;
Athirady Tamil News

கேட்க நினைப்பதைக் கேளுங்கள்!! (கட்டுரை)

0

பிள்ளைக்கு குறித்த பாடசாலையில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை; தான் வாழும் பிரதேசத்தில் குடிதண்ணீர் ஏன் வழங்கப்படவில்லை; பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு செலவு செய்யப்பட்டது; வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்ட முறை என்பதிலிருந்து, பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரிகளைப் பெற்று, தரத்தை உறுதி செய்வது வரை, மக்கள் தகவறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நன்மையடைய முடியும்” என்கிறார் சட்டத்தணியும் வளவாளரும் சிவில் சமூகத்தின் சார்பில் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளவருமான ஐங்கரன் குகதாசன். இவர், தகவல் அறியும் உரிமை குறித்து. தமிழ் மிரருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி இங்கு பிரசுரமாகிறது.

கேள்வி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன? அது சர்வதேச ரீதியில் எவ்வாறு தடம் பதித்துள்ளது?

பதில்: சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரை 19, கருத்துகளைக் கொண்டிருப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் பற்றிக் கூறுகின்றது. இவ்வுரிமை, கருத்துகளைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் எவ்விதமான தடையுமின்றித் தகவல்களை நாடுவதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் வழங்குவதற்குமான சுதந்திரத்தை உள்ளடக்கியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டமென்பது, அச்சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கான ஒழுங்குமுறைகளையும் கட்டமைப்புகளையும் குறித்துரைக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாகத் தகவலறியும் உரிமை, அடிப்படை உரிமையாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வுரிமையை மக்கள் அனுபவிப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்டமைந்தது தான், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்.

உலகில், 128 நாடுகள், இதுவரை தகவலுக்கான உரிமைச் சட்டத்தை உருவாக்கியுள்ளன. தெற்காசியப் பிராந்தியத்தில் பூட்டான் மாத்திரமே இன்னும் தகவலறியும் சட்டத்தை உருவாக்கவில்லை. இலங்கையின் தகவலறியும் உரிமைச் சட்டம், உலகத் தரவரிசைப்படுத்தலில் நான்காம் இடத்தில் உள்ளது.

கேள்வி: இச்சட்டம், இலங்கையில் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது?

பதில்: இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், மக்கள் கோருகின்ற அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காகத் தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும் என இச்சட்டம் தேவைப்படுத்துகின்றது. மக்கள் வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாகவோ தகவல்களைக் கோருகின்றபோது, அதனை வழங்கவேண்டிய கடப்பாட்டைத் தகவல் அலுவலர்கள் மீதும் அவர்கள் பணியாற்றுகின்ற அரச நிறுவனங்கள் மீதும் இச்சட்டம் திணிக்கின்றது.

இச்சட்டத்தின் மூலமாக, சுயாதீனமான தகவலறியும் உரிமை ஆணைக்குழு ஒன்றும் தாபிக்கப்பட்டுள்ளது. பகிரங்க அதிகாரசபைகள் கடமைகளை நிறைவேற்றுவதைக் கண்காணித்தல், அவை உரியவாறு இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தல், மேன்முறையீடுகளை விசாரித்துத் தீர்மானித்தல் உட்பட்ட பலதரப்பட்ட கடமைகளை ஆணைக்குழு ஆற்றுகின்றது. தகவலுக்கான கோரிக்கைகள், சட்டத்துக்கு முரணாக மறுக்கப்படுகின்ற போது, அதற்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளையும் தகவலறியும் உரிமைச்சட்டம் குறித்துரைக்கின்றது.

தகவலறியும் உரிமைச் சட்டமானது, ஓப்பீட்டளவில் ஒரு புதிய சட்டமாகும். அதன் காரணமாக, இதனைப் பற்றிய தெளிவு, மக்களையும் அரச அதிகாரிகளையும் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை.

அதற்குப் பல காரணங்கள் உண்டு. மக்கள் மத்தியில் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமை; அரச நிறுவனங்களில் காலகாலமாக இருந்து வருகின்ற இரகசியம் பேணுகின்ற கலாசாரம்; வெறுமனே வாக்களிப்பதோடு நாட்டின் பரிபாலனத்தில் தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகின்ற மக்களின் மனோநிலை; அரச உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கு; வளப்பற்றாக்குறை என்பன இவற்றுள் சிலவாகும்.

