;
Athirady Tamil News

நல்லிணக்கம் = பாரபட்சம் !! (கட்டுரை)

0

வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு, தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும் என்றே தமிழர் தரப்பு ஒவ்வொரு தடவையிலும் தேர்தலில் குதிக்கிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு ஒப்பான அந்தப் பேச்சுக்காக கிடைக்கின்ற வாக்கும் சரி, ஆசனங்களும் சரி குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எதிர்ப்புணர்வுகளால் உசுப்பேற்றுபவர்களுக்கு ஆசனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் நல்ல சாட்சி.

பாரபட்சம் காரணமாகவே நமது நாட்டில் இனப்பிரச்சினை கோரங்கொண்டது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரவர் நலன்களை முன்நிறுத்துவதால்தான் தொடர்ந்தும் பேரினவாத அரசின் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புகளும் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதை அடுத்து கிழக்கிற்கெனத் தனியாக உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுக்குப் பொறுப்பான ஜனாதிபதி ஆணைக்குழு, சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லாமல் பெரும்பான்மை இனத்தினை பிரதிபலிக்கின்ற பௌத்த மதம் சார்ந்த இராணுவ மயத்தனத்தோடுதான் செயற்படத் தொடங்கியது. அதற்கெதிரான குரலெழுப்புதல்களை அரச சார்பானவர்கள் யாரும் செய்யாமை அதற்கு இன்னமும் உரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

வெறும் எதிர்ப்புகள் தமிழ் தரப்பால் மாத்திரமே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழக்கு வாழ் தமிழ் மக்களின் புராதன பாரம்பரிய கலாசார மற்றும் மத அடையாளங்களை இல்லாமல் செய்து பெரும்பாண்மை இன மக்களது பௌத்த மத அடையாளங்களை நிறுவுதற்கான ஓர் ஏற்பாடாகவே இதனை அனைவரும் அறிவர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க நீதிப் பொறிமுறையில் இருந்து இலங்கை தன்னிச்சையாக விலகியமை மற்றும் தமிழ் இளைஞர்களை (மிருசுவில்) படுகொலை செய்ததற்காக நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்தமை போன்ற விடயங்களானது இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுவதனைக் காட்டுவதாக உள்ளது.

அந்த வகையில்தான் இலங்கை அரசானது பெரும்பான்மை இன மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினது மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் தமிழ்த்தரப்பு கொடுத்துவரும் பாரிய எதிர்ப்பு காரணமாக இத்திட்டங்களை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் உள்ளன.

இத்தகைய சூழ்ச்சிகளில் அரசு இன்னமும் வெற்றிபெறவில்லையாயினும் தமிழ் அதிகாரிகள் நாட்டின் பிரதான அமைச்சுகளில் உள்நுழைவுகளையும் தடுக்கும் கைங்கரியம் ஒன்று அண்மையில் அரங்கேறியது. இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் மே மாத தீர்மானத்திற்கமைய பதவி உயர்த்தப்பட்ட ஐந்து தமிழ் பேசும் அதிகாரிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தலைநகருக்குச் சென்று கடமை பொறுப்பேற்க முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தொழில், சமுர்த்தி, விமானசேவைகள், நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம் ஆகிய அமைச்சுகள் அடங்கும். அதில் நீர்ப்பாசன அமைச்சுக்கு நியமனம் பெற்ற ஒரு முஸ்லிம் அதிகாரி மாத்திரம் வேறு ஒரு அமைச்சுக்கு இணைவதற்கு சில நாட்களில் அனுமதிக்கப்பட்டார். ஏனையவர்கள் பல முயற்சிகளின் பின்னர் பொது நிருவாக அமைச்சில் கையொப்பமிடுவதற்குப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களாக அறிவிக்கப்பட்ட அமைச்சுகள் நாட்டின் முக்கிய அமைச்சுகள் அவை சிங்கள மொழி மூலம் கடமையாற்ற வேண்டியவை என்ற ஒரு காரணத்திற்காகவே இந்த அதிகாரிகள் பணிப்பாளர் நாயகங்களாக கடமையை ஏற்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேவை நிலைய வெற்றிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின், பொதுச் சேவை ஆணைக்குழு நியமித்ததன் பின்னர் பொது நிருவாக அமைச்சு அதற்குரிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறியிருக்கிறது. இது வெறும் தட்டிக்கழிப்பல்ல என்பது மாத்திரம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய பொது நிருவாக அமைச்சின் செயலாளர் கவனமற்றிருக்கிறார். இது ஏதோ அவரின் கடமை தவறல் என்று விட்டுவிட முடியாத ஒன்றாகும். இதில் நாட்டின் பெரும்பான்மை அரசியலே இருக்கிறது என்பது மட்டுமே பெரும் உண்மை.

