;
Athirady Tamil News

நிபுணர்களை வெறுக்கும் அரசியல்!! (கட்டுரை)

0

கொவிட்-19 நோயால் சகல நாடுகளிலும் சுகாதாரப் பாதிப்புகளுக்குப் புறம்பாக, பொருளாதார தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. சகல நாடுகளிலும், நாட்டை முடக்கும் நடவடிக்கைகளால் கைத்தொழில்கள், விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், பல நாடுகள் அப்பிரச்சினைகளை சாதுரியமாக எதிர்கொண்டு, அவற்றின் தாக்கத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன. நிபுணர்களின் ஆலோசனைப் படி செயற்படுவதன் மூலமே, அந்நாடுகள் சவால்களை எதிர்கொண்டன.

இலங்கையின் நிலைமை, வேறுபட்டதாகவே இருக்கிறது. இங்கு அரசியல்வாதிகள், பிரச்சினைகளை மென்மேலும் சிக்கலாக்குவதிலேயே அக்கறை செலுத்துகிறார்கள். இதன் காரணமாக, இதற்கு முன்னர் பதவியில் இருந்த அரசாங்கங்களைப் பார்க்கிலும், இந்த அரசாங்கம் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ளது.

வழமையாக இலங்கையில் நிபுணர்கள், அரசியல்வாதிகளுக்குப் பயந்து, பெரும் அழுத்தங்களைப் பொறுத்துக் கொள்வதையே கண்டுள்ளோம். ஆனால், அண்மைக்காலமாக நிலைமை மாறியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. பல நிபுணர்கள் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.

குறிப்பாக இந்த நிலைமை, சுகாதார துறையிலேயே காணக்கூடியதாக இருக்கிறது. கொரோனா வைரஸ், இலங்கையை தாக்க முற்பட்ட 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே, நிபுணர்கள் தமது பதவிகளைத் துறக்கும் சம்பவங்களைப் பற்றிய செய்திகள், வந்த வண்ணமாக இருக்கின்றன.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி, சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த பத்திரானி ஜயவர்தனவுக்குப் பதிலாக, இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டார். பத்திரானி, அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாக சேவை அதிகாரியாவார். பயங்கர தொற்று நோயை, நாடு எதிர்கொள்ள ஆரம்பித்த நிலையில், அவர் நீக்கப்பட்டார்.

கொவிட்- 19 போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில், மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அதற்காக, மக்களை அறிவூட்டுதல் இன்றியமையாதது. முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க, இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார்.

அவர், தொடர்பாடல் விடயத்தில் சிறந்தவர்; சுனாமி, போர் கால குண்டு வெடிப்புகள் போன்ற அவசர நிலைமைகளில், சுகாதார துறையை வழிநடத்திய அனுபவம் பெற்றவர். ஆனால், எந்தவொரு காரணமுமின்றி 2020 ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி, அவர் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆளும் கட்சிக்குள் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிலும் சமூக சுகாதாரத்துறையில் பட்டம் பெற்ற சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் வைரஸ்இயல் துறை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர்கள்.

திஸ்ஸ வித்தாரண, 22 வருடங்களாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் வைரஸ்துறைப் பிரிவின் அதிபராகக் கடமையாற்றிய அனுபவம் பெற்றவர். அதேபோல், உலக சுகாதார நிறுவனத்தின் வைரஸ்துறை ஆலோசகராக, அவர் பல ஆண்டுகளாகக் கடமையாற்றியவர்.

கொவிட்-19 பெருந்தொற்று போன்ற வைரஸ்களால் பரவும் நோய்களைத் தடுப்பதில், சமூக சுகாதாரத்துறையும் வைரஸ் துறையும்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
அவ்வாறிருக்க, இவ்விருவருக்கும் சுகாதார துறையில் முக்கிய இடங்கள் வழங்கப்படவில்லை. சாதாரண சட்டத்தரணியான பவித்திரா வன்னிஆரச்சியே சுகாதார அமைச்சராக இருந்தார். இப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருக்கிறார்.

அவ்வாறான நிலையிலும், கொவிட்-19 நோயின் முதலாவது அலை திறமையாக கட்டுப்படுத்தப்பட்டது எனலாம். அதனை அடுத்து, சுகாதாரதுறையின் நிபுணர்கள், ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்கள், பாரிய வேலைத்தளங்கள் ஆகியவற்றில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போதிலும், சுகாதார அமைச்சை அந்தத் திசையில் நகர்த்த, அரசியல் தலைமை முன்வரவில்லை.

நிலைமை மோசமாகுவதற்கு முன்னர், தடுப்பூசிக்கு கோரிக்கைகளை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை; அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, “இலங்கைக்கு தடுப்புசி அவசியமில்லை” என்றும் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

இந்த நிலையில் தான், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், கொவிட்-19 நோயின் இரண்டாவது அலை ஆரம்பித்தது. ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தான், அந்த அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அது மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பித்து, பேலியகொடை மீன் சந்தையூடாக நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான நோயாளர்களுக்குத் தொற்றியது.

துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்ற அறிவை, அரசியல்வாதிகள் அப்போதாவது பெற்றுக்கொள்ளவில்லை. 2021 ஏப்ரல் மாத ஆரம்பத்தில், நாளொன்றுக்கு 200 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், சித்திரை புதுவருட பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, சுகாதாரதுறை நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் இறுதியில், நாளொன்றுக்கு கண்டெடுக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாகியது.

