;
Athirady Tamil News

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை !! (கட்டுரை)

0

‘கடலுக்குள் போனால் பிணம்; வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும்.

மீன்பிடி என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்கலாக மொத்தம் 50 – 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி, தோணியில் சவலடித்து, காற்றின் திசையறிந்து துடுப்பைச் சுழற்றி, பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், இரவுமுழுவதும் விழித்திருந்து கடுமையான காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு, மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிக் கஷ்டப்பட்டு பிடிக்கும் மீன்களை நொடிப்பொழுதில் ஒரு திருட்டுக்கும்பல் கொள்ளையடித்து சென்றால் எப்படி இருக்கும்? 2007ஆம் ஆண்டு முதல் கடலில் மீன் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு மீன்பிடி உரிமையாளர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மீராசாஹிப் அப்துல் ஹமீட் (நஸீர்) பின்வருமாறு கூறுகின்றார். “இது விடயமாக, முன்னாள் ஜனாதிபதி முதல் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ளோம். இப்போதுள்ள அரசாங்க பிரதானிகள், பாதுகாப்பு படை பிரதானிகள், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, எச்.எம்.எம். ஹரீஸ், முஷாரப் முதுனபின் உட்பட பலரிடமும் நேரடியாகச் சந்தித்து, இவ்விடயங்களை பேசினோம். அவர்கள் செய்து தருவதாக கூறியுள்ளார்கள். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை”.

ஒருநாள் கடல் தொழில் செலவாக எரிபொருள் செலவு உட்பட 15-20 ஆயிரம் செலவாகிறது. மீன்பிடி தொழிலில் முதலாளியை தவிர்த்து நால்வர் ஒருநாள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறார்கள். நித்திரை விழித்து பிள்ளைகளினதும் எங்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலில் கஷ்டப்பட்டு பிடிக்கும் மீனை இலகுவாக வந்து சொகுசாக திருடி செல்கிறார்கள். இரவு 11- 12 மணியளவில் 40-45 குதிரைவலு கொண்ட இரண்டு மோட்டார் எஞ்சினை பொருத்திய சிறிய ரக படகை கொண்டு, இந்தச் செயலை செய்து வருகிறார்கள். அதிக எடை கொண்ட கொப்புறு, தளப்பத்து போன்ற விலை கூடிய 100 /150 கிலோ எடைகொண்ட மீன்களை தினமும் திருடும் இவர்கள், அந்த மீன்களை ஆறுதலாக களட்டிக்கொண்டு நிற்க நேரமில்லாததால் வலையுடன் சேர்த்து அறுத்து கொண்டு செல்கிறார்கள். ஒருநாளில் அவர்கள் பயணிக்கும் அந்த பாதையில் உள்ள 50/60 படகுகளின் வலைகள் இப்படி காவுகொள்ளப்படுகின்றன.

இதனை செய்வது ஒரு படகல்ல 10- 20 படகுகள் இணைந்தே செய்கிறார்கள். இது ஒரு வலையமைப்பின் கீழ் நடைபெறுகிறது. இவர்களை இயக்குபவர்கள் பிரதானமாக ஓரிருவரே. இந்தத் திருட்டு வேலையை கடலில் இறங்கி செய்பவர்களுக்கு உயர் போதை தரும் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. அதனால் என்ன செய்கிறோம் என்பதை கூட உணர முடியாதவாறு முழு போதையில் தான் அவர்கள் கடலில் இந்த வேலையை செய்கிறார்கள். ஒரு தடவை மீன் களவு போகும் படகு மீன்களை மட்டுமின்றி 20,000 ரூபாய் அளவில் பணத்தையும் இழக்கிறது. அந்த நாள்களின் தொழிலும் இல்லாமலாக்கப்படுகிறது என மீனவர்கள் தமது கண்ணீர் கதையை ஆரம்பிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு இடம்பெறுகின்றது. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களிலும், கடற்படை தளங்களிலும், இராணுவ முகாம்களிலும், கடற்தொழில் திணைக்கள அலுவலகங்களிலும் பதிவாகியுள்ளன. ஆனால் நடவடிக்கை எதுவும் திருப்திகரமாக இல்லை. திருடிக்கொண்டு வரும் மீன்களை பாதுகாப்பு தரப்புக்கு முன்னிலையில் பகிரங்கமாகவே விற்கிறார்கள். அவர்களின் படகில் போலியாக எடுத்துக்கொண்டு திரியும் வலைகளுக்கும், அவர்களின் படகுகளில் தினம் காலையில் வரும் மீன்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது என்கிறார்கள் மீனவர்கள்.

