;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல்!! (கட்டுரை)

0

யுத்தம் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதனால் மௌனமாகி 12 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னமும் நம்முடைய தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் தமக்குரிய நீதியை வழங்குவார்கள் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றனர். ஓவ்வொரு வருடத்தினது பெப்ரவரி மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருப்பதும் ஆவல் உச்சம் பெற்றிருப்பதும் வழக்கம். அதே போன்றே மாற்றங்களும் ஏமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

2020இல் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கம் உருவாகி கடந்த பெப்பரவரி மாதம் வரையில் இலங்கையில் வெளிநாட்டமைச்சராக தினேஸ் குணவர்தன இருந்தார். செப்டெம்பர் மாதத்தில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இருக்கிறார். கடந்த 12 வருடத்தில் 3 ஜனாதிபதிகள் 4 பிரதமர்கள். அதே போன்றே அரசாங்கங்களும் மாறிவிட்டன.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் ஏன் என்பதற்கான கேள்வியே இப்போதைக்கு சாதாரணமானதாகிவிட்டது. அதே போன்றுதான் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளும் இருந்து விடுகின்றன.

மிகக் கடுமையான அறிக்கை ஒன்றினை பேரவையின் ஆரம்பத்தில் விடுவதும் இறுதியில் தீர்மானங்கள் பிசுபிசுத்துப் போவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும், காணாமல் போனோருக்கான நீதி கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டம் 1700 நாள்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது. காணாமல் போனோரது உறவுகளும் பலர் இறந்துவிட்டனர். இது தொடர்வது எதற்காக என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் எப்போதுவரைக்கும் அனைவரையும் காத்திருக்க வைக்கும் என்பதே தெரியாததாக இருக்கிறது.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை விதிக்கப்படும் என்றே இந்த வருடத்தின் பெப்பரவரி அமர்வில் எல்லோரும் நம்பினார்கள். ஆனால் அது ஒன்றுமில்லையென்றானது.

இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் பிரித்தானியாவின் ஆதரவுடன், அமெரிக்கா 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கு முக்கியமானவராக இருந்த அமைச்சர் மங்கள சமரவீரவை கொரோனா பலியெடுத்துவிட்டது.

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளுடன் கூடிய கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே அத் தீர்மானம்.

காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகமொன்றினை நிறுவுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பதும் அதன் சரத்துக்களில் அடங்கும். இந்த தீர்மானம் நல்லாட்சி எனப்படும் பிரதமர் ரணில் – ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறியது.

அவர்கள் ஏதோ கொஞ்சமேனும் செய்து கொண்டிருக்கையில் நல்லாட்சிக்குள் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இருந்த பனிப்போர் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, 2009 மே 19ல் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகையில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்‌ஷ, 2019 ஆண்டு நவம்பரில் இலங்கையின் ஜனாதிபதியானார். அதனையடுத்து 2020 பெப்ரவரியில், ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. நல்லாட்சி அரசு தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியமை பெரிய தவறு எனச்சுட்டிக்காட்டியதுடன், வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரணை செய்ய முடியாது என்றும் தற்போதைய அரசாங்கம் தெரிவித்தது.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைத் தீர்மானம் மிக முக்கியமானதாகவே உலகளவில் வாழும் தமிழர்களாலும் அங்குள்ள அமைப்புக்களாலும் பார்க்கப்பட்டது. இங்கும் அப்படித்தான். இருந்தாலும் இதிலிருந்து விலகிய அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வடக்கில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் குறைத்தது.

கிழக்குக்கு தொல்பொருள் செயலணி அமைத்தல் போன்றவற்றினைக் குறிப்பிட முடியும். அதே நேரத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இவையெல்லம் முடிவின்றித் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படுகின்ற தமிழ் இன அழிப்பிற்கு எதிராகவும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்ற போராட்டம் நடைபெற்று முடிந்தது. அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெகுஜன ரீதியான போராட்டம், போரில் இறந்தவர்களை நினைவு கூருதல், மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் கூட அனுமதியில்லாத நாடு உருவாகியிருக்கிறது. தற்போது இருக்கின்ற கொவிட் சூழலை அவற்றுக்குக் காரணாகக் காட்டுகின்ற நிலைமையும் இருக்கத்தான் செய்கிறது.

ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் கடுமை நல்லாட்சி என்ற அசாங்கம் உருவாக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டாலும், அது மீண்டும் ஈஸ்ரர் தாக்குதலையடுத்து சிங்கள பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத அச்சத்தின் ஊடாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டது. இப்போது கொரோனா கோரம் கொண்டிருக்கிறது. புதிய அரசு உருவாக்கப்பட்டது முதல் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பலவேறு செயற்பாடுகளை மேற்கொண்டு சிங்கள மக்களை திருப்திப்படுத்த முனைந்து கொண்டிருந்தது. இருந்தாலும் இப்போது சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இது ஒரு வகையில் ஆட்சி மாற்றத்தினையே உருவாக்கும் என்று நம்பலாம். ஆனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கான தீர்வுதான் ஏக்கமானது.

மனித உரிமை தினம், காணாமல் போனோருக்கான தினம் என்றெல்லாம் உரிமைகள் ஞாபகப்படுத்தப்பட்டாலும் எதுவும் நடைபெறாத ஒரு நாடாக இலங்கை இருந்து வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், கால்நடைகளின் மேச்சற்றரை பிரச்சினை, இயற்கை வளங்களை சூறையாடுதல், வன வளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி பகிர்ந்தளிப்பு, காணாமல் போனோர் விடயம், மனித உரிமை மீறல்கள், மலையக மக்களின் சம்பள உயர்வு, ஜெனீவா தொடர்பான தீர்மானம், தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வையில் சிங்கள மயமாக்கல், மதவழிபாட்டுக்கு தடை விதித்தல், பௌத்த விகாரை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டவாறு விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகின்றன. இவ்வாறான நிலையில்தான் மக்கள் நாட்டுக்குள் வாழ்க்கை நடத்தும் போது இவற்றில் எதனைப்பற்றிச் சிந்திக்க முடியும்.

இவ்வாறான நிலையில் 1,700 நாள்களைத் தாண்டி நடைபெற்றுவரும் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரும் போராட்டம் இவ்வருடத்தின் ஓகஸ்ட் 30லும் நீதியைப்பெறாதென்றே நம்புவோம். கவனத்திலேயே எடுக்கப்படாத ஒன்றாக நம்மவர்களும் கூட கண்டுகொள்ளாத ஒன்றாக நடக்கும் இப்போராட்டம் எதிர்வரும் வருடத்திலேனும் நீதியைப் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

தமிழர்கள் அரசிடம் சரணாகதியடைந்து உரிமைகளைத் துறந்து, நடந்தவைகளை மறந்து நடப்பவைகளை காணாது வாழப் பழகிக்கொள்ளல் இந் நாட்டில் சிறப்பானதொரு வாழ்க்கைக்கான வழி என்பதே சிங்கள அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. இந்தச் சிங்கள இனவாத அரசின் போக்கை கைவிட்டு விட்டு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும் என்பது தமிழர்களது எண்ணம். அதனை விடவும் அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் கூட. அது நடைபெறுமா என்பது வெறும் எதிர்பார்ப்பே.

நாங்கள் இந் நாட்டின் தேசிய இனம். நாங்கள் இந்த நாட்டில் அடிமையாக வாழ முடியாது. இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் அடிமைகள் அல்லர். எமக்கு இந்த நாட்டின் உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றே தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் தமிழர்கள் போராடுகிறார்கள்.

ஓர் இனம் அஹிம்சை ரீதியாக 25 வருடங்களைத் தாண்டிப் போராடி, ஆயுத ரீதியாக 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தம் செய்து இன்னமும் உறைக்காத விடயமாகிப்போன தமிழர்களுடைய இனப்பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கின்ற காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும். அது தமிழர்களுடைய உரிமைகளையும் மீட்டுத் தரட்டும்.

1956களிலிருந்தே திட்டமிட்டு இன அழிப்பைச் செய்து கொண்டு தமிழர்களுக்கெதிராக தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நிலையில் நாம் இலங்கையின் நீதியை எதிர்பார்க்க முடியுமா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*