இதேபோல், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களின் ஆரம்பத்திலும், சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் புறக்கணித்து, அரசாங்கம் கட்டுப்பாடுகளைதத் தளர்த்தியது. அதன் விளைவை, கடந்த மாதம் கண்டோம்.

அரசாங்கம் போதியளவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத நிலையிலும், நாளொன்றுக்கு அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 6,000 எட்டியது. அந்நோயால் ஏற்படும் நாளாந்த மரணங்களின் எண்ணிக்கை 216 வரை அதிகரித்தது.

தடுப்பூசி விடயத்திலும், ஆரம்பம் முதலே அரசாங்கம் நிபுணர்களின் கருத்துகளைப் புறக்கணித்தே நடந்து கொண்டது. சுகாதார துறையினரை அடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ​செலுத்தப்பட வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையாகும். இலங்கை சுகாதார அமைச்சு, ஆரம்பத்தில் வெளியிட்ட தடுப்பூசி தொடர்பான வழிகாட்டிகளிலும் அவ்வாறே கூறப்பட்டது.

ஆனால், இவ்வருடம் இலங்கையில் தடுப்பூசி ​செலுத்துதல் ஆரம்பிக்கப்பட்ட போது, சுகாதார துறையினரை அடுத்து அரசியல்வாதிகளுக்கும் அவர்களால் பரிந்துரை செய்யப்படும் பிரதேசங்களுக்குமே தடுப்பூசி வழங்கப்பட்டது.

ஓகஸ்ட் மாத இறுதியில், இலங்கையில் நாளாந்தம் 200 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தனர். அவர்களில் 75 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதாவது 150 பேர் முதியோர்கள்; உயிரிழந்தோரில் 91 சதவீதமானோரில் தடுப்பூசி ஒன்றையேனும் பெறாதவர்கள்.

அதாவது, உயிரிழந்தோரில் சுமார் 135 பேர் தடுப்பூசி செலுத்தப்படாத முதியோர் ஆவர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப் படி செயற்பட்டு இருந்தால், ஓகஸ்ட் மாத இறுதியில், குறைந்தபட்சம் நாளாந்தம் 125 அல்லது 100 மரணங்களையாவது தடுத்திருக்கலாம். கொவிட்-19 நோயால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவும், நிபுணர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து, அரசியல் நோக்கத்தில் மேற்கொண்ட முடிவாகும்.

2021 மார்ச் மாதத்திலிருந்து, சுகாதார துறையில் பல நிபுணர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தவிசாளராக இருந்த மருத்துவர் ஆர். விஜேவர்தனவும் கொவிட்-19 அவசர பதிலுறுத்தல் மற்றும் சுகாதார முறைமைகள் தயார்படுத்தல் திட்டப் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டாரவும் தத்தமது பதவியிலிருந்து விலகினர்.

இதுவரை, பேராசிரியர் ஏ. பத்மேஸ்வரன், பேராசிரியர் நீலிகா மலவிகே, மருத்துவர் ரஜீவ டி சில்வா, மருத்துவர் காந்தி நாணயக்கார, மருத்துவர் சன்ன ரணசிங்க ஆகியோர், தடுப்பூசி ஆலோசனை நிபுணர்கள் குழுவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர். முதலிரண்டு பேரும், போதிய தரவுகளின்றி சீன சைனோஃபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதை ஆட்சேபித்தும் மற்றவர்கள், சீன சினொவாக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதை ஆட்சேபித்தும் இராஜினாமாச் செய்ததாகவே செய்திகள் கூறுகின்றன.

இதையடுத்து, மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரமவும் மருத்துவர் அசோக குணரத்னவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பல்துறை தொழில்நுட்பக் குழுவிலிருந்து கடந்த வாரம் விலகியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கும் போது, ஏற்பட்ட சில முறைகேடுகள் மற்றும் எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படையுமின்றி ஹம்பாந்தோட்டையில் 20 – 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க முடிவு எடுத்தமை ஆகியவையே, இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

நிபுணர்களைப் புறக்கணித்தல், சுகாதார துறையில் மட்டும் இடம்பெறும் நிகழ்வல்ல. அண்மையில், மிருகக் காட்சிசாலையின் பணிப்பாளர் இஷினி விக்கிரமசிங்க, சட்ட விரோதமாக வைத்திருந்த யானைக் குட்டிகளை, மீண்டும் அவர்களிடமே கையளிப்பதென எடுத்த முடிவை எதிர்த்து தமது பதவியை துறந்தார்.

அதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்‌ஷ்மனும், தாம் பதவி துறப்பதாக வெள்ளிக்கிழமை (10) அறிவித்தார். ‘கடந்த சில நாள்களாக இடம்பெற்ற மனவேதனையை ஏற்படுத்தும் சில சம்பவங்களை அடுத்தே, நான் பதவி துறக்கிறேன்’ என அவர் அறிக்கையொறின் மூலம் தெரிவித்திருந்தார்.

அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் முடிவுகளை எதிர்த்து, அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பதவி துறக்கும் நிலை ஏற்படுவது, நாட்டுக்கு நல்லதல்ல. இதனை அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ளாவிட்டால், விரைவில் நாடு இதை விட பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதைத் தடுக்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*