குறிப்பிட்ட அமைச்சுகள் நாட்டின் முக்கிய அமைச்சுகள், சிங்கள மொழியை பிரதானமாகக் கொண்டு செயற்பட வேண்டியவை. அவற்றுக்கு தமிழ் பேசுபவர்களை நியமனம் செய்வது முடியாது என்றால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்டது. அங்கு சிங்கள மொழியே பேசும் தமிழே சிறிதும் தெரியாத அதிகாரிகளை பிரதம செயலாளர்களாகக் கொண்டு செயற்பட முடியுமா என்பதே கேள்வி. முடக் குதிரைக்கு நொண்டிச் சாட்டு சொல்லும் அரசாங்கம் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தினைப் பற்றிப் பேச முடிகின்றது என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி.

ஆங்கிலேயர்களது ஆட்சியிலிருந்து 1948 இல் நாடு சுதந்திரம் பெற்றபோது ஒற்றையாட்சி அரசியலமைப்பு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இக் காலப்பகுதியிலேயே அரச ஆதரவுடன் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றும் திட்டங்கள் தீவிரமடைந்தன.

அப்போதிலிருந்து தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாகிய வடக்கு-கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முனைப்புடன் திட்டமிட்ட அரச ஆதரவுச் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.

1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை. மாறாக இன்னல்களையே கொடுத்த வண்ணமிருந்தது. 2009ல் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் கூட ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தினை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டினை பெற காலங்காலமாக பல முறை முயற்சிகள் நடைபெற்றன. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதேயிக்கின்றது.

நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது என்பது தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடாக இருந்தாலும் நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை நாட்டில் காணவில்லை. தொடர்ந்தும் நடைபெறும் பாகுபாடுகள், பாரபட்சங்கள் அதற்கான சிறு சமிக்ஞைகள் கூட இல்லை என்பதனை நிரூபித்தவண்ணமே இருக்கின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வானது கடந்த காலத்தை கையாளுதல் என்ற விடயத்தில் போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட சமூக-பொருளாதார மாற்றமானது இப்பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மீளகட்டியெழுப்புதல் என்பது தாக்கத்தை செலுத்துகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. காணாமல்போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் இயக்கம் திருப்திகரமானதாக இல்லை. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் நிறைவேறவில்லை.

இனக்கலவரத்தின் வரலாறாக தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான நீதி விட்டுக்கொடுப்பற்றதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாதகவும் இருக்கிறது. இழப்பீடுகள், போரில் குடும்ப உறுப்பினர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்த அனைவருக்கும் அவர்களை நினைவுகூர உரிமை உண்டு. யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் நினைவேந்தல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதை அரசு தடுத்துள்ளது, இதன் மூலம் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் வேதனை உணர்வும் அதிர்ச்சியும் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மதிக்கப்பட வேண்டும். இதிலும் பாரபட்சமே காட்டப்படுகிறது.

முரண்பாடுகள் வலுப்பதற்கு படியெடுத்துக்கொடுக்கின்ற அரசாங்கத்தில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பென்பதற்கே இடமில்லை பாரபட்சம் ஒன்றே ஆக்கிரமிக்கிறது. இவ்வாறான பாரபட்சங்கள் காலங்காலமாக நடைபெற்று வந்திருந்தாலும் இப்போது நடைபெற்றிருப்பது ஒரு வரலாற்று உதாரணமாகக் கொள்ளப்படலாம். இவ்வாறிருப்பதையே நாம் நல்லிணக்கம் சமன் பாரபட்சம் என்கிறோம்; எதிர்காலத்திலும் தொடரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*