கேள்வி: இச்சட்டத்துக்கு உட்பட்டு கோரப்படும் விடயங்கள் அனைத்தையும் அதிகாரிகள் வழங்குகின்றார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: நாட்டினது பாதுகாப்பு, பொதுநன்மை போன்ற நோக்கங்களுக்காக, மக்களின் தகவலறியும் உரிமையின் மீது, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5, எந்தச் சந்தர்ப்பங்களில் தகவலைப் பெற்றுக்கொற்வதற்கான கோரிக்கைகள், அரச நிறுவனங்களால் மறுக்கப்படலாம் எனக் குறித்துரைக்கின்றது.

தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு, நாட்டின் பொருளாதாரம், தனிநபரின் அந்தரங்கம், வியாபார இரகசியங்கள், தேர்தல்கள், பரீட்சைகள் சம்பந்தமான சில விடயங்கள் என்பன அவற்றுள் சிலவாகும். இவற்றைத் தவிர்ந்த அனைத்து தகவல்களும், இவ்வாறான விலக்களிப்புகள்கூட, குறித்த விலக்களிக்கப்பட்ட தகவலொன்றை வழங்குவதால் ஏற்படும் தீங்கைவிட, அத்தகவலை வெளிப்படுத்துவதால் ஏற்படுகின்ற பொது நன்மை, உயர்வானது என நிரூபிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வலிதற்றதாகும் (Public Interest Override).

ஆக, எச்சந்தர்ப்பத்திலும் வழங்கப்பட முடியாது என்று வரையறுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், நடைமுறையில் அவ்வாறு நிகழவில்லை. தகவலறியும் உரிமைச் சட்டம் விதித்துரைத்துள்ள நடைமுறைகள், உதாசீனம் செய்யப்படுகின்ற தன்மையைப் பரவலாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பங்களும் கோரிக்கைகளை, குறிப்பாக நேரடியாகக் கையளிக்கப்படாத கோரிக்கைகளை, பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தாத சந்தர்ப்பங்களும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அநாவசியமாகக் காலந்தாழ்த்துதல், பிரிவு 5இன் கீழான விலக்களிப்புகளை மிகவும் பரந்துபட்ட விதத்தில் பிரயோகித்தல், பூரணமற்ற தகவல்களை வழங்கல் போன்ற விடயங்கள், நாடு முழுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நியமனங்களின் காரணமாகவும் அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் காரணமாக, சட்ட வரையறைக்கு அப்பாற்பட்ட விதத்தில், பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. அச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய தகவல்கள் கோரப்படும் போது, தங்களையும் மேலதிகாரிகளையும் அவ்வாறு செய்வதற்கு அழுத்தம் கொடுத்தவர்களையும், சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அரச அதிகாரிகள் தகவல் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ள சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒவ்வொரு பகிரங்க அதிகாரசபையிலும் குறைந்தபட்சம் ஒரு முழு-நேர தகவல் அலுவலராவது நியமிக்கப்பட வேண்டுமென்று தகவலறியும் உரிமைச் சட்டம் தேவைப்படுத்தினாலும், பல தகவல் அலுவலர்கள் வேறு பணிகளையும் ஆற்றுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. கோரப்படுகின்ற தகவல்களைத் திரட்டி, கோரப்படும் வடிவத்தில், கோரப்படுகின்ற மொழியில் வழங்குவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்குரிய வகையிலான ஆவணப்படுத்தலும் வளங்களும் பயிற்சியும் இல்லாத போது, தகவல் அலுவலர் தன்னுடைய கடமையை ஆற்றுவதில், பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

கேள்வி: கிராமப்புற மக்கள் மத்தியில், இன்னும் தெளிவில்லாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: மக்கள் மத்தியில் இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு ஊடக அமைச்சுக்கும் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கும் உண்டு. ஊடகங்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றி வெளியிடுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், மக்களை ஊக்கப்படுத்துகின்ற விதத்தில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் எவ்வாறு தீர்த்துக்கொண்டனர் என்பதையும் விவரமாக வெளியிடவேண்டும்.