இந்த மீன் கொள்ளை பிரச்சினையால் 10 நாளைக்கு ஒருதடவை 02 லட்சம் ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்கின்றனர் மீனை பறிகொடுக்கும் மீனவர்கள்.

கல்முனை முதல் அக்கரைப்பற்று வரையான கடற்பகுதிகளில் 350-400 இயந்திரப்படகுகள் அளவில் உள்ளன. இந்தப் இயந்திரப்படகுகளால் நேரடி நன்மையடையும் குடும்பங்கள் 20 ஆயிரம் அளவில் உள்ளன. இந்தக் கடற்கொள்ளையால் ஆழ்கடல் மீனவர்கள், முதலாளிகள், மீன் வியாபாரிகள், இவர்களை நம்பி உதவி செய்தோர் என பல்வேறு தரப்பினரும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

மீன்பிடி தொழில் அழியும் நிலையே இப்போது உருவாகியுள்ளது என மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். கடலில் மீன் கொள்ளை, கரையில் விலையேற்றம் என திண்டாடிக்கொண்டிருக்கும் நாங்கள் மரபு விவசாயிகள் போல இன்றைய நாள்களில் தத்தளித்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்து விவசாயமும், மீன்பிடியும் செயலிழந்தால் வளமிக்க எமது நாடு ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நிலையே வரும்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி பிராந்திய மீன்பிடி சங்க செயலாளர் ஹஜ் முகம்மத் கருத்து தெரிவிக்கும் போது: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறத்தாழ 600 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் படகுகளிலிருந்து கடந்த 10-12 வருடகாலமாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கடலில் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தத் திருடர்களை பிடிக்க தேத்தாத்தீவு மக்களே உதவினார்கள். அந்த மக்கள் அடையாளம் காட்டியதும் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு பெரிய மீன்பிடிக்குப் பாவிக்கும் எவ்வித உபகரணங்களும் இருக்கவில்லை. 20-30 மீட்டர் அளவுகொண்ட வலைகளே அவர்களிடம் உள்ளன. அதை வைத்து அவர்களால் பெரிய மீன்களை பிடிக்க முடியாது. எங்களிடமிருக்கும் 50 கட்டு வலையில் 01 கட்டு அளவு கூட அவர்களிடமில்லை. அப்படி இருக்க அவர்களால் எப்படி சாத்தியமானது? 02-2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எங்களின் வலையில் பிடிபட்டு இருக்கும் மீன்களை வலையோடு அறுத்துக்கொண்டு செல்கிறார்கள் என்றார்.

கொள்ளைக்காக ஒரு படகுடன் ஆரம்பித்த இந்த கும்பல் இப்போது 10 சிறிய இயந்திரப்படகுகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் தடித்த உயர்ந்த தோற்றத்தை உடையவர்களே இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கறுத்த துணியால் முகத்தை மூடியுள்ளார்கள் என்கின்றனர் கொள்ளை சம்பவத்தை அனுபவித்த மீனவர்கள்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய இலங்கை தீவு மக்கள் தகர ரின்களில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்குமதி செய்து உண்ணும் காலம் கனிந்து வருகிறது. ஆரோக்கியமான மீன்களை இலங்கையர்கள் உண்ண முடியாத சூழ்நிலை இலங்கையில் இப்போதைய நாள்களில் உருவாகி வருகிறது.

பல இலட்சங்களை கடலில் போட்டுவிட்டு பெரிய குழப்பத்துடன் தினமும் கடலுணவை வழங்கும் மீனவர்களாகிய எங்களின் பிரச்சினைகள் நீளாது விரைவாக முடிக்கப்படல் வேண்டும். தினமும் கடலை நம்பி வாழும் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நிம்மதியான ஒரு வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். சுமூகமான முறையில் எங்களது தொழிலை செய்ய இலங்கை அரசாங்கம் வழிசமைக்க வேண்டும். இந்த கடற்கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + three =

*