;
Athirady Tamil News

அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை !! (கட்டுரை)

0

ர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை வெளியிட்ட கருத்தாகும்.

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால், அதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும். என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகாரத்துறை கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த அரசாங்கம் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொண்டது. அந்த நாடுகளின் பல்வேறு நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்தாகும். வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிவதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை. நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிபந்தனைகளுக்கும் இந்த அரசாங்கம் கீழ்ப்படியப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து மீள பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுவரும் ஜீ.எஸ்.பி. வரிச்சலு நிறுத்தப்படுவதானது நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும். ஏற்கனவே மக்கள் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல்கள் பெரும் பிரச்சினையாகவே மாற்றம் பெறும் என்பது பொருளாதாரத்துறை சார்ந்த பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் இலங்கை அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளாதிருப்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டியதாகும்.

தற்போதைய நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கும் ஆராய்வதற்குமான குழு கடந்த 27ஆம்திகதி நாட்டுக்கு வந்திருக்கிறது. ஆராய்ந்து வருகிறது; அதற்காகச் சந்திப்புக்களையும் நிகழ்த்துகிறது.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் புதுப்பிக்கப்படும் என்பதுடன், வரிச் சலுகை நீடிப்பு குறித்து கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது வழமையாகும். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறது. குறித்த குழு இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

ஓவ்வொரு தடவையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஏற்றுமதி வரிச் சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்படும் என்ற அச்சத்துடனேயே அரசாங்கங்கள் தமது ஆட்சிகளைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவ் வரிச்சலுகையானது சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மீண்டும் இன் நெடுக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

வணிகச் சூழ்நிலையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தல், பொருளாதார அடிப்படைகளை ஸ்திரப்படுத்தல், சர்வதேச முதலீட்டையும், கடன் சந்தையையும் கவர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுதலைத் தவிர்த்தல் என பல்வேறு விடயப்பரப்புகள் தேவையான நிலையில் இலங்கை வெறுமனே நிதி, வர்த்தக ரீதியாக மாத்திரம் இதனை அணுக முயல்வதானது காத்திரமானதொன்றல்ல. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை ஒட்டியதாக அமைந்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரேரணையானது இந்த முறை இலங்கைக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்ற நிலையே காணப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பபடும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இருந்தாலும் அது நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் நிலைமைகள் தொடர்கவும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியோ, பிரதமரோ, நீதியமைச்சரோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தினைத் திருத்துதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்காமல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையில் எதுவும் நடைபெற்றதாக இல்லை.

இந்நிலையில்தான் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற வகையிலான கருத்துக்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. இலங்கை நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி என்னும் இரண்டும் பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாகும். ஆனால் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையுள்ள நாட்டுக்குப் பொருத்தமா என்று கேள்விகள் எழுகின்றன. இறக்குமதி அதிகரித்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலங்கை விதித்து வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் சரியான முறையில் திட்டமிட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் ஏன் பிரதமர் நிவாரணத் திட்டங்களை அறிமுகம் செய்கிறார் என்பதே கேள்வி.

இரசாயன உரத்துக்குத் தடை, வாகனங்கள் இறக்குமதிக்குத் தடை, அத்தியாவசியமற்ற பொருட்கள் என்று ஒரு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆனால் அவற்றில் பல அத்தியாவசியமானவை என்று வாதங்கள் நடைபெறுகின்றன. அரசாங்கம் சில பொருட்களுக்கு இறக்குமதிக்கான தடையை ஏற்படுத்தி ஒருசிலருக்கு அதற்கான அனுமதியை வழங்கி, அவர்கள் லாபம் ஈட்டும்வகையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அரசாங்கம் சில வர்த்தக பொருட்கள் இறக்குமதி செய்வதை தடைசெய்திருக்கின்றது. இது வெளிநாடுகளுடன் பகையை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். வர்த்தகம் என்பது ஒருவழி பாதை அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த வண்ணமிருக்கின்றன.

இந்த நிலையில்தான் மக்களும் தங்களுடைய எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். முக்கியமாக வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஊடக சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றன. மக்களுடைய எதிர்பார்ப்புகளின் நிறைவேற்றமானது இலங்கை அரசாங்கத்திற்கு மிக முக்கியமானதொன்றல்ல என்றாலும் அது தாக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கெதிரான வரலாறு சுருக்கமாகப் பார்ப்பதற்கே மிகக் கொடூரமானது. முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வு தொடங்குவதற்கு முதல்நாள் அதற்கு லொஹான் ரத்தத்த அநுராதபுர சிறைச்சாலையில் நடந்து கொண்ட முறைமை சொல்லப்படலாம். அதே போன்று ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடருக்கு முன்னம் கைக்குண்டுகள் கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு கைதுகள் நடைபெறுகின்றன. ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு வருகைக்குள் வைத்தியசாலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. புலர் கைது செய்யப்பட்டார்கள். புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளி கைதாகிறார். இது சரியாக கடந்த கால வெள்ளை வான் கலாச்சாரத்தினை உலகுக்கே நினைபடுத்தியிருக்கிறது. இது ஒன்றே ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் ஜீ.எஸ்.பி நிறுத்தப்படுவதற்கும் சாட்சியாகும்.

அந்த வகையில்தான், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர் கைதுககள் நிறுத்தப்படவேண்டும். அச்சட்டம் இல்லாமலாக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு, மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் சரியான தீரவுகள் முன்வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கின்றன.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையானது ஒரு சிறிய தொகை என்றாலும் கூட இலங்கையின் ஏற்றுமதித்துறை அந்தச் சவாலை எதிர்கொள்ளவே நேரிடும். அந்த வகையில் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் தம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் தேவையானதுதான். அந்த ஒழுங்கில் வரிச் சலுகை கிடைக்கும் என்று நம்புவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.