமமமே பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எமது நாடு வளமான நாடாக இருப்பதற்கு மகாவலி கங்கையானது திருகோணமலையில் தான் கடலோடு சங்கமிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம், அவ்வாறு சங்கமிக்கும் ஆறுகளில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இலங்கையின் கட்டன் பூமியில் உற்பத்தியாகும் மகாவலி கங்கையானது திருகோணமலையில் 05 இடங்களில் சங்கமிக்கின்றது, மேற்கே குருக்கள் கங்கை, தெற்கே வெருகல் கங்கை என குறிப்பிடப்படும் குருக்கள் கங்கை எனப்படுவது இறால் குழி, மற்றும் கங்கை பாலம் போன்ற இடங்களில் கலப்பதையும் வெருகல் கங்கை எனப்படுவது வெருகல் முகத்துவாரம் பகுதியில் சங்கமிப்பதையும் குறிக்கின்றது.
இவ்வாறு கடலுடன் சங்கமிக்கும் இறால் குழியின் கிளையாற்றில் ஒன்றே இந்த நன் நீரோடை எனப்படுவது. இதில் வழங்கப்பட்ட அனுமதியை விட பல மடங்கு அதிகமான அளவிற்கு சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதனால் ஒவ்வொரு முறையும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் முதலாவது கிராமமாகவும் இது காணப்படுகின்றது.
இறால் குழி கிராமம் , இன்னும் சிறிது காலத்தில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என கிராம மக்கள் அச்சம் அடைகின்றனர்.
2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த மணல் அகழ்வானது இடம் பெற்று வருகின்றது, மணல் அகழ்விற்கு இப்பகுதியில் மிக சொற்பமான அனுமதியே அரசாங்கத்தால் வழங்கப்பட்டு உள்ள நிலையில் இப் பகுதியில் கூடுதலாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது என இக் கிராமத்தின் பூர்வீக குடிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதன் ஓடையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கள நிலைமைகளை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
இதன் போது வெருகல் பகுதியிலுள்ள சமூக அமைப்புக்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மணல் அகழ்வினால் வெருகல் பகுதியில் ஏற்படப் போகும் பாதிப்புக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவுபடுத்தினர்.
திருகோணமலை மாவட்டத்தில் இயற்கைக்கு பங்கம் விளைவித்து எதிர்கால சந்ததிக்கு சாவுமணியடிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் எப்போது நிறுத்தப்படும்…?