;
Athirady Tamil News

தீபாவளி கொத்தணியை கொளுத்தப் போகிறோமா? (கட்டுரை)

0

கொரோனா வைரஸ் பரவலா ல் ஒட்டுமொத்த நாடும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரச, தனியார் துறைகளில் வேலை செய்யும் பலரும் தொழில்ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாளாந்தம் கூலி வேலைகளை செய்பவர்கள் வாழ்வாதாரத்தை முற்றுமுழுதாக இழந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம்சுமத்தி வருகிறார்கள். வைரஸ் பரவலுக்கு பொறுப்பற்ற பொதுமக்களின் செயற்பாடுகளும் காரணமாக இருந்ததை கடந்தகாலங்களில் அவதானிக்க முடிந்தது.

நாடு முடக்கப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அரச, தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வாறான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. முடக்கக்காலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் என்கிற ஆபத்துக்கு மத்தி்யிலும் தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

தேசிய சுகாதாரமுறைக்குள் பெருந்தோட்ட சுகாதாரமுறை உள்ளீர்க்கப்படவில்லை என்பதால், கொரோனாவால் மலையக மக்கள் அதிகளவான உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

இடைவெளியே இல்லாத வீடுகள், பொதுவான மலசலக்கூடங்கள், பொதுவான நீர்குழாய்கள், போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத பாதைகள், உள்ளிட்ட மலையகத்துக்கே உரிய நெடுகாலப் பிரச்சினைகள் இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்திருந்தன.

கொரோனா வைரஸ் திரிபுகள் தொடர்ந்து உருவாகிவருதை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதற்காக நாட்டின் அமல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரும், பிறப்பிக்கப்பட்டதன் பின்னரும் மேல்மாகாணத்தில் சிக்கியிருந்த பலர் மலையகத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், இம்முறை சுமார் ஒன்றரை மாதக் காலம் வரையில் நீடிக்கப்பட்டிருந்த ஊருடங்கு காலத்தில் மேல்மாகாணத்தில் இருந்து எவரும் வெளியில் செல்ல முடியாதவாறு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. இதனால் நீண்ட காலம் வீடுகளுக்கு திரும்பாது பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து, மலையகத்திலிருந்து தொழிலுக்காக சென்றிருந்த பலர் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல இடங்களில் அப்படியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இம்மாதம் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டிருந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணங்களால், தொழிலுக்காக மேல்மாகாணத்துக்கு சென்றுள்ள இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்த பலர் நவம்பர் நான்காம் திகதி வரவுள்ள தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தங்களது வீடுகளுக்கு செல்லலாமென திட்டமிட்டிருக்கக்கூடும்.

ஏற்கெனவே தமிழ் – சிங்கள புதுவருட கொரோனா கொத்தணி ஒன்று நாட்டில் உருவாகி ஓய்ந்திருக்கிறது. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல கொண்டாட்ட நிகழ்வுகளில் மக்கள் ஒன்றுகூடிய படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிக விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்ததை மறக்க முடியாது.

இதேவேளை, இது தொடர்பில் தமிழ்மிழருக்கு கருத்துத் தெரிவித்த நுவரெலியா வைத்தியசாலையின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட வைத்தியரும் அம்மாவட்ட கொரோனா வைரஸ் கண்காணிப்புக் குழு உறுப்பினர், “முற்றிலும் வெளித்தொடர்பற்ற மலையகத்தின் சில பகுதிகளில் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. எவ்வாறாயினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல்மாகாணத்திலிருந்து தங்களது வீடுகளுக்கு திரும்புபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்“ என்றார்.

தமிழ் – சிங்கள புதுவருடத்தில் உருவான கொரோனா வைரஸ் கொத்தணியால் நாடு பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆயாஷ கருணாரத்ன, தீபாவளி பண்டிகை தொடர்பிலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் தொடர்பிலும் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கைகளும் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது. மேல்மாகாணத்திலிருந்து வரும் எவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு இப்போது உட்படுத்தப்படுவதில்லை.

அண்மையில் பொகவந்தலாவை வைத்திய அதிகாரி பிரதேசத்துக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அப்பிரதேசத்தில் இருந்து 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் பரவி இருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

ஆபத்து இன்னும் குறையவில்லை என்பதற்கும் இதுவே சிறந்த உதாணரமாக இருக்கிறது. கொரோனா வைரஸின் ஆரம்பக் காலக்கட்டங்களில் வைரஸிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பலரும் வெள்ளைபூண்டு, பெருங்காயம், வசம்பு போன்றவற்றை தங்களது கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தனர்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களைபோல் அல்லாது அரசியல் தீர்மானங்களுக்கு அப்பால், கொரோனா விடயத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் அதனால் நேரடியாக நாட்டின் பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள். அப்பாவி உயிர்களே பலியாவதையும் அரசாங்கம் இனியாவது உணர வேண்டும்.

கொண்டாட்டங்களை விட கொரோனா வைரஸிலிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டு வாழ்தலே முக்கியமானது. இவ்வாறான நிலையில் தீபாவளிக் கொண்டாட்டங்களால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கொத்தணி ஏற்படாதிருப்பதைத் தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.