;
Athirady Tamil News

‘சாவுக்கொரு சாட்டு வேணும்’ !! (கட்டுரை)

0

வட்டுக்கோட்டை தெற்கில், முதலி கோவிலடிக்குப் பக்கத்தில், அரசடி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை (19.09.2021) இடம்பெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை, விதை குழும செயற்பாட்டாளர்கள், நேரில் சந்தித்து உரையாடிய விடயங்களின் தொகுப்பு இது:

யாரை யார்க் காப்பாற்றுவது என்று திணறி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று, உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். கொடூரமான சாதிவெறித் தாக்குதல், எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. ‘சாதி’ வெறித் தாக்குதலை, ‘குடி’ வெறித் தாக்குதலாகப் பெரும்பாலான ஊடகங்கள் சுருக்கி இருக்கின்றன.

பொதுச் சமூகத்தின் கவனத்தை, சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில், அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கும் அக்கறை இருப்பதில்லை. சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும், அரசடி மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல் மயப்படுதலின் முதற்படி. நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும்.

வெட்டப்பட்ட கையும் விரல்களும், மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற, பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு சாதியைச் சொல்லி அடிக்கிறாங்கள். அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது.

“இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை, செம்பாட்டன் தோட்டமெண்டால், மூளாயெண்டால், தொல்புரமெண்டால், சுழிபுரம் எண்டால் எல்லா இடமும் அப்பிடித்தான்; தொடந்து இது நடந்துகொண்டிருக்கு. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி; இது எங்கடை வேலி. வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப் பிரிச்சிருப்பான். அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ?

“வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வேலையாலை வாறது. அப்ப மறிச்சு அடிப்பாங்கள்; நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள்; குளை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான்.

“கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள்; குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள். தேடிவந்து சாதியைச் சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன?

“தங்கடை வெறிக்கு, ‘டேஸ்ட்’ நாங்கள்தான்; ஒரு சவாரிக்குப் போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. 50 வயசு எனக்கு; கோட்சும் தெரியா, பொலிசும் தெரியாது. ஆனால், உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை; உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு.”

இளைஞர் ஒருவர் அன்றைய சம்பவத்தை விளக்கினார். “அண்டைக்கு வேலைக்குப் போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள். ‘பேபிகடை’ முடக்கிலை திரும்பும்போது, அவங்கள் நிண்டு பாத்தவங்கள்; நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம். எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்களேன் குளை முறிக்கிறம்? எங்களுக்கு என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட, சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி; நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு”.

மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார்; நடந்ததை அவரே விவரிக்கிறார். ‘’ ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப் பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, ரெண்டு பேர் ஓட்டோவிலை வந்து, பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.

“எனக்கு விளங்கீட்டு, இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு; நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். ‘டேய், இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன். வெட்டி ப்போட்டான் கையுக்கு; விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை,உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள்.

“அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே.

“அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப் பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம்.

அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரி கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும்” என்றார்.

இரண்டு தாய்மார்கள் அன்றைய சம்பவத்தை விவரிக்கும்போது, “இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால், இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு.

“நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது?

எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம். என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல; ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள்.

நீங்கள் ஆர், தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்?

“கேற்றை உடைக்கிறாங்கள்; வெளியிலை கத்துறாங்கள்; நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம். லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு. எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்?

நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள்; அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ? என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது. ஏன் சும்மா பிரச்சினையெண்டு, இரவிலை கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது” என்றார்.

இரண்டு இளைஞர்கள் சம்பவம் குறித்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது; “பொலிஸ், கோட் கேஸ் ஒண்டும் நிக்காது. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர, உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை. நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலாது.

“அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும். எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.