இச்சட்டத்தை மக்கள் எந்தளவுக்குப் பயன்படுத்துகின்றார்களோ, அந்தளவுக்கே அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும். இச்சட்டம் பற்றிய
விழிப்புணர்வு இல்லாத சந்தர்ப்பத்தில், நாட்டில் இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பிலான மக்களின் புரிதல் மட்டுப்படுத்தப்படும். அது, ஜனநாயகத்தை நலிவடையச் செய்வதோடு இலஞ்சம், ஊழல் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் தலைவிரித்தாட வழிவகுக்கும். மக்கள் மத்தியில் இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதன் காரணமாக, அரச இயந்திரம் கடமையிலிருந்து தவறுகின்ற போது பொறுப்புக்கு உள்ளாக்குகின்ற தன்மையும் தோற்றுவிக்கப்படும்.

தகவலறியும் உரிமைச் சட்டம், அரச அதிகாரிகள் மத்தியில் உசார் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய கடமைகளை, அவதானமாகவும் ஒழுங்குமுறையாகவும் ஆற்றுகின்ற தன்மை அதிகரித்துள்ளது. தகவலறியும் கோரிக்கை, எந்த விடயம் சம்பந்தமாகவும் எந்த நேரத்திலும் வரலாம் என்கின்ற சூழ்நிலையில், தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டிய தேவைப்பாட்டை தகவலறியும் உரிமைச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இதுவே, காலப்போக்கில் நடைமுறையாகமாறி, பின்னர் எம்முடைய கலாசாரத்துக்குள் உள்வாங்கப்பட்டுவிடும். இதுவே, எம்முடைய அரச கட்டமைப்பையும் காலப்போக்கில் ஒட்டுமொத்த நாட்டையும் மறுசீரமைப்பதற்கு வழிவகுக்கும்.

தன்னுடைய பிள்ளைக்கு குறித்த பாடசாலையில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என்கின்ற தனிப்பட்ட பிரச்சினையிலிருந்து,தான் வாழும் பிரதேசத்தில் குடிதண்ணீர் ஏன் வழங்கப்படவில்லை வரை, பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு செலவு செய்யப்பட்டது, வீதி புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்ட முறை, பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரிகளைப் பெற்று, தரத்தை உறுதி செய்வது வரை, மக்கள் தகவறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நன்மையடைய முடியும்.

மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், தகவறியும் உரிமைச் சட்டம் வெறும் கருவியே. தகவலைப் பெற்றுக்கொள்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று எண்ணக்கூடாது. தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், மக்கள் தங்களுடையதும் தாங்கள் வாழுகின்ற சமுதாயத்தினுடையதும் நாட்டினுடையதும் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுவே தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம்.

கேள்வி: இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, இலங்கை மக்கள் உச்ச நன்மையடைதாயின் நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: குறித்த தகவலொன்று விலக்களிப்புக்கு உட்பட்டதா என்கின்ற சந்தேகத்தில், பலர் கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. அது அவசியமற்றது; கேட்க நினைக்கின்ற அனைத்தையும் கேளுங்கள்.

தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் தகவல்களைக் கோருங்கள். கிடைக்கின்ற தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அந்நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்களையும் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு உள்ளாக்குங்கள்.

முன்வைத்த கோரிக்கை தொடர்பில் பதிலேதும் கிடைக்காத போதோ அல்லது கோரிக்கை மறுக்கப்படுகின்ற போதோ சலிப்படையாதீர்கள். மேன்முறையீடு செய்யுங்கள். அரச நிறுவனங்களின் மீது தொடர்ச்சியாக அழுத்தம் செலுத்துங்கள்.

அரச நிறுவனங்களிலுள்ள தகவல்கள் உங்களுக்குச் சொந்தமானவை. அரச நிறுவனங்களும் அவற்றின் அதிகாரிகளும் வெறும் பாதுகாவலர்கள் மட்டுமே!.

You might also like

Leave A Reply

Your email address will not be published.